jump to navigation

கீரிடம் – சினிமா விமர்சனம் ஜூலை 30, 2007

Posted by M Sheik Uduman Ali in Reviews.
4 comments

தான் போலீஸ் உடையை கழட்டுவதற்குள் தன் மகன் அஜீத்திற்கு அணிந்து பார்க்க ஆசைப்படும் ஒரு தகப்பனுக்கும் மகனுக்கும் இடையேயான சம்பவங்கள் தான், நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலாஜியின் மைந்தன் தயாரிக்க அறிமுக இயக்குநர் விஜய் (!) இயக்குநர் லோகிதாஸின் மலையாள கீரிடத்தை தமிழுக்கேற்றவாறு இயக்கியிருக்கும் அஜீத் அணியும் கீரிடம்.

ரொம்ப காலம் கம்பங்களியும் கூழுமாகவுமே தன் ரசிகர்களுக்கு விருந்து வைத்த அஜீத் சிக்கனமான லிமிடட் மீல்ஸ் பரிமாறியிருக்கிறார்.  தன்னுடைய மைனஸ்களையெல்லாம் இந்த படத்தில் ஓரளவிற்கு திருத்தியிருக்கிறார்.   தந்தையும் மகனுமாக போலீஸ் டெஸ்டிற்கு ஒரு பாடலில் தயாராகும் இடத்தில் ஜொலிக்கும் அஜீத், இயக்குநர் விஜய் அமைத்து கொடுத்த அழகான காதல் காட்சிகளில் சீரியஸாகவே இருக்கிறார். ஏன் தல?  அஜித்தை அழ விட்டு குளோஸப் காட்சி வேண்டாம் என பலர் சொல்லியிருக்கலாம்.  ஆனால் அந்த கிளைமாக்ஸ் காட்சிகளில் செமத்தியாக பண்ணியிருக்கிறார் தல.

த்ரிஷா.  சில்லுனு ஆரம்ப காதல் காட்சிகளில் ஜொலிக்கிறார். கோணித்திருடன் அஜீத் என்று அவர் வீட்டிற்குள்ளேயே போய் அலம்பல் விடும் காட்சிகள் கலகல.  பிறகு காணாமல் போய்விடுகிறார்.   வாட்டர் டேங்கிற்குள் இருந்து பேசும் கலகல காட்சிகள் தமிழ் சினிமாவின் டிபிக்கல் கடுப்பான டெம்லேட்.

தன் மகனை பற்றி கனவு காண்கிறார், உருகுகிறார் ராஜ்கிரண் நிஜமாக.  அஃப்கோர்ஸ் ரொம்ப நேர்மையாக இருக்கிறார்.  இவரை பற்றி சொல்ல வேண்டியதில்லை.  தமிழ் சினிமாவின்  இந்த மாதிரி சொல்லிக் கொள்கிற மாதிரி நடிகர்கள் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது.

விவேக், கல்யாணம் என்று காமெடிக்கு ஆட்கள் இருந்தும் பெரிதாக இவர்களுக்கான கலகல களங்கள் இல்லை.  அதுவும் விவேக் குணசித்திர ரோல், காமெடி, சந்தர்ப்பவாத வில்லன் என எதில் பொருந்துவது என்று தெரியாமல் பாவமாக முழிக்கிறார். சில இடங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் பேசி கலாய்க்கிறார். ஒரிடத்தில் வடிவேலு ஸ்டைலில் கூட முயன்றிருக்கிறார்.  சரண்யா மனதில் நிற்கிறார்.

தமிழுக்கு ஒரு புதிய வில்லன் அஜெய்.  கொஞ்ச நேரமே வந்தாலும் பரவாயில்லை.  இனிவரும் படங்களில் இவரை பார்க்கலாம்.  இன்ஸ்பெக்டராக வருபவர் தன் பணியை செவ்வனே செய்திருக்கிறார்.  ஆமாம் அது அவர் வாய்ஸா? இல்லை டப்பிங்கா?  அருமை.

ஒளிப்பதிவு திரு.  அந்த டுயட் பாடலில் மனசை அள்ளி விடுகிறார்.  அப்புறம் கிளைமாக்ஸ்.  கதையும் கதை சார்ந்த இடங்களையும் ஆர்ட் டைரக்டர் உதவியுடன் அருமையாக பண்ணியவர் கோடியக்கரை மற்றும் படகுத்துறை பகுதிகளை நமக்கு அந்நியமாக காட்டியது ஏனோ தெரியவில்லை.

மென்மையான பாடல்கள்; கதையோடு கரைந்து  விடும் பின்ணணி இசை என தன் பங்கிற்கு பண்ணியிருக்கிறார் இசையமைப்பாளர் G.V.பிரகாஷ்குமார். ஏனோ மனதில் பதியும்படி இல்லை.

முன்பாதி திரைப்படத்தை தன் எடிட்டிங்கில் மூலம் வேகமெடுக்க வைத்திருக்கிறார் ஆண்டனி.

பசியோடு இருந்த அஜித்திற்கும் தனக்கும் ஒரு நல்ல ஓப்பனிங்கை தந்திருக்கிறார் இயக்குநர் விஜய். ஏற்கெனவே தெரிந்த கதையோட்டம்.  சரியாக களம் அமைத்து திரைக்கதையை ஓட விட்டிருக்கிறார்.  அதுவும் முன்பாதி முடிவதே தெரியாத அளவிற்கு.  ஆனால், வில்லன் & கோ, விவேக் போன்றவர்களையும், கோடியக்கரை களத்தையும் அசல் மலையாளத்திலிருந்து மாற்றும் போது கொஞ்சம் கவனமெடுத்து பண்ணியிருக்கலாம்.  ரியலிட்டி என்று சொல்ல வந்தாலும் கிளைமாக்ஸ் ஃபைனலில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி மாதிரி நம்மை பெரிதாக ஏமாற்றுகிறது. எல்லோரும் அஜீத்தை அடுத்த ரவுடி என்று சொல்லு அளவிற்கு திரைக்கதையோட்டம் இருந்தாலும் அவருக்கான அந்த முடிவு வம்படியாக பண்ணியது மாதிரி இருக்கிறது.

ஆடம்பரமாக இல்லாவிட்டாலும் அழகாக எளிமையாக செய்யப்பட்ட கீரிடத்தில் உச்சமாக மாணிக்கக்கல் வைக்கும் போது லேசாக தட்டி நெளித்து விட்டதால்

கீரிடம் – கொஞ்சம் சேதாரம்.