jump to navigation

வெள்ளித்திரை – விமர்சனம் மார்ச் 9, 2008

Posted by M Sheik Uduman Ali in Reviews.
Tags: , ,
add a comment

அறிஞர் அண்ணாவின் “ரொட்டித் துண்டு கதையை எனது சிறுவயதில் தொலைக்காட்சி படைப்பாக பார்த்தது. அதே கரு கேரளத்திலிருந்து புறப்பட்டு தமிழுக்கு வெள்ளித் திரையாக வந்திருக்கிறதோ?

“சினிமாவை கொண்டாடுவோம் என்ற முழக்கத்துடன் நல்ல முயற்சிகளை தமிழுக்கு படைத்து வரும் பிரகாஷ்ராஜின் ஆரோக்கியமான ஆர்வம் படைப்பு முழுக்க தெரிகிறது.

சூதக, பாதக வழிகள் எதுவானாலும் சரி ஒரு ஹீரோவாக வேண்டும் என்பது பிரகாஷ்ராஜின் வெறி. பத்து வருட சிந்தனையில் உருவான ஒரு நல்ல கதையுடன் ஒரு சரியான வாய்ப்புக்காக காத்திருக்கும் பிருத்விராஜ். திடுமென கதாநாயகியாகி பணத்திற்காக அண்ண்ணால் சித்திரவதைக்குள்ளாகும் கோபிகா. பிருத்விராஜ் அசந்த சமயத்தில் அவரது கதையை திருடி பெரிய ஹீரோவாகிறார் பிரகாஷ்ராஜ். பணம், பொருள், செல்வாக்கிற்கு முன்னால் உண்மை மறைக்கப்படுக்கிறது. பிரகாஷ்ராஜை வைத்தே படமெடுத்து வெள்ளித் திரையில் ஜொலிக்க முயற்சிக்கிறார் பிருத்வி.

vellitherai.jpg

முற்றிலும் அக்மார்க் காரியவாதியாக வரும் பிரகாஷ்ராஜ் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முன்னேறுவதற்கான சிந்தாந்தங்கள் தலைகீழாக மாறிவரும் தற்கால மனிதர்களின் பிரதிபலிப்பாக வருகிறார்.

யதார்த்தத்தின் பின்வாசலில் நின்று நல்ல சினிமாவிற்காக காத்திருக்கும் உதவி இயக்குநராக பிருத்விராஜ். ஏமாற்றங்கள் தெரிந்தவுடன் வாழ்க்கையின் நெளிவு சுழிவுகள் புரிந்து சாதிக்க முயலும் உத்வேகம் நாணலாய் கூன வேண்டாம் ஆனால் மூங்கிலாய் நிமிர்ந்தும் நின்றால் முன்னேற முடியாது என்பதை திரைக்கதையோடு பிராயணித்து நம்மில் பதிந்தி விடுகிறார் பிருத்விராஜ். இயல்பிற்கு மீறிய நடிப்பினை காட்டாமல் அழகுற செய்திருக்கிறார்.

ரீலுக்கு ரீல் அழுமூஞ்சியாகவே வரும் கோபிகா பாவம். நல்ல இல்லறத்திற்காக ஏங்கியும், கணவனுக்காக பிரிந்திருக்கும் முடிவும் அழுத்தமாக சொல்லப்பட வாய்ப்பில்லையெனினும் மனதில் நிற்கிறார்.

ஒரு நடிகனின் மேனஜராக எம்.எஸ் பாஸ்கர் பண்ணும் அடாவடிகளும், சினிமாவின் பல்ஸ் தெரிந்த உதவி இயக்குநராக வரும் சார்லியும் அசத்தியிருக்கிறார்கள். லட்சுமி ராய் மற்றும் பிருத்வியின் தோழனாக வரும் “முஸ்தபாபாத்திரமும் மனதில் நிற்கிறது.

பாலித்தீவினை அந்த அகலமான வெள்ளித்திரையில் அற்புதமாக காட்டியிருக்கிறார்கள் பன்னீர் செல்வமும் கேவி குகனும். ஒரு படத்திற்கு இரண்டு கேமிராமேன்களா! என தோன்றும் போதே இரு வெவ்வேறு பின்புலங்களில் தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள். இந்த மாதிரி அழுமூஞ்சி வசனங்களுக்கெல்லாம் இப்போ ஆடியன்ஸ் ஒடிடுறாங்க என பிருத்வி ஓரிடத்தில் பேசுகிறார். இதை யாராவது படத்தொகுப்பு செய்திருக்கும் காசி விஸ்வநாதனுக்கு முதலிலேயெ போட்டுக்காட்டியிருக்கலாமோ. மற்ற இடங்களில் இயல்பான கதையோட்டத்திற்காக கத்திரியை சரியாக வெட்டியவர் பிருத்வி – கோபிகா சோகக் காட்சிகளை கொஞ்சம் கை வைத்திருக்கலாம். சின்னத்திரை சீரியல் மாதிரி ஆகிவிடுகிறது.

டைட்டில் இசையிலும் சரி பாடல்களிலும் சரி பிரமாதப் படுத்தியிருக்கிறார் ஜிவி பிராஷ்குமார். கதையோட்டத்தில் பின்ணணி இசை எப்படி பிராயணப்பட்டது என்றே தெரியாத அளவிற்கு காட்சிகளுக்கு உதவி இருக்கிறார்.

சில நல்ல படங்களின் வசனகர்த்தாவாக அறியப்பட்ட இயக்குநர் விஜியின் கன்னி முயற்சிக்கு வாழ்த்துக்கள். இதிலும் வசனங்கள் மிளிர்கின்றன. “பிரபலமாகிட்டா என்ன வேண்டுமென்றாலும் பேசாலாமா; இதெயெல்லாம் மக்கள் கேட்கிறாங்களா; இல்ல சகிச்சிக்கிறாங்களாஉட்பட சினிமாவின் கறுப்பு பக்கங்களை போகிற போக்கில் புரட்டிப் போடுகிறார்.

தாறுமாறாக பேசும் பிரகாஷ்ராஜை தவிர எல்லா பாத்திரங்களும் அதன் இயல்பில் பயணித்தாலும் பிரகாஷ் ராஜ் உட்பட அனைவரிடமும் லேசான மந்த உணர்ச்சி தோன்றுகிறது.

தெரிந்த வழித்தடங்களிலேயே கதை பயணித்தாலும் ஒரு எதிர்பார்ப்பிற்காக ஆடியன்ஸ் உட்கார வைத்திட்ட காட்சி வரிசைகள் ஏமாற்றமில்லாமல் கிளைமாக்ஸை தருகின்றன. இருந்தாலும் தியேட்டரில் கொறிக்கும் போது மட்டுமே ஞாபகமிருக்கும் பாப்கார்ன் போல் மனதில் தங்காத காட்சிகளால்

வெள்ளித் திரை – வெளிச்சம் போதவில்லை.


 

சுஜாதா – நவீன தமிழ் உரைநடையின் தலைமகன் மார்ச் 8, 2008

Posted by M Sheik Uduman Ali in Articles.
Tags:
add a comment

எளிமையான எழுத்துக்கள்

ஆனால் வலிமையான வார்த்தைகள்.

இவரது நவீன உரைநடை பாணி பலரையும் கவர்ந்திழுத்த காந்தம்.  தமிழ் பேசவே தயங்கும் இன்றைய தலைமுறைக்கு இவரது எழுத்துக்கள் புதிய பார்வையையும்,  பேசவும் எழுதவும் தைரியத்தையும் கொடுத்தது என்றால்  அது மிகையாகது.

 எளியோனுக்கும் புரிகிற வகையில் குவாண்டம் பிஸிக்ஸ், கணிணி என அறிவியலின்  குழப்பமான எல்லைகளை சுலபமாக விளக்குபவர்.

நினைத்த கருத்தை  நெத்தி பொட்டில் அடித்த மாதிரி சொல்பவர்.

யாமறிந்தவரை  இவரது  எழுத்துக்களில் இன, மத, மொழி துவேஷங்களை  தூவலாக செருகியோ, மறைமுகமாக மற்றாரை துவேஷித்தோ  கண்டது கிடையாது.

ஆன்மிகத்தை  துவேஷத்தப்படுத்தியது கிடையாது.

 எனக்கான எழுத்தின் இன்ஸ்பிரேஷன்  சுஜாதா.  பலருக்கும் முன்மாதிரி போல.

அரசியலாகவும்,  மதுக்கடைகளில் தழும்பலாகவும் மாறிவரும் சில அல்லது பல தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில்

சுஜாதா  தி லெஜன்ட்.