jump to navigation

அறையின் எண் 305ல் கடவுள் ஏப்ரல் 28, 2008

Posted by M Sheik Uduman Ali in Reviews.
Tags: ,
4 comments

மதிப்பிற்குரிய இயக்குநர் சிம்புதேவன் அவர்களுக்கு முதலில் ஒரு விண்ணப்பம். மற்ற அரை வேக்காட்டுத்தனமான சினிமாக்கள் மாதிரியே சாஃப்ட்வேர் துறையைப் பற்றியும் அதில் குறுகிய காலத்தில் பெரும் பணம் ஈட்டும் இளைஞர்களை பற்றியுமான கிண்டல் தொனியை தாங்களுமா எடுத்துக் கொண்டீர்கள்.

200% வரை லாபம் வைத்து விற்கும் அல்லது ஏமாற்றும் மருந்து வியாபாரிகளோ, ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரைக்கான ஒரு படத்திற்கு சில பல கோடிகளை சம்பளமாக வாங்கும் கதாநாயகர்களோ, இன்னும் நிறைய நிறைய கொழுத்த முதலைகளை உங்கள் கலைக் கண்களுக்கு தெரியவில்லையா என்ன?

மற்றபடி சாஃப்ட்வேர் துறையின் நிஜமான சவால்களை பற்றி ஒரு தனி பிளாக்காக எழுதலாம்.  ஒரு குத்துப்பாட்டு வைப்பது மாதிரி  அவ்வளவு எளிதல்ல சாஃப்ட்வேர் டெவெலப்மென்ட்.  இன்னும் பல அரசாங்க நிறுவன அதிகாரிகளே இதற்கு நிகராக சம்பளம் வாங்குகிறார்கள் என்பது பாவம் சிம்புதேவனுக்கும் தெரியவில்லை.  சரி விசயத்திற்கு வருவோம்.

அறிமுகக் காட்சியிலேயே கதைக் களத்தையும் கதாபாத்திரங்களையும் மிகவும் நேர்த்தியாக நேரேட்டிவாகவும் நேரடியாகவும் சொல்லி அசத்தி விடுகிறார்கள். மெல்ல எந்த புள்ளியை நோக்கி கதை நகரப்போகிறது என்ற எதிர்பார்ப்புடன் இருக்க திடீரென கடவுள் சந்தானம் மற்றும் கருப்புக்கு காட்சியளிக்கிறார். வழக்கம் போல ரொம்ப மென்மையாக மடிப்பு கலையாத வெள்ளை குர்தாவில் கடவுளாக பிரகாஷ்ராஜ். ஏனப்பு, கடவுள் டீக்காக கோர்ட், சூட் போட்டெல்லாம் வரமாட்டாரா என்ன?! தங்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் கடவுள் தான் காரணம் என்று திட்டித் தீர்க்கும் சந்தானம் மற்றும் கருப்பு கூட்டணியிடம் பண உதவி செய்ய மாட்டேன், நான் கடவுள் என்று யாரிடமும் சொல்லக் கூடாது என்ற இரண்டு அக்ரிமெண்ட் போட்டு “மாரல் சப்போர்ட் செய்கிறார். இதை சுற்றிய சம்பவங்கள் தான் படம்.
கடவுளாக ரொம்ப ஸாஃப்ட்டாக பிரகாஷ்ராஜ் நடிப்பது ஏனோ அவ்வளவு ஒட்டவில்லை. அவரை ஒரு சாதாரண மனிதராகவேத் தான் கற்பனை செய்ய முடிகிறது.

மஞ்சள் தண்ணி தெளித்து விட்ட ஆட்டுக்குட்டிகள் மாதிரியே நிற்கிறார்கள் சந்தானமும் கஞ்சா கருப்பும். இதனால் இவர்களின் டிபிக்கல் ஹூயூமர் சென்ஸ் கூட எடுபடாமல் போகிறது. இதைத் தவிர ஒரு டஜன் பாத்திரங்கள் திரைக்கதையை நகர்த்த உதவுகின்றன.


கடவுளின் மைக்ரோ மற்று மேக்ரோ தத்துவத்தை சந்தானத்தையும் கருப்பையும் கொசுவை விட சின்னதாக்கி விசுவலாக சொன்ன விதத்திலும், நாத்திகவாதியான ராஜேஷுடன் கடவுளைப் பற்றிய சித்தாந்தத்தை விளக்கும் வசனங்களும் சிம்புதேவனை அடையாளம் காட்டுகின்றன. இரண்டு காமெடி ஆக்டெர்களை வைத்து படம் பண்ணிய தைரியத்திற்கு பாராட்டலாம். அப்பாடா! நல்லவேளையாக கடவுள் இந்து சாமியாகவோ, இல்லை இயேசு சாமியாகவோ இல்லாமல் பொதுவாக காட்டியதற்கு நன்றி. கடவுள் சர்ச்சையான பல விசயங்களை பேசாமல் எஸ்கேப் ஆகிவிடுகிறார்.

வித்யாசாகரின் எளிமையான இசைக்கோப்பில் பாடல்கள் லயிக்க வைக்கின்றன. அதிலும் கேட்டது தான் என்றாலும் “குறை ஒன்றும் இல்லை பாடல் மனதை உருக்குகிறது.

கடவுள் கான்ஸப்டை கையிலெடுத்தவர் திரைக்கதையில் இன்னும் ஆழமான காட்சிகளை புகுத்தி இவரின் டிரேட்மார்க் காமெடி மூலமாகவும், கொஞ்சூண்டு மெஸேஜ்களாலும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கலாம். சாமிகளின் திருவிளையாடல்களை விளக்கும் பழைய கால சினிமாக்களில் வரும் சுவாரஸ்யம் கூட இதில் மிஸ்ஸிங். அதிலும் வழக்கம் போல கடவுளுக்கே மொபைல் போன் போல அனைத்தையும் கன்ட்ரோல் செய்யும் ஒரு கேஜட்டை கொடுத்திருக்கிறார்கள். இதை திருடி விட்டு எஸ்கேப் ஆகும் சந்தானம், கருப்பு சம்பந்தமான காட்சிகளும் திருப்பங்களும் சஹாரா போல வறட்சியென்றால் பிரகாஷ்ராஜ் சம்பந்தமான காட்சிகள் ஆழமான புரிதல்கள் இல்லாமல் வழவழ அட்வைஸ் அரங்கமாக மாறிவிடுகிறது. இதனால் சில சிவப்பு சிந்தாந்தங்களும் யதார்த்தமான அட்வைஸ்களும் லேசாக கடந்து விடுகின்றன.

இருந்தாலும் இரண்டரை மணி நேரம் நம்மை சீட்டில் உட்கார்ந்து பார்க்க வைக்க முடிகிற அளவிற்கு வழக்கமான ஆக்சன் மற்றும் காதல் சினிமாக்களிலிருந்து விலகி கதை சொன்ன அழகிற்கு சிம்பு தேவனை பாராட்டலாம். குறையொன்றும் இல்லை…

அறை எண் 305ல் – கொஞ்சம் கொசுத் தொல்லை.

யாரடி நீ மோகினி – விமர்சனம் ஏப்ரல் 15, 2008

Posted by M Sheik Uduman Ali in Reviews.
Tags: ,
2 comments

அபத்தங்களின் அழகான(?) கூட்டாஞ்சோறு இந்த மோகினி(ப் பிசாசு).

நயன்தாரா விரும்பி ஏற்றுக் கொண்ட நிச்சயதார்த்தம். சந்தடியில் தனுஷ் புகுந்து நீ என்னை காதலிக்கிறது உன் கண்களில் தெரிகிறது என்கிறார். அது எப்படியோ தெரியவில்லை ஹீரோயினுக்கே தெரியாத காதலை டெலிபதி மூலம் கோடம்பாக்கம் ஹீரோக்கள் மட்டும் எப்படி தான் கண்டுபிடிக்கிறார்களோ?!

தனுஷின் காதலுக்காக பரிந்து பேச வரும் ரகுவரனை நயன்தாரா திட்டி அனுப்பும் காட்சிகளும் அதன் பின் வரும் திரைக்கதை திருப்பங்களும் அடக் கடவுளே!

எல்லாவற்றையும் இழந்து நிற்கும் தனுஷை தன் திருமணத்திற்காக திருநெல்வேலி கூட்டி செல்கிறான் நண்பன். அவன் திருமணம் செய்யப் போகும் பெண் நயன்தாரா என்ற அதிர்ச்சியான(!) ட்விஸ்ட். சொந்த அத்தை மகள்.

தனுஷின் நண்பனாக வரும் கார்த்திக்குமார் தான் பாவம். “அலைபாயுதே”விலிருந்தே இவர்  பெண்களாலும் திருமணங்களாலும் ஏமாற்றப்படும் அபலைப் பையனாக வந்து “உச் உச்” கொட்ட வைக்கிறார்.

ஆச்சாரமான அந்தக் குடும்பத்தினரின் மனதில் தனுஷ் இடம் பிடிக்கும் காட்சிகள் இருக்கிறதே, திரையுலகிற்கு ரொம்ப புதுசு கண்ணா புதுசு. சாம்பிளுக்கு இதோ!

  • ஊர் பெரியவரான தனுஷ் நண்பனின் தாத்தாவை ஒரு கோயில் திருவிழாவில் திடீரென புகும் வில்லன் “டேய் நீ மட்டும் இடத்த தரலை; உங்க வீட்டு பொம்பளங்கள….!! என்கிறான். இவர்களை துவம்சம் பண்ணுகிறார் தனுஷ். தாத்தா மனதில் இடம்.
  • திடீரென சாகக் கிடக்கும் பாட்டியை ஒற்றை ஆளாய் உட்கார்ந்து உயிரூட்டுகிறார் தனுஷ். பாட்டி & குடும்பத்தினரின் மனதில் இடம்.
  • பசிக்கிறது சாப்பாடு கிடைக்குமா என குடும்பத்தினரிடம் தனுஷ் கேட்க ஒரு ஸ்வீட் ஸ்டாலையே கொட்டி பசியாற வைக்கிறது குடும்பம். (அனாதை என்ற சென்டிமென்ட் வேறு)
  • தன்னை டாவு விட்டு காதலிக்கும் நயன்தாரா தங்கையை பொறுப்பான டயலாக்குகள் பேசி திருத்துகிறார் தனுஷ்

இப்படி நிறையங்கோ!

இதெல்லாம் விட ஏராளமான அபத்தங்களும் அருவருப்பு அம்சங்களும் உண்டு.

தனக்கு பாட சங்கோஷமாக இருக்கிறது என தன் வருங்கால மனைவியை வர்ணித்துப் பாட தனுஷை கோரும் நண்பன். அதை ரசிக்கும் ஒட்டு மொத்த குடும்பம்.

கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் தனுஷை தன் மார்போடு உரசிப் பார்க்கும் நயன்தாராவின் தங்கை. போதாதென்று ஒரு முதலிரவு கனவுப்பாட்டு வேறு.

ஹைய்யோ ஹைய்யோ! எழுத்து செல்வராகவனாம். ஆங்காங்கே தக்கனூண்டு தெரிகிறார் என்றாலும் நம்ப முடியவில்லை. விக்ரமனின் பாதிப்புகள் நிறைய நிறைய. ஆனால் அவராவது கண்ணியமாகக் காட்டுவார்.

தனுஷிற்கு ஒரே லக். நயன்தாராவை அருகில் இருந்து மோப்பம் பிடித்தது.  ஆனாலும் இவருக்கு அக்கா மாதிரி இருக்கிறார்.
சாப்ட்வேர் கம்பெனியை சுற்றிய அந்த கதை முடிச்சு ஏன் என்று தெரியவில்லை. அக்மார்க் சினிமாத்தனம் தான் தெரிகிறது.

ஒரே பயம் இனிமேல் வரிசையாக அபத்தமான பல்வேறு காதல்களை உருக உருக சொல்லும் சீஸன் கோடம்பாக்கத்திற்கு திரும்ப வந்து விடுமோ என்பது தான்.

யாரடி நீ மோகினி – இருட்டில் பிடித்த கொழுக்கட்டை