jump to navigation

சுப்ரமணியபுரம் – விமர்சனம் ஜூலை 27, 2008

Posted by M Sheik Uduman Ali in Reviews.
Tags: ,
trackback

படம் ரிலீஸாகி நாலு வாரமாகியும் என்னால் பார்க்க முடியவில்லை. ஒன்று பரவலாக தியேட்டர்களில் ரிலீஸாகவில்லை. இன்னொன்று டிக்கெட். நாளையக் காட்சிகளுக்கு இன்றே ஹவுஸ்புல் என்று போர்டு போட்டிருப்பார்கள். ஆனால் பிளாக்கில் கொள்ளை விலை. சரினு முயற்சித்தும் கிடைக்கவில்லை. பிறகு நாலு வாரம் கழித்து “சத்யம், “ஐநாக்ஸ்ல் படம் ரிலீஸ். ம்ம்ம். இதுவே ஒரு சோறு பதம்.

பாலா, அமீர் ஆகியோரின் படைப்புகளில் தமிழ் சினிமாவை வேறோரு தளத்திற்கும் தரத்திற்கும் கொண்டு சென்ற “பிதா மகன், “பருத்தி வீரன்இரண்டுமே மதுரை மண்ணை ஈரத்துடன் இயல்பாக அணுகியவை. இதற்கு மேல் மதுரையை மையமாகக் கொண்ட சினிமா திகட்டி விடும் என்று நினைத்த நேரத்தில் இவர்களின் பட்டறையிலிருந்து சசிக்குமார் என்றொரு படைப்பாளியின் கைவண்ணத்தில் “சுப்ரமணியபுரம்.


உணர்ச்சிவசப்படுதல். இதுதான் மதுரை மற்றும் திருநெல்வேலி மண்ணின் மைந்தர்களிடம் இருக்கும் பொதுவான பழக்கம். இப்படித்தான் என்பதுகளில் உணர்ச்சிக்கும் அறிவுக்கும் உள்ள தூரத்தில் உதவி என்ற எலும்புத் துண்டை போட்டு விட்டு ரொம்ப நாளாக கட்சியில் எந்த பதவியும் பெறமுடியாத படி தன்னை மறித்து நிற்கும் ஒரு மாவட்டத்தை போட்டுத்தள்ள வேலை வெட்டி இல்லாமல் தங்களையே சுற்றி வரும் மூன்று இளைஞர்களை பணிக்கின்றனர் ஒரு முன்னாள் கவுன்சிலரும் அவரது தம்பியும். இளைஞர்களின் உணர்ச்சி ஜெயித்த வேலையில் எக்ஸ் – கவுன்சிலர் தம்பியின் குள்ள நரித்தனம் ஜெயித்திட இன்னொரு பிரபலத்தின் தயவில் ஜெயிலிலிருந்து வெளிவரும் இளைஞர்களுக்கு அந்த பிரபலம் இன்னொரு அசைன்மன்டை கொடுக்க தொடர்கிறது இவர்களின் கொலைப்பணி. எக்ஸையும் அவரது தம்பியையும் போட்டுத்தள்ளுவதே லட்சியமாக திரியும் இவர்களின் உணர்ச்சிகள் நயவஞ்சகத்தில் நசுக்கப்படுவதே “சுப்ரமணியபுரம்.

சென்னை 28ல் ஜொலித்த ஜெய் தான் முக்கிய கதாபாத்திரம். அசட்டுத்தனமாகவும், தலையை வைப்ரேஷன் மோடில் வைத்து காதலில் வழிந்தோடும் நடிப்பும் வெகு ஜோர். தனது கேரியரின் அடுத்த சினிமாவை அழகாக தேர்ந்தெடுத்ததற்கு சபாஷ். மயிரிழையில் உயிர் தப்பி எதிரிகளுக்கு பயந்து ஒதுங்கிய வீட்டிலுள்ள பெண்ணின் காலில் விழுந்து உயிர் பிச்சை கேட்கும் போது பரிதாபம்
காட்ட வைக்கிறார்.

அந்த காலத்தில் பாரதிராஜாவும், பாலச்சந்தரும் தங்கள் கதாநாயகிகளை அறுபது டிகிரி கோணத்தில் கண்களை சாய்வாக்கி படபடக்கும் படி பேச விடுவார்கள். கொஞ்சம் அசெளகரியமாக தோன்றும் இந்த ஸ்டைலை அருமையாக பிரதிபலித்திருக்கிறார் துளசியாக வரும் “சுவாதி. எண்ணி ஒரு பக்கத்திற்குள்ளாகவே இவரது மொத்த டயலாக்குகளுமே முடிந்தாலும் சிரிப்பும் அழுகையுமாக நம்மை ஆர்பரிக்கின்றார்.

