jump to navigation

சிவாஜி – சினிமா விமர்சனம் ஜூன் 19, 2007

Posted by M Sheik Uduman Ali in Reviews.
2 comments

படம் ஆரம்பித்தது முதலே ஏராளமான பரபரப்பினையும் எதிர்பார்ப்பினையும் கிளப்பிவிட்டது; இரண்டு மாதங்களாக தமிழ் ரசிகர்களை உலகம் முழுதும் உற்று நோக்க வைத்தது.  தான் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என ரஜினியை பேச வைத்தது என ஏகத்திற்கும் பல்ஸை எகிற வைத்த தமிழ் சினிமா சிவாஜி.

கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றினாலே ஏற்றத் தாழ்வுகள் குறைந்து இந்தியா வல்லரசாக மாறிவிடும் என்ற கருத்தை அறுபது ஆண்டுகளாக வெற்றிகரமாக சினிமா செய்து வரும் ஏவிஎம்  தயாரிக்க பிரம்மாண்டமான  ஃபேண்டஸி டைரக்டரும் சில நல்ல தமிழ் சினிமாக்களின் தயாரிப்பாளருமான ஷங்கர் எழுதி இயக்கி தமிழ் மக்களின் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கும் படம் சிவாஜி.

Sivaji - The Boss

ரஜினிக்காக இழைத்து இழைத்து ஷங்கர் எழுதிய கதை முதல்வன்.  அப்போது நழுவ விட்டதை இப்போது இருவருமே சேர்த்து பிடித்து தூள் கிளப்பியிருக்கிறார்கள்.என்னவென்று சொல்ல, இவ்வளவு வயதிலும் தன் ரசிகர்களுக்கு மெகா விருந்து வைத்திருக்கிறார் இந்த எவர்கீரின் சூப்பர் ஸ்டார்.  அங்கங்கே லேசான பிசிறு இருந்தாலும் தாய்வீடு, பில்லா காலத்து யூத்தான ரஜினி.  படத்தின் வசீகரம், மந்திரம், பவர் என எல்லாமே இவர்தான்.  கோர்ட்டு சூட் போட்டாலும், நடுரோட்டில் எல்லாமும் இழந்து சாதரணமாக நின்றாலும் என்ன மேனரிஸம், என்ன துறுதுறுப்பு. 

 முதல் பாதி காதல் விளையாட்டுகளில் கலகலக்க வைக்கிறார் என்றால், பின்பாதியில் கர்ஜணை முழங்கும் சிங்கமாக சீறுகிறார்.  நியூட்டனின் மூன்றாவது விதியை நினைவுபடுத்துகிற மாதிரி பபிள்கம்மை எதிர்முனையில் தட்டி வாயில் போடும் ஸ்டைல் கொள்ளை அழகு.  அதுவும் வெவ்வேறு விதங்களில்.  வழக்கமான பஞ்ச் டயலாக்குகள் எதுவும் இல்லையென்றாலும், இன்ஸ்ட்ருமென்டல் கடையில் போடும் சண்டை ரசிகர்களுக்கு சரவெடி என்றால், பின்னி மில்ஸில் வைத்து போடும் சண்டை தவுஸன்ட் வாலா பட்டாசு.  மொத்தத்தில் ரசிகர்களுக்கு தீபாவளி.

“ஒரு கூடை , “அதிரடிக்கார மச்சான் ரஜினியின் ரசிகர்களுக்கான வெஸ்ட்ரன் வெரைட்டி.  மற்ற பாடல் காட்சிகளில் சார் கொஞ்சம் வேகம் கம்மி.

எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் அந்த மொட்ட பாஸ்.  உண்மையிலேயே அதிருகிறது.

Style Sivaji

ஸ்ரேயா நன்றாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்(!), விருந்தில் வைக்கிற ஸ்வீட் மாதிரி.

மணிவண்ணன், வடிவுக்கரசி வந்து போகிறார்கள்.  தீபாவளியன்று ரஜினியுடன் சாலமன் பாப்பையா போடும் கொட்டம் வயிற்றை பதம் பார்க்கிறது.  மிடில்கிளாஸ் என்பதற்காக கக்கங்களில் வியர்த்து தடம் தெரியும் முழுக்கை பனியனோடு வருகிறார் ராஜா. பாவம்.

அர்ஜுனன் தேரோட்டி கண்ணன் மாதிரி சிவாஜிக்கு விவேக்.  படம் முழுக்க ரஜினியோடு வருகிறார். கிட்டதட்ட ரஜினிக்கு பேலன்ஸாக. நிறைய இடங்களில் ரஜினிக்கு பதில் இவர் பேசும் டயலாக்குகள் நக்கலும் கிண்டலுமாக தியேட்டரை ரணகளமாக்குகிறது. சில இடங்களில் ரஜினியும் விட்டுவைக்கவில்லை. பல இடங்களில் பஞ்ச் டயலாக்குகள் வேறு. டேய் மாமா என்று ரஜினி இவரை கூப்பிடும் போது செம கலகல.  சிவாஜி என்றதும் இந்த சின்ன “ஜியும் நினைவுக்கு வருவார்.

கொஞ்சமே வந்தாலும் ரகுவரன் மனதில் நிற்கிறார்.

அந்த கால சுமன் தான் வில்லன்.  அமைதிப்படை சத்யராஜ் கெட்டப்பில் வருகிறார்.  முன்னால் லேசாக துறுத்தி தெரியும் மஞ்சள் பல்லுடன் கொஞ்சூண்டு தமிழை தட்டி டயலாக் பேசுவதை தவிர வேறு எந்த காரசாரமான காட்சிகளும் இவருக்கு இல்லை.  டிபிக்கல் வில்லன் ரோலிலாவது முன்பாதியில் வருகிறார்.  பின்பாதியில் ரஜினியின் தாக்குதல்களை தேமே என்று வாங்கிக் கொள்கிறார்.

வசனங்கள் சுஜாதா. எந்த மாதிரி டயலாக்குகள் வேண்டும்  இந்தா வச்சுக்கோ என வழங்கியிருக்கிறார்.  விவேக் கதாபாத்திரத்திற்கு பாதி உயிர் இவர் வசனங்கள்.  ஆதி! போடா கூ… என சொல்லவும் ரஜினி விவேக் வாயை மூடுகிறார்.  அட கபோதின்னு சொன்னேன்ப்பா என்று போகிறது வசனம்.  “சாகுற நாள் தெரிஞ்சு போச்சுன்னா வாழ்ற நாள் நரகமாயிடும்என மனதை தொடும் வசனமும், என்ன ஏம்மா கருப்பா பெத்த என்ன ரஜினி கேட்க, வெள்ளையாயிருந்தா அழுக்காயிடுவேந்தான் என வடிவுக்கரசி சொல்லும் பதிலும் என சுஜாதா தன் பணியை செவ்வனே செய்து முடித்திருக்கிறார்.

துல்லியமான டிஜிட்டலில் 4K கலர் தரத்தில் 35எம்எம் பிரேமில் ரஜினியை பிருமாண்டமாக்கிக் ரசிகர்களுக்கு படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த்.  பின்னி மில்ஸ் சண்டை காட்சி, பாடல் காட்சிகள் என பார்த்து பார்த்து சிற்பம் வடித்திருக்கிறார்.  அதுவும் சஹாரா பாடலில் தோட்டாதரணியின் கலைக்கு உயிரூட்டியிருக்கிறார்.  ஆனால் சில பாடல் காட்சிகளில் (குறிப்பாக பல்லேலக்கா) ஏதோ ஒன்று பிசிறுகிறது. பெரும்பாலும் குளொஸப் ஷாட்டுகளாக இருப்பதால்  கொஞ்சம் டிஸ்டர்ப்டாக இருக்கிறது.  நாங்க கொஞ்சம் அகிலா கிரேன் ஷாட்டுகளை பார்க்க ஆசைப்பட்டோம் ஆனந்த் சார்.

தோட்டாதரணியின் கலைப்பசிக்கு சிவாஜியில் நிறைய தீனி.  சஹாரா, அதிரடிக்கார மச்சான் பாடல்களின் செட்டிங்குகள் பிரமிக்க வைக்கிறது.

