சென்னை 600028 – சினிமா விமர்சனம் மே 28, 2007
Posted by M Sheik Uduman Ali in Reviews.2 comments
தொடர்ந்து ஃபைனலில் ராயபுரம் ராக்கர்ஸிடம் தோற்கும் ஆர்.ஏ.புரம் ஷார்க் கிரிக்கெட் அணியின் அடுத்த ஒரு வருட தட்பவெப்ப களம் தான் சென்னை 600028. எஸ்பிபியின் வாரிசு சரண் தயாரிக்க கங்கை அமரன் வாரிசு வெங்கட் பிரபு எழுதி இயக்கிருக்கிறார்.
பதினொரு பேர் கொண்ட ஷார்க் அணி தான் கதையின் நாயகர்கள். இவர்களின் பணியிடங்களும் குணாதியசங்களும் அவ்வளவு யதார்த்தம். நண்பனின் தங்கையிடம் காதல் புரியும் கார்த்திக், ராக்கர்ஸ் டீமிலிருந்து இந்த ஏரியாவிற்கு வரும் ஜெய், கரெக்ட்டாக காட்சுகளை மிஸ் பண்ணும் கங்கை அமரனின் இன்னொரு வாரிசு பிரவீன் அமரன், தங்கை காதலையும், அப்பாவின் நண்பர் மகனான ராக்கர்ஸ் டீம் ஜெய்யை நண்பர்களிடம் பரிந்து பேசுவதுமாக இருக்கும் நவீன் என விறுவிறுவென ஒரு குறுசீரியலே எடுக்க முடிகிற அளவிற்கு திரைக்கதை. பின்னே சினிமாவில் எப்படி இருக்கும். கிழக்கு கடற்கரை சாலையில் வழுக்கி ஓடும் பல்ஸர் போல அவ்வளவு வேகம்.
ஆளாளுக்கு நடிப்பில் ஸ்கோர் பண்ணியிருந்தாலும் ஜெய், நவீன் மற்றும் பிரவீண் மூவரும் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக மனதில் நிற்கிறார்கள். எங்கேயும் யதார்த்தத்தை மீறிய ஹீரோயிச சாகசங்களும், சினிமாத்தனமான காட்சியமைப்புகளும் இல்லாமல் சாதாரண திரைக்கதையோட்டத்தில் நம்மை கட்டிபோடுகிறார்கள்.
“ஞாபகம் வந்ததடா” மற்றும் எகோ எஃபக்ட்டில் எஸ்பிபி படிக்கும் டூயட், அந்த குத்தாட்ட பாடல் போன்றவை யுவனின் தனி அடையாளங்கள். அதிலும் ஞாபகம் வந்ததடா பாடலில் சரணத்தில் வரும் அந்த இசைக்கலவை ஆஹா ஓஹோ. பின்ணணி இசை பிரவீன் அமரன். யுவனின் தடத்திற்குள் தண்ணீர் விட்டிருக்கிறார். பரவாயில்லை.
உள்ளது உள்ளபடி சென்னையை காட்டியிருக்கிறது காமிரா. படத்தை வேகமெடுத்து செல்ல வைத்ததில் எடிட்டிங்கின் பங்களிப்பு அருமை.
நீட்டான ஸ்கிரிப்டுடன் அருமையாக அட்டகாசம் பண்ணியிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. படம் நெடுக இழைந்தோடும் காமெடிகள் தரமான இஞ்சீன் ஆயில் மாதிரி திரைக்கதையை தொய்வில்லாமல் நகர்த்துகிறது. எதிர் டீமின் ஏரியாவில் வந்து குடியிருக்கும் ஜெய் தன் நிலமையை எண்ணி பாத்ரூமில் அழுவது, கொஞ்சம் கொஞ்சமாக இந்த டீமிற்குள் வருவது, எதிர் டீமின் பலவீனங்களை சொல்லுவது, ரெஸ்டாரன்ட் பையனின் காதல் லீலைகள், தாதா நந்தகுமாரின் தம்பியாக வரும் கார்த்திக்கின் காதல் என மனதில் நிற்கும் படியான காட்சிகள் ஏராளம். வெல்டன் வெங்கட்.
இதெல்லாம் விட கடைசியில் செமி ஃபைனலில் ராக்கர்ஸ் டீமை வீழ்த்தி ஷார்க் அணி ஜெயித்த உடன் வரும் அந்த “ஹைஹூ” ஸ்டைல் கிளைமாக்ஸ் வீடு வரைக்குமாவது ஆடியன்ஸை சிரிக்க வைக்கும்.
காதல், இல்லை எனில் ஆக் ஷன் என திரியும் கோடம்பாக்கத்தில் இந்த மாதிரி கதை கிடைத்தாலும் ஆக் ஷன் மசாலாவாக்கி “விட்டேனாபார்” என்று ஆக்கியிருப்பார்கள். இந்த படத்தை பார்த்து கொஞ்சம் கத்துகிடலாம் பாஸ்.
சென்னை 600028 – கேரண்டி டெலிவரி.
உன்னாலே உன்னாலே – சினிமா விமர்சனம் மே 3, 2007
Posted by M Sheik Uduman Ali in Reviews.add a comment
காதலில் விட்டுக் கொடுத்து போவது தற்காலிகமானது; புரிஞ்சுக்கிட்டு வாழ்வது தான் பெஸ்ட் என்ற வாழ்க்கை தத்துவத்தை ஒளிப்பதிவாளர் ஜீவா சொல்லியிருக்கும் படம் உன்னாலே உன்னாலே.
ஹீரோ வினய் ஒரு காதல் ரோமியோ. எந்த பெண்ணானாலும் வழிந்து கொட்டுபவர். அவரது காதலி சதாவோ கட்டுப்பெட்டியாக இருக்க சொல்கிறார். மனஸ்தாபத்தால் பிரியும் இவர்கள் ஆஸ்திரேலியாவில் மீண்டும் சந்திக்கிறார்கள். வழிய வரும் வினய்-ஐ பிடிவாதத்தால் தவிர்க்கிறார் சதா. வினயோடு நட்பாக பழகும் சதாவுடம் பணிபுரியும் தனிஷா வினய்-ஐ புரிந்து நட்பாகி பின் காதலாகி நிற்க சதா எடுக்கும் முடிவு தான் கிளைமாக்ஸ்.
வினய். ஷாம், ஆர்யா வரிசையில் அதே மேனரிசத்துடன் ஜீவாவின் அறிமுகம். துள்ளலான நடிப்பில் நன்றாக பொருந்தி போகிறார். நண்பியின் கல்யாண விழாவில் ஆட்டம் பாட்டம் என ஆரம்பித்து ஒவ்வொரு காட்சியிலும் சதாவிடம் மாட்டி விழி பிதுங்கும் போது சிரிக்க வைக்கிறார்.
அருமையாக ஸ்கோர் பண்ணியிருக்கிறார் சதா. வினயின் பிறந்த நாளில் அவரின் ஜொள்லிசத்தை கையும் களவுமாக பிடிக்கும் போது, வினய் ஒவ்வொரு தடவை சந்திக்கும் போதும் அவரை இக்னோர் பண்ணும் போது என சதா மிளிர்கிறார். ஆனால் கொஞ்சம் சோகையாக தெரிகிறீர்களே ஏன் அம்மணி.
கிரிஸ்பியான பாப்கார்னாய் தனீஷா. சுறுசுறுவென அயிர மீனாய் படபடக்கிறார். கொஞ்சம் அதிகம் பேசுகிறார்.
முன்பாதி காமெடிக்கு ராஜூ சுந்தரம். ஒவ்வொரு தடவை வினய் – ஐ சதாவிடம் மாட்டி விட்டு கலகலவென சிரிக்க வைக்கிறார். பின்பாதியில் காமெடி பண்ணுகிறேன் என்று வருபவர்கள் பண்ணுகிற அபத்தங்கள் தாங்க முடியவில்லை.
இசை, எடிட்டிங், காமிரா என டெக்னிக்கல் சமாச்சாரங்களில் ஜீவா & கோ ஆஸ்திரேலியாவுக்கு நம்மை விசா, டிக்கெட் எதுவும் இல்லாமல் கூட்டி சென்று காட்டி பரசவப்படுத்துகிறார்கள். அதுவும் ஹாரீஸ் ஜெயராஜின் இளமையான இசை. “உன்னாலே”, “ஜூன் போனால்” பாடல்கள் அருமையான பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம்கள்.
எஸ். ராமகிருஷ்ணனின் வசனங்கள் சில இடங்களில் கவிதையாகவும், சில இடங்களில் ஊசி பட்டாசாகவும், பல இடங்களில் பெரிய லெக்சராகவும் இருக்கிறது. ஆண், பெண் பற்றி அலைபாயுதே ஸ்டைலில் பேசிக் கொள்ளும் வசனங்கள் அலுப்பு தட்டுகிறது.
வெட்டு, கொலை, ரவுடியிஸம் என எதுவும் இல்லாமல் கதை சொல்லியிருக்கும் ஜீவாவுக்கு வாழ்த்துக்கள். இந்த மாதிரி கதைகளை இவ்வளவு டீக்காகவும் நேர்த்தியாகவும் சொல்ல முடிகிற இயக்குனர்களில் ஜீவா தி பெஸ்ட். மணிரத்னத்தின் பாதிப்புகள் சில இடங்களில் தெரிகிறது.
சதாவின் நேர்போக்கான அணுகுமுறை மற்றும் வினயின் ஜாலியான குணாதிசயம் இரண்டும் சந்திக்கும் போது ஏற்படும் முரண்பாடுகளை காட்ட முற்படும் காட்சிகள் படத்தை இளமையாக முன் நகர்த்தி செல்கிறதே தவிர கதைக்கு பலம் சேர்க்கவில்லை. அதுவும் இரண்டு பெண்களுடன் வினய் உறவு வைத்தை ராஜூ சுந்தரம் வேறு காமெடியாக சொல்கிறார். அதுவும் கடைசி காட்சிகளில் வினய் செய்வதெல்லாம் சரி என எல்லா கேரக்டர்களும் பாடம் ஒப்பிப்பது என பல அபத்தங்களை காட்டுவது சரியா மிஸ்டர் ஜீவா.
அதுவும் பின்பாதியில் படத்தை நகர்த்த முடியாமல் சேர்க்கப்பட்ட காட்சிகள் சத்யம் தியேட்டரில் முப்பது ரூபாய்க்கு இத்துணூண்டு கிடைக்கும் மொறுமொறு பாப்கார்ன் பொட்டலத்தில் கிடக்கும் நமத்து போன பாப்கார்ன் துண்டுகளாய் சத சதவென இருக்கிறது.
மெல்லிசான உணர்வுகளை சொல்லும் அருமையான கதை, சிறப்பான டெக்னிக்கல் பின்புலம் முழுக்க ஆடியன்ஸை கட்டி போடும் மந்திரம் என எல்லாம் இருந்தும் ஜீவாவின்உன்னாலே உன்னாலே –கொஞ்சம் பெரிய வசனங்களாலும், அபத்தமான பின்பாதி திரைக்கதையாலும்….முழுசா ரசிக்க முடியலே.