எக்ஸ் –கவுன்சிலரின் தம்பியாக வரும் சமுத்திரக்கனியும் சரி; ஜெய் நண்பனாக வரும் இயக்குநர் சசிக்குமாரும் சரி பாத்திரம் அறிந்து அரங்கேறியிருக்கின்றனர். ரொம்பவும் பக்குவமாக சுபாவத்தோடு ஜெய்யின் அவசரத்தனத்தை கட்டுப்படுத்தும் நண்பனாக வரும் சசி மனதை அள்ளுகிறார். அத்தனை கொலைகளையும் செய்து நண்பர்களையும் தொலைத்து சந்தோஷத்தை இழந்து ஆற்றங்கரையில் இவர் புலம்பும் காட்சிகளும் அதைத் தொடர்ந்த கொடூரங்களும் இன்னும் மனதை விட்டு அகலவில்லை.

மதுரை மண்ணென்றால் கஞ்சா கருப்பு ஸ்பெஷல் தான். காசுக்காக பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்யும் இடங்களில் சலசலக்க வைக்கின்றார்.

தங்களை வெட்ட கிளம்பி வரும் கும்பலிடமிருந்து ஜெய்யும், கஞ்சா கருப்பும் மூலை முடுக்கெல்லாம் ஓடும் போது சடேலென நினைவுக்கு வருகின்றார் எஸ்.ஆர்.கதிர். சுப்ரமணியபுரத்தை தன் கேமிராவால் உயிரூட்டியவர். அதுவும் அந்த ஆற்றங்கரைக் காட்சிகள் நமக்கும் ஏதோவொரு வெறுமையை ஏற்படுத்தும் அளவிற்கு அவ்வளவு நேர்த்தி. பருத்திவீரனை அழகாக பேக் செய்து கொடுத்த ராஜா முஹம்மது தான் இதற்கும் எடிட்டிங். கொடூரமான கொலைக் காட்சிகளை அதன் அளவிற்கு விட்டு விட்டு அப்புறம் சபை கருதி வெட்டி விட்டு படத்தை இயல்பு நடை போட வைத்திருக்கிறார். இருந்தாலும், ஆற்றங்கரை மணல், ட்ரிப்ஸ் ஏற்றும் ட்யூப் போன்றவற்றை ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு இவ்வளவு நீளமாக கதிரின் காமிரா காட்டினாலும் ராஜாவாவது கத்திரிகோல் போட்டிருக்கலாமே.

பெல்ஸ் பாட்டம் பேண்ட், டைட் ஷர்ட் அகல கால்லர் என்ற என்பதுகளின் பாணியை முன்னிறுத்திய காஷ்ட்யூம் டிசைனர் நட்ராஜூம், என்பது கால காட்சிகளுக்கு உணர்வு கொடுத்த ஆர்ட் டைரக்டர் ரெம்போனும் பாராட்டுக்குரியவர்கள். ஆங்காங்கே மட்டும் மிக மெல்லிசான இயலாமை தெரிகின்றது.

அழகான தன் காம்பியரிங்கில் அசர வைத்த ஜேம்ஸ் வசந்தன் தான் இசை என்பது இன்னுமொரு சர்ப்ரைஸ். “கண்கள் இரண்டால்“, “காதல் சிலுவையில் அறைந்தால் இன்னும் ரீங்காரமிடுகின்றன. முன்னது விசுவலில் காதல் வருடுகின்றது என்றால், பின்னது ஷங்கர் மஹாதேவனின் குரலில் இறுக்கம் தருகின்றது. படம் நெடுக ஏர்.ஆர்.ரஹ்மானையும் யுவனையும் கலந்த பாணியில் பின்ணணி இசை இழையோடுகின்றது. முதல் கொலைக்கு இன்னொரு ஊருக்கு சென்று ஆயுதங்கள் வாங்க சசிக்குமாரும், கஞ்சா கருப்பும் செல்லும் போது அமைத்திருக்கும் பின்ணணி இசை காட்சியை மிரள வைக்கின்றது.

