மாநகரப் பேருந்தும் சில பயணங்களும் ஜூன் 29, 2008
Posted by M Sheik Uduman Ali in Reviews.3 comments
உயர உயரப் பறக்கும் எண்ணெய் விலையேறறத்தைப் பார்த்தால் இனி மாநகரப் பேருந்து பயணமே மகத்தானது என்றவொரு முடிவுக்கு வந்துவர்கள் நிறைய பேர் என்று நினைக்கின்றேன். ஆனால், இப்பயணம் ஒன்றும் அவ்வளவு லேசுப்பட்டதல்ல. உங்கள் பர்ஸுகளையோ பொருட்களையோ அடிபோட காத்திருக்கும் திருட்டுக் கும்பல் ஒருபுறமிருக்க, எப்படா வெட்டிச்சண்டை இழுக்கலாம் என்றலட்சியத்துடன்காத்திருக்கும் வீரக்குலச்சிங்கள் ஒருபுறம்.
சில பயணங்கள் ஹைலைட்டான காமெடி ஷோவாகவோ, சில பயணங்கள் நம்மையே காமெடியனாகவோ ஆக்கிவிடுவதுண்டு.
சமீபத்தில் இப்படிதான், பிதுங்கிவழியும் கூட்டத்தோடுவந்தது நான் பயணம் செய்யவேண்டிய பேருந்து. ஏறவா வேண்டாமா என்றகுழப்பதோடுவழியில் நின்றதில் என்னை குண்டுக்கட்டாக உள்ளே தூக்கிவிட்டிருந்தார்கள். அட, இதுவும் நல்லாயிருக்கிறதே என்று வியந்தேன். உள்ளே வந்த பிறகு தான் தெரிந்தது படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு தம்பி பஸ்ஸை பேலன்ஸ் செய்ய அப்படிதொங்கவில்லை என்று. ஏனெனில், இந்த ஸ்டாப்பில் ஏறிய எனக்கே உள்ள மூச்சுவிட இடம் இருக்கிற போது அந்த தம்பி எப்போது ஏறியதோ?
நீண்ட சிக்னல் காத்திருப்பில் பஸ் நிற்கும்போது கையோடு அதீதமான இங்கிலீஷ் அறிவோ இல்லை அதிகமான பீட்டரோ விடத்தெரியும் என்றால் ஹிண்டு கிராஸ்வேர்ட், இல்லை குமுதம், ஆனந்தவிகடன் என்று எதையாவது வாங்கிக் கொள்ளவும். உங்கள் பொறுமையை சிரஞ்சீவியாக்கும் ஷார்ட்கர்ட் இது. இன்னும் நிறைய சொல்லலாம். பாவம் இந்த டிரைவர் தான். நல்ல அழகாத்தான் ஓரங்கட்டி நின்றிருப்பார். பேருந்தின் முன்பக்கத்தை சுற்றிச் சூழ அவசரமா ஒன்னுக்கு போறவன் மாதிரி டூவீலர் பயபுள்ளகய பண்ணுற அட்டூழியம் இருக்கே. ஒருத்தன் 90 டிகிரி நேரே பஸ்ஸுக்கு முன்னாடி நின்னா, இப்பத்தான் பைக்கு வாங்கிய இன்னொரு டூவீலர் டூபாக்கூர் ஒரு 60 டிகிரி சாய்மானத்துல நிப்பாட்டும். இந்த கேப்ப பில்லப் பண்ண இன்னொரு சாகஸப்புலி ஓடி வரும். இதெல்லாம் ஏதோ பத்து பதினைந்து நிமிடம் நடக்குதோன்னு நினைச்சா அது தப்பு. எல்லாமே ஒரு முப்பது இல்லை அறுபது செகண்டுகளுக்கு நடக்குற சர்வைவல் பிரச்சனை.
