jump to navigation

சுஜாதா – நவீன தமிழ் உரைநடையின் தலைமகன் மார்ச் 8, 2008

Posted by M Sheik Uduman Ali in Articles.
Tags:
add a comment

எளிமையான எழுத்துக்கள்

ஆனால் வலிமையான வார்த்தைகள்.

இவரது நவீன உரைநடை பாணி பலரையும் கவர்ந்திழுத்த காந்தம்.  தமிழ் பேசவே தயங்கும் இன்றைய தலைமுறைக்கு இவரது எழுத்துக்கள் புதிய பார்வையையும்,  பேசவும் எழுதவும் தைரியத்தையும் கொடுத்தது என்றால்  அது மிகையாகது.

 எளியோனுக்கும் புரிகிற வகையில் குவாண்டம் பிஸிக்ஸ், கணிணி என அறிவியலின்  குழப்பமான எல்லைகளை சுலபமாக விளக்குபவர்.

நினைத்த கருத்தை  நெத்தி பொட்டில் அடித்த மாதிரி சொல்பவர்.

யாமறிந்தவரை  இவரது  எழுத்துக்களில் இன, மத, மொழி துவேஷங்களை  தூவலாக செருகியோ, மறைமுகமாக மற்றாரை துவேஷித்தோ  கண்டது கிடையாது.

ஆன்மிகத்தை  துவேஷத்தப்படுத்தியது கிடையாது.

 எனக்கான எழுத்தின் இன்ஸ்பிரேஷன்  சுஜாதா.  பலருக்கும் முன்மாதிரி போல.

அரசியலாகவும்,  மதுக்கடைகளில் தழும்பலாகவும் மாறிவரும் சில அல்லது பல தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில்

சுஜாதா  தி லெஜன்ட்.

சென்னை புத்தகக் கண்காட்சி 2008 ஜனவரி 7, 2008

Posted by M Sheik Uduman Ali in Articles.
Tags: , , , , ,
add a comment

முப்பத்தியோராவது புத்தகக் கண்காட்சி இந்த வருடம் திடீர் மழையோடு ஆரம்பித்துள்ளது. டிசம்பர் இசைத் திருவிழா என்றால் ஜனவரியை புத்தகத் திருவிழா என்று அழைக்கலாம். இ-புக், இ-புக் ரீடர், மொபைல் புக் ரீடர், இன்டர்நெட்டில் விக்கி என எத்தனையோ மின்ணணு ஊடகங்கள் புத்தங்களுக்கு (அல்லது static content) புதிய வடிவம் கொடுத்தாலும் அச்சுப் புத்தகங்கள் கொடுக்கும் செளகர்யங்களையும், நெருக்கத்தையும் அவை கொடுக்கவில்லை என்பது இத்திருவிழாவிற்கு சென்னை வாழ் மக்களின் பரவாலான ஆதரவை வைத்தே அறியலாம். வேண்டுமென்றால் வரும் தலைமுறைகளின் ஆர்வம் இன்டராக்டிவ் பப்ளிஷ்களலால் மாறலாம்.

புதிதாக வாங்கிய புத்தகம் புது மனைவி மாதிரி. நிறைய மணக்கும், நெருக்கத்தில் பரபரப்பு கொடுக்கும். உள்ளே இருக்கும் பொருளடக்கம் சிறப்பாக இருந்தால் வாசிப்பு அலாதியாகவும் போதை தருவதாகவும் இருக்கும். நாளான புத்தகமோ, அழுக்கேறியிருந்தாலும் பக்குவமாகவும் பாந்தமாகவும் இருக்கும். சரி விசயத்திற்கு வருவோம். இந்த வருடமும் ஏராளமான கடைகள், புதிய புத்தக வெளியீடுகள் என வெகு ஜோராக இருந்தன.

இந்தக் கண்காட்சியின் தளம் தமிழகம் சார்ந்து இருப்பதால் பெரும்பாலான வெளியீடுகள் தமிழ் கவிதைகள் கட்டுரைகளே ஆகும்.

விகடன் பிரசுரத்திற்கு டிமாண்ட் இருப்பது தெரிகிறது. அவர்களின் சந்தைப்படுத்தும் முறையும் சிறப்பாக இருக்கிறது. பல கடைகளில் விகடன் பிரசுரங்கள் கிடைத்தாலும் அதற்கான ஸ்டால் ஒரு சிறிய கடை என்பதால் கூட்டங்களுக்கிடையே புத்தங்களை தொடக்கூட முடியவில்லை. இந்த வருடம் “Prodigyயின் இருபத்தைந்து ரூபாய் மதிப்புள்ள குட்டி புத்தங்கள் கண்களை கவர்ந்தன. எல்லாமே காம்பேக்ட் வடிவில் சொற்களை குறைத்திருந்தாலும் சுவாரஸ்யம் குறையாமல் “சிவாஜி, “ஒளரங்கசீப், “எடிசன் தொடங்கி, சினிமாவிற்கு பின்னால், உலக சுகாதரத்துறையின் குழந்தைகளுக்கான மனவியல் குறித்த வெளியீடுகள் சிறப்பாக இருக்கிறது.

இந்தக் கண்காட்சியில் நிறைய விற்ற புத்தங்கள், துறைகள் பற்றிய புள்ளி விவரங்கள் இனிமேல் தான் தெரியும் என்றாலும் கடந்தாண்டு நம் மக்கள் சுய உதவி குறித்த புத்தகங்களை நிறைய வாங்குவது பேஷனாக இருந்தது. இந்தாண்டு கண்ணதாசன் பதிப்பகத்தின் தரமான சுய உதவி வெளியீடுகளுக்கு நிறைய கூட்டங்கள்.

ஐடியை பொறுத்தவரை தனி ஸ்டால் ஏற்படுத்தி கவர்ந்தவர்கள் வெய்லி ட்ரீம் டெக் மற்றும் ஷ்ராஃப் பப்ளிஷர்ஸ். வாழ்த்துக்கள். மற்ற இடங்களில் மிகவும் பரவலாக பயன்படுத்தும் புத்தகங்களே குறைவாகத்தான் இருந்தன.

அச்சுபிரதிகளுக்கு இணையாக சிடிக்களும் தமிழில் நிறைய வந்துள்ளன.

ஆன்மிகத்தை பொறுத்தவரை இந்து மற்றும் இஸ்லாமிய வெளியீடுகளுக்கான ஸ்டால்கள் நிறைய இருந்தன. ஆச்சர்யமான விசயம் மிகமிகக் குறைவான கிருஸ்தவ வெளியீடுகள். அதைவிட ஆச்சர்யம் தனியான ஸ்டால்கள் ஏதுமில்லாதது. கவர்ந்த விசயம் ஆன்மிகப் பதிப்புகளின் நவீனம். அச்சுத் தரம் மற்றும் வடிவமைப்பில் மட்டுமில்லாது தலைப்புகளிலும். இவைகளுக்கு நிகராக பகுத்தறிவு மற்றும் மார்க்ஸிய பாசரைகளுக்கான ஸ்டால்கள் கவர்ந்தன. கடவுளைப் பற்றிய தர்க்க ரீதியான புத்தங்கள் நிறைய என்றாலும், உலகமயமாக்கல், இந்திய சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வுகள், குஜராத் இனப்படுகொலைகள் பற்றிய வெளியீடுகளும் நிறைய இருந்தன.

கான்டீனை ரொம்பவும் தள்ளி அமைத்திருக்கிறார்கள். நாங்கள் உட்பட பலருக்கும் அது இருப்பது கூட தெரியவில்லை. ஜூஸ், கார்ன், சான்ட்விச் உட்பட ஒரு பாஸ்ட்புட் கடை என காம்பேக்டாக வைத்திருந்தார்கள். தரம் நன்று.

காஞ்சி சங்காராச்சாரியார்களின் ஆன்மிகம் பற்றிய புத்தகம் ஒரு பக்கம் என்றால், காஞ்சி மடத்தை தாறுமாறாக விமர்சிக்கும் புத்தகமும் அதே வரிசையில். இரண்டையும் வாங்கும் மக்கள். வெவ்வேறான கருத்துகள், நம்பிக்கைகள், துறைகள் சார்ந்த இம்மக்களை ஒரே இடத்தில் இணைக்கும் வசீகரம் “புத்தகம்.

