பச்சைக்கிளி முத்துச்சரம் – சினிமா விமர்சனம் மார்ச் 20, 2007
Posted by M Sheik Uduman Ali in Articles.add a comment
சத்தமில்லாமல் ஒரு படத்தை தந்திருக்கிறார் கவுதம். ரொம்ப யோசித்து தான் தியேட்டர் பக்கம் போனேன். ஆஊ என ரத்தக் களறியாக இருக்குமே என்ற பயம் தான்.
உயர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர் சரத் – அழகான மனைவி, அன்பான மகன், சந்தோஷமான மெடிக்கல் ரெஃப் வேலை என இயல்பாக போகும் வாழ்க்கையில் அவருடைய மகனுக்கு சர்க்கரை வியாதி வருகிறது. அவனை பராமரிப்பதிலேயே நாளை கழிக்கிறார் மனைவி. சகஜமான இல்வாழ்க்கை இல்லாமலிருக்கும் சரத் ஜோதிகாவை கண்டதும் சபலமாகிறார். வரம்புகளை மீறக்கூடாது என இவர் நினைக்கு போது மடை திறந்த வெள்ளமாக ஜோதிகா லாட்ஜ் வரை கொண்டு செல்ல… விபரீதம் ஆரம்பமாகிறது. சரெலென பணம் பறிப்பதற்காக வரும் ஒரு கயவன் தற்செயலாய் இருவரும் தம்பதியர் அல்ல என தெரிய வர பிளாக் மெயில் செய்ய சரத் சேமிப்புகள் முழுதும் கரைந்து போகிறது. ஒரு நாள் இது எல்லாமே ஒரு நாடகம் என்றும் தான் பணத்திற்காக ஏமாற்றப்பட்டோம் என்று தெரிய வர தான் ஒரு சராசரி ஆணில்லை என்று தன் பணத்தை மீட்ட கிளம்புகிறார் சரத். அதன் சோதனைகளிலிருந்து மீண்டாரா என்பது கிளைமாக்ஸ். சரத். அழகான கேரக்டர். ரொம்பவே நடிக்க வேண்டாம். அவருடைய பாந்தமான முகமும் பராக்கிரம தகுதியுள்ள உடலுமே போதுமானதாக இருக்கிறது. நடித்ததில் முக்கியமான படமாக பேட்டிகளில் தாரளமாக சொல்லிக் கொள்ளலாம். ஒரு நடுத்தர வயது குடும்பதஸ்தனாக அழகாக பொருந்துகிறார். அவருடைய மனைவியாக புதுமுகம். அப்படியே வேட்டையாடு விளையாடு கமலிக்கு தங்கை மாதிரி. எங்கே இவரை வில்லன்கள் கொன்றுவிடுவார்களோ என்று பயம். கோபித்துக் கொண்டு “வரமாட்டேன்” என்று கிளம்புவர் திடீரென வந்து கையில் 600 ரூபாய் தான் வைத்திருந்தேன், காலியாகிவிட்டது வந்துவிட்டேன். என் பையனை தேடுகிறது என்கிறார். காமெடியாக மாசம் மாசம் காசு கொடு நான் எங்காவது போய்விட்டு வருகிறேன் என்று கேட்டாலும் கேட்பார் என நாம் நினைக்கும் போதே காசு கொடு; நான் திரும்பவும் போகணும் என்று அடம்பிடித்து அழுகிறார். யதார்த்தமாக தெரிந்தாலும் லேசாக பொத்தல் தெரிகிறது.
ஜோதிகா! பாந்தமான குடும்ப பெண்ணாக அறிமுகமாகி வரம்பு மீறும் இல்லாளாக மாறும் வரை ஓகே. இறுதியில் ராட்சத வில்லியாக தன் சுயரூபத்தை காட்டும் போது நமக்கு ஒரு சுயபட்சாபமே ஏற்படுகிறது. “மொழியில்” தூள் கிளப்பியிருகிறீர்களாமே பார்க்கலாம். யாரிந்த வில்லன். மூன்றெழுத்து சென்னை கெட்ட வார்த்தைகளிலேயே இவருடைய டயலாக்குகள் ஆரம்பிக்கிற மாதிரி கவனமெடுத்திருக்கிறார்கள். ஏனென்றால் கவுதம் தான் சாருக்கு டப்பிங். ஙொத்__ மூடு… போடு என சகஜமாக பேசுயிருக்கிறார். நல்லவேளை ஹீரோவையும் அவரது மனைவியையும் குரூரமாக படுத்தியெடுக்கவில்லை. எடிட்டிங்கிறகு நிறைய வேலை வைக்கவில்லை. அளவெடுத்து எழுதப்பட்ட திரைக்கதையால். அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு நார்மல்.
திருட்டு மாங்காய் இனிக்கும். அதற்காக அற்ப சந்தோஷத்திற்காக ஒரு சந்தோஷமான வாழ்க்கையை இழக்க நேரிடும் என அந்த பீச் ரெசார்ட் காட்சிகள் மூலம் ஒவ்வொரு ஆணிற்கும் பெண்ணிற்கும் பசுமரத்தாணியாக அழகாக புரிய வைக்கிறார் இயக்குநர். இதன் பிண்ணனியிலேயே கதையை நகர்த்தியிருந்தால் கீரிடம் சூட்டி அழகு பார்த்திருக்கலாம். ஆனால், அதற்கு பிறகு தனது டிபிக்கல் டிராக்கில் பயணித்து கொஞ்சம் ஏமாற்றியிருக்கிறார். மன்னிப்பு கேட்கும் சரத்திடம், அத்தனை வருடம் சந்தோஷமாக இருந்த போதெல்லாம் தெரியவில்லை; சில வருடங்கள் இல்லறத்தில் சந்தோஷமில்லை என்றதும் தப்பு செய்தால் பின் எப்படி நீ துன்பத்திலும் என் கூட இருப்பாய் என்று நம்புவது என்று அவர் மனைவி கேட்கும் கேள்விகள். இரண்டு வருடம் இந்த ரயிலில் வருகிறேன் என்கிறீர்கள்; உங்களை பார்த்ததே இல்லையே என சரத் கேட்க இத்தனை வருடம் தலை குனிந்து வந்திருப்பீர்கள் என்ற ஜோதிகாவின் பதில் என மனசை தொடும் வசனங்கள் பரவலாக வருகின்றன. எதற்கும் அஞ்சாத, என்ன வேண்டுமானாலும் செய்ய முடிகிற அசிங்கமான வில்லன். சலிக்காமல் அவனிடம் அடி வாங்கும் ஹீரோ. பத பதக்க வேண்டுமென்கிற காட்சிகள் இந்த படத்தில் கொஞ்சம் குறைவாகத்தான் என்றாலும் ஏதோ ஒரு சிறு வட்டம் போட்டு தான் கவுதம் ஒர்க் பண்ணுகிறாரோ என்ற சந்தேகம் வருகிறது. கிளைமாக்ஸ் பக்கம் ஒரு பாடல் வரும் போதே, அட அதுதானே, கவுதம் படத்தில் வில்லன் இன்னும் நிறைய சேஷ்டைகள் செய்யனுமே என தோன்றும் போதே அதே மாதிரி காட்சிகள். அட படத்தை முடிங்கப்பா…என ஆயாசமாகிவிடுகிறது. அப்புறம் சராமரியாக இரண்டு கொலைகள் நடந்தும் ஒரு செய்தியோ, போலீஸோ தலை கூட காட்டவில்லை. அதையே சரத் கேட்க அவரின் நண்பர் அட அவனுங்களுக்குள்ளேய அடிச்சிகிட்டது. சத்தமில்லாம முடிஞ்சிருச்சு என்கிறார். அதற்காக சரத் போல் பாதிக்கப்பட இருந்த இன்னொருவர் பற்றி கூடவா செய்தி வராது. ம்ஹூம் என்ன செய்ய. ஜஸ்ட் லைக் தேட் என சரத்தும் இரண்டு கொலைகள் செய்து விட்டு சந்தோஷமாக இருக்கிறார். பாடல்களும் இசையும் ஒகே. வழக்கமான ஸ்டீரியோ டைப் திரைக்கதைகளிலிருந்து வெளிவந்து, ஒரே மாதிரியான பாடல்களையும் பிண்ணனி இசையையும் கேட்டு ஹாரிஸ் ஜெயராஜை தொல்லை பண்ணாமல் முயற்சித்தால் தமிழ் சினிமாவிற்கு இன்னொரு மணிரத்னம் மாதிரி, ஷங்கர் மாதிரி ஒரு இயக்குநரை பார்க்கும் வாய்ப்பு தமிழ் கூறும் நல்லுலகிற்கு இருக்கிறது. பச்சைக்கிளி முத்துச்சரம் – கொஞ்சம் சிவப்பாக…. சரம் சிதறலாக….