இதுல ஆட்டோக்காரர்கள் பண்ணுகிற அலம்பல் இருக்கிறதே. அவ்வளவு சைஸ் வண்டிய குறுக்காலேயும் நெடுக்காலயும் விட்டு பஸ்ஸை சுற்றி ஒரு லேயரே அமைந்து விடுவதுண்டு. சிக்னல் போட்டதும் நம்ம பஸ்டிரைவர் வண்டிய நகர்த்துறத்துக்கு படுற பாடு இருக்குதே அப்பாடா. அட அதற்காக இவங்க ஏதோ பாவம்னு நினைச்சுடாதீங்க. இடக்காலே இருந்து வடக்காலே 40 டிகிரியிலேயே இவங்க பஸ்ஸை திருப்புறஸ்டைலில் டூவீலர்ல போற பொது ஜனம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். சரி கதைக்கு வருவோம், அவ்வளவு நேரக் காத்திருப்பிற்கு பிறகு சரி சிக்னல் விழுந்து தொலைந்ததேனு நினைச்சா நம்ம பஸ்ஸ சுற்றி நிக்கிறஆட்டோவும்டூவீலரும் போறதுக்குள்ள சிக்னல் விழுந்துடுமோனு ஒரு பதட்டம் வரும் பாருங்க. அப்பத்தான் ஒரு டூவீலர் பேக்கு லெஃப்ட் எடுக்கும். அட போங்கப்பா, கரெக்டா, கிராஸ் பண்ணும்போது ரெட் சிக்னல். இன்னொருமுறை அதே மாதிரி ஆட்டோ, அதே மாதிரி டூவீலர். எண்ணிக்கை கொஞ்சம் குறைவாக.
சரின்னு கிளம்பி அடுத்த ஸ்டாப்பிங்கில் நின்னால் இன்னும் ஒரு வண்டி ஜனம் ஏறும். அன்னிக்கு அப்படித்தாங்க, இதே மாதிரி கூட்டம். நடத்துனர் டிக்கெட் போட வண்டிய ஓரங்கட்டிட்டார். அப்பத்தான் ஏறிய ஒரு அறுபத்தைந்து வயசு பெரிய குடிமகன், நீ ஏன் நைனா, கவலைப்படுற டிக்கெட் எடுக்கலைனா எடுக்காதவந்தான் கஷ்டப்படனும். நீ வண்டிய கிளப்பு அப்படினு தன்னோட புத்திசாலித்தனத்த காட்டுச்சு. நடத்துனர் இதைக் கண்டுக்காமே டிக்கெட் கேட்டு கூவினார். பெருசா புலம்புச்சா, இல்ல உள்ள ஊத்துன சரக்கானு தெரியல, பெருசு அதையே மங்களமா பாடுச்சு. கம்முனு கிடனு நடத்துனர் சொல்லவும், ஏப்பா எனக்கு என்ன வயசாச்சு “வா, போ”னு சொல்றியேனு பெருசுக்கு ஒரே சோகம். போதாதுனு, நானும் முன்னாடி ஒரு சென்ட்ரல் கவெர்மென்ட் சர்வன்ட்டுப்பா, ரெஸ்பெக்ட் கொடுனு சொல்லிச்சு. நிக்கிற நமக்கே அது மேல காண்டு வந்ததுனா நடத்துனர். பாவம் அப்பவும் என்ன டிப்பார்மென்ட்டுனு கேட்டார். “ஸ்வீப்பர்” அப்படினு பெருசு சொல்லி தான் வேலைக்குச் சேர்ந்த நாள், நட்சத்திரம், அப்ப இருந்த அரிசி விலை எல்லாம் சொல்லி விஜயகாந்த்தையே தாண்டிருச்சு. நடத்துனர் என்னவாகிருப்பார்னு நீங்களே யூகிச்சுகோங்க.
இது இப்படினா, இன்னொரு நாள், கூட்டம் குறைவாகவே இருந்தாலும் ஒரு நடத்துனர் பெவிக்கால் போட்டு ஒட்டுன மாதிரியே உக்கார்ந்து டிரைவர்க்கு பக்கத்துலே நிக்கிறவங்கல ஆரம்பிச்சு அவரு பக்கம் நிக்கிறவங்க வரைக்கும் டிக்கெட்டை “பாஸிங்” முறையில் கேட்டுச்சு. போகப்போக கூட்டம் நெருசலாகி மூச்சிவிடவே இடமில்லாத போது நம்மாளு சிம்மாசனத்த விட்டு இறங்கவே இல்லை. ஒரு அக்கா முன்னாடி நின்னு இரண்டு தடவை கூவியும் நம்மாளு “ம்ம்ம்”. கொடுத்துவிடுமா நிக்கிறவங்ககிட்டனு சொன்னார். ஆனா, எவ்வளவு நேரம் தான் நிக்கிற எல்லாரும் கண்டெக்டர் வேலையோ அல்லது கன்டெக்டருக்காவோ வேலைப்பார்க்கிறது. ஒருத்தரும் மசியல. அந்தம்மா சிம்பிளா கேட்டுச்சு “வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சமாவது எழுந்து வாயா”. இதுக்கு மேலேயும் நம்மாளு.. ம்ம்ம்ம். அசரல, ஒருவேளை உண்மையிலேயே பெவிகால் இருக்குமோ.
