jump to navigation

மாயக் கண்ணாடி – சினிமா விமர்சனம் ஏப்ரல் 23, 2007

Posted by M Sheik Uduman Ali in Articles.
add a comment

ஆடம்பரமாகவும் வசதியாகவும் வாழ நினைத்து, இருக்கிற வேலை மட்டும் போதாது என்று அளவிற்கு அதிகமாக குறுகிய காலத்தில் சம்பாதிக்க நினைப்பவர்கள் முன்னேற முடியாது என்ற மெஸேஜோடு பஞ்சு அருணாசலம் வாரிசு தயாரிக்க, சேரன் இயக்கி நடித்திருக்கும் படம் மாயக்கண்ணாடி. 

நகரின் மாபெரும் வணிக வளாகத்தில் உயர் தர ப்யூட்டி சலூன் நடத்தும்ராதாரவியிடம் வேலை பார்க்கும் சேரனும், நவ்யா நாயரும் காதலர்கள்.  அல்ட்ரா மாடர்னாக வாழ ஏங்கும் இவர்கள் தற்போதைய வேலை சரிபடாது என்று LIC முகவரில் ஆரம்பித்து சினிமாவில் போய் நிற்கிறது பணம் சம்பாதிக்கும் ஆசை.  அதனால் இருக்கிற வேலை போய் அவசரத்திற்கு வழியில்லாமல் தவறான வேலை செய்து சிறை செல்கிறார் சேரன்.   இறுதியில் மனம் திருந்தி பழைய வேலைக்கு செல்கிறார்.

 திரைக்கு பின்னாலிருந்து இயக்கி புகழ் பெற்றவர்களில் பலர் திரையில் தோன்ற நினைக்கும் போது அவர்களின் கூரிய பார்வை சிதறி தனித்தன்மை போய் விடுவதுண்டு.  இதில் சேரன் விதிவிலக்கு என்ற உண்மையை இப்படத்தில் பொய்யாக்கிவிட்டார். கதைக்கு ஏற்ற காஸ்ட்யூம்களில் அல்ட்ரா மாடர்ன் ஹீரோவாக வருபவர் பின் கதைபுலத்தையே மறந்து படம் நெடுக தன்னை அழகாகவே காட்ட நினைக்கிறாரோ என்று தோன்றுகிறது.   

யதார்த்தமான காட்சிகளில் இயல்பாக தெரியும் இவரின் நடிப்பு செல்லச் சிணுங்கல், உணர்ச்சிவசப்படும் காட்சிகளில் அசெளகரியமாக தோன்றுகிறது.  ஆனால், வாய்விட்டு பாராட்டும் காட்சிகளும் உண்டு.  பாலசந்தர் வீட்டு வாசல் முன்பு நடிக்க வாய்ப்பு கேட்டு அவர் செய்யும் சேஷ்டைகள் சிரிக்க வைக்கின்றன. 

நவ்யா நாயர். கடைக்கு வரும் கஸ்டர்மகளிடம் செல்லமாக வழிந்து ஒவ்வொரு கேள்வியாக கேட்டு துளைத்து எடுத்து அவர்களை தர்ம சங்கடமாக்கும் காட்சிகளில் பட்டாம்பூச்சியாக பறக்கிறார் என்றால், அப்பாவிடம் திருமணம் வேண்டாம் என்று அழும் காட்சிகளில் வியக்க வைக்கிறார்.  நமக்கு தெரிந்து தமிழ் சினிமாவில் குளோஸப்பில் அழ தைரியமுள்ள ஒரு நடிகை நவ்யா. 

திரை முழுக்க இவர்கள் இருவரை சுற்றியே மற்ற கேரக்டர்கள் வந்தாலும் ராதாரவி, சேரனின் ரூம்மேட்டாக வருபவர், கஞ்சா வியாபாரி ஆர்.எஸ், நவ்யாவின் அப்பா என அச்சு அசலாக இயல்பாக நடித்திருக்கிறார்கள். அதுவும் சாதாரண டீக்கடையில் ஆரம்பித்து மொபைல் டிபன் சென்டர் வரை உயரும் ரூம்மேட்டும் அவரின் கட் அன்ட் ரைட் அணுமுறையும், கண்டிப்புடனும் கரிசனத்துடனும் முதலாளியாக வரும் ராதாரவி, சிகரெட்டை ஆழமாக இழுத்து சோதனை பார்வையும் மர்மங்களை தாடிக்குள் பதுக்கியும் ராயலாக உலா வரும் ஆர்.எஸ் என அட சேரனப்பா என்று சொல்ல வைக்கிறார்கள். 

இளமையும் நவீனமும் சேர்த்து காட்சியமைப்புகளுக்கு இசையால் தெம்பூட்டியிருக்கிறார் இளையராஜா.  இப்போதுள்ள இளசுகளுக்கு சரிக்கு சமமாக பண்ணியிருக்கிறார் இந்த பண்ணைபுரத்துக்காரர்.  பாடல்களில் பரவாயில்லை.  அந்த ஏலே பாடலை வேறு யாராவது பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே ராஜா! 

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை நேர்கோணத்தில் சென்றாலும் போரடிக்காமல் நகர்த்தியிருக்கிறார் சேரன். ஒரு சந்தோஷ கேளிக்கை, மத்திய தர வகுப்பு மக்களுக்கு இனி சென்னையில் கனவாகி போய்விடுமோ என்ற நிஜத்தில் ஆரம்பிக்கும் சேரன் வழியெங்கும் நவீனமான சென்னையை காட்டி அதில் ஒவ்வொருவரின் கனவுகளை சொல்ல நினக்கும் நடை சீராக இருக்கிறது.  இருந்தும், என்ன சொல்ல வருகிறார், எதை தவறு என்று சுட்டிக் காட்ட வருகிறார் என்றுதான் தெரியவில்லை.  

சினிமா கனவுகளுடன் இருப்பவர்களுக்கு ஒரு மெஸேஜ், குறைந்த காலத்தில் பணம் பார்க்க மார்க்கெட்டிங் பண்ண நினைப்பவர்கள், முகவர்களாக நினைப்பவர்களுக்கு ஒரு மெஸெஜ் என இருந்தாலும் இந்த மெஸெஜ் எல்லாம் தப்பாக புரிந்து போய்விடும் அளவுக்கு எந்த நிஜத்தையும் ஆழமாக தொடாமல் விட்டேத்தியாக நகர்த்தி, சேரன் படங்களில் காட்சிகளில் ஒரு டச் இருக்குமே, அதை தொலைத்திருக்கிறார். 

சொல்ல வந்த மெஸேஜ் இது தான் என்று ராதாரவி கடைசி ஐந்து நிமிடம் கொடுக்கும் லெக்சரில் புரிந்தாலும் அதுவரை கடந்த காட்சிகளும், சம்பவங்களும் பார்வையாளர்களை குழம்ப வைக்கிறது. அம்மாவிற்கு உடம்பு சரியில்லாமல் சிகிச்சைக்கு தேவைப்படும் ஒண்ணரை லட்சம், வழியில்லாமல் கஞ்சா கடத்தலில் ஈடுபடும் நேர்மையான கதாநாயகன், திருமண சம்மததிற்கு இரண்டு லட்சம் கேட்கும் நவ்யாவின் அப்பா என எக்ஸ்பைரியான கோடம்பாக்க பார்முலாவை சேரன் படத்தில் பார்ப்பது புருவங்களை உயர்த்த வைக்கிறது. 

செய்யும்  தொழிலில் சிரத்தை வேண்டும், படிப்படியாக உழைத்து முன்னேற வேண்டும், குறுகிய காலத்தில் பல்வேறு தெரியாத வழிகளில் சம்பாதித்து முன்னேற நினைத்தால் தோல்வியே என்ற அட்வைஸை இக்காலத்து பிசினஸ் சக்ஸஸ் பார்முலாக்கள் தெரியாமலும், குறுகிய வட்டத்தில் சிக்கிக்  கொண்ட காட்சியமைப்புகளாலும் சேரனின் மாயக்கண்ணாடி  மக்கள் நடக்கும் சாலையில் உடைந்து கிடக்கிறது. 

உணர்ச்சிமயமான காட்சிகளாலும் யதார்த்தமாக சொல்லப்படும் கருத்துகளாலும் சேரன் படங்கள் பெரிதாக பேசப்படும்.  சாதாரண நடைமுறை காட்சிகளாலும் தன்னால் தரமான சினிமா தரமுடியும் என்ற சேரனின் முயற்சி  பாராட்டப்பட வேண்டியதே என்றாலும், அதற்கு அவர் இன்னும் பல தொலைவு நடக்க வேண்டியிருக்கிறது. 

மாயக்கண்ணாடி புத்தம் புதிய உடைந்த கண்ணாடி.

பருத்தி வீரன் ஏப்ரல் 9, 2007

Posted by M Sheik Uduman Ali in Articles.
add a comment

மவுனம் பேசியதே, ராம் படங்களுக்குப் பிறகு பருத்தி வீரனோடு வந்திருக்கிறார் இயக்குநர் அமீர்.

வாழ்க்கையில் எந்தவொரு லட்சியமும் பொறுப்புணர்வும் இல்லாமல் வம்பு வழக்குகளில் அலட்சியமாக சுற்றித் திரியும் ஒரு முரடனையும் அவனையே வாழ்க்கையாக நினைத்து உருகும் ஒரு பெண்ணையும் சுற்றிய சம்பவங்கள் தான் பருத்தி வீரன்.

 

புதுமுகம் கார்த்திதான் பருத்தி வீரன்.  சூர்யாவின் தம்பி, சிவக்குமாரின் மைந்தன், அமெரிக்காவில் படித்தவர் என்று இவருக்கு நிறைய அட்ரஸ்கள் உண்டு.  ஆனால் இதெல்லாம் சத்தியமாக பொய் என்று சொல்லும் அளவிற்கு காட்டானாக (அட! அதுதாங்க கிராமத்து சண்டியர்) வாழ்ந்திருக்கிறார்.

அலட்சியம், பொங்கி வரும் சண்டியர்த்தனம், மதுரை மண்ணிற்கே உரிய நையாண்டி என எந்தக் காட்சியிலும் சலிக்காமல் நடித்து நம்மை பிரமிக்க வைக்கிறார்.  சித்தப்பாவை சங்கறுத்துடுவேனு சொன்ன பெருசை  வக்கைனையாக டன்டக்கு டக்கா டான்ஸ் ஆடியே வைக்கோல் போருக்குள் வைத்து சாத்தும் போது இவனின் அலட்சியமான சண்டியர்த்தனம், கோயில் திருவிழாவில் அவ்வளவு அலட்சியமாக ஒருவனை குத்தும் போது அவனின் மிருகத்தனம், நமக்கும் வந்திருச்சுல்ல (அதை காதல் என்று கூட சொல்லமாட்டார் இந்த ஸ்வீட் ராஸ்கல்), சாஞ்சுக்க வேண்டியது தானே என்று காதலியுடன் கொஞ்சல் என அப்பப்பா வஞ்சனையில்லாமல் சிக்ஸர் அடித்திருக்கிறார் கார்த்தி.  வெல்டன்.

 

அவர் இப்படியென்றால் எதிர்முனையில் இவருக்கு பலமாக சரவணன்.  யப்பு என்னாமா பண்ணியிருக்கீக.  சண்டியர்த்தனத்தில் கார்த்தி பட்டையை கிளப்ப இவரு நக்கலும் நையாண்டியுமாக ஜாலியான ரேக்ளாஸ் ரேஸாக இருக்கிறது.

 

எந்த காட்சியிலும் மேக்கப் இல்லாமல் நிஜமான கிராமத்து கருவாச்சியாக ப்ரியாமணி.  கார்த்தியை பற்றிய எந்தவொரு விமர்சனத்தையும் சலிக்காமல் எதிர்கொள்ளும் அளவிற்கான நியாயமான காதலளவை காட்சிக்குக் காட்சி காட்டியிருக்கிறார். லேசாய் தலை கவிழ்ந்து கால் வட்டக் கோணத்தில் கூரிய பார்வையுடன் பேசும் போது யப்பா தெனாவட்டான பொண்ணுப்போய் என்று மிரள வைக்கிறார்.  அப்பா நைய புடைத்த பின் ஏய் கிழவி, நிறைய கறி அள்ளி வை, சாப்பிடணும்.  அப்பதான் இன்னும் வாங்க போற அடியை தாங்க தெம்பு வேணும் என்று ஆவேசமாக பேசும் போது பிரமிக்க வைக்கிறார் என்றால் கிளைமாக்ஸில் டேய் வீரா, என்ன காணாப் பொணமாக்கிருடா என கரையும் போது நம் கண்களில் பொசுக்கென தண்ணீர்.

 

பொன்வண்ணனுக்கு அழுத்தமான பாத்திரம்.  அதைவிட அவர் மனைவியாக வருபவர்.  அப்படியே கிராமத்து பிண்ணனியில் பேசி ஜொலிக்கிறார்.  டக்ளஸாக வரும் கஞ்சா கருப்பு, கார்த்தி & சரவணனால் ஒவ்வொரு காட்சியிலும் பாதிக்கப்படும் பொழுது நம்மை வயிராற சிரிக்க வைக்கிறார்.  கீழ்தொண்டையிலேயே பேசும் பொணந்தின்னி, அச்சு அசல் கிராமத்து சுட்டியாய் வரும் சாக்குமூட்டை என யாரை சொல்லாமல் விட.

 

ஒளிப்பதிவு ராம்ஜி.  அச்சு அசலாய் ஒவ்வொரு காட்சியையும் பதிந்திருக்கிறார்.  இயக்குனரின் விழிகளாய் இருந்து ஒவ்வொரு காட்சியின் பின்புலத்தையும் தெளிவாக புரிய வைத்திருக்கிறார்.  ஆஹா! இந்த இடத்தில் ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார் என்று சொன்னால் அங்கேயே ஒளிப்பதிவாளரும் இயக்குனரும் தோற்று போய்விட்டனர் என்று சினிமா சித்தாந்தம் உண்டு.  நமக்கு எங்கும் காமிராவும் அதன் நான்கு பக்கங்களில் மூச்சடைத்து கிடக்கும் காட்சிகளும் தெரியவில்லை.  திருவிழாவும் அந்த கும்மிருட்டு கிளைமாக்ஸும் இரு சோற்று பதங்கள்.

 

கிராமத்து கை மணத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசை.  முதல் பரிட்சை.  சார் அமோகமாக பாஸ்.  

 

ஒரு வருடம் படம் எடுக்கிறோமுனு நம்ம ஆளுங்க சொல்லறதெல்லாம் ஓவர்.  ஸ்பீல்பெர்க் ஷிண்டலர்ஸ் லிஸ்ட் படத்தை 60 நாட்களில் எடுத்து முடித்தார் என்று கலாபுருஷர் ஒருத்தரோட கமென்ட் ஒன்று உண்டு.  ஸ்பீல்பெர்க் அதற்கு வேண்டுமானால் 60 நாட்கள் எடுத்திருக்கலாம்.  ஆனால்  இந்த மாதிரி கதைக்கு இரண்டு வருடம் வேண்டுமானாலும் காத்திருப்பார். என்ன பெர்பெக்ஷன்!.  இதை விட நேர்த்தியாக யாராலும் படமெடுக்க முடியுமா என்று பாலாவின் பிதாமகன், அமீரின் பருத்திவீரன் இவற்றை தவிர்த்து வேறு படங்கள் உள்ளனவா என தமிழ்வாழ் ரசிக மகா ஜனங்கள்  தெரியப்படுத்தலாம்.

 

மணிரத்னம், பாலச்சந்தர், பாரதிராஜாவிற்கு பிறகு காலியாகிவிடுமோ என்று  பதறிய போது இந்த மாதிரி ஆட்கள் இருப்பது பெரிதாய் கர்வம் கொள்ள வைக்கிறது.  சரி விசயத்திற்கு வருவோம். 

எந்த காட்சியை சொல்ல எந்த காட்சியை விட. வார்த்தைக்கு வார்த்தை நையாண்டி, காட்சிக்கு காட்சி கமுதி பக்கங்களில் நாமே சுற்றுவது போன்ற பிரமை என  பக்கங்கள் போதாது.  அந்த பிளாஸ்பேக் காட்சிகள் எல்லாம் அள்ளித் தெளித்த முத்துச் சரங்கள்.  கருப்பச்சாமி இவனிடமிருந்து என்னைக் காப்பாற்று என்று அந்த சிறுமி விரைந்து போவதும், ஏய், நில்லுடி என சிறுவயது பருத்தி வீரன் விரட்டுவது, எழுபது எம்பதுகளில் கிராமத்து சிறுசுகள் விளையாடும் விளையாட்டு, சிறு வயதிலேயே தன் உயிரைக் காப்பாற்றிய நன்றி பின் அசைக்க முடியாத காதலாய் மாறுவது என ஒரு பக்கம் கூட கோடம்பாக்கம் வாசனையில்லாமல் முடித்ததற்கு அமீரை எத்தனை தடவை வேண்டுமானாலும் பாராட்டலாம்.

 

ஒரு காட்சி,  அதைச் சார்ந்த பின்புலம்,  அதில் உலவும் மனிதர்கள் என எல்லாமே அச்சர சுத்தம்.  நாளைய தலைமுறைக்கு போட்டுக் காட்ட முடிகிற அளவிற்கு அவ்வளவு பதிவுகள்.  அப்புறம் அந்த கிளைமாக்ஸிற்கு வருவோம்.  படம் பார்க்க போகும் போதே  நிறைய பேர் பயமுறுத்தினார்கள்.  அப்படியென்ன என்று பார்த்தால் நம்மை பொறுத்த வரை  இதற்கு மாற்றாக வேறு என்ன கிளைமாக்ஸ் வைக்க முடியும்.  படைப்புகளுக்கும் விமர்சனத்திற்கும் நம் மக்கள் போடும் ஒரு முரண்பட்ட முடிச்சுதான்  இந்த படத்தின் கிளைமாக்ஸை பற்றிய பயமும்.

 

மெட்ராஸ் ஜெயிலை பார்ப்பதே தன் வாழ்க்கை லட்சியம் என்று நினைக்கும் ஒரு பொறம்போக்கு, தான் எந்த இடத்தில் தன்னை நம்பி வந்தவளை விட்டு போகிறோம் என்ற முன் யோசனையில்லாத  ஒரு முரடனுடனான ஒருத்தியின் நேசத்தை கடைசியில் திருந்திவிடுவதாகவோ, அவன் செத்துபோவதாகவோ சினிமாத்தனமாக காட்டியிருந்தால்  இரண்டரை மணி நேரம் இயக்குனர் கட்டிய கோட்டை  சொட்டையாயிருக்கும்.

 

ஒருத்தருக்கு நாலு பேரு, ரத்தத் தொங்கலில் அரங்கேறும் காம வெறி என்பன போன்ற  வக்கிரத்தை கொஞ்சம் காரம் குறைய சொல்லியிருக்கலாமெ ஒழிய ஒரு மலரை நான்கு வண்டுகள் பிச்சியெறிவது போன்ற மெட்டாபோர் காட்சிகள் அந்த காமுகர்களையும், அறிவழிஞ்ச முரடர்களையும் அடையாளம் காட்டாது அன்பான விமர்சகர்க அன்பர்களே. என்ன லேசாய் விருமாண்டி நினைவுக்கு வருகிறான்.

 

கிளைமாக்ஸ் பயந்தவர்கள் வேண்டுமானால் கண்களை மூடிக்கொள்ளவும்.  இதற்கு பயந்து வரவில்லையென்றால் காபி டே, டிஸ்கோத்தேக்களை தாண்டிய ஒரு மண்ணில் உன் சம கால சகோதரனின் நிஜமான பதிவுகளை  பார்க்கிற வாய்ப்பு (பாக்கியம் என்று சொல்ல முடியாது!) இல்லாமல் போய்விடும்.

மிகச் சிறந்த இயக்குனர்களுக்கு தேசிய விருது கொடுப்பார்கள் என்பது நிஜமானால் வரும் வருடம் அமீருக்கோ  அல்லது குறைந்த பட்சம் இந்த படத்திற்கோ உண்டு. 

பருத்தி வீரன் சம காலத்து ஒரு தூரத்து மண்ணின் பதிவுகள்