சரோஜா – விமர்சனம் ஒக்ரோபர் 9, 2008
Posted by M Sheik Uduman Ali in விமர்சனங்கள்.Tags: சரோஜா, saroja
2 comments
சென்னை 28 கொடுத்த பிரம்மாண்ட வெற்றியை அட்டகாசமாக தனது அடுத்த படைப்பிலும் தக்க வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. “ஜட்ஜ்மென்ட் நைட்”ஐ இன்ஸ்பிரஷேனாக எடுத்துக் கொண்டு காமெடி த்ரில்லர் என்ற மாறுபட்ட ட்ரீட்மென்ட் மூலம் முத்திரைப் படைத்திருக்கிறார்.
எஸ்.பி.பி. சரண் & கோ ஒரு பக்கம்; பிரகாஷ்ராஜ், ஜெயராம் மற்றொரு பக்கம் என இரண்டு வெவ்வேறு பின்ணணியில் ரொம்பவும் இயல்பாக ஆரம்பித்து மெதுவாக த்ரில்லிங் ஏரியாவிற்குள் நுழையும் போது “அட!“ போட வைக்கிறது திரைக்கதை. திருமணத்திற்குப் பிறகு நண்பர்களுடன் வெளியில் சுற்றும் ஒருவன் வீட்டில் சந்திக்கும் சாதாரண பிரச்சனையிலிருந்து, எப்போதும் தன் முன்னிலையில் தெலுங்கில் பேசும் போது ஒன்றும் சொல்லாத சிவா அந்த அசாதாரண சூழ்நிலையில் தன் நண்பர்கள் இரண்டு பேர் தெலுங்கில் பதறும் போது சந்தேகத்துடன் கத்துவது என எல்லா சின்ன விசயங்களிலும் வெங்கட் பிரபுவின் திரைக்கதை ஜெயித்திருக்கிறது.
ஏற்கெனவே சிவாவுக்கும், பிரேம்ஜிக்கும் வெங்கட் பிரபுவின் ஏரியா நல்ல அறிமுகம். ஆனாலும், ஒரு நடுத்தர வயதுக்காரனுக்கே உரிய கோபத்துடனும் நிதானத்துடனும் சரணும், ஆஜானுபாகான ஹீரோயிஸத்துடன் வைபவும் ஆச்சர்யப்படுத்துகிறார்கள். அப்புறம் சரோஜாவாக வரும் வேகாவும் சரி, கல்யாணியாக வரும் நிகிதாவும் சரி தியேட்டரில் ஜொள்ளாறு ஓடுவதற்கு முழு ரெஸ்பான்ஸ்பிலிட்டி எடுத்துக் கொள்கிறார்கள்.
பரிதவிப்பையும் பாசத்தையும் அந்த பணக்காரத்தனத்துடன் பிரகாஷ்ராஜ் வெளிப்படுத்தும் அழகு அற்புதம். சம்பத்திற்கு இது மாதிரி ரோல்களே வருவதால் ஏதோ பெரிதாக தெரியவில்லை. அப்புறம் ஜெயராம், சார் கிளைமாக்ஸில் பண்ணும் வில்லத்தனம் பக்கத்து வீட்டு அமுல் பேபி பண்ணும் சேஷ்டைகளையே ஞாபகப்படுத்துகிறது. நம்ம ஏரியா இதுவில்லை ஜெயராம் சார். அதுவும் முதல் சில ரீல்களிலேயே லேசாக தெரிந்து விடுகிறது.
சின்னத்திரை ஜோடி நம்பர் ஒன் பட்டாளத்தையும் சென்னை 28 கும்பலையும் சமயோஜிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
முன்பகலில் ஆரம்பித்து ஒரு இரவு முடிந்து அடுத்த நாள் காலை என்ற இந்த கால ஓட்டத்தில் தான் கதை என்பதை தெள்ளத் தெளிவாக படம் பிடித்திருக்கிறார் சினிமாட்டோகிராபி பண்ணியிருக்கும் சக்தி சரவணன். பரபரப்பாகவும் இல்லாமல் மெதுவாகவும் இல்லாமல் த்ரில்லிங்கை வேறு மாதிரி அனுபவிக்க வைக்கின்றனர் எடிட்டிங் பண்ணியிருக்கும் ப்ரவீன் & ஸ்ரீகாந்த்.
