jump to navigation

பிரிவோம் சந்திப்போம் – விமர்சனம் ஜனவரி 29, 2008

Posted by M Sheik Uduman Ali in Reviews.
Tags: , , ,
1 comment so far

சுற்றிலும் கற்றாழை, அவரைச் செடிகள் சூழ்ந்த கிராமத்து தார்ச் சாலையில் மருதை மர நிழலில் மெதுவாக சைக்கிளில் பயணிப்பது போலொரு சுகானுபவம் பிரிவோம் சந்திப்போம்.

பாட்டி, தாத்தா, நாத்தனார், மாமியார் என சுக துக்கங்களை பங்கு போடும் கூட்டுக் குடும்ப சூழலை விரும்பும் மனைவி; தனிமையான இல்லறத்தை விரும்பும் கணவன். இவர்களுக்கிடையேயான தாம்பத்யச் சதுரங்கத்தை ஆர்பாட்டமில்லாமல் அழகாக சொல்லியிருக்கிறார்கள்.

சாமன்ய சம்சாரி, பொறுப்பான அதிகாரி என சேரனுக்கு ஏற்ற ஆனால் எல்லோர் மனதிலும் பதிந்த அரிதாரம். அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். வேலைக்கு போய் வந்ததும் அக்கடாவென உட்கார்ந்து டிவி பார்ப்பவரிடம் சினேகா பேசிக்கொண்டிருக்க அதை வேண்டா வெறுப்பாக கேட்டுக்கொண்டிருப்பார்; மனைவிக்கு என்னவோ ஏதோ என பதறி ஒன்றுமே சொல்லாமல் மானிட்டர் பண்ணும் நர்சிடம் சண்டை போடுவார். இப்படியாக மாறிவரும் குடும்ப சூழலில் உள்ள ஒரு யதார்த்தமான கணவனாக நடித்திருக்கிறார் இந்த கதை நாயகன்.

ஆற அமர உட்கார்ந்து எந்தவொரு குறுக்கீடுகளும் இல்லாமல் சினேகா நடிப்பதற்கேற்ற இல்லாள் பாத்திரம். என்னை விட்டால் ஆளில்லை என நடித்திருக்கிறார். குடும்பத்தினர் ஒவ்வொருவரின் குணாதிசயங்களை கண்டு சிலாகிக்கிறார்; தனிமை நோய் கொஞ்சம் கொஞ்சமாக அவரை ஆட்கொள்வதை பூக்கள் வெடிப்பதை போல மிருதுவாக காட்டுகிறார். இப்படியாக கூட்டுக்குடும்பத்திற்கு ஏங்கும் தற்கால பெண்களுக்கு முரணான பாத்திரத்தில் ஜொலிக்கிறார் சினேகா. சொந்தக் குரலா அம்மணி?

pirivom.png
இவர்களை தவிர இன்னும் இரண்டு டஜன் பாத்திரங்கள். சிறப்பு என்னவென்றால் எல்லோரும் நம் மனதில் பதிந்து விடுவதான். டைட்டில் போடும் போதே ஒரு பேமிலி ஹையரார்கியல் சார்ட் போட்டு அசத்துகிறார்கள். மெளலிக்கு கன கச்சிதமான பாத்திரம்; அதை விட சேரனின் பெரியப்பாவாக வருபவர், தேவதர்ஷினி, சினேகாவின் அப்பா, சேரனின் தங்கை என நீளமான யதார்த்தப் படைப்புகள். எல்லோரையும் கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் தன் நடிப்பால் ஓரங்கட்டி விடுகிறார் சேரனின் பாட்டி. எல்லாவிதமான பாட்டி கேரக்டர்களும் இவருக்கு பொருந்திவிடுகின்றது.

பின்பாதியில் வரும் ஜெயராம் கலகலப்பாக வந்து போகிறார். நகரில் ஒரு கிளினிக் வைத்து கை நிறைய காசு பார்க்க ஆசைப்படாமல் அந்த மலைக்காட்டில் எல்லோருடனும் ஆசாபாசமாக பழகி மருத்துவம் பார்க்கும் நல்ல மனிதராக காட்சிகளை நிரப்பியிருக்கிறார்.

காரைக்குடி செட்டியார்களின் கல்யாணத்தை கண்முன் காட்டும் அப்பாடல் காட்சி ஒன்றே போதும் ராஜீவனின் கலையம்சத்திற்கு. யதார்த்தத்தை எங்கேயும் தவற விடாத அளவிற்கு அவ்வளவு அழகாக படத்தொகுப்பு செய்திருக்கிறார் சரவணா.

முன்பாதியில் காரைக்குடியின் பிரும்மாண்ட வீடும் கல்யாணமும்; பின்பாதியில் தேயிலைச்செடிகளை போர்த்தி குளிர்காயும் அட்டகட்டி என வரப்பிரசாதமாக கிடைத்ததால் பெரிதாக மெனெக்கடாமல் தன் காமிராவால் கொள்ளையடிக்கிறார் M.S.பிரபு.