வாழ்க வாசிப்பு.

புத்தாண்டு பார்வைகள் ஜனவரி 1, 2008

Posted by M Sheik Uduman Ali in Articles.
3 comments

முதலில் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இந்த புத்தாண்டில் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

இந்த புத்தாண்டில் எனது பிரார்த்தனைகள்:

  • சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டும்.
  • தீவிரவாதம், மதம் என்ற பெயரில் வலியோன் எளியோனை நசுக்கும் கொடுமைகள் ஓய்ந்திட வேண்டும்.
  • வகுப்புவாதம், இனப்படுகொலைகள் மடிந்திட வேண்டும்.
  • அன்பும் அறமும் நிலைத்திட வேண்டும்.
  • இல்லறம் தழைத்திட வேண்டும். எந்திரமயமாக்கலிலிருந்தும், டிவிப் பெட்டியிலிருந்தும் அது விடுபட வேண்டும்.
  • ஓட்டிற்காக பிறருக்கு கொடுக்கப்படும் சலுகைகள், தள்ளுபடிகளுக்காக, புதிய வரித் திணிப்புகள் நம் தலையில் ஏறாமல் இருக்க வேண்டும்.
  • செய்கின்ற தொழில், வேலை மேம்பெற்றிட வேண்டும். அதை செவ்வன செய்து முடித்திடும் திறமை வேண்டும்.
  • கொடி நோய்களுக்கான மருத்துவக் கண்டுபிடிப்புகள் வெற்றி பெற வேண்டும். அது வறியவனுக்கும் வசப்பட வேண்டும்.
  • கல்வியும், மருத்துவமும் வியாபாரமயமாக்கப்படுவது மறைந்திட வேண்டும்.
  • மதங்கள் பரப்புவதை நிறுத்தி மனிதம் பரப்புவோம்.
  • திருமணம் ஏங்கி நிற்கும் கன்னிப் பெண்கள், குழந்தைகள் ஏங்கி நிற்கும் பெண்களுக்கு இறைவன் வழி செய்திட வேண்டும்.

எனது பார்வைகள்:

சம்பிரதாயத்திற்காக எல்லாரையும் போல நானும் எனது பார்வைகளை இங்கு வழங்கியுள்ளேன். கண்டுக்காதவர்கள் தொடர்க; தகுதி தராதரம் பார்ப்பவர்களுக்கு எனது டிஸ்கிளைமர்: தயவு செய்து எனது அடுத்த சினிமா விமர்சனத்திற்கோ அல்லது கட்டுரைக்கோ காத்திருக்கவும்.

ஏராளமான வாழ்த்து SMSகள், emailகள், ராசிபலன்கள் மற்றும் வேண்டுதல்களோடு மற்றுமொரு புத்தாண்டாக மலர்ந்திருக்கிறது 2008. சில துறைகள் வலிமையடைந்துள்ளன; சிலவை லேசாக நலிந்துள்ளன. ஆனால் பொருளாதாரத்தை பொறுத்தவரை 2007 சிறப்பாக இருந்தது. இதற்கு மத்திய அரசும் ஒரு காரணம்.

வேலைவாய்ப்பை பொறுத்தவரை எல்லா துறைகளிலும் நிறைய தேவைகள் இருந்தும்; புதியவர்களுக்கான வாய்ப்புகள் அவ்வளவு சிறப்பாக இல்லை. இதற்கு கார்ப்பெரட் HRகளின் நேர்மையும்(?) ஒரு காரணமாக இருக்கலாம். தனியார் துறைகளிலும் திறமை மட்டும் வேலை செய்வதில்லை. சீரியஸான இன்னொரு செய்தி: வாங்கும் சம்பளத்திற்கு தகுந்த திறமை பணியாட்களிடம் குறைந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உஷார்.

ஏகமாக இந்த ஆண்டும் நசுக்கப்பட்ட ஒரு துறை விவசாயம். அமெரிக்க நச்சு விதைகள், விஷ உரங்கள் என ஏகப்பட்ட குளறுபடிகள். இயற்கை உரங்களும் ஏராளமான வழிமுறைகளும் இருந்தும் மேல்நாடுகளின் சோதனைக் களமாக உள்ளது நம் பூமி. ஆனால் தமிழ்நாட்டில் விவாசாயி மட்டுமன்றி, அனைவருக்கும் ஓரளவு விழிப்புணர்வு ஏற்படுத்தி நவீனப்படுத்த முயற்சி செய்யும் விகடனின் பசுமை விகடன் இதழின் முயற்சிக்கு பாராட்டுகள். இன்னொரு கேள்வி: அடுத்த தலைமுறைக்கு விவசாயம் என்று காட்ட ஏதாவது இருக்குமா? அடுத்த தலைமுறையில் யார் விவசாயியாக இருப்பார்கள்?. தவிர, ஓரளவிற்கு எல்லா நஞ்சை நிலங்களும், குளம் ஏரிகளும் ரியல் எஸ்டேட் துறைக்கு தாரை வார்க்கப்பட்டது.

கல்வியின் தரம் உயர்ந்திருக்கிறதோ இல்லையோ, அடிப்படை வசதி கூட இல்லாத ஒரு நர்சரி ஸ்கூலை நடத்தும் முதலாளியின் (ஸாரி நிர்வாகியின்) பொருளாதாரம் பல மடங்கு உயர்ந்துள்ளது. கற்றலின் வழிமுறைகளை நவீனப்படுத்த யாரும் தயாரக இல்லை. எப்பவும் போல், கற்ப்பிப்பவர்களை போல ஒரு சொகுசு வாழ்க்கைக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். போதாதென்று வரும் வருடம் இவர்களுக்கு திட்டக் கமிஷனின் பரிந்ததுரை படி சாப்ட்வேர் துறைக்கு நிகராக சம்பள உயர்விற்கு வேறு வாய்ப்புள்ளதாம். ஆண்டவா! நல்லாசியர்களை கொடு என்று கேட்பதை விட வேறு வழியில்லை.

மருத்துவம் ஏராளமான முன்னேற்றங்களை அடைந்திருக்கிறது. ஆனால் கிட்னி வியாபாரமும், வியாதிக்காரர்களின் நிலைமை தெரிந்து காசு பிடுங்கும் கலாச்சாரமும் பயமுறுத்துகின்றன. இதையும் தாண்டி விட்டால் பல ஆயிரங்களை அடிக்கும் வாய்ப்பு இருந்தும் தெளிவான, உண்மையான வழிகள் சொல்லும் சில மருத்துவர்களை சிலரின் தயவால் காண அல்லது கேட்க நேரிட்டது மகிழ்ச்சியான விசயம்.

அரசியலை பொறுத்த வரை எதிர்பார்த்தது போலவே கடந்த வருடம் குஜராத் தேர்தல் முடிவுகள். மோடி ஜெயித்தது ஒன்றும் அதிர்ச்சியானது அல்ல. முதல் காரணம், அந்த மண்ணும் மக்களும். இரண்டாவது அங்குள்ள மதவாத அரசியல். மண்ணையும் மக்களையும் பொறுத்தவரை பெரும்பாண்மை மக்களுக்கு தன் பக்கத்து வீட்டுக்காரன் பிற மதத்தவனாக இருப்பது வெறுப்பிற்குரியது என்ற அவர்களின் வெளிப்படையான கருத்து. மாநிலத்தின் உட்கட்டமைப்பை நன்றாக்கி, அடிப்படை வசதிகளை பெருக்கி, வரி வட்டி என மக்களை சுமைதாங்கியாக்காமல் மோடி ஆட்சி நடத்திய விதம். மதவாத அரசியலை பொறுத்தவரை குஜராத் ஹிந்துத்துவாவின் சோதனைச்சாலை. அங்கு எந்த கட்சியாலும் ஹிந்துத்துவா இல்லாத மதச்சார்பற்ற அரசியலை நடத்துவது கடினம்.

ஆனால் இதுதான் எதிர்கால இந்தியாவின் இறையாண்மை மாதிரியா? மதச்சார்பற்ற வேண்டாம், மனிதாபிமானமில்லாத ஒரு கட்சி அதை விட மோசமான ஒரு தலைவரை மக்கள் கொண்டாடுவது சோகமான ஜனநாயகத்தின் முன்மாதிரி.

எல்லாத் துறைகளை விடவும் கடந்த வருடம் செம சிக்ஸர் அடித்த துறை, சினிமா. குறிப்பாக தமிழ் சினிமா. எதிர்பார்த்த சினிமாக்கள் தோற்றன; எதிர்பாராத சினிமாக்கள் வென்றன என்ற லாஜிக் 2007க்கு பொருந்தாது. வேண்டுமென்றால் எதிர்பார்த்த மாதிரி இல்லாதிருந்த சினிமாக்கள் உண்டு. கடந்த வருடம் ஜெயித்த சினிமாக்களையும் அவைகளுக்கான விமர்சனங்களையும் எடுத்துப்பார்த்தால் ஒன்று தெரிகிறது. தொழில்நுட்பத்திலும் திரைக்கதையிலும் நேர்த்தியான சினிமாக்கள் ஒரு வகை; எந்த பிரம்மாண்டத்தையும் கையிலெடுக்காமல் அசலான திரைக்கதையோட்டத்தை சொல்லியவை ஒரு வகை.

சினிமா பலம் பலவீனம் கருத்து
போக்கிரி விஜய்

அக்மார்க் கரம் மசாலா

தெலுங்கில் மகேஷ்பாபு பண்ணிய மேனரிசத்தை அப்படியே பிரதிபலித்த்து வரம்புக்குள் சிக்காத மாஸ் ஹீரோ சினிமா. பிரபுதேவாவிற்க்கு நல்ல என்ட்ரி கொடுத்த்து.
பருத்தி வீரன் வலுவான திரைக்கதை,

அசலான வசனங்கள்

டைரக் ஷன்

குறிப்பாக ஏதுமில்லை பாரதிராஜாவின் “16 வயதினிலேக்கு பிறகு தமிழ் சினிமாவிற்கு இன்னுமொரு தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
மொழி கவித்துவமான திரைக்கதை,

ஜோதிகா,

இயக்கம்

குறிப்பாக ஏதுமில்லை எந்த மின்மினுப்புகளும் இல்லாமல் எல்லோரையும் உருக வைத்த சினிமா.
சென்னை 6000028 திரைக்கதை,

மாறுபட்ட கதைக்களம்

நடிப்பு

இசை

குறிப்பாக ஏதுமில்லை சிம்பிள் & பவர்புல் சினிமா
சிவாஜி ரஜினி,

இசை

தொழில்நுட்பம்

திரைக்கதை தமிழ் சினிமா வர்த்தகத்தை உலகமயமாக்கியது.
பொல்லாதவன் தனுஷ்,

மாறுபட்ட கதைக்களம்

காட்சியமைப்புகள்

பல பாணிகளில் கதை சொல்ல முனைந்தது அசத்தலான, மாறுபட்ட கதையம்சத்துடனான சினிமா
கல்லூரி இலக்கியம் பேசும் திரைக்கதை,

நடிகர்கள்

முடிவு இலக்கியத் தரமான சினிமா
ஓரம் போ* திரைக்கதை,

டைரக் ஷன்

எவனோ ஒருவன்*
ஒன்பது ரூபாய் நோட்டு *
பில்லா தொழில் நுட்பம்

அஜீத்

திரைக்கதையுடன் தொழில் நுட்பத்தை இணைக்கத் தவறியதில் தமிழின் முதல் ஹாலிவுட் பாணி ஸ்டைலிஷ் ஆக்ஷென் சினிமா
  • இப்படங்களை பார்க்கவில்லை.

சின்னத்திரையை பொறுத்தவரை சின்னத்திரை கலைஞர்கள் மிகப்பெரும் சிலிப்பிரட்டிக்களாக மாறியிருக்கிறார்கள். இந்த மாற்றம் மட்டுமில்லை. ரியாலிட்டி ஷோ, தொடர் நாடகம், நக்கல், நையாண்டி என அழுகையும் அழுக்குமாக மெகாத்தொடர்களையும், சினிமாவையும் நம்பி இருந்த தமிழ் சேனல்களின் தூக்கத்தை கலைத்து சின்னத்திரையில் வலிமையான் இடத்தை பிடித்துள்ளது “விஜய் டிவி. மற்ற சானல்கள் இதன் நிகழ்ச்சிகளை காப்பியடிக்கும் நேரத்தில் இன்னொரு வகை புரோகிராமை கையிலெடுத்து ஆட்டம் காண வைக்கிறார்கள். கிரியேட்டிவிட்டி மட்டுமில்லாமல் டெக்னாலஜியை கையாளும் விதம், நிகழ்ச்சிகளை வழங்கும் தரம் இதன் வெற்றிக்கு மூலம்.

அப்புறம், புத்தாண்டு அன்று சானல் உலா சென்றதில் பளிச் என்று அசர வைத்தது ஜெயா டிவியில் அஜீத்தின் பேட்டி. அவர் பேசிய ஸ்டைல், தொட்ட ஆழம், பதிலளிக்கும் பக்குவம் என அட்டகாசமாக ஜொலித்தார்.

வருவோம்ல.

மாயக் கண்ணாடி – சினிமா விமர்சனம் ஏப்ரல் 23, 2007

Posted by M Sheik Uduman Ali in Articles.
add a comment

ஆடம்பரமாகவும் வசதியாகவும் வாழ நினைத்து, இருக்கிற வேலை மட்டும் போதாது என்று அளவிற்கு அதிகமாக குறுகிய காலத்தில் சம்பாதிக்க நினைப்பவர்கள் முன்னேற முடியாது என்ற மெஸேஜோடு பஞ்சு அருணாசலம் வாரிசு தயாரிக்க, சேரன் இயக்கி நடித்திருக்கும் படம் மாயக்கண்ணாடி. 

நகரின் மாபெரும் வணிக வளாகத்தில் உயர் தர ப்யூட்டி சலூன் நடத்தும்ராதாரவியிடம் வேலை பார்க்கும் சேரனும், நவ்யா நாயரும் காதலர்கள்.  அல்ட்ரா மாடர்னாக வாழ ஏங்கும் இவர்கள் தற்போதைய வேலை சரிபடாது என்று LIC முகவரில் ஆரம்பித்து சினிமாவில் போய் நிற்கிறது பணம் சம்பாதிக்கும் ஆசை.  அதனால் இருக்கிற வேலை போய் அவசரத்திற்கு வழியில்லாமல் தவறான வேலை செய்து சிறை செல்கிறார் சேரன்.   இறுதியில் மனம் திருந்தி பழைய வேலைக்கு செல்கிறார்.

 திரைக்கு பின்னாலிருந்து இயக்கி புகழ் பெற்றவர்களில் பலர் திரையில் தோன்ற நினைக்கும் போது அவர்களின் கூரிய பார்வை சிதறி தனித்தன்மை போய் விடுவதுண்டு.  இதில் சேரன் விதிவிலக்கு என்ற உண்மையை இப்படத்தில் பொய்யாக்கிவிட்டார். கதைக்கு ஏற்ற காஸ்ட்யூம்களில் அல்ட்ரா மாடர்ன் ஹீரோவாக வருபவர் பின் கதைபுலத்தையே மறந்து படம் நெடுக தன்னை அழகாகவே காட்ட நினைக்கிறாரோ என்று தோன்றுகிறது.   

யதார்த்தமான காட்சிகளில் இயல்பாக தெரியும் இவரின் நடிப்பு செல்லச் சிணுங்கல், உணர்ச்சிவசப்படும் காட்சிகளில் அசெளகரியமாக தோன்றுகிறது.  ஆனால், வாய்விட்டு பாராட்டும் காட்சிகளும் உண்டு.  பாலசந்தர் வீட்டு வாசல் முன்பு நடிக்க வாய்ப்பு கேட்டு அவர் செய்யும் சேஷ்டைகள் சிரிக்க வைக்கின்றன. 

நவ்யா நாயர். கடைக்கு வரும் கஸ்டர்மகளிடம் செல்லமாக வழிந்து ஒவ்வொரு கேள்வியாக கேட்டு துளைத்து எடுத்து அவர்களை தர்ம சங்கடமாக்கும் காட்சிகளில் பட்டாம்பூச்சியாக பறக்கிறார் என்றால், அப்பாவிடம் திருமணம் வேண்டாம் என்று அழும் காட்சிகளில் வியக்க வைக்கிறார்.  நமக்கு தெரிந்து தமிழ் சினிமாவில் குளோஸப்பில் அழ தைரியமுள்ள ஒரு நடிகை நவ்யா. 

திரை முழுக்க இவர்கள் இருவரை சுற்றியே மற்ற கேரக்டர்கள் வந்தாலும் ராதாரவி, சேரனின் ரூம்மேட்டாக வருபவர், கஞ்சா வியாபாரி ஆர்.எஸ், நவ்யாவின் அப்பா என அச்சு அசலாக இயல்பாக நடித்திருக்கிறார்கள். அதுவும் சாதாரண டீக்கடையில் ஆரம்பித்து மொபைல் டிபன் சென்டர் வரை உயரும் ரூம்மேட்டும் அவரின் கட் அன்ட் ரைட் அணுமுறையும், கண்டிப்புடனும் கரிசனத்துடனும் முதலாளியாக வரும் ராதாரவி, சிகரெட்டை ஆழமாக இழுத்து சோதனை பார்வையும் மர்மங்களை தாடிக்குள் பதுக்கியும் ராயலாக உலா வரும் ஆர்.எஸ் என அட சேரனப்பா என்று சொல்ல வைக்கிறார்கள். 

இளமையும் நவீனமும் சேர்த்து காட்சியமைப்புகளுக்கு இசையால் தெம்பூட்டியிருக்கிறார் இளையராஜா.  இப்போதுள்ள இளசுகளுக்கு சரிக்கு சமமாக பண்ணியிருக்கிறார் இந்த பண்ணைபுரத்துக்காரர்.  பாடல்களில் பரவாயில்லை.  அந்த ஏலே பாடலை வேறு யாராவது பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே ராஜா! 

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை நேர்கோணத்தில் சென்றாலும் போரடிக்காமல் நகர்த்தியிருக்கிறார் சேரன். ஒரு சந்தோஷ கேளிக்கை, மத்திய தர வகுப்பு மக்களுக்கு இனி சென்னையில் கனவாகி போய்விடுமோ என்ற நிஜத்தில் ஆரம்பிக்கும் சேரன் வழியெங்கும் நவீனமான சென்னையை காட்டி அதில் ஒவ்வொருவரின் கனவுகளை சொல்ல நினக்கும் நடை சீராக இருக்கிறது.  இருந்தும், என்ன சொல்ல வருகிறார், எதை தவறு என்று சுட்டிக் காட்ட வருகிறார் என்றுதான் தெரியவில்லை.  

சினிமா கனவுகளுடன் இருப்பவர்களுக்கு ஒரு மெஸேஜ், குறைந்த காலத்தில் பணம் பார்க்க மார்க்கெட்டிங் பண்ண நினைப்பவர்கள், முகவர்களாக நினைப்பவர்களுக்கு ஒரு மெஸெஜ் என இருந்தாலும் இந்த மெஸெஜ் எல்லாம் தப்பாக புரிந்து போய்விடும் அளவுக்கு எந்த நிஜத்தையும் ஆழமாக தொடாமல் விட்டேத்தியாக நகர்த்தி, சேரன் படங்களில் காட்சிகளில் ஒரு டச் இருக்குமே, அதை தொலைத்திருக்கிறார். 

சொல்ல வந்த மெஸேஜ் இது தான் என்று ராதாரவி கடைசி ஐந்து நிமிடம் கொடுக்கும் லெக்சரில் புரிந்தாலும் அதுவரை கடந்த காட்சிகளும், சம்பவங்களும் பார்வையாளர்களை குழம்ப வைக்கிறது. அம்மாவிற்கு உடம்பு சரியில்லாமல் சிகிச்சைக்கு தேவைப்படும் ஒண்ணரை லட்சம், வழியில்லாமல் கஞ்சா கடத்தலில் ஈடுபடும் நேர்மையான கதாநாயகன், திருமண சம்மததிற்கு இரண்டு லட்சம் கேட்கும் நவ்யாவின் அப்பா என எக்ஸ்பைரியான கோடம்பாக்க பார்முலாவை சேரன் படத்தில் பார்ப்பது புருவங்களை உயர்த்த வைக்கிறது. 

செய்யும்  தொழிலில் சிரத்தை வேண்டும், படிப்படியாக உழைத்து முன்னேற வேண்டும், குறுகிய காலத்தில் பல்வேறு தெரியாத வழிகளில் சம்பாதித்து முன்னேற நினைத்தால் தோல்வியே என்ற அட்வைஸை இக்காலத்து பிசினஸ் சக்ஸஸ் பார்முலாக்கள் தெரியாமலும், குறுகிய வட்டத்தில் சிக்கிக்  கொண்ட காட்சியமைப்புகளாலும் சேரனின் மாயக்கண்ணாடி  மக்கள் நடக்கும் சாலையில் உடைந்து கிடக்கிறது. 

உணர்ச்சிமயமான காட்சிகளாலும் யதார்த்தமாக சொல்லப்படும் கருத்துகளாலும் சேரன் படங்கள் பெரிதாக பேசப்படும்.  சாதாரண நடைமுறை காட்சிகளாலும் தன்னால் தரமான சினிமா தரமுடியும் என்ற சேரனின் முயற்சி  பாராட்டப்பட வேண்டியதே என்றாலும், அதற்கு அவர் இன்னும் பல தொலைவு நடக்க வேண்டியிருக்கிறது. 

மாயக்கண்ணாடி புத்தம் புதிய உடைந்த கண்ணாடி.

பருத்தி வீரன் ஏப்ரல் 9, 2007

Posted by M Sheik Uduman Ali in Articles.
add a comment

மவுனம் பேசியதே, ராம் படங்களுக்குப் பிறகு பருத்தி வீரனோடு வந்திருக்கிறார் இயக்குநர் அமீர்.

வாழ்க்கையில் எந்தவொரு லட்சியமும் பொறுப்புணர்வும் இல்லாமல் வம்பு வழக்குகளில் அலட்சியமாக சுற்றித் திரியும் ஒரு முரடனையும் அவனையே வாழ்க்கையாக நினைத்து உருகும் ஒரு பெண்ணையும் சுற்றிய சம்பவங்கள் தான் பருத்தி வீரன்.

 

புதுமுகம் கார்த்திதான் பருத்தி வீரன்.  சூர்யாவின் தம்பி, சிவக்குமாரின் மைந்தன், அமெரிக்காவில் படித்தவர் என்று இவருக்கு நிறைய அட்ரஸ்கள் உண்டு.  ஆனால் இதெல்லாம் சத்தியமாக பொய் என்று சொல்லும் அளவிற்கு காட்டானாக (அட! அதுதாங்க கிராமத்து சண்டியர்) வாழ்ந்திருக்கிறார்.

அலட்சியம், பொங்கி வரும் சண்டியர்த்தனம், மதுரை மண்ணிற்கே உரிய நையாண்டி என எந்தக் காட்சியிலும் சலிக்காமல் நடித்து நம்மை பிரமிக்க வைக்கிறார்.  சித்தப்பாவை சங்கறுத்துடுவேனு சொன்ன பெருசை  வக்கைனையாக டன்டக்கு டக்கா டான்ஸ் ஆடியே வைக்கோல் போருக்குள் வைத்து சாத்தும் போது இவனின் அலட்சியமான சண்டியர்த்தனம், கோயில் திருவிழாவில் அவ்வளவு அலட்சியமாக ஒருவனை குத்தும் போது அவனின் மிருகத்தனம், நமக்கும் வந்திருச்சுல்ல (அதை காதல் என்று கூட சொல்லமாட்டார் இந்த ஸ்வீட் ராஸ்கல்), சாஞ்சுக்க வேண்டியது தானே என்று காதலியுடன் கொஞ்சல் என அப்பப்பா வஞ்சனையில்லாமல் சிக்ஸர் அடித்திருக்கிறார் கார்த்தி.  வெல்டன்.

 

அவர் இப்படியென்றால் எதிர்முனையில் இவருக்கு பலமாக சரவணன்.  யப்பு என்னாமா பண்ணியிருக்கீக.  சண்டியர்த்தனத்தில் கார்த்தி பட்டையை கிளப்ப இவரு நக்கலும் நையாண்டியுமாக ஜாலியான ரேக்ளாஸ் ரேஸாக இருக்கிறது.

 

எந்த காட்சியிலும் மேக்கப் இல்லாமல் நிஜமான கிராமத்து கருவாச்சியாக ப்ரியாமணி.  கார்த்தியை பற்றிய எந்தவொரு விமர்சனத்தையும் சலிக்காமல் எதிர்கொள்ளும் அளவிற்கான நியாயமான காதலளவை காட்சிக்குக் காட்சி காட்டியிருக்கிறார். லேசாய் தலை கவிழ்ந்து கால் வட்டக் கோணத்தில் கூரிய பார்வையுடன் பேசும் போது யப்பா தெனாவட்டான பொண்ணுப்போய் என்று மிரள வைக்கிறார்.  அப்பா நைய புடைத்த பின் ஏய் கிழவி, நிறைய கறி அள்ளி வை, சாப்பிடணும்.  அப்பதான் இன்னும் வாங்க போற அடியை தாங்க தெம்பு வேணும் என்று ஆவேசமாக பேசும் போது பிரமிக்க வைக்கிறார் என்றால் கிளைமாக்ஸில் டேய் வீரா, என்ன காணாப் பொணமாக்கிருடா என கரையும் போது நம் கண்களில் பொசுக்கென தண்ணீர்.

 

பொன்வண்ணனுக்கு அழுத்தமான பாத்திரம்.  அதைவிட அவர் மனைவியாக வருபவர்.  அப்படியே கிராமத்து பிண்ணனியில் பேசி ஜொலிக்கிறார்.  டக்ளஸாக வரும் கஞ்சா கருப்பு, கார்த்தி & சரவணனால் ஒவ்வொரு காட்சியிலும் பாதிக்கப்படும் பொழுது நம்மை வயிராற சிரிக்க வைக்கிறார்.  கீழ்தொண்டையிலேயே பேசும் பொணந்தின்னி, அச்சு அசல் கிராமத்து சுட்டியாய் வரும் சாக்குமூட்டை என யாரை சொல்லாமல் விட.

 

ஒளிப்பதிவு ராம்ஜி.  அச்சு அசலாய் ஒவ்வொரு காட்சியையும் பதிந்திருக்கிறார்.  இயக்குனரின் விழிகளாய் இருந்து ஒவ்வொரு காட்சியின் பின்புலத்தையும் தெளிவாக புரிய வைத்திருக்கிறார்.  ஆஹா! இந்த இடத்தில் ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார் என்று சொன்னால் அங்கேயே ஒளிப்பதிவாளரும் இயக்குனரும் தோற்று போய்விட்டனர் என்று சினிமா சித்தாந்தம் உண்டு.  நமக்கு எங்கும் காமிராவும் அதன் நான்கு பக்கங்களில் மூச்சடைத்து கிடக்கும் காட்சிகளும் தெரியவில்லை.  திருவிழாவும் அந்த கும்மிருட்டு கிளைமாக்ஸும் இரு சோற்று பதங்கள்.

 

கிராமத்து கை மணத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசை.  முதல் பரிட்சை.  சார் அமோகமாக பாஸ்.  

 

ஒரு வருடம் படம் எடுக்கிறோமுனு நம்ம ஆளுங்க சொல்லறதெல்லாம் ஓவர்.  ஸ்பீல்பெர்க் ஷிண்டலர்ஸ் லிஸ்ட் படத்தை 60 நாட்களில் எடுத்து முடித்தார் என்று கலாபுருஷர் ஒருத்தரோட கமென்ட் ஒன்று உண்டு.  ஸ்பீல்பெர்க் அதற்கு வேண்டுமானால் 60 நாட்கள் எடுத்திருக்கலாம்.  ஆனால்  இந்த மாதிரி கதைக்கு இரண்டு வருடம் வேண்டுமானாலும் காத்திருப்பார். என்ன பெர்பெக்ஷன்!.  இதை விட நேர்த்தியாக யாராலும் படமெடுக்க முடியுமா என்று பாலாவின் பிதாமகன், அமீரின் பருத்திவீரன் இவற்றை தவிர்த்து வேறு படங்கள் உள்ளனவா என தமிழ்வாழ் ரசிக மகா ஜனங்கள்  தெரியப்படுத்தலாம்.

 

மணிரத்னம், பாலச்சந்தர், பாரதிராஜாவிற்கு பிறகு காலியாகிவிடுமோ என்று  பதறிய போது இந்த மாதிரி ஆட்கள் இருப்பது பெரிதாய் கர்வம் கொள்ள வைக்கிறது.  சரி விசயத்திற்கு வருவோம். 

எந்த காட்சியை சொல்ல எந்த காட்சியை விட. வார்த்தைக்கு வார்த்தை நையாண்டி, காட்சிக்கு காட்சி கமுதி பக்கங்களில் நாமே சுற்றுவது போன்ற பிரமை என  பக்கங்கள் போதாது.  அந்த பிளாஸ்பேக் காட்சிகள் எல்லாம் அள்ளித் தெளித்த முத்துச் சரங்கள்.  கருப்பச்சாமி இவனிடமிருந்து என்னைக் காப்பாற்று என்று அந்த சிறுமி விரைந்து போவதும், ஏய், நில்லுடி என சிறுவயது பருத்தி வீரன் விரட்டுவது, எழுபது எம்பதுகளில் கிராமத்து சிறுசுகள் விளையாடும் விளையாட்டு, சிறு வயதிலேயே தன் உயிரைக் காப்பாற்றிய நன்றி பின் அசைக்க முடியாத காதலாய் மாறுவது என ஒரு பக்கம் கூட கோடம்பாக்கம் வாசனையில்லாமல் முடித்ததற்கு அமீரை எத்தனை தடவை வேண்டுமானாலும் பாராட்டலாம்.

 

ஒரு காட்சி,  அதைச் சார்ந்த பின்புலம்,  அதில் உலவும் மனிதர்கள் என எல்லாமே அச்சர சுத்தம்.  நாளைய தலைமுறைக்கு போட்டுக் காட்ட முடிகிற அளவிற்கு அவ்வளவு பதிவுகள்.  அப்புறம் அந்த கிளைமாக்ஸிற்கு வருவோம்.  படம் பார்க்க போகும் போதே  நிறைய பேர் பயமுறுத்தினார்கள்.  அப்படியென்ன என்று பார்த்தால் நம்மை பொறுத்த வரை  இதற்கு மாற்றாக வேறு என்ன கிளைமாக்ஸ் வைக்க முடியும்.  படைப்புகளுக்கும் விமர்சனத்திற்கும் நம் மக்கள் போடும் ஒரு முரண்பட்ட முடிச்சுதான்  இந்த படத்தின் கிளைமாக்ஸை பற்றிய பயமும்.

 

மெட்ராஸ் ஜெயிலை பார்ப்பதே தன் வாழ்க்கை லட்சியம் என்று நினைக்கும் ஒரு பொறம்போக்கு, தான் எந்த இடத்தில் தன்னை நம்பி வந்தவளை விட்டு போகிறோம் என்ற முன் யோசனையில்லாத  ஒரு முரடனுடனான ஒருத்தியின் நேசத்தை கடைசியில் திருந்திவிடுவதாகவோ, அவன் செத்துபோவதாகவோ சினிமாத்தனமாக காட்டியிருந்தால்  இரண்டரை மணி நேரம் இயக்குனர் கட்டிய கோட்டை  சொட்டையாயிருக்கும்.

 

ஒருத்தருக்கு நாலு பேரு, ரத்தத் தொங்கலில் அரங்கேறும் காம வெறி என்பன போன்ற  வக்கிரத்தை கொஞ்சம் காரம் குறைய சொல்லியிருக்கலாமெ ஒழிய ஒரு மலரை நான்கு வண்டுகள் பிச்சியெறிவது போன்ற மெட்டாபோர் காட்சிகள் அந்த காமுகர்களையும், அறிவழிஞ்ச முரடர்களையும் அடையாளம் காட்டாது அன்பான விமர்சகர்க அன்பர்களே. என்ன லேசாய் விருமாண்டி நினைவுக்கு வருகிறான்.

 

கிளைமாக்ஸ் பயந்தவர்கள் வேண்டுமானால் கண்களை மூடிக்கொள்ளவும்.  இதற்கு பயந்து வரவில்லையென்றால் காபி டே, டிஸ்கோத்தேக்களை தாண்டிய ஒரு மண்ணில் உன் சம கால சகோதரனின் நிஜமான பதிவுகளை  பார்க்கிற வாய்ப்பு (பாக்கியம் என்று சொல்ல முடியாது!) இல்லாமல் போய்விடும்.

மிகச் சிறந்த இயக்குனர்களுக்கு தேசிய விருது கொடுப்பார்கள் என்பது நிஜமானால் வரும் வருடம் அமீருக்கோ  அல்லது குறைந்த பட்சம் இந்த படத்திற்கோ உண்டு. 

பருத்தி வீரன் சம காலத்து ஒரு தூரத்து மண்ணின் பதிவுகள்

பச்சைக்கிளி முத்துச்சரம் – சினிமா விமர்சனம் மார்ச் 20, 2007

Posted by M Sheik Uduman Ali in Articles.
add a comment

சத்தமில்லாமல் ஒரு படத்தை தந்திருக்கிறார் கவுதம்.  ரொம்ப யோசித்து தான் தியேட்டர் பக்கம் போனேன். ஆஊ என ரத்தக் களறியாக இருக்குமே என்ற பயம் தான். 

உயர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர் சரத் அழகான மனைவி, அன்பான மகன், சந்தோஷமான மெடிக்கல் ரெஃப் வேலை என இயல்பாக போகும் வாழ்க்கையில் அவருடைய மகனுக்கு சர்க்கரை வியாதி வருகிறது.  அவனை பராமரிப்பதிலேயே நாளை கழிக்கிறார் மனைவி.  சகஜமான இல்வாழ்க்கை இல்லாமலிருக்கும் சரத் ஜோதிகாவை கண்டதும் சபலமாகிறார். வரம்புகளை மீறக்கூடாது என இவர் நினைக்கு போது மடை திறந்த வெள்ளமாக ஜோதிகா லாட்ஜ் வரை கொண்டு செல்ல… விபரீதம் ஆரம்பமாகிறது.  சரெலென பணம் பறிப்பதற்காக வரும் ஒரு கயவன் தற்செயலாய் இருவரும் தம்பதியர் அல்ல என தெரிய வர பிளாக் மெயில் செய்ய சரத் சேமிப்புகள் முழுதும் கரைந்து போகிறது.  ஒரு நாள் இது எல்லாமே ஒரு நாடகம் என்றும் தான் பணத்திற்காக ஏமாற்றப்பட்டோம் என்று தெரிய வர தான் ஒரு சராசரி ஆணில்லை என்று தன் பணத்தை மீட்ட கிளம்புகிறார் சரத்.  அதன் சோதனைகளிலிருந்து மீண்டாரா என்பது கிளைமாக்ஸ். சரத்.  அழகான கேரக்டர்.  ரொம்பவே நடிக்க வேண்டாம்.  அவருடைய பாந்தமான முகமும் பராக்கிரம தகுதியுள்ள உடலுமே போதுமானதாக இருக்கிறது.  நடித்ததில் முக்கியமான படமாக பேட்டிகளில் தாரளமாக சொல்லிக் கொள்ளலாம்.  ஒரு நடுத்தர வயது குடும்பதஸ்தனாக அழகாக பொருந்துகிறார். அவருடைய மனைவியாக புதுமுகம்.  அப்படியே வேட்டையாடு விளையாடு கமலிக்கு தங்கை மாதிரி. எங்கே இவரை வில்லன்கள் கொன்றுவிடுவார்களோ என்று பயம்.  கோபித்துக் கொண்டு வரமாட்டேன் என்று கிளம்புவர்  திடீரென வந்து கையில் 600 ரூபாய் தான் வைத்திருந்தேன், காலியாகிவிட்டது வந்துவிட்டேன். என் பையனை தேடுகிறது என்கிறார்.  காமெடியாக மாசம் மாசம் காசு கொடு நான் எங்காவது போய்விட்டு வருகிறேன் என்று கேட்டாலும் கேட்பார் என நாம் நினைக்கும் போதே  காசு  கொடு; நான் திரும்பவும் போகணும் என்று அடம்பிடித்து அழுகிறார்.  யதார்த்தமாக தெரிந்தாலும் லேசாக பொத்தல் தெரிகிறது. 

ஜோதிகா! பாந்தமான குடும்ப பெண்ணாக அறிமுகமாகி வரம்பு மீறும் இல்லாளாக மாறும் வரை ஓகே.  இறுதியில் ராட்சத வில்லியாக தன் சுயரூபத்தை காட்டும் போது  நமக்கு ஒரு சுயபட்சாபமே ஏற்படுகிறது.  மொழியில் தூள் கிளப்பியிருகிறீர்களாமே பார்க்கலாம்.  யாரிந்த வில்லன்.  மூன்றெழுத்து சென்னை கெட்ட வார்த்தைகளிலேயே இவருடைய டயலாக்குகள் ஆரம்பிக்கிற மாதிரி கவனமெடுத்திருக்கிறார்கள். ஏனென்றால் கவுதம் தான் சாருக்கு டப்பிங்.  ஙொத்__ மூடு… போடு என சகஜமாக பேசுயிருக்கிறார்.  நல்லவேளை ஹீரோவையும் அவரது மனைவியையும் குரூரமாக படுத்தியெடுக்கவில்லை. எடிட்டிங்கிறகு நிறைய வேலை வைக்கவில்லை.  அளவெடுத்து எழுதப்பட்ட திரைக்கதையால்.  அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு நார்மல். 

திருட்டு மாங்காய் இனிக்கும்.  அதற்காக அற்ப சந்தோஷத்திற்காக ஒரு சந்தோஷமான வாழ்க்கையை இழக்க நேரிடும் என அந்த பீச் ரெசார்ட் காட்சிகள் மூலம் ஒவ்வொரு ஆணிற்கும் பெண்ணிற்கும் பசுமரத்தாணியாக அழகாக புரிய வைக்கிறார் இயக்குநர்.  இதன் பிண்ணனியிலேயே கதையை நகர்த்தியிருந்தால் கீரிடம் சூட்டி அழகு பார்த்திருக்கலாம்.  ஆனால், அதற்கு பிறகு தனது டிபிக்கல் டிராக்கில் பயணித்து கொஞ்சம் ஏமாற்றியிருக்கிறார். மன்னிப்பு கேட்கும் சரத்திடம், அத்தனை வருடம் சந்தோஷமாக இருந்த போதெல்லாம் தெரியவில்லை; சில வருடங்கள் இல்லறத்தில் சந்தோஷமில்லை என்றதும் தப்பு செய்தால் பின் எப்படி நீ துன்பத்திலும் என் கூட இருப்பாய் என்று நம்புவது என்று அவர் மனைவி கேட்கும் கேள்விகள். இரண்டு வருடம் இந்த ரயிலில் வருகிறேன் என்கிறீர்கள்; உங்களை பார்த்ததே இல்லையே என சரத் கேட்க இத்தனை வருடம் தலை குனிந்து வந்திருப்பீர்கள் என்ற ஜோதிகாவின் பதில் என மனசை தொடும் வசனங்கள் பரவலாக வருகின்றன. எதற்கும் அஞ்சாத, என்ன வேண்டுமானாலும் செய்ய முடிகிற அசிங்கமான வில்லன்.  சலிக்காமல் அவனிடம் அடி வாங்கும் ஹீரோ.  பத பதக்க வேண்டுமென்கிற காட்சிகள் இந்த படத்தில் கொஞ்சம் குறைவாகத்தான் என்றாலும் ஏதோ ஒரு சிறு வட்டம் போட்டு தான் கவுதம் ஒர்க் பண்ணுகிறாரோ என்ற சந்தேகம் வருகிறது. கிளைமாக்ஸ் பக்கம் ஒரு பாடல் வரும் போதே, அட அதுதானே, கவுதம் படத்தில் வில்லன் இன்னும் நிறைய சேஷ்டைகள் செய்யனுமே என  தோன்றும் போதே அதே மாதிரி காட்சிகள்.  அட படத்தை முடிங்கப்பா…என ஆயாசமாகிவிடுகிறது.  அப்புறம் சராமரியாக இரண்டு கொலைகள் நடந்தும் ஒரு செய்தியோ, போலீஸோ தலை கூட காட்டவில்லை.  அதையே சரத் கேட்க அவரின் நண்பர்  அட அவனுங்களுக்குள்ளேய அடிச்சிகிட்டது.  சத்தமில்லாம முடிஞ்சிருச்சு என்கிறார்.  அதற்காக சரத் போல் பாதிக்கப்பட இருந்த இன்னொருவர் பற்றி கூடவா செய்தி வராது.  ம்ஹூம் என்ன செய்ய.  ஜஸ்ட் லைக் தேட் என சரத்தும் இரண்டு கொலைகள் செய்து விட்டு சந்தோஷமாக இருக்கிறார். பாடல்களும் இசையும் ஒகே. வழக்கமான ஸ்டீரியோ டைப் திரைக்கதைகளிலிருந்து வெளிவந்து, ஒரே மாதிரியான பாடல்களையும் பிண்ணனி இசையையும் கேட்டு ஹாரிஸ் ஜெயராஜை தொல்லை பண்ணாமல் முயற்சித்தால்  தமிழ் சினிமாவிற்கு இன்னொரு மணிரத்னம் மாதிரி, ஷங்கர் மாதிரி ஒரு இயக்குநரை பார்க்கும் வாய்ப்பு தமிழ் கூறும் நல்லுலகிற்கு இருக்கிறது. பச்சைக்கிளி முத்துச்சரம் கொஞ்சம் சிவப்பாக…. சரம் சிதறலாக….

லைஃப் டைம் ஃப்ரீ க்ரெடிட் கார்டு திசெம்பர் 21, 2006

Posted by M Sheik Uduman Ali in Articles.
add a comment

ஸார், டூ யூ வான்ட் லைஃப் டைம் ஃப்ரீ க்ரெடிட் கார்டு? அநேகமாக எல்லா அன்பர்களும் இந்த தொ(ல்)லைபேசி அழைப்பை ஏற்றிருப்பீர்கள்.  இது தான், இது தான் கை நிறைய சம்பளம் வாங்கியும் மாசக் கடைசியில் நம்மை கடனாளியாகவும் செலவாளியாகவும் ஆக்கும் மந்திரச் சொல்.

எப்படி தான் நம்ம கான்டாக்ட் கிடைக்கிறதோனு ஆச்சர்யம் வேண்டாம்.  உங்களை பற்றிய விவரங்கள் பெரும்பாலான வங்கிகளுக்கு தெரியும்.  அதுவும் ஸார், நீங்க என்ன கிரெடிட் கார்டுலாம் வச்சிருக்கீங்கனு கேட்பாங்க.  நாமளும் அப்பாவியா சொல்லுவோம்.

முன்னெல்லாம் நம்ம அப்பாக்களெல்லாம் ஒரு டிவியோ, பைக்கோ வாங்கணும் என்றால் முக்கால்வாசி தொகையை வருசக்கணக்காக குருவி சேர்க்கிற மாதிரி சேமித்து மிச்ச தொகையை அங்க இங்க புரட்டி வாங்குவாங்க.  அதுக்கு பிறகு தவணை முறைனு ஒண்ணு வந்தது.  அதாவது வாங்குற சாமானுக்கு முதலில் ஒரு அமௌண்டு கட்டுங்க, அதுக்கு பிறகு மாசாமாசம் கொஞ்சங் கொஞ்சமா மிச்ச தொகையை கட்டுறது.  இந்த கால இடைவெளிக்கு ஒரு வட்டி போட்டு அதையும் அசலோட சேர்த்து வாங்கிக்குவாங்க.  இது நிறைய இல்லத்தரசிகள கவர்ந்து போச்சுது. ஏன்னா, அது வாங்கணும் இது வாங்கணும்னு தங்கள் வீட்டுக்காரங்ககிட்ட மொத்தமா கேட்கிறத விட இப்படி மாசாமாசம் கொஞ்சமா லவுட்டிக்கலாம்.  அவரும் எதுவும் கேட்க மாட்டாரு.

ஆனா பாருங்க, நம்ம பயபுள்ளக முக்காவாசி பேரு, சம்பாதிச்சயெல்லாம் ஊர சுத்தி நஞ்சை புஞ்சைனு வாங்கி போடுறது, வீடு கட்டுறதுனு நிலையான சொத்தா வாங்குணானே ஒழிய விஸ்தீரனமா செலவழிக்க மாட்டாம சிக்கனமா அலைஞ்சான்.  குடும்பத்தோட இருந்தா தினமும் வீட்டுச் சாப்பாடு, வாரம் விட்டு வாரம் ஒரு சினிமா, அது போக கோயிலு இல்லனா பீச், பார்க்கு, பேச்சுலர்னா மெஸ், பெட்ரோல், சினிமானு ரொம்ப சந்தோசமா தான் இருந்தான்.  ஆனா, இவன் சந்தோசத்தை யாரு கேட்டா.  நாங்க எப்படி பிழைக்கிறதுனு எவனோ ஒருத்தன் தீட்டுனா பாருங்க கிரிமினல் பிளான்.  அது தாங்க கிரெட் கார்டு.

முன்னாடி எல்லாம் கிரெட் கார்டுங்கிறத பெரிய பெரிய ஆளுங்க தான் வச்சிருந்தாங்க.  இப்ப, ஜஸ்ட் மாசம் ஐயாயிரம் சம்பாதிக்கிறிங்களா.  இந்தாங்க ஒரு கார்டுனு கூப்பிட்டு கொடுக்கிறாங்க.கம்பெனிக்கு வாசல்ல ஒரு கும்பல் டீக்கா ட்ரெஸ்லாம் பண்ணி டீஸண்டா பேசுவாங்க.  சார் இப்ப கார்டு வாங்குணா ஒரு ஸர்ஃப்ரைஸ் கிஃப்ட் ஒண்ணு தருவோம்.  அது போக உங்க ஒய்ஃப்க்கும் வாங்குனீங்கனா அதுவும் ஃப்ரீ.  இப்படியெல்லாம் சொல்லுவாங்க.  சின்ன சைஸ் பாஃண்டுல பத்தி பத்தியா  பிரிண்ட் செய்யப்பட்ட ஒரு அப்ளிகேஷனை நீட்டி பேரு, ஊரு, கையெழுத்து மட்டும் வாங்கிட்டு போயிடுவாங்க.  இவங்ககிட்ட இரக்கமே காட்டாதீங்க.  கார்டு வரும்பொழுது ஸாரி சார் கிஃப்ட்டுக்கு டைம் முடிஞ்சு போச்சுதுனு சொல்லுவாங்க.  நாமளும் சரின்னு அட்ஜெஸ்ட் பண்ணிப்போம்.

அப்புறம் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணுவோமனு பண்ணி அதை கிரெடிட் கார்டுல கட்டுவீங்க.  லைஃபே ரொம்ப ஈஸியா இருக்கும்.  அந்த கிரெடிட் கார்ட பார்க்கும் பொழுதெல்லாம் ஏதோ உயிர் நண்பன் கணக்கா ஆசையா பார்ப்பீங்க.  அப்புறம் முதல் மாசம் பில்லு வரும்.  கரக்டா தேதிக்கு கட்டிடுவீங்க.  அப்புறம் சும்மாவே இருக்குதேனு ஏதோ நாம தத்தியா அதை வச்சிருக்கிறோம்னு நினைப்பு வந்து பர்சேஸ் பண்ணுவீங்க.  மாசக் கடைசியா இருந்தாலும் ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காதுனு ரெஸ்ட்டாரண்ட், பார், சினிமானு கண்ணாபின்னாணு செலவு பண்ணுவீங்க.  வாங்கும் திறன் கொண்ட ஒரு சிறந்த கன்ஸ்யூமராக நீங்கள் இருப்பதை நினைத்து பெருமைப்படுவீர்கள்.  கேர்ள்பிரண்ட் அல்லது மனைவியை பெருமை பொங்க பார்ப்பீர்கள்.  அப்புறம் பில் வரும். செலவழிக்கும் போது போட்ட கணக்கை தாண்டி நிறைய காசை சர்சார்ஜ், டாக்ஸ், லொட்டு லொசுக்குனு சொல்லி வங்கியிலிருந்து ஸடேட்மன்ட் வரும் போது தலை சுற்றும். அப்போ தான் தெரியும் நாம ஒரு கன்ஸ்யூமர் மட்டுமில்ல, பெரிய கடனாளியும் கூடனு.

கண்ணுமுழியெல்லாம் பிதுங்கி காசக்கட்டுனாலும் ஆடுனதும் பாடுனதும் சும்மா இருக்காதே.  ஒரு மாசம் ஒரு நாள் தாமதித்து பில் கட்டினாலும் கந்து வட்டியை விட அநியாயமாக வட்டி போட்டு அடுத்த மாசம் பில்லு வரும்.  சம்பாதிக்கிறதெல்லாம் கையிலேயே கிடைக்காம போகும்.  இது போதாதுனு வருசக்கடைசியிலே பிராஸசசிங் சார்ஜ்னு ஒண்ணு கேட்டு பில் வரும்.  சரின்னு விட்டா, மனைவிக்கு வாங்குன அட்-ஆன் கார்டுக்கு ஆயிரம் ரூபாயைக் கேட்டு பில்லு வரும்.  பேங்குக்கு போன் செஞ்சு என்னாங்க ஃப்ரீ கார்டுனு தானே சொன்னாங்கனு கேட்டால்  அப்படியெல்லாம் கிடையாதுங்கனு சொல்லுவாங்க.  அட, உங்க ஆளுதான் சொன்னாங்கனு கேட்டா, அவங்க எங்க ஆளுங்களே கிடையாதுனு சொல்லுவாங்க.  நமக்கு வாங்கித் தந்த புண்ணியவான் அந்த நேரத்தில வேற யாரையாவது ஏமாத்திக்கிட்டு இருப்பான்.

இதெல்லாம் தெரியாத மாதிரி அதே பேங்கிலிருந்து இன்னொரு அப்பாவிக்கு ஸார், டூ யூ வான்ட் லைஃப் டைம் ஃப்ரீ க்ரெடிட் கார்டு?னு கேட்டு ஒரு பொண்ணு தேனொழுக பேசுக்கொண்டிருப்பாள். அதே பேங்க், இந்த ___ விழாவையொட்டி இவ்வளவு பர்சேஸ் பண்ணினால் ஒரு ரொட்டித்துண்டு இலவசம்னு  நாய்க்கு போடுற எலும்பு துண்டு மாதிரி விளம்பரம் பண்ணும்.நாமளும் கார்ட தூக்கிட்டு ஆசையா ஆட்டத்த ஆரம்பிப்போம்.  கிட்டத்தட்ட, எதைக் கொண்டு வந்தாய் நீ இழப்பதற்கு கதைதான்.

ஏன்னா,  நாமெல்லாம் நவீன உலகின் மிகச் சிறந்த செலவாளிகள் ஆயிற்றே. 

சென்னை பட்டணம் திசெம்பர் 5, 2006

Posted by M Sheik Uduman Ali in Articles.
1 comment so far

கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் காலம் முதல் நம்ம விவேக் வரை சென்னையை பற்றி ப(க)டிக்காத ஆட்கள் இல்லை. எல்லா காலங்களிலும் சென்னயைப் பற்றிய பயம் கலந்த எச்சரிக்கைகள் இருந்த வண்ணமே உள்ளன.  இருந்தும், இன்று பெருவாரியான தமிழக மற்றும் ஆந்திர மக்களுக்கு வாழ்வாதாரமே இந்நகரம் தான். மரமும் செடியுமாக வனாந்திரமாக இருந்த இடமெல்லாம் இன்று பிரும்மாண்டமான கட்டிடங்களால் கற்பழிக்கப்பட்டுள்ளன. ஏரி, குளங்களெல்லாம் குடியிருப்புகளால் நிரம்பி விட்டன. இங்கு வாழும் பெரும் பகுதியினர் குடியேறிகள் தான். 

ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு மகிமை உண்டு.  பல்வேறு மண்ணிலிருந்து கிளம்பி இங்கே பிழைக்க வந்தவர்கள், தங்கள் மண்ணை பற்றியே பேசுவது வழக்கம் தான் என்றாலும், பலருக்கு சோறு போடும் இந்த மண்ணை பற்றி பெருமையாக பேச ஆளில்லை. இங்கு வாழ்பவர்களுக்கு இந்நகரம் பற்றிய உணர்வுகளும் சரியாக இல்லை. எல்லோரிடமும் ஏதோவொரு பயமும், நம்பிக்கையற்ற உணர்வுமே உள்ளது.  கீழ் தட்டு மற்றும் மத்திய அடித்தட்டு மக்களிடமும் உள்ள ஒரு நேசவுணர்வும், மனித நேயமும் மற்ற மக்களிடம் இல்லை.  ஆனால், சில நம்பிக்கையற்ற உணர்வுகளுக்கு அவர்களும் ஒரு காரணம் என்பது பலரின் வாதம்.  

எல்லோருக்கும் இந்நகரம் ஒரு சத்திரமே.  பயன்படுத்தி விட்டு குப்பையில் போடும் பற்பசை டியூப் மாதிரி நிறைய பேருக்கு இது ஒரு யூஸ் அன்ட் த்ரோ நகரம். இதெல்லாம் போதாதென்று உலகமயமாக்கலில் மேற்கத்திய கலாச்சாரங்கள் வெகு இயல்பாக இங்குள்ள இளைய தலைமுறையினரிடம் நுழைந்து நம் கலாச்சாரத்தின் முதுகெலும்பை எண்ணிப்பார்த்துக் கொண்டிருக்கிறது. எது நாகரிகம், எது முற்போக்குத்தனம் என்பதில் இங்குள்ள இளைஞர்களுக்கு குழப்பமே.  கிராமங்களிலிருந்து வரும் இளைஞர்களுக்கு ஒவ்வாமை தான் ஏற்படுகிறது. 

எவருக்கும் இங்குள்ள எதைப்பற்றியும் கவலையில்லை.  தான் வாழவேண்டும், அதுவும் இன்றைக்கு நல்லபடியாக!.  இன்னும் பத்து வருடங்களுக்கு பிறகு இந்த நகரம் வாழ்வதற்கு எப்படி இருக்கும், வருங்கால சந்ததியருக்கு  நீராதாரமும், சுகாதாரமும் எப்படி இருக்கும் என்று எவருக்கும் கவலையில்லை.  அவர்களுக்கு தரப்போவது வெறும் கட்டிடங்களையும், பெரும் கழிவுகளையும் தான். 

ஆளுபவர்களுக்கும் இதைப் பற்றி யோசிக்க நேரமில்லை.  தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த அவகாசமில்லாமல் பிரச்சினைகளும், அரசியலும் தலை தூக்குவதால் குறுகிய கால திட்டங்களே அமுல்படுத்தப்படுகின்றன. போதாதென்று புதுப்புது தொழிற்சாலைகளால் இம்மண்ணுக்கு அதிகமான சுமையைக் கொடுத்து தங்கள் கண்ணுக்கெதிரிலேயே எல்லாம் நடந்திட பார்க்கும் மனப்பான்மையும் உள்ளது.  அரசு நிர்வாகத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் ஒரு மாநிலமே ஒரு நகரத்தை எதிர்பார்க்கும் விதி டெல்லி, மும்பை, கல்கத்தா உட்பட சென்னைக்கும் உண்டு.   கோவை, திருப்பூர் போன்ற விதி விலக்குகள் உள்ளன என்றாலும், பன்னாட்டு நிறுவனங்கள் அமைக்க சென்னையைத் தாண்டி மதுரை, திருச்சி, நெல்லை என பல நகரங்கள் உள்ளன.  இந்நகரங்களின் உட்கட்டமைப்பை முறைப்படுத்தினாலே போதும்.  அங்குள்ள மக்கள் பலரும் பாடு பார்ப்பதற்கு விரும்பியோ, விரும்பாமலோ சென்னையை தேடி வருகிறார்கள். போதும் போதும் என்று இந்த மண் சமிஞ்கை செய்ய ஆரம்பித்து விட்டது.  அழிப்பது மிகவும் எளிது, ஆக்க…?