“மை லைவ்ப்“ பாடலுக்கு ஒரு வெஸ்டர்ன் ஆல்பத்தை சுட்டு போட்டிருந்தாலும் “தோஸ்த் படா தோஸ்த்“, “சிக்கி சிக்கி“ பாடல்கள் மூலம் அடுத்த தளத்தை தொட்டிருக்கிறார் யுவன். காமெடிக்கும் த்ரில்லிங்கிற்கும் இடையே பரபரக்கும் காட்சிகளுக்கு யுவனின் பேக்ரவுன்ட் ஸ்கோர், க்யூட்.
இப்படித்தான் கதை பயணிக்குமோ, சிலிர்க்க வைக்கும் க்ரைம் காட்சிகள் இருக்குமோ என்றெல்லாம் நம்மை யோசிக்க வைக்காமல் “ஆமாம் த்ரில்லர் தான்; ஆனா ஜாலியான என்டடெய்னர்“ என்ற இயக்குநர் வெங்கட் பிரபுவின் அணுகுமுறை தமிழ் சினிமாவிற்கு ரொம்பவே புதுசு. ஆனாலும் சில படபடக்கும் காட்சிகளிலும் காமெடி பண்ணுவது பயங்கர முரண் தொடை பாஸ். எதைப் பற்றியும் யோசிக்காமல் தனது திரைக்கதையை அழகாக பரப்பி இதமாக டெக்னாலஜி மற்றும் டெக்னிக்குகளை (குறிப்பாக, பிரகாஷ்ராஜ் பேசும் ஷாட்டிலிருந்து “தோஸ்த் படா தோஸ்த்“ ஆரம்ப்பிக்கும் உத்தி) பயன்படுத்தி முழு நீள பொழுதுபோக்கிற்கு மெகா கேரண்டி கொடுக்கும் வெங்கட்டிற்கு ஹார்ட்ஸ் ஆஃப்.
துரத்தும் வில்லன்களெல்லாம் படபடவென இந்த அப்பாவி இளைஞர்களின் தாக்குதல்களுக்கு இரையாவது, போலீஸாக இருந்ததற்கே சம்பந்தமில்லாமல் என்கவுன்டருக்கு தேடப்படும் ரெளடி மாதிரி சம்பத் ஆந்திரா பார்டரில் ஒரு மூடப்பட்ட தொழிற்சாலையில் தன் காதலி மற்றும் ரெளடி கும்பலுடன் இருப்பது, நல்ல காதலியாகவே இருக்கும் கல்யாணி “கோடான கோடி“ பாடலுக்கு ஏதோ விலைமாது மாதிரி கும்பலுடன் ஆடுவது என சிலப் பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும்
சரோஜா – வெங்கட் பிரபுவின் கெட்டிக்காரத்தனம்
சக்கரக்கட்டி – விமர்சனம் ஒக்ரோபர் 6, 2008
Posted by M Sheik Uduman Ali in விமர்சனங்கள்.Tags: சக்கர கட்டி, சக்கரக்கட்டி, sakkarakatti
1 comment so far
அக்கறையுடன் ஏ.ஆர்.ரஹ்மானிற்கு
இத்திரைப்படத்தின் சந்தைப்படுத்துதலுக்கு ஜீவனாய் அமைந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிற்கு, தங்களின் அபிமான ரசிகன் என்ற முறையில் ஒரு வேண்டுகோள். நவீனமும், இளமையும், புதுப்புது முயற்சிகளும் கொண்ட உங்களின் வசீகரமான இசை இந்தியாவின் சொத்து. வருங்கால சந்ததியனருக்கு மட்டுமல்ல, தேசம் தாண்டிய களத்தில் நாம் உதாரணப்படுத்திக் காட்ட “ஸ்வதேஸ்“, “லகான்“, “கன்னத்தில் முத்தமிட்டால்“, “ரங்தே பஸந்தி“ என நிறைய இருந்தாலும், இந்த மாதிரி “பேனரை“ மட்டும் நம்பி கமிட்டாகும் படங்களால் காசைத் தவிர வேறெந்த லாபமும் இருப்பதாக தெரியவில்லை. இந்த மாதிரி படங்களை உங்கள் கேரியரில் எந்த அக்கெளன்டில் வைத்துக் கொள்வீர்கள். இயக்குநர் அமீர் சொன்னது போல, “பருத்தி வீரன்“, “சுப்ரமணியபுரம்“ மாதிரி படங்களில் உங்களைப் பொருந்திப் பார்த்துக் கொள்ளவும். இன்னும் அழுத்தமாக எங்கள் மண்ணின் உலகளாவிய எல்லைத் தொட்ட கலைஞன் என்று நாங்கள் மார் தட்டிக் கொள்ளலாம். தயவு செய்து ஸ்கிரிப்டையும் பார்க்கவும். சக்கரக்கட்டி விழலுக்கு இறைத்த நீர்.
அன்புடன் இயக்குநர் கலாபிரபுவிற்கு
ஏராளமான டெக்னிகல் புலமை தங்களுக்கு இருப்பது சந்தோஷத்திற்குரியது என்றாலும், ஏர்.ஆர்.ரஹ்மானின் கால்ஷீட்டையும் அப்பாவின் காசையும் மட்டும் நம்பி அசட்டுத் தைரியத்தில் இறங்கியிருக்கிறீர்கள். வெறும் கை முழம் போடாதுனு அப்பா சொல்லலையா.
பரிவுடன் பாக்யராஜின் வாரிசுக்கு
அருமையான நடிப்பாற்றல் தேங்கிக் கிடக்க அமெரிக்கன் ஸ்லாங்கிலும் வெள்ளைக்கார ஸ்டைலிலும் ஆஊவென தங்களின் கன்னி முயற்சி வெத்து வேட்டாக போய்விட்டது. தேவை உடனடியாக நல்ல கதை அல்லது திரைக்கதை.
அப்புறம் மொத்தத்தில்
காதல் படம்னா சும்மா உருகி வழியறது, ஓவர் சின்ஸியாரிட்டி காட்றது; கண்ணுல ஆரம்பிச்சு கழுத்துலேயோ இதயத்திலேயோ அல்லது வேறு எந்த கருமாந்திரத்திலேயோ முடியுற மாதிரினு பக்கம் பக்கமா வசனம் பேசுறது; நடிக்கவே தெரியாத கதாநாயகி நவரசங்களையும் காட்டுறது இப்படியெல்லாம் காதலின் கண்ணியத்தை கழுவிலேற்றி இன்னொரு தடவை அசிங்கமான அந்த சினிமாக் காதல் ட்ரண்டை கொண்டு வர தயாராகும் கோடம்பாக்கத்து இளைஞர்களுக்கு இந்த சினிமா ஒரு எச்சரிக்கை மணி.
அட, அதுதான் டாக்ஸி…டாக்ஸி பாடல் இரண்டு தடவை, மிச்சம் ஐந்து பாடல்கள் இது போதும்பா படம் பார்க்க என்று இன்னும் நினைப்பவர்கள் தங்கள் “வில்“ பவரை சோதிக்க இரண்டு மணி நேரம் (ஆப்ரேட்டர் புண்ணியத்தில் அவ்வளவு நேரம் தான் படம் ஓடியது) பயிற்சி எடுக்கலாம். ஒரு வீடு, ஒரு காலேஜ், ஒரு பார்க் சிலப் பல காதல் டயலாக்குள் என்று எப்படித்தான் “ரூம்” போட்டு யோசிக்கிறாய்ங்களோ தெரியல.
சக்கரக்கட்டி – மண்ணாங்கட்டி.