அஞ்சாதே – விமர்சனம் பெப்ரவரி 24, 2008
Posted by M Sheik Uduman Ali in Reviews.Tags: anjathe, அஞ்சாதே
trackback
மாறுபட்ட அணுகுமுறை, தெளிவான திரைக்கதை மற்றும் கூரிய கண்ணோட்டம் என
அசத்தலான ஓபனிங்குடன் ஆரம்பிக்கிறது அஞ்சாதே.
இயக்குநர் மிஷ்கினுக்கு பாராட்டுகள்:
- திரைக்கதையில் கதாபாத்திரங்களை எந்தளவு அணுக வேண்டுமென்ற வரையறைக்குள் நின்றதற்கு (மிகைப்படுத்தப்படாத ஹீரோ மற்றும் வில்லன்).
- காம்ப்ரமைஷ் செய்து கொள்ளாத தெளிவான ஸ்கீரின்பிளே.
- “வேட்டையாடு விளையாடு“ மாதிரி இசையாலோ, வன்முறை காட்சிகளாலோ வம்படியாக ஆடியன்ஸை பயமுறுத்தாமல் மிரட்டிய தொனி.
- மகா மெகா டெக்னாலஜி ஐயிட்டங்கள் இல்லாமல் இருப்பதை பயன்படுத்தி பிரமிக்க வைத்த அழகு.
- எஸ்பிபி சாயலில் அழகான இவரது குரல் (அச்சம் தவிர் பாடல்)
போலீஸ் வேலையே லட்சியம் என வாழ்பவன் ஒருவன், பொறுக்கித்தனமாக ஊர் சுற்றுபவன் ஒருவன் என இரு நண்பர்களின் வாழ்க்கைப் பாதையை காலமும், ஒரு பெண்கள் கடத்தும் கும்பலும் புரட்டிபோடுவது தான் கதை.
ஹைடெஸிபலில் கத்துவது, கங்காரு குட்டி மாதிரி ஓடுவது தவிர “நரேன்” கவனிக்கத்தக்க டைரக்டர்ஸ் சாய்ஸ் ஹீரோ. சப்-இன்ஸ்பெக்டர் ஆன முதல் நாள் அனுபவம், ஆஸ்பத்திரியில் ரவுடிகளை வரிசை கட்டி அடிப்பது, பொன்வண்ணன் குழுவில் ஒரு புது இன்ஸ்பெக்டருக்கே உரிய அடக்கத்துடனும், துணிச்சலுடனும் நடந்து கொள்வது என அவ்வளவு நேர்த்தி.
சரியான பாத்திரத் தேர்வில் விஜயலட்சுமி. அன்னியோன்யமான நடிப்பு. எம்.எஸ்.பாஸ்கருக்கு இந்த படம் ஒரு நல்ல துருப்புச்சீட்டு. பொறுப்பான அப்பாவாக குணச்சித்திர ரோலில் மிளிர்கிறார்.
குங்குமப் பொட்டு வைத்து வொயிட் அன்ட் வொயிட் கெட்டப்பில் கடத்தல் கும்பலின் காட்பாதராக பாண்டியராஜனா இது! “ரான்ஸம்“ பேசுகிற வாக்கில் அசால்ட்டாக பாட்டிலை எடுத்து ஒருவனின் மண்டையை பொளக்கிறார். ஆழமான ஒரு ஆளாக இவரை பிரதிபலித்த விதம் அருமை. இன்னும் மெனக்கெட்டால் வெரைட்டியான ரோல்கள் நிறைய வரலாம். கடத்தல் கும்பலின் மாஸ்டர் மைன்டாக வரும் பிரசன்னாவின் புறத்தே “காக்க காக்க“ பாண்டியா, “பொல்லாதவன்“ பாலாஜி இவர்களை மிமிக்ரி பண்ணியது மாதிரி இருப்பதால் அகத்தே தோன்றும் இவரின் நடிப்பு அபேலாகிவிடுகிறது.
நட்பு காட்டும் இடங்களிலும் வெறுப்பு, பொறாமை கொள்ளும் இடங்களிலும் உணர்வுகளை அழகாக பிரதிபலித்து நடித்திருக்கிறார் நரேனின் நண்பனாக வரும் புதுமுகம் அஜ்மல். இவர்கள் வீட்டு ஏரியாவில் வசிக்கும் “குருவி“யின் கேரக்டர் மனதில் நிற்கும் ஒன்று.
ஆரம்பக் காட்சியாக வானத்தை வட்டமிடும் காமிராவின் ஓரத்தில் “கீழே இறங்குடா“ என அணிசேரும் குண்டர்கள், பாரில் தண்டால் எடுக்கும் அஜ்மலை தலைக்குப்புற எடுக்கும் காமிரா என ஆடியன்ஸிற்கு பாத்திரங்களின் கோணங்களை கூட அருமையாக புரிய வைத்திருக்கிறார் சினிமாட்டோகிராபி பண்ணியிருக்கும் மகேஷ் முத்துச்சாமி. மெல்லிய மஞ்சள் வெளிச்சத்தில் அஜ்மல் வீட்டில் பதுங்கும் பாண்டியராஜன் & கோ, தற்செயலாக வரும் விஜயலட்சுமி இவர்களின் நடவடிக்கைகளை காலடிகளை மட்டுமே காட்டி எடுத்த விதம் மாறுபட்ட அணுகுமுறை.
தனக்கென தனிப்பானியில் இசைக்கோப்பு செய்து பாடல்களிலும் பின்ணணி இசையிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார் சுந்தர் சி பாபு. சித்திரம் பேசுதடிக்கு பிறகு இது இரண்டாவது படமா என்ன? இதற்குள் வாய்ப்புகள் குவிந்திருக்க வேண்டுமே?!. கபிலனின் நிறைவான வரிகளில் “கத்தாழை”, “கண்ணதாசன் காரைக்குடி” பாடல்களின் கோரியோகிராபியும் எடுத்த விதமும் பிரமாதம். சடகோபன் ரமேஷின் படத்தொக்குப்பில் ஸ்லோவான பிளேயில் எடுக்கப்பட்ட பின்பாதி பரீட்சார்த்த முயற்சிக்கு பாராட்டலாம். அந்த மொட்டை மண்டையை கடைசி வரை காட்டாமலேயே காட்சிகளை நகர்த்திவிடுகிறார்கள்.
ரோட்டில் வெட்டுப்பட்டு கிடக்கும் ஒருவன், அவனை காப்பாற்ற முயலும் நரேனின் பதபதைப்பு; ஒரு போலீஸ் ஸ்டேஷனின் அன்றாட நடவடிக்கைகள், ஒரு புது சப்-இன்ஸ்பெக்டருக்கு கிடைக்கும் சின்ன சின்ன அவமானங்கள், கோயில் கும்பாபிஷேகம் அன்று இருட்டில் விஜயலட்சுமியிடம் தவறாக நடந்து கொள்ளும் பிரசன்னா; ஒற்றை கைலியுடன் ரோட்டில் கூனிக்கிடக்கும் மகளை ஓடி அணைக்கும் அப்பா மற்றும் ஹீரோவின் பதட்டம்; கரும்புத் தோட்ட்த்தில் வில்லன் & கோ, ஹீரோ இவர்களுக்கிடையேயான போராட்டம் என படம் நெடுக காட்சிகளை ஆணித்தரமாக புரியவைக்கும் கூரிய அணுகுமுறையில் ஒரு மாறுபட்ட தரமான சினிமாவை தந்திருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். ஒரு விஷ்வல் மீடியத்தை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு இந்தப் படம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
தமிழின் தி பெஸ்ட் ஆக் ஷன் சினிமா என்று கூறலாம் என்றால்; வித்தியாசமான அணுகுமுறை என்ற பெயரில் முன்பாதியில் ஆக் ஷனிற்கு அருமையான சிவப்புக் கம்பளம் விரித்த இயக்குநர் பின்பாதியில் கோட்டை விட்டிருக்கிறார். காக்க காக்க சாயலை தக்கணூன்டு அள்ளித் தெளித்து பாண்டியராஜனை கொல்வது முதல் கணிக்கக் கூடிய திருப்பங்களில் நகர்கிறது பின்பாதி. நாம வந்த வேலை முடிந்தது கிளம்பலாம் என்று ஒரு காட்சியில் சொல்கிறார் பிரசன்னா. அதைப் பற்றி குழப்பமே ஏற்படுகிறது.
கடத்தல் கும்பலை ஏற்கெனவே நரேனுக்கு தெரிந்து விடுவது இருக்கின்ற சுவாரஸ்யத்தையும் இல்லாமல் ஆக்கிவிடுகிறது. போதாக்குறைக்கு பொன்வண்ணன் & கோ கண்டுபிடிக்கிறோம் என்ற பெயரில் கால் ட்ரேஸரிலேயே பாதி பின்பாதியை செலவிட்டு வீணடிக்கிறார்கள் என்றால் போலீஸை டைவர்ட் செய்துவிட்டு வில்லன் & கோ இன்னொருபுறம் தப்பிக்க இவர்கள் அதை கண்டுபிடிக்கும் காட்சிகளும் “அவங்க நார்த் மெட்ராஸ் பக்கம் போறாங்கனா; நாம இப்ப இங்கே என்ன பண்றோம்“ உட்பட பல வசனங்களும் படத்தின் ஹைலைட் காமெடிக் காட்சிகள். மிரட்டலான முன்பாதி; பரீட்சார்த்த பின்பாதி என வித்தியாசமான சினிமா என்றாலும் எக்ஸ்பெரிமென்டில் வெடித்த கெமிஸ்டரி குடுவையாகிவிடுகிறது.
இவை தவிர்த்து வித்தியாசம் வித்தியாசம் என பெருமிக் கொள்ளும் இயக்குநர்கள் மத்தியில் மிஷ்கின் தவிர்க்க முடியாத உண்மையாகவே மாறுப்பட்ட இயக்குநர். உழைப்புக்கும் மெனக்கெடுதலுக்கும் பாராட்டுக்கள்.
அஞ்சாதே முன்பாதியில்; சிரிக்காதே பின்பாதியில்

Hi Sheik,
Once again very good review from you..
Thanks for your continues effort.
Athy
Thanks athy