jump to navigation

பில்லா – விமர்சனம் திசெம்பர் 25, 2007

Posted by M Sheik Uduman Ali in Reviews.
Tags: , , ,
4 comments

எல்லா தமிழ் சினிமா ஹீரோக்களுக்கும் ஒரு மோகம் (அல்லது லட்சியம்) உண்டு.  அது சூப்பர் ஸ்டார் மோகம்.  அதற்காக ரஜினியின் சினிமா ஸ்ட்ரடஜியையோ, அவரது பெர்சனல் ஸ்டைலையோ பின்பற்றுவது பழக்கம்.  இதிலிருந்து மாறுபட்டு அவரது பிளாக் பஸ்டர் சினிமாவான பில்லாவை கையிலெடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார் அஜீத்.  இதற்கு ஷாரூக்கின் டானும் அதன் பிரும்மாண்ட வெற்றியும் ஒரு காரணம்.

மைக்ரான் அளவிற்கு மூலக்கதையில் மாற்றம் செய்து உத்திகளையும் சுற்று சூழலையும் கொஞ்சம் நவீனப்படுத்தினால் அதுதான் அஜீத்தின் பில்லா.  ரஜினியின் பில்லாவுடன் ஒப்பிட்டு யாரும் விமர்சிக்கக் கூடாது என்ற படக்குழுவினரின் கவனம் பாராட்டுக்குரியது.

Billa

பரவலான ரசிகர்கள், நம்பகமான ஓபனிங் என எல்லாம் இருந்தும் எங்கேயோ மிஸ்ஸான அஜீத்தின் வலையில் விழுந்த சுறா இந்த பில்லா.  வெற்றி தோல்வி பற்றி யாரும் பேசிவிட முடியாத பங்களிப்பு.  மிகவும் ஸ்டைலிஷான பில்லா, குசும்புத்தனமான வேலு என எங்கேயும் ரஜினியை காப்பியடிக்காமல் செய்திருக்கிறார். “கேன் கேன்” என அவர் ஸ்டைலாக டீல் முடிப்பதும், சாகும் தருவாயில் காரில் பிரபுவுடன் தெனாவட்டாக பேசுவதிலும், அனாசயமாக காரை வழுக்கி ஓட்டுவதும் என ஜொலித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் ரசிகர்களுக்கு விருந்து வைக்கிறார். ஆனாலும், நடிப்பில் கொஞ்சம் துறுதுறுப்பையும், பேச்சில் கொஞ்சம் மாடுலேஷனையும் காட்டியிருந்தால் ரசிகர்களுக்கு வெறியேற்றியிருக்கலாம்.  தவறவிட்டுடீங்களே தல.

ரிடையர்டாகி வீட்டிலிருக்கும் வயதிலும் டூயட் பாடும் ஹீரோக்களுக்கு நடுவில் தன் வயதுக்கேற்ற பாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்திருக்கும் பிரபுவிற்கு இந்த படம் ஒரு மாறுபட்ட விசிட்டிங் கார்டு.  இன்னொரு அஜீத்தை பில்லாவாக தயார் செய்யும் போது இருவரும் அடிக்கும் நக்கல் ஒரு ஹைகூ.  இன்டர்போல் ஆபிஸராக ரஹ்மான். இவரின் பாத்திரப் படைப்பில் எந்தவொரு மாற்றமும் செய்யாததால் சுவாரஸ்யமில்லாமல் போய்விடுகிறது (அப்படியே இவரை பழைய பில்லாவில் தேங்காய் சீனிவாசன் செய்த கேரக்டரை செய்ய வைத்திருக்கலாம்).

படத்தில் ரகளையாக வருபவர் நயன்தாரா.  அம்மணியை ஹாலிவுட் ஏஞ்சலினா மாதிரி காட்டியிருக்கிறார்கள் (ஜொள்ளு வடித்து பேசவில்லை!).  அதற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் இந்த பல்லேலக்கா. அஜீத்தை போலீஸிடமிருந்து மீட்கும் அந்த காட்சி நயன்தாராவின் ஒரு சோற்று பதம். அடுத்தடுத்த வருடங்களுக்கான கால்ஷீட் இதற்குள் நிரம்பியிருக்குமே.

கொஞ்ச நேரமே வந்தாலும் கலகலக்கிறார் சந்தானம். நமீதா வந்து போகிறார்.

கலை இயக்குநரின் உதவியுடன் நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் காட்சிக்கு காட்சி பிரும்மாண்டம் காட்ட முடிந்தாலும், கதை சூழலுக்கு தேவையான மிரட்டலும் அலட்டலும் இல்லாதது போன்ற உணர்வு  ஏற்படுகிறது. நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் ஸ்ரீகர்பிரசாத்தின் படத்தொக்குப்பிற்க்கு ஆங்காங்கே “வாளால் ஒரு இன்பார்மரை வெட்டும் அஜீத், சண்டைக்காட்சிகள்” என சில சாம்பிள்கள் இருந்தாலும் நீளமான முன்பாதி இடைவேளையை ஏக்கமாக  எதிர்பார்க்க வைக்கிறது.

அதிரடியான பா.விஜய்யின் வரிகளுக்கு அலட்டலாக இசையமைத்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. “மை நேம் இஸ் பில்லா”, “செய் ஏதாவது செய்” என அழகான என்கவுன்டர்கள் என்றால் மற்ற பாடல்களில் சுமாரான யுவன். பில்லா தீம் மீயூஸிக் உட்பட பின்ணணியிசையில் தனக்கான பணியை கச்சிதமாக செய்திருந்தாலும் இன்னும் நிறைய செய்திருக்கலாமோ!?

ராஜ் கண்ணாவின் வசனங்கள் எப்போதாவது சில இடங்களில் ஷார்ப்பாக இருந்தாலும், பல இடங்களில் துருப்பிடித்து கிடக்கிறது.  இந்த மாதிரி படங்களுக்கு ஊசிப்பட்டாசாக இருந்திருக்க வேண்டாமா?

“பட்டியல்” படத்திற்கு பிறகு விஷ்னுவர்தனிற்கான இயங்கு தளம், வியாபாரத் தளம் மட்டுமில்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் ஷங்கருக்கு இணையாக உயர்ந்திருந்திருந்தது.  அஜீத்தின் பில்லா மூலம் தனக்கான ஒரு இடத்தை அழுத்தமாக பதித்திருக்கிறார்.  பாத்திரத் தேர்வுகள், கதையோட்டம் என அற்புதமாக மிரட்டியிருக்கிறார்.  தமிழில் ஹாலிவுட் தர ஆக் ஷனிற்கு அழகான ஆரம்பம் செய்திருக்கிறார்.

இந்த படக்குழுவினரின் பெரிய பிளஸும் மைனஸும் ஹிந்தி ஷாருக்கின் “டான்”.  கதையோட்டம் என்னவோ பழைய பில்லாவாக இருந்தாலும் இவர்களுக்கான இன்ஸ்பிரேஷன் “டான்” என்பது படம் நெடுக தெரிகிறது.  இன்ஸ்பைர் ஆனவர்களால் ஷாருக்கின் மிரட்டலான நடிப்பையோ, கெட்டிக்காரத்தனமான ஷார்ப் வசனங்களையோ, ஹாலிவுட் ரேஞ்சில் அமைக்கப்பட்ட பிரும்மாண்ட இசையையோ, காட்சிகளுக்கேற்ற களத்தையோ,  அதிரடியான திரைக்கதை மாற்றங்களையோ, முக்கியமாக அந்த படத்திலிருந்த நவீன தொழில்நுட்பத்தையோ தொட்டிருந்ததால் தமிழின் “கிராஸ் ஓவர்” சினிமாவிற்கான முதலாவது அடியை இந்த பில்லா எடுத்து வைத்திருக்கும்.

ஆனாலும்,  தமிழ் வணிக சினிமாவின் உலகளாவிய தரத்திற்கு இந்த படம் ஒரு ஆரம்பம்.

ஆனால், கதை, தேவையான பரபரப்பு, எதிர்பார்ப்பு, இதெல்லாம் விட சரியான தொழில்நுட்பக்குழு இருந்தும் தர வேண்டிய குவாலிட்டி மிஸ்ஸானதால்

பில்லா – அஜீத்தின் டயட் எடிசன்(Edition) “டான்.

கல்லூரி – விமர்சனம் திசெம்பர் 8, 2007

Posted by M Sheik Uduman Ali in Reviews.
7 comments

Kallori Image

சீரியஸான “சிவாஜிபட டிஸ்கஸனில் ஏதோவொரு இடைவெளியில் பாலாஜி சக்திவேல் ஷங்கரிடம் பேசி சம்மதம் வாங்கிருப்பாரோ என்னவோ இந்த “கல்லூரி.

ஒரு தெற்கத்தி தமிழ் மண்ணின் கல்லூரி வளாகத்தில் ஒரு நண்பர்கள் வட்டத்தின் மூன்று வருட அனுபவங்களையும் அவர்களின் கனவு பொசுங்கலையும் லேசாக சினிமா(த்தனம்) கலந்து சொல்லியிருக்கிறார் பாலாஜி சக்திவேல்.

தமனாவை தவிர அனைவரும் அக்மார்க் அறிமுகங்கள். மெயின்ரோலில் வரும் அனைவரும் ஜொலிக்கிறாகள்; மற்ற சிலர் அமெர்ச்சூர் தனமாக டல்லடிக்கிறார்கள் (அந்த ஹிஸ்டரி லெக்சர்); சிலர் சினிமாத்தனமாக (தமனாவின் அப்பா, கல்லூரி பிரின்ஸிபல்).

முத்து, ரமேஷ், கயல், சலிமா, நாராயணி, ஆதிலெட்சுமி என நேர்த்தியான தேர்வு.  ஒவ்வொருவரின் குணாதியசங்களையும் பின்புலங்களையும் ஹைகூ மாதிரி காட்டி அப்படியே ஆடியன்ஸ் மனதில் பதியவைத்து சகஜமாக  நகர்கிறது கதை.  கட்டுப்பெட்டியாக வரும் கயல், வெளியில் ஜாலியாகவும் குடும்ப சூழலில் சீரியஸாகவும் வரும் ரமேஷ் (மதுரை தமிழ் பேசுகிறேன் என்று அநியாயத்திற்கு முணங்குகிறார்) நேர்த்தியான பாத்திரப் படைப்பு.

காதலில் தடுமாறும் பொறுப்பான பையனாக வரும் முத்து, அவ்வளவு சாதாரணம்.  ஒற்றை புள்ளியாக மனதில் அறிமுகமாகும் இவரது பாத்திரம் அப்படியே நேர்கோடாக படம் நெடுக நமக்கு தெரிந்த முகமாக பரவுகிறது.

ப்ரெஷ் ஸ்டாபெரியாக தமனா.  நடிக்க வாய்ப்புள்ள பாத்திரம்.  நன்றாக செய்திருக்கிறார். முத்துவிற்கென ஆசையாசையாய் வாங்குபவற்றை நண்பர்கள் “சூம் செய்யும் போது கோபப்படும் இடங்களிலும், காதல் பார்வை பார்க்கும் இடங்களிலும் ஜொலிக்கிறார்.  (இவரை கமெர்ஷியல் சினிமா எப்படி இவ்வளவு நாள் மிஸ் பண்ணியது)  அட ஏனப்பா, இவரை அழவிட்டு காட்சியெடுக்குறீங்கோ! மனசு தாங்கலீங்னோவ்!!

இவர்களையெல்லாம் தாண்டி “ஈருடல் ஒருயிராக வரும் தில்லுமுல்லு நண்பர்கள் (எல்லா விசயங்களிலும் அட நீங்க சொல்லுங்க! அட நீங்க சொல்லுங்க! என கலாய்த்து நம் வயிற்றை பதம் பார்க்கிறார்கள்), தமனாவை ரவுசு விடும் சீனியர், முத்துவின் தங்கை, கயலின் அப்பா ஆகியோர் மனதில் பதியும் பாத்திரங்கள்.

ஜோஸ்வா ஸ்ரீதரின் இசையில் நா. முத்துக்குமாரின் பாடல் வரிகள் கதை நகர்த்த அருமையாக உதவுகின்றன (ஒரு பாடலில் ஒரு வருடத்தை ஸ்வாக பண்ணிவிடுகிறார்கள்).  டூயட் இல்லாமல் எல்லா பாடல்களும் அவ்வளவு இயல்பாக வந்து போகின்றன.  ஒலிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனமெடுத்திருக்கலாம்; காதுகள் பஞ்சராகின்றன.

செழியனின் காமிராக் கண்கள் கல்லூரியையும், கல்குவாரியையும் படம் பிடித்து காட்டிய விதத்திற்கு பாராட்டுக்கள். தன் வீட்டிற்கு வந்த தமனாவை பின் தொடர்ந்து முத்து ஓடும் போது இவர் காமிரா பார்க்கும் அழகு அருமை.  அதை விட ஒரு மழை நேர விளையாட்டு மைதானத்திற்கு நம்மையும் கூட்டி செல்கிறார். 

டி. சிவக்குமார் படத்தொகுப்பில் காட்சிகள் தன்னியல்பாக நகர்கின்றன.  ஆனாலும் எப்போ இன்டர்வெல் வரும் என்ற லேசான எதிர்பார்ப்பை தவிர்த்திருக்கலாம்.

“காதல் பரப்பரப்பெல்லாம் அடங்கிய பிறகு மொத்தமாக இரண்டு வருடம் கழித்து வந்திருக்கிறார் “பாலாஜி சக்திவேல்.  ஒரு இலக்கியவாதியின் குணாதியசங்கள் இவரது படங்களில் தெரிகிறது.  ஆனாலும் ஏனிந்த தடுமாற்றம் பாலாஜி.

திண்டுக்கல் மற்றும் அதை சார்ந்த பின்புலத்தை கையிலெடுத்து ரொம்ப சாதாரண கதையை எடுத்தவரை சரி. ஒரு கல்லூரி வாழ்க்கையை காட்டுவதில்தான் படம் நகர்கிறது என்றாலும் அங்கங்கே பாரபட்சம் பாராமல் சினிமாத்தனத்தை அள்ளிவிட்டு அசெளகரியப்படுத்துகிறார். 

சொந்தக்காசு போட்டு திருச்சி சென்று நண்பன் விளையாட என்கேரஜ் பண்ணிய நண்பர்களை பாராட்ட “பிஇடி மாஸ்டர் பிரின்ஸ்பால் ரூமிற்கு கூப்பிட, கயலோ இதெற்கெல்லாம் “தமனாதான் காரணம் என்கிறார்;  “ஸ்போர்ட்ஸ் சூ பரிசளிக்கும் தமனா, “கைக்குட்டை காதல்,  “அரட்டை அரங்கத்தில் நட்பை பேசும் கயல்,  “சாகும் போது கைக்குட்டையையும், சங்கையும் கையில் பிடித்திருக்கும் தோழிகள் என அவ்வளவு சினிமா பேசுகிறார்.  அதைவிட காட்சிக்கு பஞ்சமாக இரண்டு தடவை வரும் அரசியல் வன்முறைகள், இரண்டு தடவை வரும் தோழிகளிடம் வம்பு பண்ணுபவர்களிடம் கலாட்டா செய்யும் நண்பர்கள்.

இயல்பாக நகரும் காட்சிகள்; காதலில் இழையோடும் போது ஒன்று மென்மையான உணர்ச்சிகளை சொல்லி முடித்திருக்கலாம்; இல்லை குருநாதர் பாணியில் மெசெஜ் ஒரியண்ட்டடாக போயிருக்கலாம்.  ஒரு நேர்கோட்டில் இல்லாமல் கதை வளைவும் நெளிவுமாக சென்று ஒரு மாக்கோலத்தை போட்டு முடிக்கும் போது சட்டெனெ மழை வந்து கலைப்பது போன்று கிளைமாக்ஸ் வருகிறது.

தடுமாற்றங்கள் இயல்பு தான்;  ஆனால் ஆற அமர உட்கார்ந்து எழுந்த பின் காட்டியிருக்க வேண்டிய ப்ரசென்டேஷன் மிஸ்ஸானதால் ஏமாற்றமே மிச்சம்.  அடுத்த செமஸ்டரில் பார்த்துக்கலாம் பாலாஜி.

கல்லூரி – ஒழுங்கா படிச்சும் பெயிலா போனா டேக் இட் ஈஸி பாலிஸி.