குருவி மே 9, 2008
Posted by M Sheik Uduman Ali in Reviews.Tags: குருவி, Kuruvi
1 comment so far
விஜய்: அண்ணா! தரணி அண்ணா. தூளா ஒரு படம் பண்ணிரலாம்னா. பத்து நிமிஷத்திற்கு ஒரு ஃபைட்டு, கால் மணி நேரத்திற்கு ஒரு ஸாங்க். அப்புறம், ஆந்திராவுல மகேஷ் பாபு பாத்தீங்களாண்ணா! அவர் பாணியிலேயே இருக்கட்டும்னா. சும்மா இந்த பயலுக டப்பிங் படமாவே எடுக்குறாண்டானு நாக்கு மேல நங்கூரம் போட்டு பேசுறானுங்க.
தரணி: விஜய், ரொம்ப கஷ்டப்பட வேண்டாம், கதையோட டர்னிங் பாயிண்ட ஆந்திராவுலேயே வச்சுக்கலாம். அப்பத்தான் சும்ம சூடு பறக்கும். அப்புறமா, நம்ம பசங்க அண்ணா, பில்லா பட டீமே மலேசியாவுல டேரா போட்டாங்கண்ணா. நம்மளும் ஒரு வாட்டி போகலாம்ணானு சொன்னானுங்க. முக்கியமான காட்சி ஒண்ண அங்க வச்சுக்கலாம்.
விஜய்: ஓகேணா. கிளப்பிரலாம். அண்ணா அப்படியே கொஞ்சம் திருப்பாச்சி, கில்லி முக்கியமா நான் த்ரிஷாவை பிடிச்சுக்கிட்டு ஓடுற மாதிரி சேஸிங் சீன் எல்லாம் நல்லா திங் பண்ணுங்கணா!
இப்படித்தான் ஆரம்பித்திருக்கும் குருவியின் “ஸ்கோப்பிங்” அல்லது டிஸ்கஷன்.
ஒரு பக்கம் ரேஸ் நடக்க இன்னும் ஐந்து நிமிடங்கள். நம்ம தளபதியோ இன்னும் இன்ட்ரோவே கொடுக்கல. என்ன நடக்குமோ என்று பரபரப்பாக ஆரம்பக் காட்சிகள் இருக்கும் என்று தானே நினைத்தீர்கள். அது தான் இல்லை. ரொம்ப ரிலாக்ஸாக கார்ப்பரேஷன் செப்டிக் டேங்கோ அல்லது தண்ணி கிடங்கோ தெரியல அதோட மூடியை வீசி தண்ணீர் பீய்ச்ச நம்மாளு இன்ட்ரோ கொடுக்கிறார். அப்புறம் ரொம்ப ரிலாக்ஸா பேமிலி பேக்ரவுண்டை படத்தோட இணைந்த அல்லது பிணைந்த டயலாக்குகள் மூலமாக விளக்குகிறார். போதாதென்று, முதலில் வில்லன் & கோவின் அறிமுகங்களை சுமன் தன் பங்கிற்கு டயலாக்குகளிலேயே விளக்குகிறார். அப்புறம் அந்த கார் ரேஸிற்கு வருகிறார் நம்ம ஹீரோ. காயலான் கடைக்கு போடுற மாதிரி ஒரு கார வச்சுக்கிட்டு ஐயா ஜெயிக்குற கொடுமை இருக்குதே… போதும்டா என்றால் உடனே மாளவிகாவுடன் ஒரு பாட்டு. அதிகமாக அந்த பாட்டிற்கு உழைத்திருக்கிறார் விஜய். ஆனாலும் ரொம்ப அமெச்சூர்த்தனமாகவே இருக்கிறது.
சரி தொலைஞ்சோம்டா என்று நினைக்கும் போது அப்பா… கடன்… கொத்தடிமை… ஐம்பது லட்சம் ரூபாய் செக்…என சூடு பிடிக்கிறது கதை.
அதுவரை அம்மூஞ்சியாக இருக்கும் விஜய் பரபரப்பாக பட்டையை கிளப்ப ஆரம்பிக்கிறார். குருவியாக மலேசியாவிற்கு பறக்கும் விஜய் சுமன் வீட்டில் டைமண்ட் திருடுவதும், அதைச் சுற்றிய த்ரிஷாவின் ரொமான்ஸ் காட்சிகளும் சூடான வெயிலுக்கு கிர்னி ஜூஸ் என்றால், சென்னையில் விஜயோடு த்ரிஷா அடிக்கும் லூட்டிகள் ஜில் ஜில் ஜிகிர்தண்டா.
ஆக்ரோஷமான பார்வை, அதிரடியான சண்டை, லேசான குறும்பு, சூப்பரான டான்ஸ் என விஜய் அக்மார்க் கரம் மசால் ஸ்டாராக கிளப்புகிறார். டயலாக்குகளையும் குறைத்திருக்கிறார்.
அட என்ன இது த்ரிஷா. கறுப்பாக, குவிந்த மூஞ்சியுமாக. அப்படியே ஷாக்காகிட்டேன். கொஞ்சம் காஸ்ட்யூம்ஸ், மேக்கப்பில் கவனம் செலுத்துங்க அம்மணி. ஆனால், கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் விஜய்யோடு இவர் அடிக்கும் லூட்டிகள் சூப்பர் பெப்பி.
முன்பாதியில் விஜய்க்கு நல்ல துணையாக கலகலப்பாக வரும் விவேக் பின்பாதியில் அப்பீட் ஆகிறார். சிவாஜியின் ரஜினி கெட்டப்பில் சுமனும், கொண்டா ரெட்டியாக ஆஷிஷிம் வருகிறார்கள். எல்லா சினிமா வில்லன்களும் செய்யும் அதே கெட்டதை செய்கின்றனர்.
“பல்லானது“, “தேன் தேன்“ என தரணியின் பாசறையில் வித்யாசாகர் ரகளை பண்ணியிருக்கிறார். இசையை கட்டுக்கோப்பாகவெல்லாம் பார்க்காமல் காட்டுத்தனமாக அடித்திருக்கிறார். அதுவும் “குருவி குருவி அடிச்சா“ பாட்டு. எகிறுதுன்னாவ்.
அட, பிரியாணி தான் என்று முடிவு பண்ணிய பிறகு தயிர் சாதம், ஊறுகாய் என்றெல்லாம் குழப்பிக்காமல் விறுவிறுவென படத்தை நகர்த்தியிருக்கிறார் தரணி.
முன்ன பின்ன தெரியாத ஊர்ல வில்லன் கும்பல் சரவுண்ட் பண்ணவும் எப்படி ஹீரோவுக்கு ட்ரெயின் வரும்னு தெரிஞ்சு டயலாக் விடுறார்; தண்ணிக்குள்ள இருந்து எப்படி தப்பிச்சு வருகிறார்; எப்படி ஒத்த ஆளா எல்லாத்தையும் சாய்க்கிறார் அப்படினு லாஜிக் பார்க்காமல் அப்படியே தெலுங்கு பக்கம் போய் நிறைய மசாலா சேர்த்து காரமாக சாப்பிட நீங்கள் ரெடியென்றால்
குருவி – சூடான ஹைதராபாத் பிரியாணி