அதிரடிதான் இவரின் ஸ்பெஷல் என்றாலும் வலிக்காத வாத்தியங்களில் வாஞ்சையாக திரைக்கதையை தடவி விட்டிருக்கிறார் வித்யாசாகர். சில சந்திப்பிழைகள் இருந்தாலும் சபாஷ். மனதில் பதியாவிட்டாலும் திரைக்கதையை நகர்த்த உதவும் சீரான பாடல்கள்.

மென்மையாக சொல்ல வேண்டும்; உருக வைக்க வேண்டுமென எந்தவொரு தோரணமும் கட்டாமல் நேரடியாக கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் கரு. பழனியப்பன். குழந்தை மூச்சடைந்து இருப்பது; உங்க மனைவிக்கு மன நோய் என இவைதான் படத்தின் உச்சமான அதிரடிக்காட்சிகள். இப்போ என்னவாகுமோ, யார் எந்த குண்டை தூக்கி போடப்போகிறார்களோ என எந்தவொரு பதட்டமுமில்லாமல் பார்க்கலாம். பெரிதான நிகழ்வுகள் கூட அன்றாட வாழ்க்கையில் இழையோடி தரும் அதிர்வை கச்சிதமாக பிடித்து விசுவல் மீடியத்தை நோயுற்றதாக்கமால் நகர்த்திச் சென்றிருக்கிறார்.

சொல்ல வந்த கருத்தை கூட்டுக்குடும்பமா தனிக்குடும்பமா என சராசரி பட்டிமன்றமாக்காமல் பிழைக்க நெடுந்தொலைவு குடும்பத்தை விட்டு வந்து ஒண்டிக்குடுத்தனத்தில் டிவியாலும் சூழல்களாலும் எந்திரமயமாகி போன இல்லறத்தை அங்கிங்கு சுற்றாமல் நேர்கோட்டில் சொல்லியதற்கு சபாஷ் பழனியப்பன். அதை விட காரைக்குடி மக்களின் அசலான வாழ்க்கை முறைகளை வட்டார மொழி கலந்து சொன்ன விதம் அருமை.

நோய்க்கான மருந்தை மருத்துவர்களை அணுகாமலேயே வாங்கி சாப்பிடும் கலாச்சாரத்தை திருக்குறள் கலந்து ஜெயராம் சொல்லும் காட்சி உட்பட நோகடிக்காத வசனங்கள்.

கூட்டுக் குடும்பத்திலேயே இருந்ததினால் தனிமைக்கு சேரன் ஏங்கினாலும்; அவர்களை பற்றியே நினைக்காத அளவிற்கு சேரன் நடந்து கொள்ளுவது அவர் பாத்திரத்திற்கு முரணான ஒன்றாக தோன்றுகிறது.

கண்ணைக் கட்டி சாமி ரூமிற்கு கூட்டிச் சென்று குடும்பத்தினர் முன்னிலையில் முத்தமிடும் சேரன்; ஆபிஸில் அனைவரும் பிக்னிக் செல்ல சேரன் இப்படி கும்பல் வேண்டாமென்றுதானே இங்கு வந்தேன்; கடவுளுக்கு ஒரு ரூபாய் சேவிங்ஸ் போடும் சினேகாவின் டயலாக், பேங்கில் தான் மானேஜர், வீட்டில் கணவன் என மெளலியின் டயலாக்குகள் என ஆங்காங்கே இலக்கணப் பிழைகளும் உண்டு.

என்ன சொல்ல போகிறார்கள் என்று யோசிக்கும் அளவிற்கு நிதானமெடுத்து செல்லும் பின்பாதி சாம்பார் சாதத்தையே வெரைட்டி ரைஸாக வேகமாக சாப்பிடும் பாஸ்ட் புட் தமிழனை நிறையவே சோதித்து பார்க்கும். நெடுந்தூரத்திற்கு பரப்ப காட்சிகளில்லாமல் துணுக்குகளாக வந்து சேரும் காட்சிகளை எப்படி எடுத்துக் கொள்வது எனத் தெரியாத நம்மாட்கள் படம் எப்படா முடியும் என புலம்புகிறார்கள்.

யதார்த்தமான மெல்லிய உணர்வுகளை படபடவென பாப்கார்னாக சொல்லுவது ஒரு ஸ்டைல். அதையே குளத்தில் காற்றின் தன்மைக்கேற்ப பயணிக்கும் காகிதக் கப்பலாய் அதன் வளைவு நெளிவுகளில் பயணிக்கச் செய்வது ஒரு ஸ்டைல்.