சித்தன் சவுண்ட் சர்வீஸை சுற்றிய வேலை வெட்டி இல்லாத இளைஞர்களின் வாழ்க்கை முறையை இயல்பு மீறாமல் திரைக்கதைப் படுத்தியிருக்கிறார் சசிக்குமார். முன்பாதி கலகல; பின்பாதி வெலவெல என்ற அதே “பிதா மகன், “பருத்தி வீரன் பாணியில் திரைக்கதை பேட்டர்ன் இருந்தாலும் அப்படங்களில் பாலாவும் அமீரும் காட்டியிருந்த தனித்தன்மையை சசிக்குமாரும் செவ்வனே காட்டியிருக்கிறார் கொஞ்சம் நிதானமாக. நறுக்குத் தெரித்த வசனங்களோ, அனல் பறக்கும் காட்சிகளோ படத்தில் இல்லை என்றாலும் சந்தோஷம், பயங்கரம் இரண்டையும் யதார்த்தமாகக் காட்டியிருக்கிறார். ஐயனார் சிலைகளும் குதிரைகளும் சூழ்ந்த அந்த பாறை மேட்டில் கதாநாயகி பொலபொலவென தன் காதலன் முன்னால் அழுகின்ற காட்சிகளும் அதைத் தொடர்ந்த திருப்பங்களும், கஞ்சா கருப்புவிடம் ஆற்றங்கரையில் புலம்பும் சசிக்குமாரும் அதைத் தொடர்ந்த திருப்பங்களும் ஒட்டுமொத்த படத்தையும் வேறு தளத்திற்கு இட்டு செல்கின்றது.

மனதளவில் நாம் மழுங்கி விட்டோமா என்று தெரியவில்லை; ஹீரோயினை கொல்லாமல் படத்தை முடித்திடும் போது “என்னப்பா அப்படியே விட்டுட்டாய்ங்கஎன்று தோன்றுகின்றது. மற்றபடி விட்டேத்தியாக வேலை வெட்டி இல்லாமல் உணர்ச்சிப்பூர்வமாக என்பதுகளில் சுற்றித் திரிந்த இளைஞர்களின் கதை தான் என்றாலும் அது இப்போதும் இளைஞர்களுக்கு குறிப்பாக தென்மாவட்ட இளைஞர்களுக்கு பொருந்தும்.

சுப்ரமணியபுரம் – தமிழ் சினிமாவின் இன்னொரும் தராதரம்.

பின்னூட்டங்கள்»

1. சுப்ரமணியபுரம் - விமர்சனம் « கதம்ப மாலை - ஜூலை 28, 2008

[…] சாரல் உடூஸ்: பாலா, அமீர் ஆகியோரின் படைப்புகளில் தமிழ் சினிமாவை வேறோரு தளத்திற்கும் தரத்திற்கும் கொண்டு சென்ற “பிதா மகன்“, “பருத்தி வீரன்” இரண்டுமே மதுரை மண்ணை ஈரத்துடன் இயல்பாக அணுகியவை. இதற்கு மேல் மதுரையை மையமாகக் கொண்ட சினிமா திகட்டி விடும் என்று நினைத்த நேரத்தில் இவர்களின் பட்டறையிலிருந்து சசிக்குமார் என்றொரு படைப்பாளியின் கைவண்ணத்தில் “சுப்ரமணியபுரம்“. […]

2. pirabuwin - ஓகஸ்ட் 1, 2008

பார்க்க முடியவில்லை.

3. மஞ்சூர் ராசா - ஓகஸ்ட் 24, 2008

நல்லதொரு விமர்சனம்.

அத்திப்பூத்தார் போல இப்படிப்பட்ட படங்கள் அவ்வப்போது வந்து தமிழ்பட உலகை கொஞ்சம் காப்பாற்றுகிறது.

இப்படத்தில் நடிகர்கள் முதல் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை பலரும் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் ஜேம்ஸ், கண்கள் இரண்டால் பாடலை பாடிய பெள்ளிராஜ், தீபா ஆகியோருக்கும் நல்ல ஒரு எதிர்காலம் இருக்கும் என நம்பலாம்.

4. மஞ்சூர் ராசா - ஓகஸ்ட் 24, 2008

உங்கள் விமர்சனமும் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்

5. M Sheik Uduman Ali - ஓகஸ்ட் 24, 2008

அன்பு மஞ்சூர் ராசா, உங்கள் பாராட்டுக்கிற்கு நன்றி.
உங்கள் வலைப்பூவில் சஞ்சரித்துள்ளேன். மிகவும் இயல்பான உங்கள் நடை என்னைக் கவர்ந்திருந்தது. அதிலும் “நீங்கள் தினமும் சாப்பிடும் உணவு உங்களுக்கு பிடிக்கவில்லையா?” முற்றிலுமான உரைநடைகளிலிருந்து விலகி புகைப்படங்களால் எழுதியிருந்தது நன்று.

மென்மேலும் இவ்வலைப்பூவிற்கு வருகை தர
அன்புடன் எதிர்நோக்கியுள்ளேன்.

6. m.vijayasenthil - ஜூலை 1, 2010

neenda nalaikku appuram en manathai thotta padam. ”subramaniyapuram”.


மஞ்சூர் ராசா -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி