jump to navigation

கஜினி (ஹிந்தி) திசெம்பர் 27, 2008

Posted by M Sheik Uduman Ali in விமர்சனங்கள்.
Tags: ,
5 comments

ஹிந்தி கஜினியை பார்ப்பதிலும் விமர்சிப்பதிலும் ஒரு தர்மசங்கடம் இருக்கின்றது. தமிழில் சூர்யா மற்றும் அஸினின் அருமையான நடிப்பும், சிறப்பான திரைக்கதை,  ஹிட்டான பாடல்களுமாக பெரிய வெற்றி பெற்ற படத்தை ஹிந்தியில் பார்க்கும் போது நமது அணுகுமுறை ஒப்பீட்டளவிலேயே அமைந்துவிடும். ஆனால் அதையும் தாண்டி பிரம்மாணடமாக அமீர்கான் & டீம் ஜெயித்திருக்கிறது.

கொஞ்ச நேரமே ஹீரோவிற்கு நினைவிருக்கும் என்பதை பார்வையாளர்களுக்கு புரியவைக்காமல் ஹீரோயிஸத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதும், இரட்டை வில்லன்களுடனான கிளைமாக்ஸூம் தமிழ் கஜினியை ஒன்றிபார்க்க விடாமல் செய்தவை. ஏ.ஆர்.முருகதாஸூம் அமீரும் ஹிந்தியில் இதை நேர்த்தியாக சரி செய்திருக்கிறார்கள்.

இயல்பாகவே ஆரம்பிக்கும் படம் ஊனமுற்ற குழந்தைகளை கதவில் நிற்க வைத்து அஸின் மறுபக்கம் விடும் போது அமீர் கவரப்படும் காட்சியும் அதற்கு பின்ணணியில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

தர்பூஸ் பழத்தை கையில் வைத்துக் கொண்டு தன் கம்பெனி ஊழியர்களை செல்லமாக விரட்டும் காட்சியில் சூர்யாவிற்கு விட்டுக் கொடுக்கும் அமீர் மற்ற எல்லா காட்சிகளிலும் சூர்யா நினைவுக்கு வராதபடி நடிப்பில் மிரட்டியிருக்கிறார். பதினைந்து நிமிடங்களே தனக்கு நினைவுகள் நிற்கும் என்பதை எந்தவொரு மிகையான நடிப்பும் இல்லாமல் பார்வையாளர்களுக்கு புரிய வைக்கும் காட்சிகளில் இந்த “நடிப்பு ராட்சசன் மிரட்டியிருக்கின்றான். அஸினை ரசித்து காதலிக்கும் காட்சிகளில் நம்மை ரசிக்க வைக்கின்றார். மொத்தத்தில் அமீரின் உழைப்பு அபரிமிதம்.

படத்தில் அமீருக்கு சரியான போட்டி அஸின். குறும்பு, பயம், காதல், கோபம் என நவரசங்களையும் மிகையில்லாமல் வெளிப்படுத்தும் இப்படியொரு நடிகையை சமீபமாக ஹிந்தி சினிமா பார்த்திருக்குமா என்று தெரியவில்லை. சரியான தேர்வுகளில் பயணித்தால் பாலிவுட்டின் “ஹாட் சீட் அஸினிற்கு காத்திருக்கிறது.

மெடிக்கல் காலேஜ் மாணவியாக வரும் ஜியா கானும் நம் மனதை கவர்கிறார். நல்லவேளையாக வில்லன் தமிழ் கஜினி போல படுத்தவில்லை.

ஒரு கடற்கரையில் ரோஸ் நிற காரையும் பின்ணணியில் மலைமுகட்டையும் வைத்து எடுக்கப்பட்ட “பேக்காபாடலில் ஆச்சர்யப்படுத்துகிறார் கலை இயக்குநர் சுனில் பாபு. அமீரின் படபடப்பான பார்வைகளுக்கும் த்ரில்லான காட்சிகளுக்கும் நேர்த்தியான மூன்றாவது கண்ணாக இருந்து சாதித்திருக்கிறது ரவி.கே.சந்திரனின் கேமிரா. முதல் கொலையை நடந்த இடத்திற்கு இன்ஸ்பெக்டர், கமிஷனர் என ஒவ்வொருவராய் வெவ்வேறு நேரங்களில் வந்து போகும் காட்சியில் “அட போட வைக்கிறார் எடிட்டர் ஆண்டனி. இதற்கே இப்படியென்றால் மற்ற காட்சிகளில் விட்டு வைப்பாரா?

பாடல்கள் மூலம் படத்தின் தரத்தை இன்னொரு உயரத்திற்கு எடுத்து சென்றிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.   அலாதி ப்ரியம் என்றாலும் குஷாரிஸ் மெட்டினை பின்ணணியில் கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்தியிருக்கிறார். “குஷாரிஸ், “கேஸே முஜே, “பேகா பாடல்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கோவை முற்றிலும் புதிய தளத்தில் சர்வ தேச தரத்தில் பயணித்து பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது. சர்வதேச இசையில் நம்மை கர்வப்பட வைக்கக்கூடிய ஆல்பம் “கஜினி.
கிளைமேக்ஸ் சண்டைக் காட்சிகளில் பீட்டர் ஹெய்ன் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

குறுகுறுப்பான காதல், வித்தியாசமான திரைக்கதை, சிறப்பான நடிகர், பிரம்மாண்டமான இசையமைப்பாளர், தரமான டெக்னிக்கல் டீம் என்ற ஹிட்டான சமாச்சாரங்களை எடுத்துக் கொண்டு பாலிவுட்டில் வெற்றிகரமாக  ஏ.ஆர்.முருகதாஸ் களமிறங்கியதில் ஆச்சர்யமில்லை.  ஆனாலும், அதை நேர்த்தியாக கையாண்டதற்கு வாழ்த்துக்கள்.

ஹீரோயிஸம், மிகைப்படுத்தப்பட்ட ஆக் ஷன் இவைகளை விட்டு ஹிந்தி சினிமா வேறொரு தளத்தில் பயணிக்கும் இத்தருணத்தில் “ரங் தே பஸந்தி, “தாரே ஜமீன் பர் போன்ற படங்களின் நாயகன் தமிழ், தெலுங்கு சினிமா ஹீரோக்கள் மாதிரி கிளைமாக்ஸில் சண்டை போட்டு பழி தீர்ப்பது பாலிவுட்டின் தற்போதைய சக்ஸஸ் பார்முலாவை டேமேஜ் பண்ணி புளித்து போன மசாலா பக்கம் திருப்பி விடுமோ என்ற பயம் வருகின்றது.

கஜினி – திரும்பவும் ஜெயித்திருக்கின்றான்