jump to navigation

பிரிவோம் சந்திப்போம் – விமர்சனம் ஜனவரி 29, 2008

Posted by M Sheik Uduman Ali in Reviews.
Tags: , , ,
trackback

சுற்றிலும் கற்றாழை, அவரைச் செடிகள் சூழ்ந்த கிராமத்து தார்ச் சாலையில் மருதை மர நிழலில் மெதுவாக சைக்கிளில் பயணிப்பது போலொரு சுகானுபவம் பிரிவோம் சந்திப்போம்.

பாட்டி, தாத்தா, நாத்தனார், மாமியார் என சுக துக்கங்களை பங்கு போடும் கூட்டுக் குடும்ப சூழலை விரும்பும் மனைவி; தனிமையான இல்லறத்தை விரும்பும் கணவன். இவர்களுக்கிடையேயான தாம்பத்யச் சதுரங்கத்தை ஆர்பாட்டமில்லாமல் அழகாக சொல்லியிருக்கிறார்கள்.

சாமன்ய சம்சாரி, பொறுப்பான அதிகாரி என சேரனுக்கு ஏற்ற ஆனால் எல்லோர் மனதிலும் பதிந்த அரிதாரம். அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். வேலைக்கு போய் வந்ததும் அக்கடாவென உட்கார்ந்து டிவி பார்ப்பவரிடம் சினேகா பேசிக்கொண்டிருக்க அதை வேண்டா வெறுப்பாக கேட்டுக்கொண்டிருப்பார்; மனைவிக்கு என்னவோ ஏதோ என பதறி ஒன்றுமே சொல்லாமல் மானிட்டர் பண்ணும் நர்சிடம் சண்டை போடுவார். இப்படியாக மாறிவரும் குடும்ப சூழலில் உள்ள ஒரு யதார்த்தமான கணவனாக நடித்திருக்கிறார் இந்த கதை நாயகன்.

ஆற அமர உட்கார்ந்து எந்தவொரு குறுக்கீடுகளும் இல்லாமல் சினேகா நடிப்பதற்கேற்ற இல்லாள் பாத்திரம். என்னை விட்டால் ஆளில்லை என நடித்திருக்கிறார். குடும்பத்தினர் ஒவ்வொருவரின் குணாதிசயங்களை கண்டு சிலாகிக்கிறார்; தனிமை நோய் கொஞ்சம் கொஞ்சமாக அவரை ஆட்கொள்வதை பூக்கள் வெடிப்பதை போல மிருதுவாக காட்டுகிறார். இப்படியாக கூட்டுக்குடும்பத்திற்கு ஏங்கும் தற்கால பெண்களுக்கு முரணான பாத்திரத்தில் ஜொலிக்கிறார் சினேகா. சொந்தக் குரலா அம்மணி?

pirivom.png
இவர்களை தவிர இன்னும் இரண்டு டஜன் பாத்திரங்கள். சிறப்பு என்னவென்றால் எல்லோரும் நம் மனதில் பதிந்து விடுவதான். டைட்டில் போடும் போதே ஒரு பேமிலி ஹையரார்கியல் சார்ட் போட்டு அசத்துகிறார்கள். மெளலிக்கு கன கச்சிதமான பாத்திரம்; அதை விட சேரனின் பெரியப்பாவாக வருபவர், தேவதர்ஷினி, சினேகாவின் அப்பா, சேரனின் தங்கை என நீளமான யதார்த்தப் படைப்புகள். எல்லோரையும் கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் தன் நடிப்பால் ஓரங்கட்டி விடுகிறார் சேரனின் பாட்டி. எல்லாவிதமான பாட்டி கேரக்டர்களும் இவருக்கு பொருந்திவிடுகின்றது.

பின்பாதியில் வரும் ஜெயராம் கலகலப்பாக வந்து போகிறார். நகரில் ஒரு கிளினிக் வைத்து கை நிறைய காசு பார்க்க ஆசைப்படாமல் அந்த மலைக்காட்டில் எல்லோருடனும் ஆசாபாசமாக பழகி மருத்துவம் பார்க்கும் நல்ல மனிதராக காட்சிகளை நிரப்பியிருக்கிறார்.

காரைக்குடி செட்டியார்களின் கல்யாணத்தை கண்முன் காட்டும் அப்பாடல் காட்சி ஒன்றே போதும் ராஜீவனின் கலையம்சத்திற்கு. யதார்த்தத்தை எங்கேயும் தவற விடாத அளவிற்கு அவ்வளவு அழகாக படத்தொகுப்பு செய்திருக்கிறார் சரவணா.

முன்பாதியில் காரைக்குடியின் பிரும்மாண்ட வீடும் கல்யாணமும்; பின்பாதியில் தேயிலைச்செடிகளை போர்த்தி குளிர்காயும் அட்டகட்டி என வரப்பிரசாதமாக கிடைத்ததால் பெரிதாக மெனெக்கடாமல் தன் காமிராவால் கொள்ளையடிக்கிறார் M.S.பிரபு.

அதிரடிதான் இவரின் ஸ்பெஷல் என்றாலும் வலிக்காத வாத்தியங்களில் வாஞ்சையாக திரைக்கதையை தடவி விட்டிருக்கிறார் வித்யாசாகர். சில சந்திப்பிழைகள் இருந்தாலும் சபாஷ். மனதில் பதியாவிட்டாலும் திரைக்கதையை நகர்த்த உதவும் சீரான பாடல்கள்.

மென்மையாக சொல்ல வேண்டும்; உருக வைக்க வேண்டுமென எந்தவொரு தோரணமும் கட்டாமல் நேரடியாக கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் கரு. பழனியப்பன். குழந்தை மூச்சடைந்து இருப்பது; உங்க மனைவிக்கு மன நோய் என இவைதான் படத்தின் உச்சமான அதிரடிக்காட்சிகள். இப்போ என்னவாகுமோ, யார் எந்த குண்டை தூக்கி போடப்போகிறார்களோ என எந்தவொரு பதட்டமுமில்லாமல் பார்க்கலாம். பெரிதான நிகழ்வுகள் கூட அன்றாட வாழ்க்கையில் இழையோடி தரும் அதிர்வை கச்சிதமாக பிடித்து விசுவல் மீடியத்தை நோயுற்றதாக்கமால் நகர்த்திச் சென்றிருக்கிறார்.

சொல்ல வந்த கருத்தை கூட்டுக்குடும்பமா தனிக்குடும்பமா என சராசரி பட்டிமன்றமாக்காமல் பிழைக்க நெடுந்தொலைவு குடும்பத்தை விட்டு வந்து ஒண்டிக்குடுத்தனத்தில் டிவியாலும் சூழல்களாலும் எந்திரமயமாகி போன இல்லறத்தை அங்கிங்கு சுற்றாமல் நேர்கோட்டில் சொல்லியதற்கு சபாஷ் பழனியப்பன். அதை விட காரைக்குடி மக்களின் அசலான வாழ்க்கை முறைகளை வட்டார மொழி கலந்து சொன்ன விதம் அருமை.

நோய்க்கான மருந்தை மருத்துவர்களை அணுகாமலேயே வாங்கி சாப்பிடும் கலாச்சாரத்தை திருக்குறள் கலந்து ஜெயராம் சொல்லும் காட்சி உட்பட நோகடிக்காத வசனங்கள்.

கூட்டுக் குடும்பத்திலேயே இருந்ததினால் தனிமைக்கு சேரன் ஏங்கினாலும்; அவர்களை பற்றியே நினைக்காத அளவிற்கு சேரன் நடந்து கொள்ளுவது அவர் பாத்திரத்திற்கு முரணான ஒன்றாக தோன்றுகிறது.

கண்ணைக் கட்டி சாமி ரூமிற்கு கூட்டிச் சென்று குடும்பத்தினர் முன்னிலையில் முத்தமிடும் சேரன்; ஆபிஸில் அனைவரும் பிக்னிக் செல்ல சேரன் இப்படி கும்பல் வேண்டாமென்றுதானே இங்கு வந்தேன்; கடவுளுக்கு ஒரு ரூபாய் சேவிங்ஸ் போடும் சினேகாவின் டயலாக், பேங்கில் தான் மானேஜர், வீட்டில் கணவன் என மெளலியின் டயலாக்குகள் என ஆங்காங்கே இலக்கணப் பிழைகளும் உண்டு.

என்ன சொல்ல போகிறார்கள் என்று யோசிக்கும் அளவிற்கு நிதானமெடுத்து செல்லும் பின்பாதி சாம்பார் சாதத்தையே வெரைட்டி ரைஸாக வேகமாக சாப்பிடும் பாஸ்ட் புட் தமிழனை நிறையவே சோதித்து பார்க்கும். நெடுந்தூரத்திற்கு பரப்ப காட்சிகளில்லாமல் துணுக்குகளாக வந்து சேரும் காட்சிகளை எப்படி எடுத்துக் கொள்வது எனத் தெரியாத நம்மாட்கள் படம் எப்படா முடியும் என புலம்புகிறார்கள்.

யதார்த்தமான மெல்லிய உணர்வுகளை படபடவென பாப்கார்னாக சொல்லுவது ஒரு ஸ்டைல். அதையே குளத்தில் காற்றின் தன்மைக்கேற்ப பயணிக்கும் காகிதக் கப்பலாய் அதன் வளைவு நெளிவுகளில் பயணிக்கச் செய்வது ஒரு ஸ்டைல்.

வேகமான வாழ்க்கை முறையில் நிதானமாக அதை ரசிக்க நீங்கள் ரசிக்க தயார் என்றால் இலக்கண மற்றும் சந்திப்பிழைகள் இருந்தாலும்

பிரிவோம் சந்திப்போம் – அழகிய வெண்பா.

பின்னூட்டங்கள்»

1. Athipathy - ஜனவரி 29, 2008

Hi Sheik,

once again very good review from you..

i like many place in your coments
சுற்றிலும் கற்றாழை, அவரைச் செடிகள் சூழ்ந்த கிராமத்து தார்ச் சாலையில் மருதை மர நிழலில் மெதுவாக சைக்கிளில் பயணிப்பது போலொரு –Eppipa eppidi ellam think pannurae, superpa…!!!!!

then “ஆங்காங்கே இலக்கணப் பிழைகளும் உண்டு. ” padathin minus point or no logic, kalai eeppidi sonnadhu Dukkerppa..!!!

then ” அதையே குளத்தில் காற்றின் தன்மைக்கேற்ப பயணிக்கும் காகிதக் கப்பலாய் அதன் வளைவு நெளிவுகளில் பயணிக்கச் செய்வது ஒரு ஸ்டைல்.” eppidippa eppidi ounnala mudiyudhu….konnudappa!!!

thanks
Athy


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: