jump to navigation

அல்லாஹ் ரக்க ரஹ்மான் மார்ச் 1, 2009

Posted by M Sheik Uduman Ali in கட்டுரைகள்.
Tags: , , ,
1 comment so far

“அன்பிற்கும் வெறுப்பிற்கும் இடையே அன்பை தேர்ந்தெடுத்தேன்என்ற உன்னதமான வரிகளால் தனது வாழ்வியலின் வெற்றியை தனக்கே உரிய தன்னடக்கத்துடன் ஆஸ்கர் விழாவில் தெரிவித்தார் அல்லாஹ் ரக்க ரஹ்மான். தன்னம்பிக்கை, உழைப்பு, முயற்சி என வெற்றிக்கு ஒன்றாம் வகுப்பிலிருந்தே நமக்கு தெரிந்த வழக்கமான வழிமுறைகளை எந்தவொரு வெற்றியாளரின் வாழ்விலும் எளிதாக பொருத்தி பார்க்கலாம். விசயம் அதுவல்ல. தனித்தன்மையான சில பண்புகள் தான் இந்த பொதுவான காரணிகள் வெற்றியாளர்கள் வசப்படும் காந்தங்களாக இருக்கும். அதிலும் ஏ.ஆர்.ரஹ்மான், சுழியில் ஆரம்பித்து ஆழி சூழ் உலகை ஆட்கொண்ட இளைஞன். இந்தியாவின் இசை மேஸ்ட்ரோ.

உலகாளவிய வெற்றி பயணத்திற்கான ஏ.ஆர்.ரஹ்மானின் வழிமுறைகள் வெற்றி பெற நினைப்பவர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய பாடங்கள். “வெற்றியும் புகழும் கோப்பையில் இருக்கும் காபி போல, இருப்பதை காலி செய்தால் தான் புதியதை ஊற்ற முடியும் என்ற சூஃபியிஸ கோட்பாட்டை ஏ.ஆர்.ரஹ்மான் வெற்றிகரமாக செயல்படுத்தி எந்தவொரு வெற்றியையும் தலைக்கு ஏற்றாமல் “எல்லா புகழும் இறைவனுக்கே என்ற அர்பணித்தலுடன் தன் வெற்றியை கொண்டாடி விட்டு புதியன கற்கவும்; செய்திடவும் முடிந்தது.

arr_oscar
“தாமரை இலை தண்ணீர் போன்றே இவ்வாழ்வை வாழ்வதாககூறும் ஏ.ஆர்.ரஹ்மான் ஒன்றும் சாமியார் அல்ல. நேர்மையான சாமர்த்தியசாலி. தைரியசாலி. ஆமாம், ஃப்யூசன் என்பது ஏதோ தீட்டு போல பாவித்து குறை கூறி வந்த கட்டுப்பெட்டிகள் மத்தியில் நாட்டுபுறம், கர்நாடிக், ஹிந்துஸ்தானி, வெஸ்டர்ன், அராபிக், கவ்வாலி என ஏ.ஆர்.ரஹ்மான் பயணித்த தளங்களும் ஏற்படுத்திய ஃப்யூசன்களும் ஒரு பக்கம் என்றால், அவரது இசைக் கோவை இன்னொரு பக்கம் அவரது இசை பரவலுக்கு மூலங்களாக அமைந்தது. எழுதிக் கொள்ளுங்கள் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கோவை அவரை இன்னும் உயர அழைத்துச் செல்லும்.

விமர்சனங்களை கண்டு உணர்ச்சி வசப்படாதவர் ஏ.ஆர்.ரஹ்மான். இங்கே இசை மேதைகள் என தங்களை தாங்களே போற்றிக் கொள்பவர்கள் ஏ.ஆர்.ரஹ்மானை பற்றி அடித்த கமென்டுகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் ஒரே பதில் “அது அவரது சொந்த கருத்து என்பது. உண்மையான பதில் அவரது வெற்றியில் இருக்கும்.

உலகின் மதிப்பு மிகுந்த ஒரு விழாவில் ஒன்றல்ல இரண்டு விருதுகள் வென்ற பிறகு புகழை இறைவனுக்கும், வெற்றியை அம்மாவிற்கும், பெருமையை தாய் மொழிக்கும் அர்பணித்த போது தான் உண்மையிலேயே மயிர் கூச்செரிந்தது; ஆனந்த கண்ணீரும் முளைத்தது. ஏதோ இத்தனை காலம் நாம் உழைத்து வாங்கியது போன்ற உணர்வு.

பதினேழு வருடங்களாக இந்த இளைஞனின் வெற்றி பயணத்தில் எனக்கான இன்ஸ்பிரேஷன் அவரது விருதுகளில் அல்ல; அவரது உழைப்பின் வெளிப்பாடுகளில். உழைப்பு மட்டுமல்ல; அதை சமர்பிக்கும் சாமர்த்தியமும் சேர்த்து தான் கோடம்பாக்கத்திலிருந்தவரை ஹாலிவுட்டிற்கு அழைத்து சென்றிருக்கின்றது. வசதியான வாய்ப்பிற்காக காத்திருக்காமல் வந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜெயிக்கிற ஃபார்முலா ஏ.ஆர்.ரஹ்மானுடையது.

அப்புறம் “ஈகோ. எல்லோருடைய உழைப்பையும் அங்கீகரிக்கும் மாண்பும், சம கால கலைஞர்களை பாராட்டும் பெருந்தன்மையும் “நிறைகுடங்களுக்கு மட்டும் உண்டான குணம். சாதாரண அங்கீகாரத்திற்கெல்லாம் “ஈகோ பிடித்து அழையும் மனிதர்களுக்கு மத்தியில் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு சிறந்த முன்னுதாரணம்.

இதையெல்லாம் தாண்டி, ஆன்மிகத்தையும் நாட்டு பற்றையும் இவர் அணுகும் முறை. மற்றவர்களை போல சித்தாதங்கள் பேசியோ, இன, மத, மொழி பற்றி உருகியோ வழியாமல் கம்பீரமாக தன் நம்பிக்கையை பறைசாற்றும் விதம் ஒவ்வொரு இளைஞனும் பின்பற்ற வேண்டிய ஒன்று.
வீண் பெருமைகள் பேசி, எளிதில் எதற்கும் உணர்ச்சி வசப்படும் கோழைகளாய் இருப்பதனால் திறமைகள் இருந்தும் புழுதியில் வீழ்ந்து கிடக்கும் நம் மக்கள் பலருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு சிறந்த வழிகாட்டி.

ஏ.ஆர்.ரஹ்மான் – இந்தியாவின் இன்ஸ்பிரேஷன்

Slumdog Millionaire பிப்ரவரி 3, 2009

Posted by M Sheik Uduman Ali in விமர்சனங்கள்.
Tags: ,
comments closed

குரோர்பதி நிகழ்ச்சியில் பெரும்பான்மையான கேள்விகளுக்கு பதில் சொன்ன மும்பை சேரி இளைஞன் ஜமால் மாலிக் (தேவ் படேல்) போலீஸாரால் விசாரிக்கப்படுகின்றான். ஆச்சர்யமாக ஒவ்வொரு கேள்விகளுக்கும் தன் வாழ்க்கையிலிருந்தே பதில் கிடைத்த கதையை இன்ஸ்பெக்டர் இர்பானிடம் விவரிக்கின்றான். மும்பை சேரியின் அசலான பக்கங்கள் “ஓ சாரா என்ற வசீகரமான ஏ.ஆர்.ரஹ்மானின் இசையுடன் பரந்து விரிந்து அங்கு வாழும் முரண்பட்ட இரு சகோதரர்கள், வகுப்புவாத கலவரம், அதில் இவர்களிடம் வந்து சேரும் லத்திகா (ஃப்ரைடோ பின்டோ), குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைக்கும் கும்பல், மாஃபியா என மும்பையின் இருட்டு பக்கங்களை பளீரென சொல்கின்றது.

இந்திய சினிமாவிற்கு ஸ்லம்டாக் ரொம்பவும் பழைய கதை. இம்மாதிரியான தளத்தை பல்வேறு கோணங்களில் நாம் தொட்டிருந்தாலும் ஸ்லம்டாக் ரொம்பவும் அசலாக தொட்டிருக்கின்றது.

ஜமால் மாலிக்காக வரும் தேவ் படேல் ஆச்சர்யப்படுத்துகின்றார். இர்பான் கானிடம் இயலாமையும் கோபமுமாக தன் கதையை விவரிக்க ஆரம்பிக்கும் இடத்திலிருந்து ஃப்ரைடோவுடான காதல், இழப்பு, குரோர்பதி நிகழ்ச்சி என ஒவ்வொரு காட்சிகளிலும் நம்மை ஒன்றி போக வைக்கின்றார். அடுத்ததாக குரோர்பதி நிகழ்ச்சி நடத்தும் அனில் கபூர். கொஞ்சூண்டு காட்சிகளே என்றாலும் ஒரு பொழுதுபோக்கு வியாபாரியாக நடிப்பில் பிரம்பிக்க வைக்கின்றார்.


நொடியிழை தவறாமல் தங்கள் உழைப்பை அர்பணித்திருக்கின்றார்கள் போட்டோகிராபி பண்ணியிருக்கும் ஆண்டனி டோட் மற்றும் எடிட்டிங் பண்ணியிருக்கும் க்ரிஸ் டிக்கன்ஸ். ஆடிட்டோரியம் லைட் போட்டதும் முகம் கூசும் தேவ் மறுபக்கம் போலீஸ் விசாரணையில் அடிவாங்கி முகம் சிவப்பது, பின்னிரவில் ஒரு சிறுவனின் கண்ணை பறிக்கும் காட்சிகள் என சின்ன விசயங்களையும் அவ்வளவு இயல்பாக தொட்டிருக்கின்றார்கள்.

விகாஸ் ஸ்வர்பின் அசல் நாவலை வெற்றிகரமாக சினிமாப்படுத்தி ஸ்லம்டாக்கின் வெற்றிக்கு முதுகெலும்பாக நிற்கிறது சைமன் ப்யூஃபாயின் திரைக்கதை. எது பொருந்துமோ அதை அசலாகவும் ப்ரெஷ்ஷாகவும் தந்தது தான் கோல்டன் குளோபிலிருந்து ஆஸ்கார் வரை ஏர்.ஆர்.ரஹ்மானை அழைத்துச் சென்றிருக்கின்றது. ஏர்.ஆர்.ரஹ்மானின் பெஸ்ட் “ஜெய்கோவை விட நிறையவே வேறு இருந்தாலும் சரியான நேரத்தில் சரியான தளத்தில் சரியான கோணத்தில் தொட்டுப் பார்த்ததில் இந்த ஜீனியஸின் வெற்றிக்கு உதவிய சரியான உழைப்பு. வெஸ்டர்ன்,  ஹாலிவுட், லொட்டு லொசுக்கு என நிறையவே குழப்பிக்கொள்ளும் இந்திய இசையமைப்பாளர்களுக்கு ஸ்லம்டாக்கில் ஏர்.ஆர்.ரஹ்மானின் பின்ண்ணி இசை நிறைய பாடங்கள் கற்றுத்தரும்.

ஸ்லம்டாக்கின் ஆதி அந்தம் எல்லாமே இயக்குநர் டேனி பாய்ல் தான். சரியான களத்தை அச்சு அசலாக எடுத்து மாறுபட்ட கோணத்தில் படம் பிடித்து காட்டியிருக்கின்றார். ஒவ்வொரு நடிகர்களையும் அவ்வளவு இயல்பாக இயக்கிய விதம் தான் பிரம்மிக்க வைக்கின்றது. காட்சிகளோடு ஒன்ற வைத்து எதைப் பற்றியும் யோசிக்க விடாமல் ஒரு முழு மூச்சில் பார்வையாளர்களை ஆட்படுத்திவிடுகின்றது.

டேனி பாய்ல் தொட்ட இடத்தை நம் இயக்குநர்கள் தொட சில படிகளே இருந்தாலும் வியாபாரம், கம்ர்ஷியல் காம்பரமைஸ் போன்ற விசயங்களால் பின்னால் நிற்கின்றோம். முதன் முதலாக உலகம் தொட்ட இந்தியாவைப் பற்றிய சினிமா இந்தியாவின் கரைபடிந்த பக்கங்களை மட்டுமே காட்டியிருப்பதில் கொஞ்சம் வருத்தம் இருந்தாலும்

ஸ்லம்டாக் மில்லியனர் – இந்திய இயக்குநர்களுக்கு உலக சினிமாவை பற்றிய அளவுகோலை உறுதிபடுத்திய தரமான பொழுது போக்கு சினிமா.

கஜினி (ஹிந்தி) திசெம்பர் 27, 2008

Posted by M Sheik Uduman Ali in விமர்சனங்கள்.
Tags: ,
5 comments

ஹிந்தி கஜினியை பார்ப்பதிலும் விமர்சிப்பதிலும் ஒரு தர்மசங்கடம் இருக்கின்றது. தமிழில் சூர்யா மற்றும் அஸினின் அருமையான நடிப்பும், சிறப்பான திரைக்கதை,  ஹிட்டான பாடல்களுமாக பெரிய வெற்றி பெற்ற படத்தை ஹிந்தியில் பார்க்கும் போது நமது அணுகுமுறை ஒப்பீட்டளவிலேயே அமைந்துவிடும். ஆனால் அதையும் தாண்டி பிரம்மாணடமாக அமீர்கான் & டீம் ஜெயித்திருக்கிறது.

கொஞ்ச நேரமே ஹீரோவிற்கு நினைவிருக்கும் என்பதை பார்வையாளர்களுக்கு புரியவைக்காமல் ஹீரோயிஸத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதும், இரட்டை வில்லன்களுடனான கிளைமாக்ஸூம் தமிழ் கஜினியை ஒன்றிபார்க்க விடாமல் செய்தவை. ஏ.ஆர்.முருகதாஸூம் அமீரும் ஹிந்தியில் இதை நேர்த்தியாக சரி செய்திருக்கிறார்கள்.

இயல்பாகவே ஆரம்பிக்கும் படம் ஊனமுற்ற குழந்தைகளை கதவில் நிற்க வைத்து அஸின் மறுபக்கம் விடும் போது அமீர் கவரப்படும் காட்சியும் அதற்கு பின்ணணியில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

தர்பூஸ் பழத்தை கையில் வைத்துக் கொண்டு தன் கம்பெனி ஊழியர்களை செல்லமாக விரட்டும் காட்சியில் சூர்யாவிற்கு விட்டுக் கொடுக்கும் அமீர் மற்ற எல்லா காட்சிகளிலும் சூர்யா நினைவுக்கு வராதபடி நடிப்பில் மிரட்டியிருக்கிறார். பதினைந்து நிமிடங்களே தனக்கு நினைவுகள் நிற்கும் என்பதை எந்தவொரு மிகையான நடிப்பும் இல்லாமல் பார்வையாளர்களுக்கு புரிய வைக்கும் காட்சிகளில் இந்த “நடிப்பு ராட்சசன் மிரட்டியிருக்கின்றான். அஸினை ரசித்து காதலிக்கும் காட்சிகளில் நம்மை ரசிக்க வைக்கின்றார். மொத்தத்தில் அமீரின் உழைப்பு அபரிமிதம்.

படத்தில் அமீருக்கு சரியான போட்டி அஸின். குறும்பு, பயம், காதல், கோபம் என நவரசங்களையும் மிகையில்லாமல் வெளிப்படுத்தும் இப்படியொரு நடிகையை சமீபமாக ஹிந்தி சினிமா பார்த்திருக்குமா என்று தெரியவில்லை. சரியான தேர்வுகளில் பயணித்தால் பாலிவுட்டின் “ஹாட் சீட் அஸினிற்கு காத்திருக்கிறது.

மெடிக்கல் காலேஜ் மாணவியாக வரும் ஜியா கானும் நம் மனதை கவர்கிறார். நல்லவேளையாக வில்லன் தமிழ் கஜினி போல படுத்தவில்லை.

ஒரு கடற்கரையில் ரோஸ் நிற காரையும் பின்ணணியில் மலைமுகட்டையும் வைத்து எடுக்கப்பட்ட “பேக்காபாடலில் ஆச்சர்யப்படுத்துகிறார் கலை இயக்குநர் சுனில் பாபு. அமீரின் படபடப்பான பார்வைகளுக்கும் த்ரில்லான காட்சிகளுக்கும் நேர்த்தியான மூன்றாவது கண்ணாக இருந்து சாதித்திருக்கிறது ரவி.கே.சந்திரனின் கேமிரா. முதல் கொலையை நடந்த இடத்திற்கு இன்ஸ்பெக்டர், கமிஷனர் என ஒவ்வொருவராய் வெவ்வேறு நேரங்களில் வந்து போகும் காட்சியில் “அட போட வைக்கிறார் எடிட்டர் ஆண்டனி. இதற்கே இப்படியென்றால் மற்ற காட்சிகளில் விட்டு வைப்பாரா?

பாடல்கள் மூலம் படத்தின் தரத்தை இன்னொரு உயரத்திற்கு எடுத்து சென்றிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.   அலாதி ப்ரியம் என்றாலும் குஷாரிஸ் மெட்டினை பின்ணணியில் கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்தியிருக்கிறார். “குஷாரிஸ், “கேஸே முஜே, “பேகா பாடல்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கோவை முற்றிலும் புதிய தளத்தில் சர்வ தேச தரத்தில் பயணித்து பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது. சர்வதேச இசையில் நம்மை கர்வப்பட வைக்கக்கூடிய ஆல்பம் “கஜினி.
கிளைமேக்ஸ் சண்டைக் காட்சிகளில் பீட்டர் ஹெய்ன் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

குறுகுறுப்பான காதல், வித்தியாசமான திரைக்கதை, சிறப்பான நடிகர், பிரம்மாண்டமான இசையமைப்பாளர், தரமான டெக்னிக்கல் டீம் என்ற ஹிட்டான சமாச்சாரங்களை எடுத்துக் கொண்டு பாலிவுட்டில் வெற்றிகரமாக  ஏ.ஆர்.முருகதாஸ் களமிறங்கியதில் ஆச்சர்யமில்லை.  ஆனாலும், அதை நேர்த்தியாக கையாண்டதற்கு வாழ்த்துக்கள்.

ஹீரோயிஸம், மிகைப்படுத்தப்பட்ட ஆக் ஷன் இவைகளை விட்டு ஹிந்தி சினிமா வேறொரு தளத்தில் பயணிக்கும் இத்தருணத்தில் “ரங் தே பஸந்தி, “தாரே ஜமீன் பர் போன்ற படங்களின் நாயகன் தமிழ், தெலுங்கு சினிமா ஹீரோக்கள் மாதிரி கிளைமாக்ஸில் சண்டை போட்டு பழி தீர்ப்பது பாலிவுட்டின் தற்போதைய சக்ஸஸ் பார்முலாவை டேமேஜ் பண்ணி புளித்து போன மசாலா பக்கம் திருப்பி விடுமோ என்ற பயம் வருகின்றது.

கஜினி – திரும்பவும் ஜெயித்திருக்கின்றான்

வாரணம் ஆயிரம் நவம்பர் 23, 2008

Posted by M Sheik Uduman Ali in விமர்சனங்கள்.
Tags: ,
2 comments

“என் வீட்டைப் பார்; என்னை பிடிக்கும் என்ற தாமரையின் அருமையான பாடல் வரிகளே சொல்லிவிடுகிறது சூர்யாவின் குடும்பத்தைப் பற்றி.

தனது ஸ்டைலிஷான அணுகுமுறையில் மென்னையான தந்தை மகன் உறவை படம் பிடித்திருக்கிறார் கெளதம். ஒரு மரணத்தில் ஆரம்பித்து மெல்ல ஒரு குடும்பத்தின் வாழ்க்கைச் சுழலை பின்ணணியாகக் கொண்டு தன் வாழ்க்கை பாதையில் ஒரு தந்தையின் பங்களிப்பை பற்றிய ஒரு மகனின் மலரும் நினைவுகளே வாரணம் ஆயிரம்.

“சின்ன கமல்ஹாசனாகவே” ஜொலித்திருக்கிறார் சூர்யா. ஒரு உயர் நடுத்தர வர்க்கத்து தந்தையாக பக்குவமான மேனரிசத்துடன் பிரமாதம் சூர்யா. முதல் நாள் கல்லூரிக்கு செல்லும் சூர்யாவிடம் தந்தை சூர்யா “நீ இனிமேல் என் நிழலில் இல்லை; தாத்தாவிடமிருந்து தான் நாற்பதாயிரம் கடன் வாங்கினேன் என என்னென்னமோ பேசும் அந்த ஒரு நிமிடம் கண்ணீர் வரவழைக்கிறது. இது ஒருபுறமென்றால் ஸ்கூல் செல்லும் மாணவனாக ஆரம்பித்து கல்லூரி மாணவன், நடுத்தர வயது இளைஞன் என்று இன்னொரு சூர்யா மிரட்டியிருக்கிறார். சட்டென மனதில் தங்குவது ஆர்த்திக்காக இன்னொருவனை ரவுண்ட் கட்டும் ஸ்கூல் பையன் சூர்யா, சமீராவிடம் உருகி வழியும் சூர்யா. மில்லியன் ரசிகைகளை இதற்குள் சுனாமியாகத் தாக்கியிருப்பார்.

கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று சொல்வார்களே அது சூர்யாவிற்கும் சமீரா ரெட்டிக்கும் பொங்கி வழிந்திருக்கிறது. சமீபமாக இவ்வளவு அருமையான காதல் காட்சிகளை பார்த்த ஞாபகம் இல்லை. சூர்யாவை தன் அறையில் தங்கச் சொல்வதில் ஆரம்பித்து மெல்ல மெல்ல காதலில் விழுவது வரை மெச்சூரிட்டியான முகபாவனைகளுடன் சமீரா அவ்வளவு யதார்த்தம். படத்தில் சூர்யா “இளையராஜா…இளையராஜா என்று கொஞ்சினாலும் இக்காதல் காட்சிகளுக்கு ஹாரீஸின் பின்ணணியே உயிர் கொடுக்கிறது.


“கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் அம்மாவைப் போல இதிலும் நடித்திருப்பதால் சிம்ரனிடம் கொஞ்சம் ஏமாற்றமே. பரிதவிப்பான காட்சிகளில் கூட சூர்யா டாமினேட் செய்து விடுகிறார்.

அமெரிக்கா, சமீராவின் அறை, அந்த கால கல்லூரி, காஷ்மீர், டெல்லி என அதனதன் கால பருவ நிலைகளுக்குத் தகுந்தவாறு காட்சிகளை படம் பிடித்து அசத்தியிருக்கிறார் ரத்னவேல். அதற்கு தளமைத்துக் கொடுத்த ராஜீவனுக்கு ஷொட்டு. முன்பாதியில் ஆண்டனியின் எடிட்டிங் அவ்வளவு பிரமாதம் என்றாலும் பின்பாதியில் கொஞ்சம் குழப்பம்.

மேல்நாட்டு ஆல்பங்களை சுட்டே ஹிட்டாகிறார் என்ற இமேஜை “அனல் மேலே பனித்துளி, “நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை பாடல்கள் மூலம் மாற்றியிருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். பாடல்களும் சரி, அவற்றை எடுத்த விதமும் சரி (குறிப்பாக நெஞ்சுக்குள்) பிரமாதம். சமீராவுடனான காதல் காட்சிகளில் ஹாரிஸின் வாத்தியங்கள் மனதை லயிக்க வைக்கின்றன. ரொம்பவும் வீணடித்திருப்பது “அனல் மேலே பாடலை எடுத்த விதம். அதனால் தான் கெளதமுடன் கோபமா ஹாரிஸ்?

ஹார்ட்ஸ் ஆஃப் கெளதம். அடிதடி, வன்மம், கொடூரம் என்ற அணுகுமுறையிலிருந்து மாறி திரைக்கதையை பூக்களால் அலங்கரித்ததிற்கு. சடசடவென தந்தை மகன் உறவை சொன்ன விதம் அருமை என்றாலும் அதையெல்லாம் மிஞ்சி நிற்பது சூர்யா-சமீரா காதல் காட்சிகளே என்பதால் இது ஒரு அழகான காதல் படம் என்றே சொல்ல வைக்கிறது. எப்படி இவ்வளவு மென்மையாக கெளதம் என்ற ஆச்சர்யத்தை அமெரிக்கக் குண்டுவெடிப்பும் அடுத்தடுத்த முனைப்பில் தங்களின் தீராத ஆக் ஷன் தளமும் கலைத்து விடுகிறது.

ஸ்டைலாகவும் வேகமாகவும் காட்சிகள் நகர்ந்தாலும் இடைவேளைக்குப் பிறகு சூர்யா குடித்து விட்டு தடுமாறுவது போல திரைக்கதையும் தள்ளாடுகிறது. தன் வாழ்க்கையில் தந்தையின் பங்களிப்பை பற்றிய நினைவுகளாய் மலரும் மகன் சூர்யாவின் நினைவுகளில் மிகக் கொஞ்சமே தந்தை-மகன் உறவு வருகின்றது. மற்றெல்லாக் காட்சிகளிலும் “டாடீ உங்க கிட்ட  சொல்ல மறந்திட்டேன், உங்களுக்கு தெரியாது டாடீ என அவருடைய காதல் புராணங்களிலெல்லாம் புலம்புவது டூமச். வேலைக்குப் போகிறார், வீட்டைக் கட்டுகிறார், கேங்ஸ்டரிடமிருந்து குழந்தையை காப்பாற்றுகிறார், ஆர்மிக்கு போகிறார், சண்டை போடுகிறார்… கமான் கெளதம் ஏன்?

மயிலிறகால் வருட வேண்டிய கிளைமாக்ஸை கத்தியால் காயப்படுத்தியிருந்தாலும்

வாரணம் ஆயிரம் – முட்களுடன் கூடிய ரோஜாப் பூக்கள்.

சரோஜா – விமர்சனம் ஒக்ரோபர் 9, 2008

Posted by M Sheik Uduman Ali in விமர்சனங்கள்.
Tags: ,
2 comments

சென்னை 28 கொடுத்த பிரம்மாண்ட வெற்றியை அட்டகாசமாக தனது அடுத்த படைப்பிலும் தக்க வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. “ஜட்ஜ்மென்ட் நைட்”ஐ இன்ஸ்பிரஷேனாக எடுத்துக் கொண்டு காமெடி த்ரில்லர் என்ற மாறுபட்ட ட்ரீட்மென்ட் மூலம் முத்திரைப் படைத்திருக்கிறார்.

எஸ்.பி.பி. சரண் & கோ ஒரு பக்கம்; பிரகாஷ்ராஜ், ஜெயராம் மற்றொரு பக்கம் என இரண்டு வெவ்வேறு பின்ணணியில் ரொம்பவும் இயல்பாக ஆரம்பித்து மெதுவாக த்ரில்லிங் ஏரியாவிற்குள் நுழையும் போது “அட! போட வைக்கிறது திரைக்கதை. திருமணத்திற்குப் பிறகு நண்பர்களுடன் வெளியில் சுற்றும் ஒருவன் வீட்டில் சந்திக்கும் சாதாரண பிரச்சனையிலிருந்து, எப்போதும் தன் முன்னிலையில் தெலுங்கில் பேசும் போது ஒன்றும் சொல்லாத சிவா அந்த அசாதாரண சூழ்நிலையில் தன் நண்பர்கள் இரண்டு பேர் தெலுங்கில் பதறும் போது சந்தேகத்துடன் கத்துவது என எல்லா சின்ன விசயங்களிலும் வெங்கட் பிரபுவின் திரைக்கதை ஜெயித்திருக்கிறது.

ஏற்கெனவே சிவாவுக்கும், பிரேம்ஜிக்கும் வெங்கட் பிரபுவின் ஏரியா நல்ல அறிமுகம். ஆனாலும், ஒரு நடுத்தர வயதுக்காரனுக்கே உரிய கோபத்துடனும் நிதானத்துடனும் சரணும், ஆஜானுபாகான ஹீரோயிஸத்துடன் வைபவும் ஆச்சர்யப்படுத்துகிறார்கள். அப்புறம் சரோஜாவாக வரும் வேகாவும் சரி, கல்யாணியாக வரும் நிகிதாவும் சரி தியேட்டரில் ஜொள்ளாறு ஓடுவதற்கு முழு ரெஸ்பான்ஸ்பிலிட்டி எடுத்துக் கொள்கிறார்கள்.

பரிதவிப்பையும் பாசத்தையும் அந்த பணக்காரத்தனத்துடன் பிரகாஷ்ராஜ் வெளிப்படுத்தும் அழகு அற்புதம். சம்பத்திற்கு இது மாதிரி ரோல்களே வருவதால் ஏதோ பெரிதாக தெரியவில்லை. அப்புறம் ஜெயராம், சார் கிளைமாக்ஸில் பண்ணும் வில்லத்தனம் பக்கத்து வீட்டு அமுல் பேபி பண்ணும் சேஷ்டைகளையே ஞாபகப்படுத்துகிறது. நம்ம ஏரியா இதுவில்லை ஜெயராம் சார். அதுவும் முதல் சில ரீல்களிலேயே லேசாக தெரிந்து விடுகிறது.

சின்னத்திரை ஜோடி நம்பர் ஒன் பட்டாளத்தையும் சென்னை 28 கும்பலையும் சமயோஜிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

முன்பகலில் ஆரம்பித்து ஒரு இரவு முடிந்து அடுத்த நாள் காலை என்ற இந்த கால ஓட்டத்தில் தான் கதை என்பதை தெள்ளத் தெளிவாக படம் பிடித்திருக்கிறார் சினிமாட்டோகிராபி பண்ணியிருக்கும் சக்தி சரவணன். பரபரப்பாகவும் இல்லாமல் மெதுவாகவும் இல்லாமல் த்ரில்லிங்கை வேறு மாதிரி அனுபவிக்க வைக்கின்றனர் எடிட்டிங் பண்ணியிருக்கும் ப்ரவீன் & ஸ்ரீகாந்த்.

“மை லைவ்ப் பாடலுக்கு ஒரு வெஸ்டர்ன் ஆல்பத்தை சுட்டு போட்டிருந்தாலும் “தோஸ்த் படா தோஸ்த், “சிக்கி சிக்கி பாடல்கள் மூலம் அடுத்த தளத்தை தொட்டிருக்கிறார் யுவன். காமெடிக்கும் த்ரில்லிங்கிற்கும் இடையே பரபரக்கும் காட்சிகளுக்கு யுவனின் பேக்ரவுன்ட் ஸ்கோர், க்யூட்.

இப்படித்தான் கதை பயணிக்குமோ, சிலிர்க்க வைக்கும் க்ரைம் காட்சிகள் இருக்குமோ என்றெல்லாம் நம்மை யோசிக்க வைக்காமல் “ஆமாம் த்ரில்லர் தான்; ஆனா ஜாலியான என்டடெய்னர் என்ற இயக்குநர் வெங்கட் பிரபுவின் அணுகுமுறை தமிழ் சினிமாவிற்கு ரொம்பவே புதுசு. ஆனாலும் சில படபடக்கும் காட்சிகளிலும் காமெடி பண்ணுவது பயங்கர முரண் தொடை பாஸ். எதைப் பற்றியும் யோசிக்காமல் தனது திரைக்கதையை அழகாக பரப்பி இதமாக டெக்னாலஜி மற்றும் டெக்னிக்குகளை (குறிப்பாக, பிரகாஷ்ராஜ் பேசும் ஷாட்டிலிருந்து “தோஸ்த் படா தோஸ்த் ஆரம்ப்பிக்கும் உத்தி) பயன்படுத்தி முழு நீள பொழுதுபோக்கிற்கு மெகா கேரண்டி கொடுக்கும் வெங்கட்டிற்கு ஹார்ட்ஸ் ஆஃப்.

துரத்தும் வில்லன்களெல்லாம் படபடவென இந்த அப்பாவி இளைஞர்களின் தாக்குதல்களுக்கு இரையாவது, போலீஸாக இருந்ததற்கே சம்பந்தமில்லாமல் என்கவுன்டருக்கு தேடப்படும் ரெளடி மாதிரி சம்பத் ஆந்திரா பார்டரில் ஒரு மூடப்பட்ட தொழிற்சாலையில் தன் காதலி மற்றும் ரெளடி கும்பலுடன் இருப்பது, நல்ல காதலியாகவே இருக்கும் கல்யாணி “கோடான கோடி பாடலுக்கு ஏதோ விலைமாது மாதிரி கும்பலுடன் ஆடுவது என சிலப் பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும்

சரோஜா – வெங்கட் பிரபுவின் கெட்டிக்காரத்தனம்

சக்கரக்கட்டி – விமர்சனம் ஒக்ரோபர் 6, 2008

Posted by M Sheik Uduman Ali in விமர்சனங்கள்.
Tags: , ,
1 comment so far

அக்கறையுடன் ஏ.ஆர்.ரஹ்மானிற்கு

இத்திரைப்படத்தின் சந்தைப்படுத்துதலுக்கு ஜீவனாய் அமைந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிற்கு, தங்களின் அபிமான ரசிகன் என்ற முறையில் ஒரு வேண்டுகோள். நவீனமும், இளமையும், புதுப்புது முயற்சிகளும் கொண்ட உங்களின் வசீகரமான இசை இந்தியாவின் சொத்து. வருங்கால சந்ததியனருக்கு மட்டுமல்ல, தேசம் தாண்டிய களத்தில் நாம் உதாரணப்படுத்திக் காட்ட “ஸ்வதேஸ், “லகான், “கன்னத்தில் முத்தமிட்டால், “ரங்தே பஸந்தி என நிறைய இருந்தாலும், இந்த மாதிரி “பேனரை மட்டும் நம்பி கமிட்டாகும் படங்களால் காசைத் தவிர வேறெந்த லாபமும் இருப்பதாக தெரியவில்லை. இந்த மாதிரி படங்களை உங்கள் கேரியரில் எந்த அக்கெளன்டில் வைத்துக் கொள்வீர்கள். இயக்குநர் அமீர் சொன்னது போல, “பருத்தி வீரன், “சுப்ரமணியபுரம் மாதிரி படங்களில் உங்களைப் பொருந்திப் பார்த்துக் கொள்ளவும். இன்னும் அழுத்தமாக எங்கள் மண்ணின் உலகளாவிய எல்லைத் தொட்ட கலைஞன் என்று நாங்கள் மார் தட்டிக் கொள்ளலாம். தயவு செய்து ஸ்கிரிப்டையும் பார்க்கவும். சக்கரக்கட்டி விழலுக்கு இறைத்த நீர்.

அன்புடன் இயக்குநர் கலாபிரபுவிற்கு

ஏராளமான டெக்னிகல் புலமை தங்களுக்கு இருப்பது சந்தோஷத்திற்குரியது என்றாலும், ஏர்.ஆர்.ரஹ்மானின் கால்ஷீட்டையும் அப்பாவின் காசையும் மட்டும் நம்பி அசட்டுத் தைரியத்தில் இறங்கியிருக்கிறீர்கள். வெறும் கை முழம் போடாதுனு அப்பா சொல்லலையா.

பரிவுடன் பாக்யராஜின் வாரிசுக்கு

அருமையான நடிப்பாற்றல் தேங்கிக் கிடக்க அமெரிக்கன் ஸ்லாங்கிலும் வெள்ளைக்கார ஸ்டைலிலும் ஆஊவென தங்களின் கன்னி முயற்சி வெத்து வேட்டாக போய்விட்டது. தேவை உடனடியாக நல்ல கதை அல்லது திரைக்கதை.

அப்புறம் மொத்தத்தில்

காதல் படம்னா சும்மா உருகி வழியறது, ஓவர் சின்ஸியாரிட்டி காட்றது; கண்ணுல ஆரம்பிச்சு கழுத்துலேயோ இதயத்திலேயோ அல்லது வேறு எந்த கருமாந்திரத்திலேயோ முடியுற மாதிரினு பக்கம் பக்கமா வசனம் பேசுறது; நடிக்கவே தெரியாத கதாநாயகி நவரசங்களையும் காட்டுறது இப்படியெல்லாம் காதலின் கண்ணியத்தை கழுவிலேற்றி இன்னொரு தடவை அசிங்கமான அந்த சினிமாக் காதல் ட்ரண்டை கொண்டு வர தயாராகும் கோடம்பாக்கத்து இளைஞர்களுக்கு இந்த சினிமா ஒரு எச்சரிக்கை மணி.

அட, அதுதான் டாக்ஸி…டாக்ஸி பாடல் இரண்டு தடவை, மிச்சம் ஐந்து பாடல்கள் இது போதும்பா படம் பார்க்க என்று இன்னும் நினைப்பவர்கள் தங்கள் “வில் பவரை சோதிக்க இரண்டு மணி நேரம் (ஆப்ரேட்டர் புண்ணியத்தில் அவ்வளவு நேரம் தான் படம் ஓடியது) பயிற்சி எடுக்கலாம். ஒரு வீடு, ஒரு காலேஜ், ஒரு பார்க் சிலப் பல காதல் டயலாக்குள் என்று எப்படித்தான் “ரூம்போட்டு யோசிக்கிறாய்ங்களோ தெரியல.

சக்கரக்கட்டி – மண்ணாங்கட்டி.

What else? மொபைல் போன்கள் ஓகஸ்ட் 13, 2008

Posted by M Sheik Uduman Ali in கட்டுரைகள்.
Tags: , , , ,
2 comments

கெட்டிக்காரன்: மச்சான், புது மொபைல் வாங்கியிருக்கேண்டா.


ஏமாளி: அட, சொல்லவே இல்லை. கேட்டிருந்தா நானும் ஏதாவது நல்ல மாடல் சொல்லியிருப்பேன்ல.


கெட்டிக்காரன்: அட, போ மச்சி, அவனவன் டூத்பேஸ்ட் வாங்குற மாதிரி போய் வாங்கிட்டு வர்றான். இதோ பாரு, மேட் இன் சைனா.

ஏமாளி: என்ன சைனா பீஸா? ஏன்டா அதப் போய் வாங்குனே.

கெட்டிக்காரன்: அப்போ, உங்கிட்ட உள்ளது மட்டும் என்ன மேட் இன் ஜப்பானா?

ஏமாளி: இது நோக்கியாடா.

கெட்டிக்காரன்: ஆனா மேட் இன் சைனா தானே. சரி, உன்துல அப்படி என்னாத்த பெருசா இருக்குதுனு சொல்லு.

ஏமாளி: இட் ஹேஸ், ப்ளூடூத், மீடியா பிளேயர், 2.0 பிக்ஸல் கேமிரா, ஜிபிஆர்எஸ் அன்ட் இமெயில். இது ஸ்மார்ட் போனுடா மாப்ளே.

கெட்டிக்காரன்: நீ சொல்ற ப்ளூடூத், ஆரஞ்சுடூத் உட்பட எல்லா கர்மமும் இதுலேயும் இருக்குடா. அடிசனலா, ட்யோல் சிம் கார்டு போட்டுக்கலாம்டா மாப்ளே. (காட்டி கடுப்படிக்கிறான் கெட்டிக்காரன்).

ஏமாளி: டச் ஸ்க்ரீன்டா?

கெட்டிக்காரன்: தோ பாரு, இது தான் ஸ்டைலஸ். டச் ஸ்கீரினுக்கு. இத இப்படியே இழுத்தா, ஆன்டனா.

ஏமாளி: ஓ, எஃப்எம்க்கா?

கெட்டிக்காரன்: இல்லடா, டிவிக்கு. பத்து சேனல் தெரியுதுடா மாப்ளே.

ஏமாளி: டிவியாஆஆஆ (வயிறு ஃபயறாகிறது). கேமிரா குவாலிட்டி எப்படிடா?

கெட்டிக்காரன்: இருக்குற மாதிரி காட்டுதுடா மாப்ளே. நான் என்ன மணிரத்னம் படத்திற்கு ஸ்டில்ஸா எடுக்கப்போறேன். இட்ஸ் எனஃப்.

ஏமாளி: மச்சான், ஏதாவது சாங்ஸ் ப்ளே பண்ணு. (“டாக்ஸி…டாக்ஸி என்று அலறுகிறது கெட்டிக்காரனின் மொபைல்).

ஏமாளி: மச்சான், கொஞ்சம் காதுல குத்துதுலே.

கெட்டிக்காரன்: மாப்ளே, ஊர்ல அடுத்த திருவிழாவிற்கு என் மொபைல்ல இருந்தே ரிக்கார்டு போடலாம்டாவ். உன்து மாதிரி மனசுக்குள்ளேயே படிக்காது. ஹெட் போன் போட்டா உன்து மாதிரி ஓரளவிற்கு நல்லாயிருக்கும்டா.

ஏமாளி: பட், மச்சான். வாரண்ட்டி?! (ஒரு வித சிரிப்புடன்). அத்தோட சர்வீஸ்.

கெட்டிக்காரன்: மாப்ளே, வாரண்ட்டி வச்சு வாங்குனா மட்டும் என்ன பெருசா புடுங்கிட்டோம். தோ பாரு நம்ம சரண் புதுசா வாங்குன மொபைல் இரண்டு மாசத்துல டிஸ்ப்ளே பிராப்ளம் வந்து, இதுக்கெல்லாம் வாரண்ட்டி கிடையாதுன்னு கடைக்காரன் சொல்லி, செலவு வாங்குன காசுக்கு பாதிய கேட்டான். கடைசியா நம்ம பாய் கடையில தான் ரிப்பேர் பண்ணினான். இப்போ ஓடல. இது கழுத ஆறு மாசம் ஓடுனா போதும்டா, அடுத்தால பிரச்சனை வந்தா யூஸ் அன்ட் த்ரோ. இடைல பிரச்சனை வந்தா நம்ம பாய் கடை. வேறென்ன. மச்சான், அது மட்டுமில்ல, உன்து பதினஞ்சு ஆயிரம், இது வெறும் நாலாயிரம். உன்தோ, என்தோ யாரவது எடுத்தாலோ, தண்ணியில நனைஞ்சாலோ லாஸ்ட். ஆனா, நான் அடுத்ததா, நீ போட்ட காசுல இரண்டு மொபைல் வாங்கிடுவேன்.

ஏமாளி: யூஸர் எக்ஸ்பிரியன்ஸ் எப்படிடா மாப்ளே?

கெட்டிக்காரன்: மாப்ளே, இதோ பாரு, மீடியா பிளேயர்ல எலெக்ட்ரிக் ரிதமோட யூக்லைசர்ல்லாம் வருது. நீயே செக் பண்ணிட்டு சொல்லு.

(அதனுடைய யூஸர் எக்ஸ்ப்ரியன்ஸை பார்த்து எரிச்சலின் உச்சத்தில் ஏமாளி. கிடைத்த கேப்புல கடா வெட்டுறான் கெட்டிக்காரன், இப்படி)

கெட்டிக்காரன்:
What else you need? ஜிபிஎஸ் மட்டும் தான் இல்லை. மாப்ளே, கொடுத்த காசுக்கு இது போதும்டா. “என்டிடிவி
நியூஸ்பாக்குறியா?

ஏமாளி: தேங்ஸ்டா மச்சான்.

நேரங்கெட்ட நேரத்தில் எமாளியின் ஸ்மார்ட் போன்

“தோஸ்த்து படா தோஸ்த்து என்று கண்ணடித்து கூவியது

குசேலன் – விமர்சனம் ஓகஸ்ட் 5, 2008

Posted by M Sheik Uduman Ali in விமர்சனங்கள்.
Tags: ,
2 comments

யாரோ ஒரு அபிமானி ரஜினியின் முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை பட வரிசைகளில் குசேலனுக்கும் இடமுண்டு என்று சொன்ன ஞாபகம். இப்போ மட்டும் அந்த அபிமானி கையில் கிடைத்தால்…. நற..நற…

நல்ல கதையில்லாத படத்தில் இந்த அசோக்குமார் (இதுதான் குசேலனில் நிஜ சூப்பர்ஸ்டாராகவே வரும் ரஜினியின் பெயர், பேசாம ராஜகுமாருனே வைத்திருக்கலாமோ!) நடித்திருந்தாலும் யாரும் தியேட்டர் பக்கம் வரமாட்டாங்க என்று ரஜினி ஒரு டயலாக் விடுவார். அதில் ஒரு சின்ன திருத்தம்… கதையல்ல… திரைக்கதை. அதற்கு குசேலனே நல்ல ஆதாரம்.

நல்லவனாகவே இருந்தாலும் தொழில் சமார்த்தியம் இல்லாததால் வறுமையில் வாடுகிறார் பசுபதி. தொழில் தரம் இல்லாவிட்டாலும் வியாரபத் தந்திரத்தில் செழித்து இருக்கிறார் வடிவேல். ஊருக்கு சினிமா சூட்டிங்கிற்காக வருகிறார் ரஜினி. இவரது பால்ய சினேகிதர் பசுபதி. அரசல் புரசலாக பசுபதி தனது மனைவி மீனாவிடம் சொல்ல ஊருக்கே தெரிந்து பசுபதியிடம் ரஜினியின் அறிமுகம் கேட்டு விண்ணப்பிக்கின்றன. ரஜினியின் இவ்வளவு பெரிய உயரமும் அவரைச் சூழ்ந்த பாதுகாப்பும் பெரிய தடைக்கற்களாக இருக்க, பசுபதியை ஊரே கேலி செய்கிறது. இவரது முயற்சிகள் ஜெயித்து தன் நண்பன் ரஜினியை சந்தித்தாரா என்பது மீதிக்கதை.

 

இதைக் கேட்டதும் நம்மில் எழுந்த எந்த எதிர்பார்ப்புகளுக்கும் நாம் பொறுப்பல்ல என்ற வகையிலேயே ஒட்டு மொத்த திரைக்கதையும் நம்மை விரட்டி விரட்டி அடிக்கிறது. எந்த கேரக்டர்களிலும் மிளிரும் பசுபதியை “வெயில் படத்தில் எல்லாம் இழந்த நிலையில் ஒரு பரிதாபத்துடன் திரிவாரே, அதே மாதிரியே படம் முழுவதும் திரிய விட்டிருக்கிறார்கள். என்ன பாவம் செய்தாரோ….சாதாரண டயலாக்குகளை கூட அழுகிற குரலிலேயே சொல்கிறார். அதை விட இவர்களின் வறுமையான குடும்பத்தைக் காட்ட “மண்பானை உடைதல், “இஞ்சு இல்லை என ரொம்பவே நெஞ்சை பிழிய முயற்சிக்கிறார்கள். ம்ம்ம்..என்னத்தச் சொல்ல ரஜினி வருவார் என்பதற்காக கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்து உட்கார்ந்தால் பசுபதியின் வாரிசுகள் அப்பாவை மட்டம் தட்டுவதாகட்டும், “ஏம்பா, நீ இவ்வளவு கஷ்டத்திலும் எப்படிப்பா சந்தோஷமா இருக்கே என்ற டயலாக்குகளாகட்டும் மட்டமான அமெச்சூர்த்தனத்தின் உச்சக்கட்டம். அந்த மாதிரி எந்த இடத்திலும் பசுபதியின் குணநலன்கள் தெரியவில்லை.

இது இப்படி என்றால், காமெடி என்ற பெயரில் வடிவேலு & கோ பண்ணுகின்ற அலப்பரைகள் ஐயோ ஓடிடலாம் என்று வரும் போது, இருப்பா சூப்பர் ஸ்டார் இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு உட்கார வைத்தது. ஆனாலும், பல்வேறு கஷ்டங்களுக்கு பிறகு ரஜினியை நேரில் சந்திக்கும் போது வடிவேலு பண்ணும் சேஷ்டைகள் மனதில் நிற்கிறது. சிரிக்கவும் வைத்தது.

கன்னிகாஸ்திரி ஆசிரியைகளாக வரும் கீதா, பாத்திமா பாபு தங்கள் பள்ளி வெள்ளி விழாவிற்கு ரஜினியை வர வைக்க பசுபதியை கோருவதும், முடியாத பட்சத்தில் படக்கு படக்குனு பேரன்ட்ஸ் மீட்டிங் போட்டு சீரியஸாக பசுபதியிடம் முடியுமா முடியாதா என மிரட்டுவதும் ஐயோ எந்திருச்சு ஓடிடலாமானு இருந்துச்சு.

கொஞ்சமாவது கலகலப்பு என்றால் சந்தானமும், சந்தானபாரதியும் கூடவே லிவிங்ஸ்டனும்.

நயன்தாரா… நடிகையாகவே வருகிறார். மசாலாவிற்காக. ஒரு மழைப்பாட்டும் தனியறையில் நயன்தாரா தன் உடைகளை சீரமைப்பதும் வடிவேலு அவரது அழகை ரசிப்பதும் வேதனையான திணிப்புகள்.

எது எப்படியோ, தனது நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் பாத்திரத்தில் ரஜினி..ம்ம்ம்…. பிரமாதமாக ஸ்கோர் பண்ணியிருக்கிறார். அதுவும் அந்த கிளைமாக்ஸ் வசனங்கள் அருமையான டெலிவரி.

பாடல்களில் மாமாவின் மானத்தைக் காத்த ஜி.வி.பிரகாஷ்குமார் பின்ணணி இசையில் திரைக்கதைக்கு போட்டியாக கோட்டைவிட்டிருக்கிறார். அந்த மறையூர் கடைத்தெருவும், பசுபதியின் வீடும் தோட்டாதரணியின் கைவண்ணத்தை காட்டினாலும் ரொம்பவே நேட்டிவிட்டியை தொலைத்து நிற்கின்றன.

“சொல்லம்மா” பாடலில் ஏரியில் துள்ளும் டால்பின்கள், மலையில் விழும் அருவி என  ஆக்ர் நிறுவனத்தின் கிராபிக்ஸ் நல்ல தரம் என்றாலும், எல்லா பாடல்களிலும் தங்கள் திறமையைக் காட்டி கொஞ்சம் ஓவர் டோஸ் ஆக்கியிருக்க வேண்டாம்.

இப்படியான படத்திற்கு எடிட்டிங், கேமிரா பற்றி என்னத்த சொல்ல….போங்கப்பா. நச்சுனு ஆம்பூர் பிரியாணி போடுற ஆள்கிட்டே தயிர் சாதம் வைக்கச் சொன்னது தான் தப்பு. வாசு சாருக்கு இன்னும் மன்னன், சந்திரமுகி பிரமிப்பு போகவில்லை போல. போதாக்குறைக்கு ரஜினியை தியேட்டரில் ரத்த ஆறே ஓடும் அளவிற்கு எல்லாக் கேரக்டர்களையும் வைத்து புகழ்ந்து தள்ளுவது ரொம்பவே டூமச்ங்னோவ். இரண்டரை மணி நேரம் “காபி வித் அனுபார்த்த அனுபவம். பண்ணப்போவது கொஞ்சூண்டு பால் பாயசம் என்றாலும் ரஜினி என்ற கரவை மாடு கிடைத்ததற்காக ரத்தம் வரும் வரை கரந்திருக்கிறார் வாசு.

ஹிந்தியில் தனது வயசுக்கேற்ற கேரக்டர்களில் வெரைட்டியாக நடித்துக் கொண்டிருக்கும் அமிதாப் வழியில் ரஜினி என்ற மிகச் சிறந்த நடிகனும் அடியெடுத்து வைத்தது ரொம்பவே சரியான முடிவுதான் என்றாலும்

குசேலனின் திரைக்கதை ரஜினியின் தவறான தேர்வு.

சுப்ரமணியபுரம் – விமர்சனம் ஜூலை 27, 2008

Posted by M Sheik Uduman Ali in Reviews.
Tags: ,
6 comments

படம் ரிலீஸாகி நாலு வாரமாகியும் என்னால் பார்க்க முடியவில்லை. ஒன்று பரவலாக தியேட்டர்களில் ரிலீஸாகவில்லை. இன்னொன்று டிக்கெட். நாளையக் காட்சிகளுக்கு இன்றே ஹவுஸ்புல் என்று போர்டு போட்டிருப்பார்கள். ஆனால் பிளாக்கில் கொள்ளை விலை. சரினு முயற்சித்தும் கிடைக்கவில்லை. பிறகு நாலு வாரம் கழித்து “சத்யம், “ஐநாக்ஸ்ல் படம் ரிலீஸ். ம்ம்ம். இதுவே ஒரு சோறு பதம்.

பாலா, அமீர் ஆகியோரின் படைப்புகளில் தமிழ் சினிமாவை வேறோரு தளத்திற்கும் தரத்திற்கும் கொண்டு சென்ற “பிதா மகன், “பருத்தி வீரன்இரண்டுமே மதுரை மண்ணை ஈரத்துடன் இயல்பாக அணுகியவை. இதற்கு மேல் மதுரையை மையமாகக் கொண்ட சினிமா திகட்டி விடும் என்று நினைத்த நேரத்தில் இவர்களின் பட்டறையிலிருந்து சசிக்குமார் என்றொரு படைப்பாளியின் கைவண்ணத்தில் “சுப்ரமணியபுரம்.


உணர்ச்சிவசப்படுதல். இதுதான் மதுரை மற்றும் திருநெல்வேலி மண்ணின் மைந்தர்களிடம் இருக்கும் பொதுவான பழக்கம். இப்படித்தான் என்பதுகளில் உணர்ச்சிக்கும் அறிவுக்கும் உள்ள தூரத்தில் உதவி என்ற எலும்புத் துண்டை போட்டு விட்டு ரொம்ப நாளாக கட்சியில் எந்த பதவியும் பெறமுடியாத படி தன்னை மறித்து நிற்கும் ஒரு மாவட்டத்தை போட்டுத்தள்ள வேலை வெட்டி இல்லாமல் தங்களையே சுற்றி வரும் மூன்று இளைஞர்களை பணிக்கின்றனர் ஒரு முன்னாள் கவுன்சிலரும் அவரது தம்பியும். இளைஞர்களின் உணர்ச்சி ஜெயித்த வேலையில் எக்ஸ் – கவுன்சிலர் தம்பியின் குள்ள நரித்தனம் ஜெயித்திட இன்னொரு பிரபலத்தின் தயவில் ஜெயிலிலிருந்து வெளிவரும் இளைஞர்களுக்கு அந்த பிரபலம் இன்னொரு அசைன்மன்டை கொடுக்க தொடர்கிறது இவர்களின் கொலைப்பணி. எக்ஸையும் அவரது தம்பியையும் போட்டுத்தள்ளுவதே லட்சியமாக திரியும் இவர்களின் உணர்ச்சிகள் நயவஞ்சகத்தில் நசுக்கப்படுவதே “சுப்ரமணியபுரம்.

சென்னை 28ல் ஜொலித்த ஜெய் தான் முக்கிய கதாபாத்திரம். அசட்டுத்தனமாகவும், தலையை வைப்ரேஷன் மோடில் வைத்து காதலில் வழிந்தோடும் நடிப்பும் வெகு ஜோர். தனது கேரியரின் அடுத்த சினிமாவை அழகாக தேர்ந்தெடுத்ததற்கு சபாஷ். மயிரிழையில் உயிர் தப்பி எதிரிகளுக்கு பயந்து ஒதுங்கிய வீட்டிலுள்ள பெண்ணின் காலில் விழுந்து உயிர் பிச்சை கேட்கும் போது பரிதாபம்
காட்ட வைக்கிறார்.

அந்த காலத்தில் பாரதிராஜாவும், பாலச்சந்தரும் தங்கள் கதாநாயகிகளை அறுபது டிகிரி கோணத்தில் கண்களை சாய்வாக்கி படபடக்கும் படி பேச விடுவார்கள். கொஞ்சம் அசெளகரியமாக தோன்றும் இந்த ஸ்டைலை அருமையாக பிரதிபலித்திருக்கிறார் துளசியாக வரும் “சுவாதி. எண்ணி ஒரு பக்கத்திற்குள்ளாகவே இவரது மொத்த டயலாக்குகளுமே முடிந்தாலும் சிரிப்பும் அழுகையுமாக நம்மை ஆர்பரிக்கின்றார்.

எக்ஸ் –கவுன்சிலரின் தம்பியாக வரும் சமுத்திரக்கனியும் சரி; ஜெய் நண்பனாக வரும் இயக்குநர் சசிக்குமாரும் சரி பாத்திரம் அறிந்து அரங்கேறியிருக்கின்றனர். ரொம்பவும் பக்குவமாக சுபாவத்தோடு ஜெய்யின் அவசரத்தனத்தை கட்டுப்படுத்தும் நண்பனாக வரும் சசி மனதை அள்ளுகிறார். அத்தனை கொலைகளையும் செய்து நண்பர்களையும் தொலைத்து சந்தோஷத்தை இழந்து ஆற்றங்கரையில் இவர் புலம்பும் காட்சிகளும் அதைத் தொடர்ந்த கொடூரங்களும் இன்னும் மனதை விட்டு அகலவில்லை.

மதுரை மண்ணென்றால் கஞ்சா கருப்பு ஸ்பெஷல் தான். காசுக்காக பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்யும் இடங்களில் சலசலக்க வைக்கின்றார்.

தங்களை வெட்ட கிளம்பி வரும் கும்பலிடமிருந்து ஜெய்யும், கஞ்சா கருப்பும் மூலை முடுக்கெல்லாம் ஓடும் போது சடேலென நினைவுக்கு வருகின்றார் எஸ்.ஆர்.கதிர். சுப்ரமணியபுரத்தை தன் கேமிராவால் உயிரூட்டியவர். அதுவும் அந்த ஆற்றங்கரைக் காட்சிகள் நமக்கும் ஏதோவொரு வெறுமையை ஏற்படுத்தும் அளவிற்கு அவ்வளவு நேர்த்தி. பருத்திவீரனை அழகாக பேக் செய்து கொடுத்த ராஜா முஹம்மது தான் இதற்கும் எடிட்டிங். கொடூரமான கொலைக் காட்சிகளை அதன் அளவிற்கு விட்டு விட்டு அப்புறம் சபை கருதி வெட்டி விட்டு படத்தை இயல்பு நடை போட வைத்திருக்கிறார். இருந்தாலும், ஆற்றங்கரை மணல், ட்ரிப்ஸ் ஏற்றும் ட்யூப் போன்றவற்றை ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு இவ்வளவு நீளமாக கதிரின் காமிரா காட்டினாலும் ராஜாவாவது கத்திரிகோல் போட்டிருக்கலாமே.

பெல்ஸ் பாட்டம் பேண்ட், டைட் ஷர்ட் அகல கால்லர் என்ற என்பதுகளின் பாணியை முன்னிறுத்திய காஷ்ட்யூம் டிசைனர் நட்ராஜூம், என்பது கால காட்சிகளுக்கு உணர்வு கொடுத்த ஆர்ட் டைரக்டர் ரெம்போனும் பாராட்டுக்குரியவர்கள். ஆங்காங்கே மட்டும் மிக மெல்லிசான இயலாமை தெரிகின்றது.

அழகான தன் காம்பியரிங்கில் அசர வைத்த ஜேம்ஸ் வசந்தன் தான் இசை என்பது இன்னுமொரு சர்ப்ரைஸ். “கண்கள் இரண்டால்“, “காதல் சிலுவையில் அறைந்தால் இன்னும் ரீங்காரமிடுகின்றன. முன்னது விசுவலில் காதல் வருடுகின்றது என்றால், பின்னது ஷங்கர் மஹாதேவனின் குரலில் இறுக்கம் தருகின்றது. படம் நெடுக ஏர்.ஆர்.ரஹ்மானையும் யுவனையும் கலந்த பாணியில் பின்ணணி இசை இழையோடுகின்றது. முதல் கொலைக்கு இன்னொரு ஊருக்கு சென்று ஆயுதங்கள் வாங்க சசிக்குமாரும், கஞ்சா கருப்பும் செல்லும் போது அமைத்திருக்கும் பின்ணணி இசை காட்சியை மிரள வைக்கின்றது.

சித்தன் சவுண்ட் சர்வீஸை சுற்றிய வேலை வெட்டி இல்லாத இளைஞர்களின் வாழ்க்கை முறையை இயல்பு மீறாமல் திரைக்கதைப் படுத்தியிருக்கிறார் சசிக்குமார். முன்பாதி கலகல; பின்பாதி வெலவெல என்ற அதே “பிதா மகன், “பருத்தி வீரன் பாணியில் திரைக்கதை பேட்டர்ன் இருந்தாலும் அப்படங்களில் பாலாவும் அமீரும் காட்டியிருந்த தனித்தன்மையை சசிக்குமாரும் செவ்வனே காட்டியிருக்கிறார் கொஞ்சம் நிதானமாக. நறுக்குத் தெரித்த வசனங்களோ, அனல் பறக்கும் காட்சிகளோ படத்தில் இல்லை என்றாலும் சந்தோஷம், பயங்கரம் இரண்டையும் யதார்த்தமாகக் காட்டியிருக்கிறார். ஐயனார் சிலைகளும் குதிரைகளும் சூழ்ந்த அந்த பாறை மேட்டில் கதாநாயகி பொலபொலவென தன் காதலன் முன்னால் அழுகின்ற காட்சிகளும் அதைத் தொடர்ந்த திருப்பங்களும், கஞ்சா கருப்புவிடம் ஆற்றங்கரையில் புலம்பும் சசிக்குமாரும் அதைத் தொடர்ந்த திருப்பங்களும் ஒட்டுமொத்த படத்தையும் வேறு தளத்திற்கு இட்டு செல்கின்றது.

மனதளவில் நாம் மழுங்கி விட்டோமா என்று தெரியவில்லை; ஹீரோயினை கொல்லாமல் படத்தை முடித்திடும் போது “என்னப்பா அப்படியே விட்டுட்டாய்ங்கஎன்று தோன்றுகின்றது. மற்றபடி விட்டேத்தியாக வேலை வெட்டி இல்லாமல் உணர்ச்சிப்பூர்வமாக என்பதுகளில் சுற்றித் திரிந்த இளைஞர்களின் கதை தான் என்றாலும் அது இப்போதும் இளைஞர்களுக்கு குறிப்பாக தென்மாவட்ட இளைஞர்களுக்கு பொருந்தும்.

சுப்ரமணியபுரம் – தமிழ் சினிமாவின் இன்னொரும் தராதரம்.

மாநகரப் பேருந்தும் சில பயணங்களும் ஜூன் 29, 2008

Posted by M Sheik Uduman Ali in Reviews.
3 comments

உயர உயரப்  பறக்கும்  எண்ணெய் விலையேறறத்தைப் பார்த்தால் இனி மாநகரப் பேருந்து  பயணமே மகத்தானது என்றவொரு முடிவுக்கு வந்துவர்கள் நிறைய பேர் என்று நினைக்கின்றேன்.  ஆனால், இப்பயணம் ஒன்றும் அவ்வளவு லேசுப்பட்டதல்ல.  உங்கள் பர்ஸுகளையோ பொருட்களையோ அடிபோட  காத்திருக்கும் திருட்டுக் கும்பல் ஒருபுறமிருக்க,  எப்படா வெட்டிச்சண்டை  இழுக்கலாம் என்றலட்சியத்துடன்காத்திருக்கும் வீரக்குலச்சிங்கள் ஒருபுறம்.
சில  பயணங்கள் ஹைலைட்டான காமெடி  ஷோவாகவோ, சில பயணங்கள் நம்மையே  காமெடியனாகவோ  ஆக்கிவிடுவதுண்டு.

சமீபத்தில் இப்படிதான், பிதுங்கிவழியும் கூட்டத்தோடுவந்தது நான் பயணம் செய்யவேண்டிய பேருந்து.   ஏறவா  வேண்டாமா  என்றகுழப்பதோடுவழியில் நின்றதில் என்னை குண்டுக்கட்டாக உள்ளே தூக்கிவிட்டிருந்தார்கள்.  அட, இதுவும் நல்லாயிருக்கிறதே  என்று வியந்தேன்.  உள்ளே  வந்த பிறகு தான் தெரிந்தது படிக்கட்டில்  தொங்கிக்  கொண்டிருக்கும்  ஒரு  தம்பி பஸ்ஸை  பேலன்ஸ் செய்ய அப்படிதொங்கவில்லை  என்று.   ஏனெனில், இந்த  ஸ்டாப்பில்  ஏறிய எனக்கே  உள்ள மூச்சுவிட இடம் இருக்கிற போது  அந்த தம்பி எப்போது  ஏறியதோ?

நீண்ட சிக்னல் காத்திருப்பில் பஸ் நிற்கும்போது  கையோடு அதீதமான இங்கிலீஷ் அறிவோ  இல்லை அதிகமான பீட்டரோ  விடத்தெரியும் என்றால்  ஹிண்டு கிராஸ்வேர்ட், இல்லை குமுதம்,  ஆனந்தவிகடன்  என்று  எதையாவது வாங்கிக் கொள்ளவும்.  உங்கள் பொறுமையை  சிரஞ்சீவியாக்கும் ஷார்ட்கர்ட் இது.   இன்னும் நிறைய சொல்லலாம்.  பாவம் இந்த டிரைவர் தான்.  நல்ல அழகாத்தான் ஓரங்கட்டி நின்றிருப்பார்.  பேருந்தின் முன்பக்கத்தை  சுற்றிச்  சூழ அவசரமா  ஒன்னுக்கு போறவன் மாதிரி டூவீலர் பயபுள்ளகய பண்ணுற அட்டூழியம்  இருக்கே.  ஒருத்தன்  90 டிகிரி நேரே  பஸ்ஸுக்கு முன்னாடி நின்னா,  இப்பத்தான் பைக்கு வாங்கிய இன்னொரு டூவீலர் டூபாக்கூர் ஒரு 60 டிகிரி சாய்மானத்துல நிப்பாட்டும்.  இந்த கேப்ப பில்லப் பண்ண இன்னொரு சாகஸப்புலி ஓடி வரும்.  இதெல்லாம்  ஏதோ  பத்து பதினைந்து நிமிடம் நடக்குதோன்னு நினைச்சா அது தப்பு.   எல்லாமே  ஒரு முப்பது இல்லை  அறுபது  செகண்டுகளுக்கு நடக்குற சர்வைவல் பிரச்சனை.

இதுல ஆட்டோக்காரர்கள் பண்ணுகிற அலம்பல் இருக்கிறதே.  அவ்வளவு சைஸ் வண்டிய குறுக்காலேயும்  நெடுக்காலயும் விட்டு பஸ்ஸை  சுற்றி ஒரு லேயரே  அமைந்து விடுவதுண்டு.  சிக்னல் போட்டதும் நம்ம பஸ்டிரைவர் வண்டிய நகர்த்துறத்துக்கு படுற பாடு இருக்குதே அப்பாடா.  அட அதற்காக இவங்க  ஏதோ பாவம்னு நினைச்சுடாதீங்க.  இடக்காலே  இருந்து வடக்காலே  40 டிகிரியிலேயே  இவங்க பஸ்ஸை  திருப்புறஸ்டைலில் டூவீலர்ல போற பொது ஜனம் ரொம்ப ஜாக்கிரதையா  இருக்கணும்.  சரி கதைக்கு வருவோம்,  அவ்வளவு நேரக் காத்திருப்பிற்கு பிறகு சரி சிக்னல் விழுந்து தொலைந்ததேனு நினைச்சா நம்ம பஸ்ஸ சுற்றி நிக்கிறஆட்டோவும்டூவீலரும் போறதுக்குள்ள சிக்னல் விழுந்துடுமோனு ஒரு பதட்டம் வரும் பாருங்க.  அப்பத்தான் ஒரு டூவீலர் பேக்கு லெஃப்ட்  எடுக்கும்.  அட போங்கப்பா,  கரெக்டா, கிராஸ் பண்ணும்போது ரெட் சிக்னல்.  இன்னொருமுறை  அதே  மாதிரி  ஆட்டோ,  அதே மாதிரி டூவீலர்.   எண்ணிக்கை  கொஞ்சம்  குறைவாக.

சரின்னு கிளம்பி அடுத்த ஸ்டாப்பிங்கில் நின்னால் இன்னும் ஒரு வண்டி ஜனம்  ஏறும்.  அன்னிக்கு அப்படித்தாங்க, இதே  மாதிரி கூட்டம்.  நடத்துனர் டிக்கெட் போட  வண்டிய ஓரங்கட்டிட்டார்.  அப்பத்தான் ஏறிய ஒரு அறுபத்தைந்து வயசு பெரிய குடிமகன்,  நீ  ஏன் நைனா, கவலைப்படுற டிக்கெட் எடுக்கலைனா  எடுக்காதவந்தான் கஷ்டப்படனும்.  நீ வண்டிய கிளப்பு அப்படினு தன்னோட புத்திசாலித்தனத்த காட்டுச்சு.  நடத்துனர் இதைக் கண்டுக்காமே  டிக்கெட் கேட்டு கூவினார்.  பெருசா  புலம்புச்சா,  இல்ல  உள்ள ஊத்துன சரக்கானு தெரியல,  பெருசு அதையே  மங்களமா  பாடுச்சு.  கம்முனு கிடனு நடத்துனர் சொல்லவும்,  ஏப்பா   எனக்கு  என்ன வயசாச்சு  “வா,  போ”னு சொல்றியேனு பெருசுக்கு ஒரே சோகம்.  போதாதுனு,  நானும் முன்னாடி ஒரு சென்ட்ரல் கவெர்மென்ட் சர்வன்ட்டுப்பா,  ரெஸ்பெக்ட் கொடுனு சொல்லிச்சு.  நிக்கிற நமக்கே  அது மேல காண்டு வந்ததுனா நடத்துனர்.  பாவம் அப்பவும்  என்ன டிப்பார்மென்ட்டுனு கேட்டார்.  “ஸ்வீப்பர்”  அப்படினு பெருசு சொல்லி தான் வேலைக்குச் சேர்ந்த நாள்,  நட்சத்திரம்,  அப்ப  இருந்த அரிசி விலை   எல்லாம் சொல்லி விஜயகாந்த்தையே  தாண்டிருச்சு. நடத்துனர்  என்னவாகிருப்பார்னு நீங்களே  யூகிச்சுகோங்க.

இது இப்படினா, இன்னொரு நாள், கூட்டம் குறைவாகவே  இருந்தாலும் ஒரு நடத்துனர் பெவிக்கால் போட்டு ஒட்டுன மாதிரியே உக்கார்ந்து டிரைவர்க்கு பக்கத்துலே  நிக்கிறவங்கல ஆரம்பிச்சு அவரு பக்கம் நிக்கிறவங்க வரைக்கும் டிக்கெட்டை  “பாஸிங்”  முறையில் கேட்டுச்சு.  போகப்போக கூட்டம் நெருசலாகி மூச்சிவிடவே   இடமில்லாத போது நம்மாளு சிம்மாசனத்த விட்டு இறங்கவே இல்லை.  ஒரு அக்கா  முன்னாடி நின்னு இரண்டு தடவை  கூவியும் நம்மாளு “ம்ம்ம்”.  கொடுத்துவிடுமா  நிக்கிறவங்ககிட்டனு சொன்னார்.  ஆனா,   எவ்வளவு நேரம் தான் நிக்கிற எல்லாரும்  கண்டெக்டர் வேலையோ  அல்லது கன்டெக்டருக்காவோ  வேலைப்பார்க்கிறது.  ஒருத்தரும் மசியல. அந்தம்மா சிம்பிளா  கேட்டுச்சு “வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சமாவது  எழுந்து வாயா”.  இதுக்கு மேலேயும் நம்மாளு.. ம்ம்ம்ம். அசரல,  ஒருவேளை  உண்மையிலேயே  பெவிகால் இருக்குமோ.

இந்த கேப்புல ஒரு சிறுசு, சார் மேலப்படுதல,  அப்பக்கூட நீங்க  என் ஷூ கால மிதிச்சீங்க, ஒரு எக்ஸ்யூஸ் கூட கேக்கலனு திமிருச்சு.  லேசா செருமி முறைந்து பார்த்து இங்க பாரு  என் பக்கத்துல நிக்குதே  ஒண்ணு அது ஏம்மேலத்தான் சாய்ஞ்ச்சுக் கிடந்து யாருக்கிட்டேயோ கடல போடுது.  அதுக்காக குத்துதே குடையுதேனா  சொகுசா காரு வாங்கி அதுல போடானு சொன்னேன்.  அப்பப்பார்ந்து டிரைவர் போட்ட பிரக்குலெ அந்த பேக்கு  ஏம்மேல சாய, அவ்வளவு தான் ஒரு இரண்டு தள்ளி ஓடிப்போச்சு.
இப்படி தான் தினம் தோறும்,   எந்திரமயமாகிப்போன வாழ்வில் சில மைக்ரோ  சுவாரஸ்யங்கள்.  இதெல்லாம் நீங்கள் பேமிலியாக காரில் போகும்  போது கிடைக்காது.  அதற்காக  ஒரு பிரம்மச்சாரி பயணம் மேற்கொண்டு பாருங்கள்.

பயணங்கள் சுவாரஸ்யமானவை