jump to navigation

கல்லூரி – விமர்சனம் திசெம்பர் 8, 2007

Posted by M Sheik Uduman Ali in Reviews.
trackback

Kallori Image

சீரியஸான “சிவாஜிபட டிஸ்கஸனில் ஏதோவொரு இடைவெளியில் பாலாஜி சக்திவேல் ஷங்கரிடம் பேசி சம்மதம் வாங்கிருப்பாரோ என்னவோ இந்த “கல்லூரி.

ஒரு தெற்கத்தி தமிழ் மண்ணின் கல்லூரி வளாகத்தில் ஒரு நண்பர்கள் வட்டத்தின் மூன்று வருட அனுபவங்களையும் அவர்களின் கனவு பொசுங்கலையும் லேசாக சினிமா(த்தனம்) கலந்து சொல்லியிருக்கிறார் பாலாஜி சக்திவேல்.

தமனாவை தவிர அனைவரும் அக்மார்க் அறிமுகங்கள். மெயின்ரோலில் வரும் அனைவரும் ஜொலிக்கிறாகள்; மற்ற சிலர் அமெர்ச்சூர் தனமாக டல்லடிக்கிறார்கள் (அந்த ஹிஸ்டரி லெக்சர்); சிலர் சினிமாத்தனமாக (தமனாவின் அப்பா, கல்லூரி பிரின்ஸிபல்).

முத்து, ரமேஷ், கயல், சலிமா, நாராயணி, ஆதிலெட்சுமி என நேர்த்தியான தேர்வு.  ஒவ்வொருவரின் குணாதியசங்களையும் பின்புலங்களையும் ஹைகூ மாதிரி காட்டி அப்படியே ஆடியன்ஸ் மனதில் பதியவைத்து சகஜமாக  நகர்கிறது கதை.  கட்டுப்பெட்டியாக வரும் கயல், வெளியில் ஜாலியாகவும் குடும்ப சூழலில் சீரியஸாகவும் வரும் ரமேஷ் (மதுரை தமிழ் பேசுகிறேன் என்று அநியாயத்திற்கு முணங்குகிறார்) நேர்த்தியான பாத்திரப் படைப்பு.

காதலில் தடுமாறும் பொறுப்பான பையனாக வரும் முத்து, அவ்வளவு சாதாரணம்.  ஒற்றை புள்ளியாக மனதில் அறிமுகமாகும் இவரது பாத்திரம் அப்படியே நேர்கோடாக படம் நெடுக நமக்கு தெரிந்த முகமாக பரவுகிறது.

ப்ரெஷ் ஸ்டாபெரியாக தமனா.  நடிக்க வாய்ப்புள்ள பாத்திரம்.  நன்றாக செய்திருக்கிறார். முத்துவிற்கென ஆசையாசையாய் வாங்குபவற்றை நண்பர்கள் “சூம் செய்யும் போது கோபப்படும் இடங்களிலும், காதல் பார்வை பார்க்கும் இடங்களிலும் ஜொலிக்கிறார்.  (இவரை கமெர்ஷியல் சினிமா எப்படி இவ்வளவு நாள் மிஸ் பண்ணியது)  அட ஏனப்பா, இவரை அழவிட்டு காட்சியெடுக்குறீங்கோ! மனசு தாங்கலீங்னோவ்!!

இவர்களையெல்லாம் தாண்டி “ஈருடல் ஒருயிராக வரும் தில்லுமுல்லு நண்பர்கள் (எல்லா விசயங்களிலும் அட நீங்க சொல்லுங்க! அட நீங்க சொல்லுங்க! என கலாய்த்து நம் வயிற்றை பதம் பார்க்கிறார்கள்), தமனாவை ரவுசு விடும் சீனியர், முத்துவின் தங்கை, கயலின் அப்பா ஆகியோர் மனதில் பதியும் பாத்திரங்கள்.

ஜோஸ்வா ஸ்ரீதரின் இசையில் நா. முத்துக்குமாரின் பாடல் வரிகள் கதை நகர்த்த அருமையாக உதவுகின்றன (ஒரு பாடலில் ஒரு வருடத்தை ஸ்வாக பண்ணிவிடுகிறார்கள்).  டூயட் இல்லாமல் எல்லா பாடல்களும் அவ்வளவு இயல்பாக வந்து போகின்றன.  ஒலிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனமெடுத்திருக்கலாம்; காதுகள் பஞ்சராகின்றன.