இந்த கேப்புல ஒரு சிறுசு, சார் மேலப்படுதல, அப்பக்கூட நீங்க என் ஷூ கால மிதிச்சீங்க, ஒரு எக்ஸ்யூஸ் கூட கேக்கலனு திமிருச்சு. லேசா செருமி முறைந்து பார்த்து இங்க பாரு என் பக்கத்துல நிக்குதே ஒண்ணு அது ஏம்மேலத்தான் சாய்ஞ்ச்சுக் கிடந்து யாருக்கிட்டேயோ கடல போடுது. அதுக்காக குத்துதே குடையுதேனா சொகுசா காரு வாங்கி அதுல போடானு சொன்னேன். அப்பப்பார்ந்து டிரைவர் போட்ட பிரக்குலெ அந்த பேக்கு ஏம்மேல சாய, அவ்வளவு தான் ஒரு இரண்டு தள்ளி ஓடிப்போச்சு.
இப்படி தான் தினம் தோறும், எந்திரமயமாகிப்போன வாழ்வில் சில மைக்ரோ சுவாரஸ்யங்கள். இதெல்லாம் நீங்கள் பேமிலியாக காரில் போகும் போது கிடைக்காது. அதற்காக ஒரு பிரம்மச்சாரி பயணம் மேற்கொண்டு பாருங்கள்.
பயணங்கள் சுவாரஸ்யமானவை
தசாவதாரம் ஜூன் 18, 2008
Posted by M Sheik Uduman Ali in Reviews.Tags: தசாவதாரம், dasavatharam
5 comments
பிரேசிலில் ஒரு வண்ணத்துப்பூச்சி சிறகடித்துப் பறந்தால் டெக்ஸாஸில் டொரண்டோ வர வாய்ப்பிருக்கிறதா? என்ன பிசிறு பிடித்திருக்கென்று நினைக்கின்றீர்களோ? இதற்கு பெயர் தான் கயாஷ் தியரி (பட்டர்பிளை விளைவு என்றும் அழைப்பர். நன்றி http://en.wikipedia.org/wiki/Chaos_theory) . மிகவும் சென்ஸிடிவான எந்தவொரு நிகழ்வுகளும் அதன் ஆரம்ப நிலைகளில் மிகச்சிறிய மாற்றத்தை சந்தித்தாலும் விளைவுகள் பெரிதாக இருக்கும். இந்த மாதிரி கயாஷ் நிகழ்வுகள் ஒன்றிற்கொன்று சம்பந்தமுடையதாக இருக்கும். ஆச்சா! இதை தான் ஆன்மிகத்தில் ஒவ்வொரு நிகழ்வுகளையும் இறைவன் ஏதோவொரு வகையில் தொடர்புள்ளவைகளாக ஆக்கி வைத்திருக்கின்றான் என்று கூறுகின்றோம். கமலின் தசாவதாரமும் இதை மையப்படுத்தி தான்.
இதையெல்லாம் தாண்டி பிடித்த விசயம் மணல் கொள்ளை விவகாரத்தை ரத்தமும் சதையுமாக கமல் சொன்ன அழகு. ஆற்றங்கரை உள்ள ஊர்களுக்கு சென்று பாருங்கள். ஆற்று மணலை சூறையாடியதன் கோரம் தெரியும்.
சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையே நடந்த 12ம் நூற்றாண்டு சண்டையில் ஆரம்பிக்கும் இந்த பட்டர்பிளை நிகழ்வு பயோ வெபன் (அதுதாங்க உயிரியல் ஆயுதம்), சுனாமி என பெரிய விளைவுகளுடன் முடிகிறது. இந்த இடைவெளியில் பத்து வித அரிதாரங்களில் ஒரு சேஷிங் நிகழ்வை மட்டும் கொண்டு மொத்த படமும் பரந்து விரிந்து நிற்கின்றது. பயேவெபனை கார்கோ விமானத்தில் ஏற்றி முடிக்கிற வரையில் ஹீரோ கமலுக்கும் வில்லன் கமலுக்கும் இடையே நடக்கும் சேஷிங் பரபரப்பு ஹாலிவுட் தரம்.