எவ்வளவு தான் கத்திரி போட்டிருந்தாலும் மூன்று மணி நேரம் தாண்டி படம் ஒடுவதை ஆண்டனியால் ஒன்றும் செய்ய முடியவில்லை போதும்.  அந்த டிரைவின் சண்டை காட்சி சரியான நீள அகலங்களில் வெட்டி விட்டிருக்கிறார்.என்னடா,  அந்நியன் மாதிரி பிருமாண்டமான சண்டையில்லையே என நினைக்கும் போது பின்னி மில்ஸ் கூரையில் ரஜினி போடும் சண்டை மூலம் நிவர்த்தி பண்ணுகிறார் பீட்டர் ஹெய்ன்.

பிரேமிற்கு பிரேம் தன் துள்ளலான பிரும்மாண்டமான இசையால் பிரமிக்க வைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். ஷங்கருக்கு தி பெஸ்ட் காம்பினேஷன். பின்பாதியில் சாருக்கு செம தீனி.  ரஜினியையும் அவர் ஸ்டைலையும் தன் இசையால் ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்திருக்கிறார்.  சுமன் ரஜினி மோதும் காட்சிகளில் அமைதியாக பண்ணியிருக்கும் பிஜிஎம் ரஜினியின் ஆர்ப்பாட்டமான காட்சிகளிலும் குறிப்பாக மொட்ட பாஸ் வரும் காட்சிகளிலும் தியேட்டரை அதிர வைக்கிறது.பாடல்கள் சொல்லவே வேண்டாம். எல்லாமே  ரஜினியின் பெஸ்ட் என்று சொல்ல வைக்கிற மாதிரி.   அதுவும் ஒரு கூடை, அதிரடிக்கார மச்சான், சஹானா, சிவாஜி பாடல்கள்.

இந்தியாவே திரும்பி பார்க்கும் காமிராமேன், ஆர்ட் டைரக்டர், உலகளாவிய அளவில் பரந்து திரியும் இசையமைப்பாளர்.  எல்லாரையும் விட தமிழ் சினிமாவின் உலக முகவரியாக மாறி வரும் ரஜினி.  இவ்வளவு பேரின் பெஸ்ட்டுகளையும் சரியாக பிசைந்து அழகாக விருந்து வைத்திருக்கிறார் ஷங்கர்.

முன்பாதியை கலகலவென காதல் காமெடி என அவியல், கூட்டு, பொறியல், பாயாசம், வடை என சைவ பந்தி வைத்து விட்டு, பின்பாதியில் சிக்கன் 65, தந்தூரி, மொகல் பிரியாணி என அட்டகாசமான அசைவம் பரிமாறுகிறார். இரண்டு பாதியிலும் ரஜினி புதிதாக தெரிகிறார்.  ரஜினியை வைத்து எடுக்க மூன்றரை மணி நேரம் போதவில்லை போலும்.  ரஜினியின் வழக்கமான பாணி, பஞ்ச் எல்லாம் மாற்றி இன்னும் இளமையாக்கி ஒரு அறுசுவை விருந்து வைத்திருக்கிறார்.

பின்பாதியில் எல்லாரிடமும் காசு பிடுங்கும் காட்சி  ஒரு நீளமான பூச்சுற்றல் என்றால், அதற்கடுத்த காட்சிகளும் டிபிக்கல் பார்முலாவில் பயணிக்கிறது.  இதனால் ஒரு ஆயாசம் ஏற்படுவதை தவிர்த்திருக்கலாம்.  அதே போல் நேரமாச்சு என்ற அவசரத்தில் முடிக்கப்பட்ட கிளைமாக்ஸ்.

இதையெல்லாம் தவிர்த்து இன்னும் ஒரு இருபது வருடத்திற்காவது  இதில் பணிபுரிந்த எல்லாரோடைய பெஸ்ட்டாகவும் சிவாஜி இருக்கும்.  இந்த படத்தை பற்றி பேசும் அளவிற்கு ஷங்கரின் உழைப்பு இருக்கிறது. 

ரகளையான திருவிழாவில் உபன்யாஸங்கள் ஓரங்கட்டப்படுவது போல ஷங்கர் சொல்ல வந்த கருத்தும் காணாமல் போய்விடுகிறது.

அதெல்லாம் யாருக்கு வேண்டும்.  இதை விட ரஜினியை சூப்பராக யாராலும் காட்ட முடியாது.  அதற்கே இன்னும் இரண்டு தடவை பார்க்கலாமே.

சிவாஜி – திருவிழா