செழியனின் காமிராக் கண்கள் கல்லூரியையும், கல்குவாரியையும் படம் பிடித்து காட்டிய விதத்திற்கு பாராட்டுக்கள். தன் வீட்டிற்கு வந்த தமனாவை பின் தொடர்ந்து முத்து ஓடும் போது இவர் காமிரா பார்க்கும் அழகு அருமை.  அதை விட ஒரு மழை நேர விளையாட்டு மைதானத்திற்கு நம்மையும் கூட்டி செல்கிறார். 

டி. சிவக்குமார் படத்தொகுப்பில் காட்சிகள் தன்னியல்பாக நகர்கின்றன.  ஆனாலும் எப்போ இன்டர்வெல் வரும் என்ற லேசான எதிர்பார்ப்பை தவிர்த்திருக்கலாம்.

“காதல் பரப்பரப்பெல்லாம் அடங்கிய பிறகு மொத்தமாக இரண்டு வருடம் கழித்து வந்திருக்கிறார் “பாலாஜி சக்திவேல்.  ஒரு இலக்கியவாதியின் குணாதியசங்கள் இவரது படங்களில் தெரிகிறது.  ஆனாலும் ஏனிந்த தடுமாற்றம் பாலாஜி.

திண்டுக்கல் மற்றும் அதை சார்ந்த பின்புலத்தை கையிலெடுத்து ரொம்ப சாதாரண கதையை எடுத்தவரை சரி. ஒரு கல்லூரி வாழ்க்கையை காட்டுவதில்தான் படம் நகர்கிறது என்றாலும் அங்கங்கே பாரபட்சம் பாராமல் சினிமாத்தனத்தை அள்ளிவிட்டு அசெளகரியப்படுத்துகிறார். 

சொந்தக்காசு போட்டு திருச்சி சென்று நண்பன் விளையாட என்கேரஜ் பண்ணிய நண்பர்களை பாராட்ட “பிஇடி மாஸ்டர் பிரின்ஸ்பால் ரூமிற்கு கூப்பிட, கயலோ இதெற்கெல்லாம் “தமனாதான் காரணம் என்கிறார்;  “ஸ்போர்ட்ஸ் சூ பரிசளிக்கும் தமனா, “கைக்குட்டை காதல்,  “அரட்டை அரங்கத்தில் நட்பை பேசும் கயல்,  “சாகும் போது கைக்குட்டையையும், சங்கையும் கையில் பிடித்திருக்கும் தோழிகள் என அவ்வளவு சினிமா பேசுகிறார்.  அதைவிட காட்சிக்கு பஞ்சமாக இரண்டு தடவை வரும் அரசியல் வன்முறைகள், இரண்டு தடவை வரும் தோழிகளிடம் வம்பு பண்ணுபவர்களிடம் கலாட்டா செய்யும் நண்பர்கள்.

இயல்பாக நகரும் காட்சிகள்; காதலில் இழையோடும் போது ஒன்று மென்மையான உணர்ச்சிகளை சொல்லி முடித்திருக்கலாம்; இல்லை குருநாதர் பாணியில் மெசெஜ் ஒரியண்ட்டடாக போயிருக்கலாம்.  ஒரு நேர்கோட்டில் இல்லாமல் கதை வளைவும் நெளிவுமாக சென்று ஒரு மாக்கோலத்தை போட்டு முடிக்கும் போது சட்டெனெ மழை வந்து கலைப்பது போன்று கிளைமாக்ஸ் வருகிறது.

தடுமாற்றங்கள் இயல்பு தான்;  ஆனால் ஆற அமர உட்கார்ந்து எழுந்த பின் காட்டியிருக்க வேண்டிய ப்ரசென்டேஷன் மிஸ்ஸானதால் ஏமாற்றமே மிச்சம்.  அடுத்த செமஸ்டரில் பார்த்துக்கலாம் பாலாஜி.

