jump to navigation

Vattaram – Cinema Review நவம்பர் 27, 2006

Posted by M Sheik Uduman Ali in Reviews.
add a comment

வட்டாரம் சினிமா விமர்சனம்

நல்ல மழை நேரத்தில் மொறு மொறுவென கடலை சாப்பிட்ட மாதிரி இருக்கிறது, சரணின் வட்டாரம்.  

இன்டர்நேஷனல் அளவில் ஆயுதபேரம் பண்ணுபவர் நெப்போலியன். பர்மா பஜாரில் திருட்டுத்தனமாக பிஸ்டல் விற்பவர் ஆர்யா என மாறுபட்ட கதைக் களத்தில் ஆரம்பிக்கிறது படம்.  பழைய காரணத்திற்கு பழி வாங்கும் நோக்குடன் நெப்போலியனிடம் வேலைக்குச் சேர்ந்து நம்பிக்கை துரோகம் செய்து அவரின் சாம்ராஜ்யத்தை கைப்பற்ற முயலுகிறார் ஆர்யா.

வளர்ந்து வரும் ஆர்யாவுக்கு இந்த படம் ஒரு ஸ்பெஷல்.  உம்மனா மூஞ்சியாகவும் முரட்டு சுபாவமுமாக அவர் செய்யும் சேஷ்டைகள் ரசிக்கும் படி இருக்கிறது.  வீட்டுக்குள்ளேயே எந்நேரமும் போட்டுத் தள்ள காத்திருக்கும் நெப்போலியனின் மகன், காதல் வளர்த்து திரியும் மகள் என்ற அசாதாரண சூழலில் வில்லன் ரேஞ்சுக்கு நெப்போலியனின் ராஜ்ஜியத்தை கொஞ்சம் கொஞ்சமாக அடையும் காட்சிகளில் மனிதர் விளையாடியிருக்கிறார்.  ஆனால் அறிந்தும் அறியாமலும், பட்டியல் என ஆர்யாவை திரும்பி பார்க்க வைத்த அதே மாதிரி ரோல்களை செய்து குறுகிய வட்டத்திற்குள் (ஸாரி! வட்டாரத்திற்குள்) மாட்டிக்காதே நைனா.

நெப்போலியன் என்றதும் வேட்டி, டவுசர், தலைப்பாக்கட்டு என்ற அவரின் தோற்றத்தை பரணில் போட்டு விட்டு, கம்யூனிக்கேட்டரும், லேப்டாப்புமாக படு ஹைடெக்காக காட்டியிருக்கிறார் சரண்.  பயங்கர சாந்தமாகவும், ஆழமாகவும் குருபாதமாக மிரட்டியிருக்கிறார்.  அடுத்தவன் காலை பிடித்து வாழக்கூடாது என்ற அவரின் கொள்கையே எமனாக வந்து நிற்கும் போது கலங்க வைக்கிறார்.

நெப்போலியனின் மகனாக வரும் ராம்ஜிக்கு இந்த படம் ஒரு சின்ன விசிட்டிங் கார்டு.  அவரும் தண்டபானியும் பாசமாக இருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் செய்யும் முக பாவங்கள் ஒரு மாதிரி இருக்கிறது.

பர்மா பஜாரில் கடை வைத்திருக்கும் ரமேஷ் கண்ணாவும், வையாபுரியும் கல கலக்க வைக்கிறார்கள் என்றால், மேப்பை வைத்துக் கொண்டு வழி சொல்லும் டீக்கடைக்கார் ஊசி வெடி. பரத்வாஜ் இசையில் பாடல்கள் பார்க்கலாம் ரகம்.  ஒரு காதல் வழியும் பாடலை காதல் காட்சிகளிலெல்லாம் வழிய விட்டும், ஆர்யா அட்டகாசம் பண்ணும்போதெல்லாம் ராஜ்ஜியம் பாடலை தொளித்தும் நம்மை கட்டிப் போட வைக்கிறார்.

ஹார்ட்ஸ் ஆப் சரண்.  கொடுத்த காசுக்கு குறையில்லாம அருமையான சிவகாசி பட்டாசாக கதை. எதிர்பார்க்காத திருப்பங்கள், களங்கள் என்று உங்கள் உழைப்பு படு ஸ்மார்ட்.  நெப்போலியனும், ஆர்யாவும் மோதிக்கொள்ளும் காட்சியில் ஐயோ நெப்போலியனுக்கு எதுவும் ஆகிடக் கூடாது என்று ஆடியன்ஸை பதைக்க வைப்பதில் தெரிகிறது உங்களின் வெற்றி.

காதல் மன்னன், அமர்க்களம் காலத்து  ஸ்மார்ட் சரண் இந்த படத்தில் தெரிகிறார்.

வட்டாரம் மின்னல் வேகம்.