வேகமான வாழ்க்கை முறையில் நிதானமாக அதை ரசிக்க நீங்கள் ரசிக்க தயார் என்றால் இலக்கண மற்றும் சந்திப்பிழைகள் இருந்தாலும்

பிரிவோம் சந்திப்போம் – அழகிய வெண்பா.

பீமா – விமர்சனம் ஜனவரி 17, 2008

Posted by M Sheik Uduman Ali in Reviews.
Tags:
add a comment

விக்ரம், பிரகாஷ்ராஜ், ரகுவரன் என பசியோடு நீந்திக் கொண்டிருக்கும் மூன்று நடிப்பு திமிங்கலங்களுக்கு இரை போட வந்திருக்கிறார் லிங்குசாமியின் பீமா.

beema.png

கடந்தாண்டு பிரம்மாண்ட படைப்புகளுக்காக எதிர்பார்க்கப்பட்ட படங்கள் சிவாஜி மற்றும் பில்லா. அந்த வரிசையில் மிச்ச சொச்சமாக வந்திருக்கிறார் பீமா. ஆச்சர்யமான விசயம் இந்த படங்களுக்கிடையேயான ஒரு ஒற்றுமை. நிறைய எதிர்பார்க்க வைத்து ஏமாற்றியது. பில்லாவையாவது பாராட்டலாம் முயற்சித்ததற்காக!

காலம் காலமாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் சொல்லப்படும் கேங்ஸ்டர் டைப் கதைகளில் குறை ஏதுமில்லையென எந்தவொரு புது முயற்சியும் இல்லாமல் கருணையோடு அப்படியே அடியொற்றி சொல்லியிருக்கிறார்கள். டீமை பார்த்து யாரும் தளபதி, புதுப்பேட்டை, காக்க காக்க, வட்டாரம் வரிசையில் யோசித்து குழப்பிக் கொள்ள வேண்டாம். கூட வந்த நண்பர் வேறு மார்டின் ஸ்கோர்செசின் இயக்கிய பிரபலமான குட்ஃபெல்லாஸ் திரைப்படத்தின் சாயலடிப்பதாக கூறினார். (என்னை மாதிரியே விழிக்கிறவர்கள் http://en.wikipedia.org/wiki/Goodfellas தளத்திற்கு விரைக)

சென்னையின் பிரதான இடங்களிலெல்லாம் ஹீரோவும் சரி வில்லனும் சரி சளைக்காமல் டூமீல் டமீல் என டஜன் டஜனாக கொலை செய்கிறார்கள். இவர்களை கேட்கத் தான் யாரும் இல்லை என்றால் த்ரிஷாவும் ஒரு காட்சியில் பிஸ்டலை எடுத்து சுடுகிறார்; கேட்க யாருமில்லை. நமக்கு தெரிந்து இவ்வளவு துணிச்சலாக என்பதுகளில் வந்த தெலுங்கு வில்லன்கள் தான் செய்வார்கள்.

என்ன கொடுமை என்றால் யாரும் யோசிக்க முடியாதபடி படம் நெடுகிலும் வரிசையாக புதுமையான காட்சிகள்(?!). த்ரிஷா மேல் விக்ரம் விழுந்ததும் பிறக்கிறது காதல்; த்ரிஷாவை ராக்கிங் செய்யும் ரோமியோக்களை காக்க காக்க ஸ்டைலில் வந்து அடிக்கும் விக்ரம்; மார்க்கெட் ஏரியாவை இடித்து ஷாப்பிங் மால் கட்ட வரும் ரகுவரன்; அதை தடுக்கும் ஹீரோ & கோ என எந்தவொரு காட்சியையும் நம்மால் முன்னறிந்து கொள்ள முடியாது.

ஆக இப்படியாக முற்றிலும் எதிர்பாராத திருப்பங்களோடும் நிறைய அபத்தங்களோடும் இடைவேளையும் வருகிறது. அதற்கு பின்னும் அதே பஜனையை தொடர்கிறார்கள்.

உடம்பை முறுக்கேற்றி பார்க்கவே பயங்கரமாக திமிறியிருக்கிறார் பீமா என்ற விக்ரம். இன்னும் பயங்கரமாக இருக்கிறது அவரது சண்டை.  குறிப்பாக  அந்த மார்க்கெட் சண்டையில் இவர் அடிப்பதும் பூடகமாக பிரகாஷ்ராஜ் பார்ப்பதும் செம அழகு. செம ஸ்டைல். சமீபமாக இவ்வளவு சிறப்பாக எந்தவொரு படத்திலும் சண்டைக் காட்சிகள் வந்ததில்லை. விக்ரம் அடித்தால் நிஜமாக இருக்கிறது. கனல் கண்ணன் பாராட்டுக்குரியவர்.

படத்தில் ரோமான்ஸ் காட்சிகள் என்ற பெயரில் கடுப்பேற்றுகிறார்கள் அந்த கிளைமாக்ஸிற்கு முந்தைய பாடலை தவிர. ஐந்து பாடல் காட்சிகளோடு த்ரிஷாவை அனுப்பியிருக்கலாம்.  பாவம்!

விக்ரமிற்கு இணையாக கிடைத்த சந்தர்ப்பத்திலெல்லாம் சிக்ஸர் அடித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். இவருக்கான ஸ்கோப்பிலெல்லாம் எந்தவொரு இடைஞ்சலுமில்லாமல் நிற்கும் தைரியம் விக்ரமிற்கு மட்டுமெ உண்டு. ரகுவரன் தான் ரொம்ப பாவம்.

படத்திலேயே விக்ரம், பிரகாஷ்ராஜிற்கு அடுத்தபடியாக அதிகமாக உழைத்திருப்பவர் சினிமாட்டோகிராபி பண்ணியிருக்கும் R.D.ராஜசேகர். சண்டைக் காட்சிகளாகட்டும் பாடல் காட்சிகளாகட்டும் மனிதர் அசத்தியிருக்கிறார். உறுதுணையாக எடிட்டர்  ஆண்டனி.

பாடல்கள்  ஏற்கெனவே ஹிட்டடித்து விட்டன; ஆனால் படமாக்கியதில் “முதல் மழை“, “ஒரு முகமோதவிர மற்றவைகள் சுமார். முப்பத்தெட்டு நாட்கள் உட்கார்ந்து கம்போஸ் செய்த ரீரிக்கார்டிங் மாதிரி தெரியவில்லை ஹாரீஸ்.

ரன், சண்டைகோழி மாதிரி அதிரடியான படங்களை செய்த லிங்குசாமியின் இரண்டு வருட உழைப்பில் வந்த படம் மாதிரி தெரியவில்லை. அதற்கான எந்தெவொரு ஆச்சர்யங்களும் இல்லை. அதிகபட்சம் ஆறுமாதத்தில் எடுத்து முடிக்கக் கூடிய படம். சிவாஜி, பில்லா மாதிரியே திரைக்கதையில் தான் கோட்டை விட்டிருக்கிறார்.

பிரகாஷ்ராஜிற்கும் விக்ரமிற்குமிடையேயான அந்த மின்காந்த அலைகளை எந்தவொரு வசனமும் சொல்லாமல் புரிந்து கொள்கிற மாதிரி வேறு எந்தவொரு காட்சிகளும் மனதை தொட முயற்சிப்பதில்லை.

பிரம்மாண்டம், ஸ்டார் வேல்யூவை நினைத்து நீண்ட கால ஷெட்யூலில் எடுக்கப்பட்ட இந்த மாதிரி சினிமாக்கள் ஸ்டோரிபோர்டில் திட்டமிடப்படாத திரைக்கதையோடு களத்திற்கு வருகின்றனவோ என தோன்றுகின்றது. மிரள வைக்கும் காட்சியமைப்புகளே இருந்தாலும் சமீபத்தில் வந்த காக்க காக்க, புதுப்பேட்டை படங்களில் இருந்த களச் சூழலை வைத்தே மிரட்டும் தொனியோ; தலைநகரம், வட்டாரம் படங்களில் இருந்த கிரைம் ட்ராமாவோ பீமாவில் இல்லை.

ஆனால் மிரள மிரள இழுபட்ட படம் கிளைமாக்ஸில் நம்மை மிரள வைத்து விடுகிறது. மொத்தம் ஐந்து நிமிடமே அந்த காட்சியென்றாலும் லிங்குசாமி அட போட வைக்கிறார். இந்த பரபரப்பும் விறுவிறுப்பும் தொடக்கம் முதல் இருந்திருந்தால் ஆடியன்ஸின் நெத்தி பொட்டில் அடித்திருக்கலாம்.

பீமா – புளித்து போன பழைய இட்லியை உதிர்த்து செய்த உப்புமா

சென்னை புத்தகக் கண்காட்சி 2008 ஜனவரி 7, 2008

Posted by M Sheik Uduman Ali in Articles.
Tags: , , , , ,
add a comment

முப்பத்தியோராவது புத்தகக் கண்காட்சி இந்த வருடம் திடீர் மழையோடு ஆரம்பித்துள்ளது. டிசம்பர் இசைத் திருவிழா என்றால் ஜனவரியை புத்தகத் திருவிழா என்று அழைக்கலாம். இ-புக், இ-புக் ரீடர், மொபைல் புக் ரீடர், இன்டர்நெட்டில் விக்கி என எத்தனையோ மின்ணணு ஊடகங்கள் புத்தங்களுக்கு (அல்லது static content) புதிய வடிவம் கொடுத்தாலும் அச்சுப் புத்தகங்கள் கொடுக்கும் செளகர்யங்களையும், நெருக்கத்தையும் அவை கொடுக்கவில்லை என்பது இத்திருவிழாவிற்கு சென்னை வாழ் மக்களின் பரவாலான ஆதரவை வைத்தே அறியலாம். வேண்டுமென்றால் வரும் தலைமுறைகளின் ஆர்வம் இன்டராக்டிவ் பப்ளிஷ்களலால் மாறலாம்.

புதிதாக வாங்கிய புத்தகம் புது மனைவி மாதிரி. நிறைய மணக்கும், நெருக்கத்தில் பரபரப்பு கொடுக்கும். உள்ளே இருக்கும் பொருளடக்கம் சிறப்பாக இருந்தால் வாசிப்பு அலாதியாகவும் போதை தருவதாகவும் இருக்கும். நாளான புத்தகமோ, அழுக்கேறியிருந்தாலும் பக்குவமாகவும் பாந்தமாகவும் இருக்கும். சரி விசயத்திற்கு வருவோம். இந்த வருடமும் ஏராளமான கடைகள், புதிய புத்தக வெளியீடுகள் என வெகு ஜோராக இருந்தன.

இந்தக் கண்காட்சியின் தளம் தமிழகம் சார்ந்து இருப்பதால் பெரும்பாலான வெளியீடுகள் தமிழ் கவிதைகள் கட்டுரைகளே ஆகும்.

விகடன் பிரசுரத்திற்கு டிமாண்ட் இருப்பது தெரிகிறது. அவர்களின் சந்தைப்படுத்தும் முறையும் சிறப்பாக இருக்கிறது. பல கடைகளில் விகடன் பிரசுரங்கள் கிடைத்தாலும் அதற்கான ஸ்டால் ஒரு சிறிய கடை என்பதால் கூட்டங்களுக்கிடையே புத்தங்களை தொடக்கூட முடியவில்லை. இந்த வருடம் “Prodigyயின் இருபத்தைந்து ரூபாய் மதிப்புள்ள குட்டி புத்தங்கள் கண்களை கவர்ந்தன. எல்லாமே காம்பேக்ட் வடிவில் சொற்களை குறைத்திருந்தாலும் சுவாரஸ்யம் குறையாமல் “சிவாஜி, “ஒளரங்கசீப், “எடிசன் தொடங்கி, சினிமாவிற்கு பின்னால், உலக சுகாதரத்துறையின் குழந்தைகளுக்கான மனவியல் குறித்த வெளியீடுகள் சிறப்பாக இருக்கிறது.

இந்தக் கண்காட்சியில் நிறைய விற்ற புத்தங்கள், துறைகள் பற்றிய புள்ளி விவரங்கள் இனிமேல் தான் தெரியும் என்றாலும் கடந்தாண்டு நம் மக்கள் சுய உதவி குறித்த புத்தகங்களை நிறைய வாங்குவது பேஷனாக இருந்தது. இந்தாண்டு கண்ணதாசன் பதிப்பகத்தின் தரமான சுய உதவி வெளியீடுகளுக்கு நிறைய கூட்டங்கள்.

ஐடியை பொறுத்தவரை தனி ஸ்டால் ஏற்படுத்தி கவர்ந்தவர்கள் வெய்லி ட்ரீம் டெக் மற்றும் ஷ்ராஃப் பப்ளிஷர்ஸ். வாழ்த்துக்கள். மற்ற இடங்களில் மிகவும் பரவலாக பயன்படுத்தும் புத்தகங்களே குறைவாகத்தான் இருந்தன.

அச்சுபிரதிகளுக்கு இணையாக சிடிக்களும் தமிழில் நிறைய வந்துள்ளன.

ஆன்மிகத்தை பொறுத்தவரை இந்து மற்றும் இஸ்லாமிய வெளியீடுகளுக்கான ஸ்டால்கள் நிறைய இருந்தன. ஆச்சர்யமான விசயம் மிகமிகக் குறைவான கிருஸ்தவ வெளியீடுகள். அதைவிட ஆச்சர்யம் தனியான ஸ்டால்கள் ஏதுமில்லாதது. கவர்ந்த விசயம் ஆன்மிகப் பதிப்புகளின் நவீனம். அச்சுத் தரம் மற்றும் வடிவமைப்பில் மட்டுமில்லாது தலைப்புகளிலும். இவைகளுக்கு நிகராக பகுத்தறிவு மற்றும் மார்க்ஸிய பாசரைகளுக்கான ஸ்டால்கள் கவர்ந்தன. கடவுளைப் பற்றிய தர்க்க ரீதியான புத்தங்கள் நிறைய என்றாலும், உலகமயமாக்கல், இந்திய சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வுகள், குஜராத் இனப்படுகொலைகள் பற்றிய வெளியீடுகளும் நிறைய இருந்தன.

கான்டீனை ரொம்பவும் தள்ளி அமைத்திருக்கிறார்கள். நாங்கள் உட்பட பலருக்கும் அது இருப்பது கூட தெரியவில்லை. ஜூஸ், கார்ன், சான்ட்விச் உட்பட ஒரு பாஸ்ட்புட் கடை என காம்பேக்டாக வைத்திருந்தார்கள். தரம் நன்று.

காஞ்சி சங்காராச்சாரியார்களின் ஆன்மிகம் பற்றிய புத்தகம் ஒரு பக்கம் என்றால், காஞ்சி மடத்தை தாறுமாறாக விமர்சிக்கும் புத்தகமும் அதே வரிசையில். இரண்டையும் வாங்கும் மக்கள். வெவ்வேறான கருத்துகள், நம்பிக்கைகள், துறைகள் சார்ந்த இம்மக்களை ஒரே இடத்தில் இணைக்கும் வசீகரம் “புத்தகம்.

வாழ்க வாசிப்பு.

புத்தாண்டு பார்வைகள் ஜனவரி 1, 2008

Posted by M Sheik Uduman Ali in Articles.
3 comments

முதலில் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இந்த புத்தாண்டில் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

இந்த புத்தாண்டில் எனது பிரார்த்தனைகள்:

 • சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டும்.
 • தீவிரவாதம், மதம் என்ற பெயரில் வலியோன் எளியோனை நசுக்கும் கொடுமைகள் ஓய்ந்திட வேண்டும்.
 • வகுப்புவாதம், இனப்படுகொலைகள் மடிந்திட வேண்டும்.
 • அன்பும் அறமும் நிலைத்திட வேண்டும்.
 • இல்லறம் தழைத்திட வேண்டும். எந்திரமயமாக்கலிலிருந்தும், டிவிப் பெட்டியிலிருந்தும் அது விடுபட வேண்டும்.
 • ஓட்டிற்காக பிறருக்கு கொடுக்கப்படும் சலுகைகள், தள்ளுபடிகளுக்காக, புதிய வரித் திணிப்புகள் நம் தலையில் ஏறாமல் இருக்க வேண்டும்.
 • செய்கின்ற தொழில், வேலை மேம்பெற்றிட வேண்டும். அதை செவ்வன செய்து முடித்திடும் திறமை வேண்டும்.
 • கொடி நோய்களுக்கான மருத்துவக் கண்டுபிடிப்புகள் வெற்றி பெற வேண்டும். அது வறியவனுக்கும் வசப்பட வேண்டும்.
 • கல்வியும், மருத்துவமும் வியாபாரமயமாக்கப்படுவது மறைந்திட வேண்டும்.
 • மதங்கள் பரப்புவதை நிறுத்தி மனிதம் பரப்புவோம்.
 • திருமணம் ஏங்கி நிற்கும் கன்னிப் பெண்கள், குழந்தைகள் ஏங்கி நிற்கும் பெண்களுக்கு இறைவன் வழி செய்திட வேண்டும்.

எனது பார்வைகள்:

சம்பிரதாயத்திற்காக எல்லாரையும் போல நானும் எனது பார்வைகளை இங்கு வழங்கியுள்ளேன். கண்டுக்காதவர்கள் தொடர்க; தகுதி தராதரம் பார்ப்பவர்களுக்கு எனது டிஸ்கிளைமர்: தயவு செய்து எனது அடுத்த சினிமா விமர்சனத்திற்கோ அல்லது கட்டுரைக்கோ காத்திருக்கவும்.

ஏராளமான வாழ்த்து SMSகள், emailகள், ராசிபலன்கள் மற்றும் வேண்டுதல்களோடு மற்றுமொரு புத்தாண்டாக மலர்ந்திருக்கிறது 2008. சில துறைகள் வலிமையடைந்துள்ளன; சிலவை லேசாக நலிந்துள்ளன. ஆனால் பொருளாதாரத்தை பொறுத்தவரை 2007 சிறப்பாக இருந்தது. இதற்கு மத்திய அரசும் ஒரு காரணம்.

வேலைவாய்ப்பை பொறுத்தவரை எல்லா துறைகளிலும் நிறைய தேவைகள் இருந்தும்; புதியவர்களுக்கான வாய்ப்புகள் அவ்வளவு சிறப்பாக இல்லை. இதற்கு கார்ப்பெரட் HRகளின் நேர்மையும்(?) ஒரு காரணமாக இருக்கலாம். தனியார் துறைகளிலும் திறமை மட்டும் வேலை செய்வதில்லை. சீரியஸான இன்னொரு செய்தி: வாங்கும் சம்பளத்திற்கு தகுந்த திறமை பணியாட்களிடம் குறைந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உஷார்.

ஏகமாக இந்த ஆண்டும் நசுக்கப்பட்ட ஒரு துறை விவசாயம். அமெரிக்க நச்சு விதைகள், விஷ உரங்கள் என ஏகப்பட்ட குளறுபடிகள். இயற்கை உரங்களும் ஏராளமான வழிமுறைகளும் இருந்தும் மேல்நாடுகளின் சோதனைக் களமாக உள்ளது நம் பூமி. ஆனால் தமிழ்நாட்டில் விவாசாயி மட்டுமன்றி, அனைவருக்கும் ஓரளவு விழிப்புணர்வு ஏற்படுத்தி நவீனப்படுத்த முயற்சி செய்யும் விகடனின் பசுமை விகடன் இதழின் முயற்சிக்கு பாராட்டுகள். இன்னொரு கேள்வி: அடுத்த தலைமுறைக்கு விவசாயம் என்று காட்ட ஏதாவது இருக்குமா? அடுத்த தலைமுறையில் யார் விவசாயியாக இருப்பார்கள்?. தவிர, ஓரளவிற்கு எல்லா நஞ்சை நிலங்களும், குளம் ஏரிகளும் ரியல் எஸ்டேட் துறைக்கு தாரை வார்க்கப்பட்டது.

கல்வியின் தரம் உயர்ந்திருக்கிறதோ இல்லையோ, அடிப்படை வசதி கூட இல்லாத ஒரு நர்சரி ஸ்கூலை நடத்தும் முதலாளியின் (ஸாரி நிர்வாகியின்) பொருளாதாரம் பல மடங்கு உயர்ந்துள்ளது. கற்றலின் வழிமுறைகளை நவீனப்படுத்த யாரும் தயாரக இல்லை. எப்பவும் போல், கற்ப்பிப்பவர்களை போல ஒரு சொகுசு வாழ்க்கைக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். போதாதென்று வரும் வருடம் இவர்களுக்கு திட்டக் கமிஷனின் பரிந்ததுரை படி சாப்ட்வேர் துறைக்கு நிகராக சம்பள உயர்விற்கு வேறு வாய்ப்புள்ளதாம். ஆண்டவா! நல்லாசியர்களை கொடு என்று கேட்பதை விட வேறு வழியில்லை.

மருத்துவம் ஏராளமான முன்னேற்றங்களை அடைந்திருக்கிறது. ஆனால் கிட்னி வியாபாரமும், வியாதிக்காரர்களின் நிலைமை தெரிந்து காசு பிடுங்கும் கலாச்சாரமும் பயமுறுத்துகின்றன. இதையும் தாண்டி விட்டால் பல ஆயிரங்களை அடிக்கும் வாய்ப்பு இருந்தும் தெளிவான, உண்மையான வழிகள் சொல்லும் சில மருத்துவர்களை சிலரின் தயவால் காண அல்லது கேட்க நேரிட்டது மகிழ்ச்சியான விசயம்.

அரசியலை பொறுத்த வரை எதிர்பார்த்தது போலவே கடந்த வருடம் குஜராத் தேர்தல் முடிவுகள். மோடி ஜெயித்தது ஒன்றும் அதிர்ச்சியானது அல்ல. முதல் காரணம், அந்த மண்ணும் மக்களும். இரண்டாவது அங்குள்ள மதவாத அரசியல். மண்ணையும் மக்களையும் பொறுத்தவரை பெரும்பாண்மை மக்களுக்கு தன் பக்கத்து வீட்டுக்காரன் பிற மதத்தவனாக இருப்பது வெறுப்பிற்குரியது என்ற அவர்களின் வெளிப்படையான கருத்து. மாநிலத்தின் உட்கட்டமைப்பை நன்றாக்கி, அடிப்படை வசதிகளை பெருக்கி, வரி வட்டி என மக்களை சுமைதாங்கியாக்காமல் மோடி ஆட்சி நடத்திய விதம். மதவாத அரசியலை பொறுத்தவரை குஜராத் ஹிந்துத்துவாவின் சோதனைச்சாலை. அங்கு எந்த கட்சியாலும் ஹிந்துத்துவா இல்லாத மதச்சார்பற்ற அரசியலை நடத்துவது கடினம்.

ஆனால் இதுதான் எதிர்கால இந்தியாவின் இறையாண்மை மாதிரியா? மதச்சார்பற்ற வேண்டாம், மனிதாபிமானமில்லாத ஒரு கட்சி அதை விட மோசமான ஒரு தலைவரை மக்கள் கொண்டாடுவது சோகமான ஜனநாயகத்தின் முன்மாதிரி.

எல்லாத் துறைகளை விடவும் கடந்த வருடம் செம சிக்ஸர் அடித்த துறை, சினிமா. குறிப்பாக தமிழ் சினிமா. எதிர்பார்த்த சினிமாக்கள் தோற்றன; எதிர்பாராத சினிமாக்கள் வென்றன என்ற லாஜிக் 2007க்கு பொருந்தாது. வேண்டுமென்றால் எதிர்பார்த்த மாதிரி இல்லாதிருந்த சினிமாக்கள் உண்டு. கடந்த வருடம் ஜெயித்த சினிமாக்களையும் அவைகளுக்கான விமர்சனங்களையும் எடுத்துப்பார்த்தால் ஒன்று தெரிகிறது. தொழில்நுட்பத்திலும் திரைக்கதையிலும் நேர்த்தியான சினிமாக்கள் ஒரு வகை; எந்த பிரம்மாண்டத்தையும் கையிலெடுக்காமல் அசலான திரைக்கதையோட்டத்தை சொல்லியவை ஒரு வகை.

சினிமா பலம் பலவீனம் கருத்து
போக்கிரி விஜய்

அக்மார்க் கரம் மசாலா

தெலுங்கில் மகேஷ்பாபு பண்ணிய மேனரிசத்தை அப்படியே பிரதிபலித்த்து வரம்புக்குள் சிக்காத மாஸ் ஹீரோ சினிமா. பிரபுதேவாவிற்க்கு நல்ல என்ட்ரி கொடுத்த்து.
பருத்தி வீரன் வலுவான திரைக்கதை,

அசலான வசனங்கள்

டைரக் ஷன்

குறிப்பாக ஏதுமில்லை பாரதிராஜாவின் “16 வயதினிலேக்கு பிறகு தமிழ் சினிமாவிற்கு இன்னுமொரு தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
மொழி கவித்துவமான திரைக்கதை,

ஜோதிகா,

இயக்கம்

குறிப்பாக ஏதுமில்லை எந்த மின்மினுப்புகளும் இல்லாமல் எல்லோரையும் உருக வைத்த சினிமா.
சென்னை 6000028 திரைக்கதை,

மாறுபட்ட கதைக்களம்

நடிப்பு

இசை

குறிப்பாக ஏதுமில்லை சிம்பிள் & பவர்புல் சினிமா
சிவாஜி ரஜினி,

இசை

தொழில்நுட்பம்

திரைக்கதை தமிழ் சினிமா வர்த்தகத்தை உலகமயமாக்கியது.
பொல்லாதவன் தனுஷ்,

மாறுபட்ட கதைக்களம்

காட்சியமைப்புகள்

பல பாணிகளில் கதை சொல்ல முனைந்தது அசத்தலான, மாறுபட்ட கதையம்சத்துடனான சினிமா
கல்லூரி இலக்கியம் பேசும் திரைக்கதை,

நடிகர்கள்

முடிவு இலக்கியத் தரமான சினிமா
ஓரம் போ* திரைக்கதை,

டைரக் ஷன்

எவனோ ஒருவன்*
ஒன்பது ரூபாய் நோட்டு *
பில்லா தொழில் நுட்பம்

அஜீத்

திரைக்கதையுடன் தொழில் நுட்பத்தை இணைக்கத் தவறியதில் தமிழின் முதல் ஹாலிவுட் பாணி ஸ்டைலிஷ் ஆக்ஷென் சினிமா
 • இப்படங்களை பார்க்கவில்லை.

சின்னத்திரையை பொறுத்தவரை சின்னத்திரை கலைஞர்கள் மிகப்பெரும் சிலிப்பிரட்டிக்களாக மாறியிருக்கிறார்கள். இந்த மாற்றம் மட்டுமில்லை. ரியாலிட்டி ஷோ, தொடர் நாடகம், நக்கல், நையாண்டி என அழுகையும் அழுக்குமாக மெகாத்தொடர்களையும், சினிமாவையும் நம்பி இருந்த தமிழ் சேனல்களின் தூக்கத்தை கலைத்து சின்னத்திரையில் வலிமையான் இடத்தை பிடித்துள்ளது “விஜய் டிவி. மற்ற சானல்கள் இதன் நிகழ்ச்சிகளை காப்பியடிக்கும் நேரத்தில் இன்னொரு வகை புரோகிராமை கையிலெடுத்து ஆட்டம் காண வைக்கிறார்கள். கிரியேட்டிவிட்டி மட்டுமில்லாமல் டெக்னாலஜியை கையாளும் விதம், நிகழ்ச்சிகளை வழங்கும் தரம் இதன் வெற்றிக்கு மூலம்.

அப்புறம், புத்தாண்டு அன்று சானல் உலா சென்றதில் பளிச் என்று அசர வைத்தது ஜெயா டிவியில் அஜீத்தின் பேட்டி. அவர் பேசிய ஸ்டைல், தொட்ட ஆழம், பதிலளிக்கும் பக்குவம் என அட்டகாசமாக ஜொலித்தார்.

வருவோம்ல.