கல்லூரி – ஒழுங்கா படிச்சும் பெயிலா போனா டேக் இட் ஈஸி பாலிஸி.

பின்னூட்டங்கள்»

1. Athipathy - திசெம்பர் 10, 2007

Hi Sheik,

Your review about the movie, Kalluri is very good.
I am big fan of Balaji Sakthivel from Samurai and kadal…

After seeing your review, iam little dis- appointed..becasue iam was expecting more from this movie.
This movie is not yet release in bangalore..i planned to see next week end..

Then i thought, your reviews are always matched with my taste so i agrred your review comments..
How soon you seen and wrote the review for this movie..!!!your speed and interest are excellend.

and your final punch also very good “ஒழுங்கா படிச்சும் பெயிலா போனா டேக் இட் ஈஸி பாலிஸி”…

Thanks for your continues interest !!!
See you in next review bye bye

thanks
Athipathy

2. udooz - திசெம்பர் 10, 2007

Thanks athi, for ur continuous comments.

3. Dhanasekar - திசெம்பர் 11, 2007

(writer ஜெயமோகன்)

கனவுகள் சிதையும் காலம்

பாலாஜி சக்திவேலின் ‘கல்லூரி’

திருக்குறளில் ஆகச்சிறந்த கவிதை எது என்று நான் ஒருமுறை மறைந்த பேராசிரியர்
ஜேசுதாசனிடம் கேட்டேன். ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக
உலகியற்றியான்’ என்ற குறள்தான் என்றார்.

பத்துவருடங்களுக்கு முன்பு, இளைஞனான எனக்கு அது விந்தையாக இருந்தது. அருமையான
அணிகளும் சொல்லாட்சிகளும் உள்ள எத்தனையோ குறள்கள் இருக்க, உள்ளர்த்தங்களே
இல்லாத நேரடியான இந்த உணர்ச்சிவெளிப்பாட்டை ஏன் தெரிவுசெய்தார் பேராசிரியர்
என்ற எண்ணம் ஏற்பட்டது.

ஆனால் பேராசிரியர் சொன்னார் .”கவிஞனின் மிக உன்னத வெளிப்பாடு என்பது
அறச்சீற்றம் அவனை மீறி வெளிப்படும் நிலைதான். இந்தக் கவிதையை கொஞ்சம் நிதானமாக
சிந்தனை செய்திருந்தால் வள்ளுவரே முட்டாள்தனமாக உணர்ந்திருப்பார். உலகை
உருவாக்கியவனை அவனால் உருவாக்கப்பட்டவனே அழிந்துபோகும்படி சாபம் போடுவதாவது…
.ஆனால் அந்த உணர்வெழுச்சி உண்மையானது. தமிழில் வெளிப்பட்ட அறச்சீற்றங்களின்
உச்சமே இக்குறள்தான். ஆகவே இது மகத்தான கவிதை…”

பாலாஜி சக்திவேல்லின் ‘கல்லூரி’ கேளிக்கையை மட்டுமே அடிப்படை இலக்காகக் கொண்ட
தமிழ்த் திரையுலகில் வெளிப்பட்டிருக்கும் ஆழமான அறச்சீற்றத்தின் பதிவு.
ஆகவேதான் இந்த எளிமையான, அடக்கமான, படம் எனக்கு ஒரு காவியமாகவே தெரிகிறது.
மேலான கலை என்பது ஒருபோதும் உத்தி சார்ந்த அலட்டல் அல்ல, செயற்கையான
எடுப்புகளும் அல்ல. அது அடிபட்டவனின் வலி முனகல் போலவோ ஆனந்தக் கண்ணீரின்
விம்மல் போலவோ இயல்பாக, தன்னிச்சையாக வெளிப்படுவது.

‘கல்லூரி’ இன்றுவரை நம் திரையுலகம் முன்வைத்துவந்த கல்லூரிகளில் இருந்து அதன்
யதார்த்தம் காரணமாகவே வேறுபடுகிறது. உயர்தர உடையணிந்த விடலைகள் பளபளக்கும்
இருசக்கர வண்டிகளை சாய்த்துவைத்து உலகையே நக்கல்செய்து திரியும் கல்லூரிகளையே
நாம் கண்டிருக்கிறோம். காதல் அல்லாமல் வேறு விஷயமே நிகழாத இடங்கள் அவை. கல்
உடைப்பவர்களின், பீடி சுற்றுபவர்களின், ஆட்டோ ஓட்டுபவர்களின்
அரைப்பட்டினிப்பிள்ளைகள் படிக்கும் ஒரு கல்லூரி என்பது முப்பது வருடங்களுக்கு
முன்னரே தமிழ்நாட்டில் ஒரு அன்றாட யதார்த்தமாக ஆகிவிட்டாலும் கூட இப்போதுதான்
அது திரையில் முகம் காட்டுகிறது.

அந்தப் பிள்ளைகள் அவர்களின் துயரங்களால், ஓயாத போராட்டத்தால் ஒன்றாகச்சேர்வதும்
அவர்கள் நடுவே உருவாகும் ஆழமான நட்பும் மிகுந்த நுட்பத்துடன்
காட்சிப்பதிவாகியுள்ளது இந்த திரைப்படத்தில். அவர்கள் ஒருவரை ஒருவர்
‘கலாய்ப்பதும்’ அவர்களின் ஊடல்களும் திரைப்படம் என்ற கலையின் அனைத்து
வல்லமைகளும் வெளிப்பட சித்தரிக்கப்பட்டிருந்தமையால் உண்மையான வாழ்க்கையை கண்
எதிரே பார்த்த பிரமிப்பும் நிறைவும் ஏற்படுகிறது.

கதாபாத்திரங்களுக்கு ஏற்ப முகங்களைத் தேர்வுசெய்ததில்தான் இப்படத்தின்
முதல்பெருவெற்றி நிகழ்ந்திருக்கிறது. முத்து, ஆதிலெட்சுமி, கயல் போன்ற
கதாபாத்திரங்கள் மிக மிக யதார்த்தமாக இருக்கின்றன. படத்தில் ஒவ்வாமை அளிக்கும்
ஒரு முகம் கூட வெளிப்படவில்லை. உழைத்து வாழும் எளிய முகங்கள் தொடர்ந்து
வந்தபடியே இருப்பதை பரவசத்துடன் பார்த்தபோது இந்த சாதாரணமான விஷயத்தை எண்ணி
ஏங்கும்படி இருக்கிறதே தமிழ் திரையுலகு என்ற கசப்பும் ஏற்பட்டது. உதாரணமாக
கயலின் அப்பாவாக வருபவரின் அந்த முகம்! உழைத்து குடும்பத்தை
கரையேற்றத்துடிக்கும் பாசமுள்ள ஒரு தந்தையின் அந்த இனிய சிரிப்பு! அதேபோல
சலீமாவாக வரும் அந்தப்பெண். தென்தமிழ்நாட்டு மரைக்காயர் முகங்களுக்கே உரிய
கூறுகள் துலங்குகின்றன அதில்.

நடிப்பைக் கொண்டுவருவதிலும் பாலாஜி சக்திவேல் பெருவெற்றி பெற்றிருக்கிறார்.
கல்லூரி முதல்வராக நடிப்பவரின் முகபாவனைகள் தவிர அனைத்து வெளிப்பாடுகளுமே மிக
மிகக் கச்சிதமாக அமைந்துள்ளன. ஒரு பொம்மையாக மட்டுமே வரமுடியும் என
எதிர்பார்க்கவைத்த கதாநாயகி கூட அற்புதமான மெய்ப்பாடுகளை வழங்கி மனம்
நெகிழச்செய்கிறார்.

நமது கிராமப்புற கல்வி நிலையங்களில் இன்றுள்ள உண்மையான அடிப்படைச் சிக்கலே
படத்தின் மையக்கருவாகியுள்ளது. கட்டுப்பெட்டித்தனமான நம் சமூகம் ஆணும் பெண்ணும்
பழகுவதை அனுமதிக்காது. ஆனால் கல்வி நிறுவனங்களில் அதற்கான வாய்ப்பு
ஏற்படுகிறது. ஆனால் அங்கே நட்பும் பாலியல் கவற்சியும் ஒன்றுடன் ஒன்று கலந்து
இனம்பிரிக்க முடியாதபடி சிடுக்குபட்டிருக்கின்றன. கல்லூரிகளில் நிகழும்
பெண்சீண்டல்கள் அடிப்படையில் இச்சந்தர்ப்பத்தை எப்படி எதிர்கொள்வது என்று
தெரியாத இளைஞர்களின் வெளிப்பாடுகள். நம் திரைப்படங்கள் தொடர்ந்து பெண்ணைச்
சீண்டி மட்டப்படுத்தும் கதாநாயகர்களை முன்வைத்து அவர்களுக்கு வழிகாட்டுகின்றன.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே காதல் மட்டுமே நிகழ முடியும் என்ற எண்ணத்தை
மீண்டும் மீண்டும் அவை வலியுறுத்துகின்றன.

அதை மீறி இயல்பான நட்புடன் ஆணும் பெண்ணும் பழக முடியுமா என இளம் உள்ளங்கள் கனவு
காண்கின்றன. அவர்களை தடுப்பது இரு வல்லமைகள். ஒன்று எப்போதும் ஒழுக்கக்
கட்டுப்பாட்டின் குண்டாந்தடியுடன் பார்க்கும் சமூகத்தின் கண்கள். இன்னொன்று
அவர்களுக்குள்ளேயே எழும் இயல்பான பாலியல் இச்சை. அவ்விரண்டாலும் கடுமையான
மனக்குழப்பத்துக்கும் குற்றவுணர்வுக்கும் ஆளாகிறார்கள் அவர்கள். நம்
குழந்தைகளின் வளர்இளமைப்பருவத்தில் அவர்களை சுழற்றியடிக்கும் மையச்சிக்கலாக இது
விளங்குகிறது

மிக நேர்மையுடனும் கவித்துவத்துடனும் அதை கலையாக்கியிருக்கிறார் பாலாஜி
சக்திவேல். அவ்விளைஞர் குழுவுக்குள் உள்ள இயல்பான நட்பும் அதில் இருவர் அவர்களை
மீறி காதல் கொள்ளும்போது ஏற்படும் உக்கிரமான குற்றவுணர்வும் அதனுடன் அவர்கள்
நிகழ்த்தும் போராட்டமும் உணர்ச்சிகரமான தருணங்கள் மூலம் வெளிப்படுகின்றன.
படத்தில் இளைஞர்களின் போராட்டம் என்பது எந்த புறச்சக்தியுடனும் அல்ல தங்கள்
அகமன அலைகளுடன் மட்டுமே என்பது இப்படத்தின் மிக நுட்பமான சிறப்பம்சம்.

கடைசியில் தருமபுரி பேருந்து எரிப்பில் உச்சம் கொண்டு முடிகிறது படம்.
துளித்துளியாக ஏழை மக்கள் உருவாக்கியெடுத்த கனவுகளை மூர்க்கமாக
அழித்துச்செல்கிறது வன்முறை அரசியலின் ஈவிரக்கமற்ற கை. ”கெடுக!” என
மூண்டெழும் ஓர் அடிவயிற்று ஆவேசம் தொனிக்க படமாக்கப்பட்டுள்ள இந்தக் காட்சிகளே
தமிழ்திரையுலகின் மறக்கமுடியாத படங்களுள் ஒன்றாக இதை நிலைநிறுத்துகின்றன.

எத்தனையோ மௌன அர்த்தங்கள் கோண்டது இக்காட்சி. சிராய்ப்புகளுடனும் கண்ணிருடனும்
கனவுகளுடனும் அவ்விளநெஞ்சங்கள் நாளை வெளிச்சென்று எதிர்கொள்ள தங்களை
தயாரித்தபடி இருக்கும் புறவுலகம் எப்படிப்பட்டது? அவர்கள் பேணும் மலரசைவுபோன்ற
மெல்லிய உணர்வுகளுக்கும் தவிப்புகளுக்கும் அங்கு என்ன இடம்? அக்கனவுகளை ஈசல்
சிறகுகள் போல உதிர்த்துவிட்டுத்தான் குண்டாந்தடிகளுடன் அலையும் மனிதர்களின்
சூழலுக்கு அவர்கள் வந்துசேர வேண்டுமா?

‘கல்லூரி’ உண்மையில் பலநூறு ஏழை உழைப்பாளிகளின் எதிர்காலம் குறித்த கனவுகளின்
கூடமாக இந்நாவலில் காட்டப்பட்டுள்ளது. தங்கையை கல் உடைக்க அனுப்பி அண்ணாவை
படிக்க அனுப்பும் கல் உடைப்பவனின் கனவு. ஊதுவத்தி சுற்றி அக்காவை படிக்க
அனுப்பும் தங்கைகளின் கனவு. அவர்கள் படிக்கும் அந்த வரலாறு இளங்கலை அவர்களுக்கு
என்ன அளிக்கப்போகிறது? குண்டாந்தடிகளும் பெட்ரோலுமாக அலையும் அரசியல்வாதிகளிடம்
அல்லவா இருக்கிறது அவர்களின் எதிர்காலம்?

செழியனின் ஒளிப்பதிவு இயல்பான ஒளியில் எடுக்கப்பட்டது என்ற எண்ணத்தை
உருவாக்கும் அளவுக்கு அழகும் இயல்பான தன்மையும் உடையதாக இருக்கிறது. இயற்கையான
மழை இருளை படம்பிடித்திருப்பதும் சரி, கல் குவாரி சித்தரிப்பில் ஒளிப்பதிவுக்
கோணங்களும் சரி நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் உச்ச்சகட்ட காட்சி அதற்கு
தேவையான உழைப்பையும் பொருட்செலவையும் அளிக்காமல் எடுக்கப்பட்டது போலப் படுகிறது

சென்ற சில மாதங்களாக ஆழமான மன இக்கட்டில் இருந்தேன். என் நுண்ணுணர்வை
அவமானப்படுத்தி எரிச்சலூட்டிய சில படங்கள், ‘பருத்தி வீரன்’ ‘கற்றது தமிழ்’
போன்றவை, ஊடகங்களால் பெரும் படங்களாக முன்வைக்கப்பட்டமைதான் காரணம். ஹாலிவுட்
படங்களை நோக்கி பிரதிசெய்த ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு உத்திகளை
எந்தவிதமான கலைநுட்பமும் இல்லாமல் அசட்டுத்தனமான மிகையுடன் தோன்றியவிதமெல்லாம்
கையாண்டு எடுக்கப்பட்ட இலக்கற்ற முதிரா முயற்சிகள் அவை. அவற்றின்
இயக்குநர்களின் அசட்டு ஆணவமும் கலை மொண்ணைத்தனமும் மட்டுமே வெளிப்படுபவை. அவை
போன்ற படங்கள் கொண்டாடப்படும் ஒரு சூழல் காலப்போக்கில் தன் கலைமனத்தையே இழக்க
நேரும் என்றே நான் அஞ்சினேன்.

நல்ல படைப்பு அடிப்படையில் உண்மையான மனஎழுச்சிகளை ஒட்டி உருவாவது. எத்தனை
தொழில்நுட்பச் சரிவுகள் இருந்தாலும் ஆத்மா பங்கப்படாதது. அவ்வகைப்பட்ட படம்
‘கல்லூரி’. எளிமையையே வலிமையாகக் கொண்டது. செயற்கையான மன வக்கிரங்களுக்குப்
பதிலாக நம்மைச்சுற்றி வாழும் வாழ்க்கையை நம்மைப் பார்கக்ச்செய்வது. ஒரு எளிய
சமூகம் தன்னைத்தானே பார்க்க, தன் வலிகளை தானே சொல்லிக்கொள்ள , முயல்வதன் விளைவு
இது

வெற்றிபெற்றாக வேண்டியவை இவ்வகைப்பட படங்களே. இவற்றின் வெற்றியே நம்மைப்பற்றிய
பெருமிதத்துடன் நாம் மேலும் எதிர்பாக்கச் செய்யும். குறைகள் இருக்கின்றன,
அவற்றை இப்படம் நூறுநாள் ஓடும்போது அம்மேடையிலேயே அலசவேண்டும்

4. Athipathy - திசெம்பர் 12, 2007

Hi Jeya mohan sir.

i have read some of your novels. i like your way of telling the story.
we all are expecting your next project “Nan Kadavul with Bala”.

This block is honoured by your comments.
Please regularly post your reviews and comments in this block.
thanks a lot for your valuable comments.

Thanks
Athipathy

5. udooz - திசெம்பர் 12, 2007

அன்புடன் தனசேகருக்கு,

“கல்லூரி” நிஜமாகவே ஒரு தெற்கத்திய கல்வி நிலைய சூழலையும், அம்மக்களின் வாழ்வியலையும் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. அதை எனது விமர்சனத்திலேயே கூறியிருக்கிறேன்.

சின்ன காட்சிகளையும் யதார்த்தமாக காட்ட முயலும் இயக்குநர் மற்றும் அவர் குழுவினரின் உழைப்பு படம் நெடுக தெரிகிறது. அந்த கிளைமாக்ஸை இதை விட அழுத்தமாக தெரிவிக்க முடியாது தான்.

ஆனால், ஒரு தளத்தில் பார்வையாளர்களை பயணிக்க வைத்த இயக்குநர்; சடேலென வேறு திசைக்கு வேறு தளத்திற்கு அழைக்கும் போது ஏற்படும் அசெளகரியமோ அல்லது ஏமாற்றமோ அல்ல அந்த கிளைமாக்ஸ். அப்படியிருந்திருந்தால் மனதார பாராட்டியிருக்கலாம். பதிலாக, பெரிய அதிர்வினை பயணிகளுக்கு தந்து பரபரப்பு பண்ண வேண்டும் என்ற ஓட்டுநரின் எண்ணம் பலருக்கு பிடித்திருக்கலாம். பிடிக்கவில்லை என்பது என் சொந்த கருத்து. அதன் பிரதிபலிப்பையே விமர்சனத்தில் தெரிவித்துள்ளேன்.

தவிர, விமர்சனத்தில் கூறியிருந்த படி “ஸ்போர்ட்ஸ் சூ பரிசளிக்கும் தமனா”, “கைக்குட்டை காதல்”, “அரட்டை அரங்கத்தில் நட்பை பேசும் கயல்”, “சாகும் போது கைக்குட்டையையும், சங்கையும் கையில் பிடித்திருக்கும் தோழிகள்” இது போன்ற இன்னும் சில காட்சிகள் யதார்த்த்தில் இயல்பு என்பது தங்கள் கருத்தாக இருந்தால், அதை மற்ற மசாலா இயக்குநர் என்றால் விட்டிருக்கலாம். பாலாஜி சக்திவேல் இதுபோன்ற பழகிப்போன தமிழ் சினிமா காதல் காட்சிகளை காட்சிபடுத்தும் விதத்தில் உயிரூட்டியிருக்க வேண்டாமா! நான் ஏற்கெனவே கூறியிருந்த படி பாலாஜி சக்திவேல் ஒரு இலக்கியவாதியின் அடையாளத்துடன் இருப்பவர்.

மற்றபடி, “தமிழ் எம்.ஏ” படத்தை எந்தவொரு ஊடகமும் கொண்டாடவில்லை. என்னை பொறுத்தவரை அந்த படம் ஒரு வியாதி அல்லது முதலைக் கண்ணீர். (நல்ல கருவுடன் வந்தால், அந்த இயக்குநர் அடுத்த படத்தில் சிறப்பாக பேசப்படுவார்) ஆனால், பருத்தி வீரனை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாது. பிடிக்கவில்லை என்பது தங்கள் கருத்து.

கடைசியாக, என்னை பொறுத்த வரை, “கல்லூரி” ஒரு உணர்வுப்பூர்வமான படம் தான்; ஆனால், உயிரோட்டம் குறைவாக உள்ளது என்பதே என் சொந்த கருத்து. பரவலாக விமர்சனம் எழுதும் அளவிற்கு அது இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.

என்றும் உங்கள் தொடர்ந்த பதிலாதரவை எதிர்நோக்கி…
எம். ஷேக் உதுமான் அலி

6. satheesh - ஜனவரி 25, 2008

you are not correct in some extent

7. M Sheik Uduman Ali - ஜனவரி 26, 2008

Warm welcome sathish.
It could be nice if you explain the “some extent”.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: