jump to navigation

வெயில் – சினிமா விமர்சனம் திசெம்பர் 29, 2006

Posted by M Sheik Uduman Ali in Reviews.
add a comment

மனித உணர்வுகளின் உண்மையான பக்கங்களை வெளிச்சமிட்டு காட்டும் தரமான தமிழ் சினிமாவை பார்க்க முடியாதா என ஏங்கும்போதெல்லாம் அங்கங்கே சில விண்மீன்கள் பளிச்சிடுவதுண்டு.  அது மாதிரி தான் வெயில்.  இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் வசந்தபாலன் எழுதி இயக்கியிருக்கிறார். 

இரு சகோதரர்கள்! ஒருவன் வசந்தங்களால் நிரப்பப்பட்டவன்.  இன்னொருவன் இழப்புகளால் சபிக்கப்பட்டவன்.  இவர்களின் வாழ்வியலை கவிதையாய் கண் முன் காட்டியிருக்கிறது வெயில். 

முதற்காட்சியிலேயே ஒரு கொலைகார கும்பலை விரட்டி விரட்டிக் கொன்று ருத்ர தாண்டவம் ஆடுகிறார் பசுபதி.  அட என்னடா இது வழக்கமான சீசனல் சினிமாவோ என்று நினைக்கும் போது  காட்சியும் களமும் மாறுகிறது.  ஒரு அசலான தென்மாவட்ட சிற்றூரை களமாகக் கொண்டு பசுபதி மற்றும் பரத்தின் சிறு வயது சம்பவங்களை காட்டுகிறார்கள்.  புழுதியில் ஆடிப்பாடும் வாண்டுகள்,  செல்வச் சுவடுகள் படியாத தீப்பெட்டி தொழில் செய்யும் தெருக்கள், வெள்ளந்தியான மனிதர்கள், களையில் கிட்டிபுல் ஆடும் பொடிசுகள் என ஒரு நாவலில் மட்டுமே மண்வாசனை கமகமக்க சொல்ல முடிகிற காட்சிகளை பளிச் பளிச்சென்று திரையில் காட்டி வியக்க வைக்கிறார்கள். 

சின்ன வயதில் வீட்டை விட்டு ஓடிப்போய் வாழ்க்கை தொலைத்து விட்டு வரும் பசுபதி, அடைக்கலம் தரும் குடும்பம்; ஆனால் தம்பியை தவிர மற்றவர்களிடம் இல்லாத ஒட்டுதல், ஆறுதலாய் சிறு வயது தோழி.  இந்த சூழலில் சோகமாய்; தன் காதல் களவொழுக்கக் காலங்களில் செய்யும் சேஷ்டைகளில் வாலிப முறுக்காய் என பசுபதிக்கு சரியான தீனி. தியேட்டரில் வேலை பார்க்கும் போது காதல் மன்னனாய், தாயின் அரவணைப்பில் கரைந்து போயிருக்க வேண்டிய இளவயது பருவத்திற்கு ஏங்கும் மகனாய் என பசுபதி ஒவ்வொரு காட்சிகளிலும் நிஜமாக வாழ்ந்திருக்கிறார்.  நகையை திருடிவிட்டதாக குடும்பமே கூறும் போது மொத்தமாக நொறுங்கி போகிறாரே, கலங்கடிக்கிறார்.  

அட விடுங்க சார், என்னோட சக நடிகர்களெல்லாம் கரம் மசாலாவுடன் ஹீரோயிஸத்தை நோக்கி ஓடுறாங்க, இதுல நான் இந்த பக்கமா ஓடி மேல  வந்துட்றேனு பரத் சொல்ற மாதிரியே இருக்குது அவரோட சமீப கால படங்கள்.  பார்த்து பரத், கொஞ்ச நாள் கழித்து இந்த மாதிரி இரண்டு ஹீரோ கதைகளில் நடிக்க மாட்டேனு ஸ்டேட்மன்ட் விட்றாதீங்க.  திருஷ்டி சுத்தி போடச் சொல்லுங்க.  பசுபதி ஒரு பக்கம்னா, விடலைத்தனமும், தொழில் வெறியும் கொண்ட துடிப்பான இளைஞனாய் பரத்.  இவர் வந்து போகும் காட்சிகளெல்லாம் நமக்கும் சுறுசுறுப்பாகிறது.  பாக்கெட்டில் செல்போன், காதில் எப்பொழுதும் ஹேன்ட்ஸ் ஃப்ரீ,  தெனவட்டான அடக்கம் என டிபிக்கல் தென்மாவட்ட இளைஞனாய் உள்வாங்கி நடித்திருக்கிறார்.  பிசினஸிற்காக காட்டும் நெளிவு சுழிவு, எப்போது பார்த்தாலும் முன்னாடி வந்து நிற்கும் கோபம், எதையும் எதிர்த்து நிற்கும் வயது,  துடிப்பான காதல் என ஒவ்வொரு காட்சியிலும் விளையாடியிருக்கிறார். 

பாவனா.  அழகுப்பதுமை.  விளம்பரத்திற்கு டப்பிங் பேசுவதற்காக வருகிறார்.  வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகிக்களுக்கான காட்சிகள் எதுவும் படத்தில் இல்லாததால்  நன்றாக நடித்திருக்கிறார்.  விளம்பர டப்பிங் பேசும் இடத்தில் மாடுலேஷனுக்காக பரத் சண்டை போட  கோபமாய் குறுகுறுப்பாய்  பேசும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. 

ஷ்ரேயா ரெட்டி வாழ்க்கையை விரட்டி விட்டு ஒரு குழந்தையுடன் வாழும் தாயாக யதார்த்தமாய் வாழ்ந்திருக்கிறார். 

நா. முத்துக்குமாரின் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் G.V பிரகாஷ்குமார்.  அட அதே துடிப்பு, இளமையாய் 90களில் நாம் கேட்ட ஏ.ஆர். ரஹ்மான் இசை வடிவத்தை தந்திருக்கிறார்.  வெல்டன் பிரகாஷ்.  ஒரிரு இடங்களில் மாமாவின் பழைய படங்களின் இசை தெரிந்தாலும்  பாடல்களிலும் சரி, பிண்ணனி இசையிலும் சரி  அவ்வளவு ஃப்ரெஷ். 

ஒரு சாதாரணக் கதையை  கையில் எடுத்து  அதில் மனித உணர்வுகளையும், பாசங்களையும் மட்டுமே தவழ விட்டு எந்தவொரு இடத்திலும் நோ காம்ப்ரமைஸ் சொல்லி ஒரு புள்ளியில் ஆரம்பித்து சரியாக பயணிக்கிறது படம். ஒவ்வொரு காட்சிகளாகட்டும், அதில் நடிப்பவர்களை தெரிவு செய்ததிலாகட்டும் அவ்வளவு பெர்பெக் ஷன். இந்த மாதிரி படங்களெல்லாம் ஆமை வேகத்தில் தான் இருக்க வேண்டும், காட்சிக்கு காட்சி  சோகங்களை பிழிய விட வேண்டும், ஒரேயொரு வயலின் வாசித்து ஆடியன்ஸை  பித்து பிடிக்க வைக்க வேண்டும் என்ற நம் முன் தலைமுறை இயக்குநர்களின் மனோபாவத்தை சமீபத்தில் சேரனுக்குப் பிறகு இன்னும் அழுத்தமாய் வசந்தபாலன் மாற்றியிருக்கிறார் .  பொதுவாக இந்த மாதிரி கதைகள் ஏ சென்டரோடு பெட்டிக்குள் ஓடிவிடும்.  ஆனால் அதையே  சினிமாவாக எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி எப்படி தரலாம் என்பதை இந்த படத்தில் கற்றுக்கொள்ளலாம். 

தரமான தயாரிப்பாளராய் தமிழ் மக்களுக்கு இன்னுமொரு நல்ல படத்தையும் இயக்குநரையும் தந்திருக்கிறார் ஷங்கர்.  சிவாஜி பட வேலைகளையும் தாண்டி எப்படி தான் இரண்டு படங்களை  தயாரித்தரோ?  மேனேஜ்மன்ட் பற்று இவரிடம் கொஞ்சம் கற்றுக்கொள்ளலாம் போல. 

வெயில் அந்தி மாலைப் பொழுதின் சுகம்

லைஃப் டைம் ஃப்ரீ க்ரெடிட் கார்டு திசெம்பர் 21, 2006

Posted by M Sheik Uduman Ali in Articles.
add a comment

ஸார், டூ யூ வான்ட் லைஃப் டைம் ஃப்ரீ க்ரெடிட் கார்டு? அநேகமாக எல்லா அன்பர்களும் இந்த தொ(ல்)லைபேசி அழைப்பை ஏற்றிருப்பீர்கள்.  இது தான், இது தான் கை நிறைய சம்பளம் வாங்கியும் மாசக் கடைசியில் நம்மை கடனாளியாகவும் செலவாளியாகவும் ஆக்கும் மந்திரச் சொல்.

எப்படி தான் நம்ம கான்டாக்ட் கிடைக்கிறதோனு ஆச்சர்யம் வேண்டாம்.  உங்களை பற்றிய விவரங்கள் பெரும்பாலான வங்கிகளுக்கு தெரியும்.  அதுவும் ஸார், நீங்க என்ன கிரெடிட் கார்டுலாம் வச்சிருக்கீங்கனு கேட்பாங்க.  நாமளும் அப்பாவியா சொல்லுவோம்.

முன்னெல்லாம் நம்ம அப்பாக்களெல்லாம் ஒரு டிவியோ, பைக்கோ வாங்கணும் என்றால் முக்கால்வாசி தொகையை வருசக்கணக்காக குருவி சேர்க்கிற மாதிரி சேமித்து மிச்ச தொகையை அங்க இங்க புரட்டி வாங்குவாங்க.  அதுக்கு பிறகு தவணை முறைனு ஒண்ணு வந்தது.  அதாவது வாங்குற சாமானுக்கு முதலில் ஒரு அமௌண்டு கட்டுங்க, அதுக்கு பிறகு மாசாமாசம் கொஞ்சங் கொஞ்சமா மிச்ச தொகையை கட்டுறது.  இந்த கால இடைவெளிக்கு ஒரு வட்டி போட்டு அதையும் அசலோட சேர்த்து வாங்கிக்குவாங்க.  இது நிறைய இல்லத்தரசிகள கவர்ந்து போச்சுது. ஏன்னா, அது வாங்கணும் இது வாங்கணும்னு தங்கள் வீட்டுக்காரங்ககிட்ட மொத்தமா கேட்கிறத விட இப்படி மாசாமாசம் கொஞ்சமா லவுட்டிக்கலாம்.  அவரும் எதுவும் கேட்க மாட்டாரு.

ஆனா பாருங்க, நம்ம பயபுள்ளக முக்காவாசி பேரு, சம்பாதிச்சயெல்லாம் ஊர சுத்தி நஞ்சை புஞ்சைனு வாங்கி போடுறது, வீடு கட்டுறதுனு நிலையான சொத்தா வாங்குணானே ஒழிய விஸ்தீரனமா செலவழிக்க மாட்டாம சிக்கனமா அலைஞ்சான்.  குடும்பத்தோட இருந்தா தினமும் வீட்டுச் சாப்பாடு, வாரம் விட்டு வாரம் ஒரு சினிமா, அது போக கோயிலு இல்லனா பீச், பார்க்கு, பேச்சுலர்னா மெஸ், பெட்ரோல், சினிமானு ரொம்ப சந்தோசமா தான் இருந்தான்.  ஆனா, இவன் சந்தோசத்தை யாரு கேட்டா.  நாங்க எப்படி பிழைக்கிறதுனு எவனோ ஒருத்தன் தீட்டுனா பாருங்க கிரிமினல் பிளான்.  அது தாங்க கிரெட் கார்டு.

முன்னாடி எல்லாம் கிரெட் கார்டுங்கிறத பெரிய பெரிய ஆளுங்க தான் வச்சிருந்தாங்க.  இப்ப, ஜஸ்ட் மாசம் ஐயாயிரம் சம்பாதிக்கிறிங்களா.  இந்தாங்க ஒரு கார்டுனு கூப்பிட்டு கொடுக்கிறாங்க.கம்பெனிக்கு வாசல்ல ஒரு கும்பல் டீக்கா ட்ரெஸ்லாம் பண்ணி டீஸண்டா பேசுவாங்க.  சார் இப்ப கார்டு வாங்குணா ஒரு ஸர்ஃப்ரைஸ் கிஃப்ட் ஒண்ணு தருவோம்.  அது போக உங்க ஒய்ஃப்க்கும் வாங்குனீங்கனா அதுவும் ஃப்ரீ.  இப்படியெல்லாம் சொல்லுவாங்க.  சின்ன சைஸ் பாஃண்டுல பத்தி பத்தியா  பிரிண்ட் செய்யப்பட்ட ஒரு அப்ளிகேஷனை நீட்டி பேரு, ஊரு, கையெழுத்து மட்டும் வாங்கிட்டு போயிடுவாங்க.  இவங்ககிட்ட இரக்கமே காட்டாதீங்க.  கார்டு வரும்பொழுது ஸாரி சார் கிஃப்ட்டுக்கு டைம் முடிஞ்சு போச்சுதுனு சொல்லுவாங்க.  நாமளும் சரின்னு அட்ஜெஸ்ட் பண்ணிப்போம்.

அப்புறம் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணுவோமனு பண்ணி அதை கிரெடிட் கார்டுல கட்டுவீங்க.  லைஃபே ரொம்ப ஈஸியா இருக்கும்.  அந்த கிரெடிட் கார்ட பார்க்கும் பொழுதெல்லாம் ஏதோ உயிர் நண்பன் கணக்கா ஆசையா பார்ப்பீங்க.  அப்புறம் முதல் மாசம் பில்லு வரும்.  கரக்டா தேதிக்கு கட்டிடுவீங்க.  அப்புறம் சும்மாவே இருக்குதேனு ஏதோ நாம தத்தியா அதை வச்சிருக்கிறோம்னு நினைப்பு வந்து பர்சேஸ் பண்ணுவீங்க.  மாசக் கடைசியா இருந்தாலும் ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காதுனு ரெஸ்ட்டாரண்ட், பார், சினிமானு கண்ணாபின்னாணு செலவு பண்ணுவீங்க.  வாங்கும் திறன் கொண்ட ஒரு சிறந்த கன்ஸ்யூமராக நீங்கள் இருப்பதை நினைத்து பெருமைப்படுவீர்கள்.  கேர்ள்பிரண்ட் அல்லது மனைவியை பெருமை பொங்க பார்ப்பீர்கள்.  அப்புறம் பில் வரும். செலவழிக்கும் போது போட்ட கணக்கை தாண்டி நிறைய காசை சர்சார்ஜ், டாக்ஸ், லொட்டு லொசுக்குனு சொல்லி வங்கியிலிருந்து ஸடேட்மன்ட் வரும் போது தலை சுற்றும். அப்போ தான் தெரியும் நாம ஒரு கன்ஸ்யூமர் மட்டுமில்ல, பெரிய கடனாளியும் கூடனு.

கண்ணுமுழியெல்லாம் பிதுங்கி காசக்கட்டுனாலும் ஆடுனதும் பாடுனதும் சும்மா இருக்காதே.  ஒரு மாசம் ஒரு நாள் தாமதித்து பில் கட்டினாலும் கந்து வட்டியை விட அநியாயமாக வட்டி போட்டு அடுத்த மாசம் பில்லு வரும்.  சம்பாதிக்கிறதெல்லாம் கையிலேயே கிடைக்காம போகும்.  இது போதாதுனு வருசக்கடைசியிலே பிராஸசசிங் சார்ஜ்னு ஒண்ணு கேட்டு பில் வரும்.  சரின்னு விட்டா, மனைவிக்கு வாங்குன அட்-ஆன் கார்டுக்கு ஆயிரம் ரூபாயைக் கேட்டு பில்லு வரும்.  பேங்குக்கு போன் செஞ்சு என்னாங்க ஃப்ரீ கார்டுனு தானே சொன்னாங்கனு கேட்டால்  அப்படியெல்லாம் கிடையாதுங்கனு சொல்லுவாங்க.  அட, உங்க ஆளுதான் சொன்னாங்கனு கேட்டா, அவங்க எங்க ஆளுங்களே கிடையாதுனு சொல்லுவாங்க.  நமக்கு வாங்கித் தந்த புண்ணியவான் அந்த நேரத்தில வேற யாரையாவது ஏமாத்திக்கிட்டு இருப்பான்.

இதெல்லாம் தெரியாத மாதிரி அதே பேங்கிலிருந்து இன்னொரு அப்பாவிக்கு ஸார், டூ யூ வான்ட் லைஃப் டைம் ஃப்ரீ க்ரெடிட் கார்டு?னு கேட்டு ஒரு பொண்ணு தேனொழுக பேசுக்கொண்டிருப்பாள். அதே பேங்க், இந்த ___ விழாவையொட்டி இவ்வளவு பர்சேஸ் பண்ணினால் ஒரு ரொட்டித்துண்டு இலவசம்னு  நாய்க்கு போடுற எலும்பு துண்டு மாதிரி விளம்பரம் பண்ணும்.நாமளும் கார்ட தூக்கிட்டு ஆசையா ஆட்டத்த ஆரம்பிப்போம்.  கிட்டத்தட்ட, எதைக் கொண்டு வந்தாய் நீ இழப்பதற்கு கதைதான்.

ஏன்னா,  நாமெல்லாம் நவீன உலகின் மிகச் சிறந்த செலவாளிகள் ஆயிற்றே. 

சைனிகுடு – தெலுங்கு விமர்சனம் திசெம்பர் 7, 2006

Posted by M Sheik Uduman Ali in Reviews.
add a comment

சைனிகுடு தெலுங்கு விமர்சனம் ஒக்கடு (தமிழில் கில்லி), அர்ஜுன் போன்ற மிரட்டலான படங்களை தந்த தெலுங்கு திரை உலகின் ஷங்கர் குணசேகரின் அடுத்த படைப்பு; இதே படங்களின் நாயகனும், தற்போது வெளிவந்து சக்கை போடு போட்டு சாதனை படைத்த போக்கிரி (தமிழிலும் அதே) பட நாயகனுமான மகேஷ் பாபு ஹீரோ, ஹாரிஸ் ஜெயராஜ் இசை என பயங்கர எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கிறது சைனிகுடு. ஆந்திரம் மாநில வாரங்கல் மாவட்டத்தில் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்திற்கு சரியாக நிவாரணம் அளிக்க அரசாங்கம் முன் வராததால் இடைத்தேர்தலில் தனது சக கல்லூரித் தோழனை நிற்க வைக்கிறார்.  இதற்கு பயங்கரமாக இடையூறு செய்து குண்டுவெடிப்பு  நாடகமாடி மகேஷ்பாபு & கோ ஐ ஹோம் மினிஸ்டர் பப்புராவும் அவர் மாப்பிள்ளை பிரகாஷ்ராஜூம் ஜெயிலில் தள்ளுகின்றனர்.  இதற்கு பாடம் புகட்டும் விதமாக, பப்புராவ் திருமணத்தன்று மணப்பெண் த்ரிஷாவை கடத்துகிறார்.  அதற்கு பிறகு நீண்ட…. முயற்சிகளில் உண்மையை ஊருக்கு தெரிய வைத்து தன் தோழனை ஜெயிக்க வைத்து சட்ட சபை அனுப்பி வைக்கிறார் மகேஷ். வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராம மக்களை  மகேஷ்பாபு காப்பாற்றுவதாக படம் ஆரம்பிக்கிறது.  தத்ரூபமாக மிரட்டியிருக்கிறார்கள்.  ஆனால் போக போக ரொம்ப சாதாரணமாக காட்சிகள் கடந்து செல்கின்றன.  பப்புராவை மானசீகமாக காதலிக்கும் திரிஷாவை கடத்தி செல்வதிலிருந்து படம் வேகம் எடுக்கிறது. 

மகேஷ்பாபு ரொம்பவும் பேசாமல் உம் என்று அழுத்தமாக நடித்திருக்கிறார்.  அதற்கான எந்த பிண்ணனியும் தெரியாததால் கொஞ்சம் பிசுறுகிறது.  பாடல் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் அவரிடம் இருக்கும் துறுதுறு இந்த படத்தில் மிஸ்ஸிங். சூப்பர் ஸ்டார் என  உங்களை ஆர்பரிக்கும் ரசிகர்களை   தொடர்ந்து இப்படியே ஸ்டீரியோ டைப்பாக செய்து ஏமாற்றி விட வேண்டாம். திரிஷா.  கலக்கியிருக்கிறார்.  அப்பாவித்தனமாக பப்புராவை காதலிக்கிறார்.  அதனை சொல்லிச்  சொல்லி மகேஷை மிரட்டுவது, சும்மாங்காட்டியும் மகேஷ் பாபுவை வில்லனாக கனவு காணும் காட்சி ஹைகூ. படத்தில் ஐயோ பாவம் பிரகாஷ்ராஜ் தான்.  பப்புராவுக்கு மச்சினனாக வரும் இவர் ஏதோ செய்ய போகிறார் என்றால், பாவம் வில்லனுக்கும், ஹீரோவுக்கும் வெறும் கைப்பாவையாக இருந்து கிளைமாக்ஸில் உயிரை விடுகிறார். யாருடா இவர் என்று கேட்க வைக்கிறார் பப்புராவாக வருபவர் (பெயர் தெரியவில்லை).  ஹோம் மினிஸ்டர் வேறு.  பயங்கர காமெடி. 

இசை ஹாரிஸ். என்ன செய்வதென பின்ணணி இசையிலும், பாடல்களிலும் விழி பிதுங்கியிருக்கிறார்.  ஹாரிஸின் இசை என்ற அடையாளமாவது வேண்டாம்,  அட இவ்வளவு பில்டப் கொடுக்கிறார்களே என்பதற்காகவது கொஞ்சம் பண்ணியிருக்கலாம். பாலசுப்பிரமணியத்தின் காமிரா வெகு இயல்பாக உலா வருகிறது. எடிட்டிங் ஸ்ரீஹரிபிரசாத்.  ஸார் குரு படத்தில் ரொம்ப பிஸி போல.  முன்பாதியில் நிறைய வெட்டி காட்சிகளை ஷார்ப் செய்தவர், இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகளில் கொஞ்சம் கத்திரி போடாமல் விட்டிருக்கலாம்.  பெரிய கொட்டாவி தான் வருகிறது.  வழக்கம் போல் குணசேகர் பிண்ணியிருக்கிறார், எதிர்பார்க்காத மிரட்டலான காட்சிகளிலும், பிரும்மாண்டத்திலும்.  குறிப்பாக, இரண்டு மலைகளுக்கு இடையே கம்புகளால் பெரிய பாலம் கட்டி வைத்திருக்கும் ஒரு சேஸிங் காட்சி.  ராட்சத பேன்களை வரிசையாக (உபயம் கிராபிக்ஸ்) நிற்க வைத்து எடுக்கப்பட்ட பாடல் காட்சி. ஒக்கடு படத்தில் பண்ணியிருந்த மிரட்டலான காட்சியமைப்புகளும், அர்ஜூன் படத்தில் பண்ணியிருந்த பிரம்மாண்டமான காட்சியமைப்புகளும் அதற்கேற்றது போல உயிரோட்டமான திரைக்கதையும் குணசேகரை ரொம்ப பேச வைத்தது.  இந்த படத்தில் என்னாயிற்று.  காட்சிக்கு காட்சி பிரும்மாண்டம் பண்ண வேண்டும் என்ற அவசரம் மட்டுமே தெரிகிறது. எந்த காட்சியிலும் ஒரு ஜீவானம்சமோ, அழுத்தமோ இல்லை.  விட்டால் மகேஷ்பாபுவை சாமியாக்கி கோயில் கட்டிவிடுவீர்கள் போல.  உங்க படத்தில் இதெல்லாம் வேண்டாமே. சமீபத்திய படங்களை பார்த்து பயந்திருக்கிற தாக்கம் பீட்டர்  ஹெய்னை வைத்து கிளைமாக்ஸில் பண்ணியிருக்கும் அந்நியன் ஸ்டைல் சண்டை காட்சியில் தெரிகிறது.  இவ்வளவு தொழில் நுட்ப கலைஞர்களை கட்டி வேலை வாங்கிய நீங்கள் தறிகெட்டு ஓடும் திரைக்கதையை கொஞ்சம் கட்டுப்படுத்தியிருந்தால் ஒக்கடுவை மறுபடி பார்த்த உணர்வை போக்கியிருக்கலாம். மிகவும் அருமையான ஒரு பேண்டஸி டைரக்டர், திரைக்கதையில் கொஞ்சம் கோட்டை விடாமலிருந்திருந்தால் படம் பெரிய கில்லியாகிருக்கும். சைனிகுடு எதிர்பார்ப்புடன் இருப்பவர்கள் ஒரு தடவை பார்த்து ஏமாறலாம்.

சென்னை பட்டணம் திசெம்பர் 5, 2006

Posted by M Sheik Uduman Ali in Articles.
1 comment so far

கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் காலம் முதல் நம்ம விவேக் வரை சென்னையை பற்றி ப(க)டிக்காத ஆட்கள் இல்லை. எல்லா காலங்களிலும் சென்னயைப் பற்றிய பயம் கலந்த எச்சரிக்கைகள் இருந்த வண்ணமே உள்ளன.  இருந்தும், இன்று பெருவாரியான தமிழக மற்றும் ஆந்திர மக்களுக்கு வாழ்வாதாரமே இந்நகரம் தான். மரமும் செடியுமாக வனாந்திரமாக இருந்த இடமெல்லாம் இன்று பிரும்மாண்டமான கட்டிடங்களால் கற்பழிக்கப்பட்டுள்ளன. ஏரி, குளங்களெல்லாம் குடியிருப்புகளால் நிரம்பி விட்டன. இங்கு வாழும் பெரும் பகுதியினர் குடியேறிகள் தான். 

ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு மகிமை உண்டு.  பல்வேறு மண்ணிலிருந்து கிளம்பி இங்கே பிழைக்க வந்தவர்கள், தங்கள் மண்ணை பற்றியே பேசுவது வழக்கம் தான் என்றாலும், பலருக்கு சோறு போடும் இந்த மண்ணை பற்றி பெருமையாக பேச ஆளில்லை. இங்கு வாழ்பவர்களுக்கு இந்நகரம் பற்றிய உணர்வுகளும் சரியாக இல்லை. எல்லோரிடமும் ஏதோவொரு பயமும், நம்பிக்கையற்ற உணர்வுமே உள்ளது.  கீழ் தட்டு மற்றும் மத்திய அடித்தட்டு மக்களிடமும் உள்ள ஒரு நேசவுணர்வும், மனித நேயமும் மற்ற மக்களிடம் இல்லை.  ஆனால், சில நம்பிக்கையற்ற உணர்வுகளுக்கு அவர்களும் ஒரு காரணம் என்பது பலரின் வாதம்.  

எல்லோருக்கும் இந்நகரம் ஒரு சத்திரமே.  பயன்படுத்தி விட்டு குப்பையில் போடும் பற்பசை டியூப் மாதிரி நிறைய பேருக்கு இது ஒரு யூஸ் அன்ட் த்ரோ நகரம். இதெல்லாம் போதாதென்று உலகமயமாக்கலில் மேற்கத்திய கலாச்சாரங்கள் வெகு இயல்பாக இங்குள்ள இளைய தலைமுறையினரிடம் நுழைந்து நம் கலாச்சாரத்தின் முதுகெலும்பை எண்ணிப்பார்த்துக் கொண்டிருக்கிறது. எது நாகரிகம், எது முற்போக்குத்தனம் என்பதில் இங்குள்ள இளைஞர்களுக்கு குழப்பமே.  கிராமங்களிலிருந்து வரும் இளைஞர்களுக்கு ஒவ்வாமை தான் ஏற்படுகிறது. 

எவருக்கும் இங்குள்ள எதைப்பற்றியும் கவலையில்லை.  தான் வாழவேண்டும், அதுவும் இன்றைக்கு நல்லபடியாக!.  இன்னும் பத்து வருடங்களுக்கு பிறகு இந்த நகரம் வாழ்வதற்கு எப்படி இருக்கும், வருங்கால சந்ததியருக்கு  நீராதாரமும், சுகாதாரமும் எப்படி இருக்கும் என்று எவருக்கும் கவலையில்லை.  அவர்களுக்கு தரப்போவது வெறும் கட்டிடங்களையும், பெரும் கழிவுகளையும் தான். 

ஆளுபவர்களுக்கும் இதைப் பற்றி யோசிக்க நேரமில்லை.  தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த அவகாசமில்லாமல் பிரச்சினைகளும், அரசியலும் தலை தூக்குவதால் குறுகிய கால திட்டங்களே அமுல்படுத்தப்படுகின்றன. போதாதென்று புதுப்புது தொழிற்சாலைகளால் இம்மண்ணுக்கு அதிகமான சுமையைக் கொடுத்து தங்கள் கண்ணுக்கெதிரிலேயே எல்லாம் நடந்திட பார்க்கும் மனப்பான்மையும் உள்ளது.  அரசு நிர்வாகத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் ஒரு மாநிலமே ஒரு நகரத்தை எதிர்பார்க்கும் விதி டெல்லி, மும்பை, கல்கத்தா உட்பட சென்னைக்கும் உண்டு.   கோவை, திருப்பூர் போன்ற விதி விலக்குகள் உள்ளன என்றாலும், பன்னாட்டு நிறுவனங்கள் அமைக்க சென்னையைத் தாண்டி மதுரை, திருச்சி, நெல்லை என பல நகரங்கள் உள்ளன.  இந்நகரங்களின் உட்கட்டமைப்பை முறைப்படுத்தினாலே போதும்.  அங்குள்ள மக்கள் பலரும் பாடு பார்ப்பதற்கு விரும்பியோ, விரும்பாமலோ சென்னையை தேடி வருகிறார்கள். போதும் போதும் என்று இந்த மண் சமிஞ்கை செய்ய ஆரம்பித்து விட்டது.  அழிப்பது மிகவும் எளிது, ஆக்க…?