கமல் தன்னை உலக நாயகன் என்று நிரூபிக்க இனி அவசியமில்லை தான். பத்து விதமான கேரக்டர்களாக திரையில் கோலோச்சும் இவரது நடிப்பு பிரம்பிப்பின் உச்சக் கட்டம். “வெங்கேடஷ் ராவ், நீ தெலுங்கா?” என்று அக்மார்க் ஆந்திரவாசியாக வரும் பல்ராம் நாயுடு கேரக்டர் கலகலப்புடன் நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்கின்றது என்றால் வின்சென்ட் பூவராகன் கேரக்டர் சிலிர்க்க வைக்கின்றது. கறுத்த தேகத்தில் தடித்த வார்த்தைகளில் சாத்வீகத்துடன் இயற்கையை சுரண்டும் மூர்க்கர்களை எதிர்த்து போராடும் மண்ணின் மைந்தன் கேரக்டர். மனதை புரட்டுகிறார். இவையெல்லாம் தாண்டி அட்டகாசமான அமெரிக்க உச்சரிப்புடம் இங்கிலீஷ் பேசும் அமெரிக்க வில்லனாக வரும் கிறிஷ்டியன் ப்ளெட்சர், கலீபுல்லா கான், கிருஷ்ணவேணி பாட்டி இவர்களும் நம் மனதை கொள்ளையடிக்கும் அளவிற்கு உலக நாயகன் நடித்திருத்தும் இவர்களுக்கான அரிதாரங்களில் இருக்கும் செயற்கைத்தன்மையினால் சறுக்கியிருக்கிறார். எல்லோருக்கும் ஏதோ முகத்தில் “மாஸ்க்“ போட்ட மாதிரி இருக்கிறது.
பயோவெபனுடன் ஓடிக்கொண்டிருக்கும் கமலை நச்சுபிடுங்கும் ஆண்டாளாக அசின் அமர்களப்படுத்தியிருக்கிறார். 12ம் நூற்றாண்டு கோதையாகவும் மனதில் நிற்கிறார். அப்புறம் மல்லிகா ஷெராவத். இந்த கவர்ச்சி பிசாசு பண்ணும் வில்லத்தனம் பயமுறுத்துகிறது.
கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் கமல். எங்கேயும் கேரக்டர்களை கொண்டு எந்தவொரு குழப்பமும் இல்லாமல் ஒவ்வொரு கேரக்டர்களையும் அவர் உலவ விட்டிருக்கும் நேர்த்தி அப்பப்பா! பிரமிக்க வைக்கின்றார். எப்போடா இன்டர்வெல் வரும் எப்போடா கிளைமாக்ஸ் வரும் என்று நினைக்க முடியாத அளவிற்கு திரைக்கதையில் இவரின் உழைப்பு நிச்சயம் தேசிய விருதிற்காவது அழைத்துச் செல்ல வேண்டும். ஒரு பக்கம் ஆன்மிகம் சார்ந்த நடுநிலைமையான கருத்து; மற்றொரு புறம் தனது பகுத்தறிவு கேள்வி; மற்றொரு புறம் சுற்றுப்புற சூழலிருக்கும் உண்மையான அக்கறை; அமெரிக்காவை பற்றிய கசப்புணர்வு என வசனங்களில் சிலிர்ப்புகின்றார். “உங்க பெருமாளுக்கு என்ன விட கக்கூஸ் தான் ரொம்ப சுத்தமோ“, “கடவுள் இல்லைனு நான் சொல்லல; இருந்தா நல்லாயிருக்குமேனு சொன்னேன்“, “என்னையா தெலுங்குகாரன் நான் தமிழ் பேசுறேன்; தஞ்சாவூர்காரன் நீ இங்கிலீஷ் பேசுறே – தமிழ உங்கள மாதிரி தெலுங்குகாரங்க வாழ வைப்பாங்கங்கிற நம்பிக்கை தான்“, “சாருக்கு அஞ்சு மொழி தெலுங்கிலேயே தெரியும்“ என்று நிறைய…நிறைய….
ஆனால் எல்லாவற்றையும் விட வின்சென்ட் பூவராகனின் நாகர்கோவில் பேச்சும், கபிலனாக வந்து மணல் கொள்ளையை பாடும் கபிலனின் வரிகளும் இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை. திருஷ்டி பொட்டுகளும் உண்டு. ஜப்பானி கமலும் வில்லன் கமலும் மோதும் போது சின்னப் பிள்ளைத்தனமாக “ஹிரோஷிமா ஞபாகமிருக்கிறதா?… உனக்கு பெர்ல் ஹார்பர் ஞபாகமிருக்கிறதா?“ என்கின்றனர். பல்ராம் நாயுடு “என்ஏஷியெல்“ என்றால் என்ன என்று ஒரு விஞ்ஞானியிடம் கேட்க அந்த மங்குனிக்கு உப்பு என்று கூட சொல்ல தெரியாமல் முழிக்கிறதாம்.
எல்லா சென்டர்களையும் கவர்வதிற்கு சில லாஜிக் பார்க்காத மசலாக்களும் உண்டு. எல்லா இடமும் தெரிந்த மாதிரி சென்னையை மிரட்டி எடுக்கும் அமெரிக்க வில்லன்; அப்படியே பொடி நடையாக நடந்து கிராஸிங்கில் ரயிலில் ஏறும் கமல் & அசின் என சிலக்காட்சிகள்.
காமிரா, பின்ணணி இசை, படத் தொகுப்பு இவை ஒரு சினிமாவின் ஜீவ நாடிகள். இந்தப் படத்தில் “It Happened” என்று சொல்வார்களே. அதே மாதிரி தான். 12ம் நூற்றாண்டு பிரம்பிப்பு முதல் சுனாமி வரை ரவி வர்மனின் காமிரா திரைக்கதை ப்ரசண்ட் செய்ததே தவிர புத்திசாலித்தனத்தை காட்ட முயலவில்லை. அதுவும் அந்த கும்மிருட்டு ஆற்றங்கரை. பிரும்மாண்டமாக இல்லை என்றாலும் தேவையான அளவிற்கு கதையோடு இழைந்த பின்ணணி இசையமைத்திருக்கிறார் தேவி ஸ்ரீபிரசாத். அடுத்து தணிகாசலத்தின் கத்திரி, காட்சிக்கு காட்சி வெட்டித் தைத்து நம்மை படத்தோடு ஒன்ற வைக்கின்றது. வைரமுத்து வாலியின் வரிகளுக்கு உற்சாகமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இசையமைத்திருக்கின்றார் ஹிமேஷ் ரேஷ்மயா. அதுவும் “கல்லை மட்டும் கண்டால்“… அற்புதம்.
பயோ வெபனை விழுங்கும் வில்லன்; சரியாக வரும் சுனாமி; ஐம்பது வருடமாக மகனை தேடும் கிருஷ்ணவேனி பாட்டி மண்ணில் விழுந்து கிடக்கும் பூவராகனை மகன் என்று நினைத்து உடைந்து அழும் காட்சி என கிளைமாக்ஸ் மெய்சிலிர்க்க வைக்கின்றது.
“கமலுக்கு என்ன! ஹாலிவுட் தரமப்பா“ என்று சொல்ல நம்முடைய சினிமாக்களின் வணிக வரம்பு மட்டுமே தடுக்கிறது என்பதற்கு தசாவதாரத்தில் சில உதாரணங்கள் உண்டு. அவை எல்லாமே கோடிகளை நம்பியே இருக்கின்றன.
“பைரேட்ஸ் ஆப் தி கரிபியன்“ தரத்திற்கு கமலின் சில அவதாரங்களுக்கு மேக்கப் வசதி கிடைத்திருந்தால் சிலிர்ப்பாக இருந்திருக்கும்.
சர்வதேச தரத்திலான விசுவல் எபெக்ட்ஸ். ரங்கராஜனை பெருமாள் சிலையோடு கட்டி கடலில் மூழ்கடிக்கும் காட்சியை இன்னும் சில கோடிகள் கிராபிக்ஸில் முதலீடு செய்திருந்தால் அதன் பிரம்மாண்டம் கூடியிருக்கும்.
கலை. 12ம் நூற்றாண்டு செட்டோ இல்லை சுனாமியின் பின் விளைவு காட்சிகளோ இன்னும் சில கோடிப் பணம் போட்டு எடுத்திருந்தால் ஹாலிவுட்டிற்கு “வ்வே“ காட்டியிருக்கலாம்.
என்ன செய்ய, ஹாலிவுட்டில் பிறக்காதது கமலின் கயாஷ் விளைவாகக் கூட இருக்கலாம்.
சில மில்லியன் டாலர்களில் எங்களால் சர்வதேச தரத்திற்கு தரமுடியவில்லை என்றாலும் அரிதாரங்களை பிரித்துப் பார்த்தால்
தசாவதாரம் – கமலின் ஐம்பது வருட சினிமா அனுபவத்தின் அசத்தலான புரபைல்.