குரு – சினிமா விமர்சனம் ஜனவரி 24, 2007
Posted by M Sheik Uduman Ali in Reviews.add a comment
நமது தலைமுறையின் முன்மாதிரி சினிமா இயக்குநர் என்று மணிரத்னத்தை முன்னிறுத்தி கூறுவதற்கான ஆதாரங்களில் குருவிற்கு முக்கிய பங்கு உண்டு.
ஒரு கமர்ஷியல் சினிமாவிற்கு அப்பாற்பட்ட ஒரு கதையை வழக்கமான கமர்ஷியல் கட்டமைப்புகளில் வடிவமைத்து சாதாரண பங்களிப்பாக ஆக்கிவிடாமல் நீண்டகால உழைப்பில் இளைய தலைமுறைக்கு நல்லதொரு சினிமாவை தந்திருக்கிறார்.
சுதந்திரத்தையொட்டிய ஒரு கால கட்டத்தில் மும்பையின் பஞ்சு பேரம் பேசும் வணிக வளாகத்தில் ஒரு வணிகனாய் ஆரம்பித்து மிகக் குறுகிய காலத்தில் நாட்டின் மாபெரும் தொழில் நிறுவனத்தின் அதிபராகும் ஒருவனின் கதையினை எந்தவொரு சினிமா இலக்கணங்களுமில்லாமல் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கு நேர்மையாய் சொல்லியிருக்கிறார் மணி.
அபிஷேக்பச்சனிற்கு “தி பெஸ்ட்” என்பதையும் தாண்டி திருப்புமுனை ஏற்படுத்திய படங்களில் குருவும் இருக்கும். விதவிதமான கெட்டப்புகளில் தனது நடிப்பு பரிமாணங்களை கொஞ்சம் காட்டினாலும் பெரிதாய் ஆடியன்ஸிடம் ரீச்சாகும் மசாலா இல்லாத படம் இது. ஒவ்வொரு காட்சியிலும் இந்தியாவே புரட்டி போடப்போகிற ஒரு தொழிலதிபருக்குண்டான ஆளுமையையும், வேகத்தையும் இதை விட சிறப்பாக ஒரு நடிகனால் வெளிப்படுத்த முடியாது. ஹார்ட்ஸ் ஆப் அபிஷேக்.
காந்தியவாத பத்திரிக்கையாளராக மிதுன் சக்கரவர்த்தி பாசத்திற்கும் கண்டிப்பிற்கும் மத்தியில் கம்பியில் நடந்து மிரள வைக்கிறார். கம்பெனி நொடிந்து அபிஷேக் பக்கவாதத்தில் படுத்ததும் மிரள மிரள மாதவனிடம் எப்படி என்று கேட்கும் பொழுது நாம் தான் காரணம் என மாதவன் சொன்னதும் உடைந்து நிற்பதும், பிறகு இந்த வாரம் திரும்பவும் அபிஷேக்கை பற்றி ஒரு மேட்டர் இருக்கிறது போடவா என்று மாதவன் கேட்ட பின்பு உண்மையினா போடு என்று இறுமாப்பாய் கூறுமிடத்தில் நெற்றி சுருங்க வைக்கிறார்.
நெத்திப் பொட்டில் அடிக்கிற மாதிரியான கேரக்டர் மாதவனுக்கு. அபிஷேக்கை போட்டு வறுத்தெடுக்கிறார். மாதவனை கோபமாக பார்க்க வரும் அபிஷேக் அவர் வித்யா பாலனின் கணவன் என்று தெரிந்ததும் (நாயகன் சினிமா நினைவுக்கு வந்தால் அதற்கு நாம் பொறுப்பில்லை, ஏனென்றால் காட்சியும் அப்படியில்லை) அபிஷேக் அவரிடம் எந்தளவிற்கு என்னை வெறுக்கிறாயோ அந்தளவிற்க்கு இவள்மேல் உன் அன்பை காட்டு என்று கூறுமிடங்கள் சுவையான காராபூந்தி. தெனாவட்டான பத்திரிக்கையாளனாய் அபிஷேக்கை மாதவன் விமர்சிக்கும் காட்சிகள் அருமை. அபிஷேக் புலி என்றால், நீ சிங்கம் என்று ஐஸ்வர்யாராயை பார்த்து ஒரு காட்சியில் கூறுகிவார் மிதுன். அதற்கு ஓரளவிற்கு ஐஸ்வர்யாவும் பொருந்துகிறார். அபிஷேக்கை ஆஸ்பத்திரியில் பார்க்க வரும் மிதுனை, “என்ன உயிர் இருக்குதானு பார்க்க வந்தீங்களா, உயிரோட தான் இருக்கிறார். இன்னும் கொஞ்ச நாளில் உங்களோட சண்டை போட தயார் செய்து விடுவேன்” என்று கூறுமிடத்திலும், ரகசிய விசாரணையின் போது அபிஷேக் பேச இயலாமல் இருக்கும் போது நீதிபதியிடம் நான் அவரின் குரல் என்று கூறுமிடத்திலும் அவரின் குணாதியசத்தை அற்புதமாகக் காட்டுகிறார். மற்றபடி காதல் காட்சிகளில் கேட்க வேண்டுமோ ஜென்டில்மேன்ஸ். அம்மணிக்கு குஷியோ குஷி.
வாழ்க்கையை வீல் சேரில் எண்ணிக் கொண்டிருக்கும் வித்யாபாலன் சரேலென வந்திறங்கும் மின்னலாய் தோன்றி மெழுகாய் கரைந்து மறைந்து போகிறார். சுதந்திர காலத்திலிருந்து நிகழ்காலம் வரையிலான நிகழ்வுகளை ராஜீவ்மேனனின் காமிரா பார்வையாளனுக்கு எளிமையாய் உணர வைக்கிறது. படத்தொகுப்பு ஸ்ரீகர்பிரசாத். ஒருவனின் வாழ்க்கை ஓட்டத்தை விவரிக்கும் கதை என்பதை நன்கு உணர்ந்து மீச்சிறு ஷாட்களாக காட்சிகளை தொகுக்காமல் கொஞ்சம் நீட்டி மெருகூட்டுகிறார்.
இவரில்லாமல் என்னால் ஒரு படத்தை நினைத்து பார்க்க முடியாது என்று மணி ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி ஒரு பேட்டியில் கூறியபோது ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஆனால் அது நிஜம் தான். வாழ்க்கையை தன் வசப்படுத்தி முன்னேறிக்காட்டும் ஒருவனின் கதைக்கு நிஜமாக உயிரூட்டியிருக்கிறார். பாடல்கள் வழக்கம் போல் அருமை (அட மணி படம்ங்கோ! மனுஷன் ட்ரில் எடுத்து விடுவார்).
நம்மோடு சமகாலத்தில் வாழ்ந்து மறைந்த ஒருவரின் வாழ்க்கையை நினைவுப்படுத்துவதாக கதை (கதாநாயகனை கூட “குருபாய்” என்றே அழைக்கிறார்கள்) இருந்தாலும் இக்கால இளைஞர்களுக்கு ஒரு முன்னோடியாக எவ்வாறு காட்டலாம் என்பதை மிகச் சிறப்பாகவும் நேர்மையாகவும் கையாண்டிருக்கிறார் மணி. தன்னை முன்னிறுத்தியோ, தனது சகலகலா வல்லமைகளை திணித்தோ எந்தவொரு காட்சியும் இல்லாமல் தந்திருக்கும் இந்த படைப்பாளி வளரும் இயக்குநர்களுக்கு ஒரு நல்ல இன்ஸ்பிரேஷன். ரகசிய விசாரணை முடிந்து பொது மக்கள் முன்னிலையில் அபிஷேக் பேசும் காட்சிகள் படு ஷார்ப். “நீங்கள் பேசக் கொடுத்தது அஞ்சு நிமிஷம். நாலரை நிமிஷத்தில் நான் பேசிவிட்டேன். முப்பது செகண்டு லாபம். இதுதாங்க பிஸினஸ். இது தப்பா?” என்று அபிஷெக் பேசும் காட்சியில் பல விசயங்களை சொல்லி புரிய வைக்கிறார்.
வசனங்கள் படு ஷார்ப். “ஒரே நாளில் ஒரு சட்டத்தை இயற்ற முடியுமென்றால் அதை ஒரே நாளில் தகர்க்கவும் முடியும்”. நியாயமான வசனங்கள். உலகமயமாக்கலின் தாக்கத்தில் உருவான சட்டங்களும், வக்கில்லாத அரசியல்வாதிகளால் வழியில்லாமல் விதிக்கப்படும் கடுமையான வரிவிதிப்புகளும் எப்படி ஒரு குடிமகனின் கடமையாகும் என்ற உரசிப்பார்க்கும் நேர்மையான கருத்துகள் பார்வையாளர்களின் மனதில் பளிச்சென பதிகிறது.
விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கலைஞனின் படைப்பை வேறு எப்படி விமர்சிப்பது. வெல்டன் மணி என்றா? குரு – இன்ஸ்பிரேஷன்.