jump to navigation

சுப்ரமணியபுரம் – விமர்சனம் ஜூலை 27, 2008

Posted by M Sheik Uduman Ali in Reviews.
Tags: ,
6 comments

படம் ரிலீஸாகி நாலு வாரமாகியும் என்னால் பார்க்க முடியவில்லை. ஒன்று பரவலாக தியேட்டர்களில் ரிலீஸாகவில்லை. இன்னொன்று டிக்கெட். நாளையக் காட்சிகளுக்கு இன்றே ஹவுஸ்புல் என்று போர்டு போட்டிருப்பார்கள். ஆனால் பிளாக்கில் கொள்ளை விலை. சரினு முயற்சித்தும் கிடைக்கவில்லை. பிறகு நாலு வாரம் கழித்து “சத்யம், “ஐநாக்ஸ்ல் படம் ரிலீஸ். ம்ம்ம். இதுவே ஒரு சோறு பதம்.

பாலா, அமீர் ஆகியோரின் படைப்புகளில் தமிழ் சினிமாவை வேறோரு தளத்திற்கும் தரத்திற்கும் கொண்டு சென்ற “பிதா மகன், “பருத்தி வீரன்இரண்டுமே மதுரை மண்ணை ஈரத்துடன் இயல்பாக அணுகியவை. இதற்கு மேல் மதுரையை மையமாகக் கொண்ட சினிமா திகட்டி விடும் என்று நினைத்த நேரத்தில் இவர்களின் பட்டறையிலிருந்து சசிக்குமார் என்றொரு படைப்பாளியின் கைவண்ணத்தில் “சுப்ரமணியபுரம்.


உணர்ச்சிவசப்படுதல். இதுதான் மதுரை மற்றும் திருநெல்வேலி மண்ணின் மைந்தர்களிடம் இருக்கும் பொதுவான பழக்கம். இப்படித்தான் என்பதுகளில் உணர்ச்சிக்கும் அறிவுக்கும் உள்ள தூரத்தில் உதவி என்ற எலும்புத் துண்டை போட்டு விட்டு ரொம்ப நாளாக கட்சியில் எந்த பதவியும் பெறமுடியாத படி தன்னை மறித்து நிற்கும் ஒரு மாவட்டத்தை போட்டுத்தள்ள வேலை வெட்டி இல்லாமல் தங்களையே சுற்றி வரும் மூன்று இளைஞர்களை பணிக்கின்றனர் ஒரு முன்னாள் கவுன்சிலரும் அவரது தம்பியும். இளைஞர்களின் உணர்ச்சி ஜெயித்த வேலையில் எக்ஸ் – கவுன்சிலர் தம்பியின் குள்ள நரித்தனம் ஜெயித்திட இன்னொரு பிரபலத்தின் தயவில் ஜெயிலிலிருந்து வெளிவரும் இளைஞர்களுக்கு அந்த பிரபலம் இன்னொரு அசைன்மன்டை கொடுக்க தொடர்கிறது இவர்களின் கொலைப்பணி. எக்ஸையும் அவரது தம்பியையும் போட்டுத்தள்ளுவதே லட்சியமாக திரியும் இவர்களின் உணர்ச்சிகள் நயவஞ்சகத்தில் நசுக்கப்படுவதே “சுப்ரமணியபுரம்.

சென்னை 28ல் ஜொலித்த ஜெய் தான் முக்கிய கதாபாத்திரம். அசட்டுத்தனமாகவும், தலையை வைப்ரேஷன் மோடில் வைத்து காதலில் வழிந்தோடும் நடிப்பும் வெகு ஜோர். தனது கேரியரின் அடுத்த சினிமாவை அழகாக தேர்ந்தெடுத்ததற்கு சபாஷ். மயிரிழையில் உயிர் தப்பி எதிரிகளுக்கு பயந்து ஒதுங்கிய வீட்டிலுள்ள பெண்ணின் காலில் விழுந்து உயிர் பிச்சை கேட்கும் போது பரிதாபம்
காட்ட வைக்கிறார்.

அந்த காலத்தில் பாரதிராஜாவும், பாலச்சந்தரும் தங்கள் கதாநாயகிகளை அறுபது டிகிரி கோணத்தில் கண்களை சாய்வாக்கி படபடக்கும் படி பேச விடுவார்கள். கொஞ்சம் அசெளகரியமாக தோன்றும் இந்த ஸ்டைலை அருமையாக பிரதிபலித்திருக்கிறார் துளசியாக வரும் “சுவாதி. எண்ணி ஒரு பக்கத்திற்குள்ளாகவே இவரது மொத்த டயலாக்குகளுமே முடிந்தாலும் சிரிப்பும் அழுகையுமாக நம்மை ஆர்பரிக்கின்றார்.

எக்ஸ் –கவுன்சிலரின் தம்பியாக வரும் சமுத்திரக்கனியும் சரி; ஜெய் நண்பனாக வரும் இயக்குநர் சசிக்குமாரும் சரி பாத்திரம் அறிந்து அரங்கேறியிருக்கின்றனர். ரொம்பவும் பக்குவமாக சுபாவத்தோடு ஜெய்யின் அவசரத்தனத்தை கட்டுப்படுத்தும் நண்பனாக வரும் சசி மனதை அள்ளுகிறார். அத்தனை கொலைகளையும் செய்து நண்பர்களையும் தொலைத்து சந்தோஷத்தை இழந்து ஆற்றங்கரையில் இவர் புலம்பும் காட்சிகளும் அதைத் தொடர்ந்த கொடூரங்களும் இன்னும் மனதை விட்டு அகலவில்லை.

மதுரை மண்ணென்றால் கஞ்சா கருப்பு ஸ்பெஷல் தான். காசுக்காக பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்யும் இடங்களில் சலசலக்க வைக்கின்றார்.

தங்களை வெட்ட கிளம்பி வரும் கும்பலிடமிருந்து ஜெய்யும், கஞ்சா கருப்பும் மூலை முடுக்கெல்லாம் ஓடும் போது சடேலென நினைவுக்கு வருகின்றார் எஸ்.ஆர்.கதிர். சுப்ரமணியபுரத்தை தன் கேமிராவால் உயிரூட்டியவர். அதுவும் அந்த ஆற்றங்கரைக் காட்சிகள் நமக்கும் ஏதோவொரு வெறுமையை ஏற்படுத்தும் அளவிற்கு அவ்வளவு நேர்த்தி. பருத்திவீரனை அழகாக பேக் செய்து கொடுத்த ராஜா முஹம்மது தான் இதற்கும் எடிட்டிங். கொடூரமான கொலைக் காட்சிகளை அதன் அளவிற்கு விட்டு விட்டு அப்புறம் சபை கருதி வெட்டி விட்டு படத்தை இயல்பு நடை போட வைத்திருக்கிறார். இருந்தாலும், ஆற்றங்கரை மணல், ட்ரிப்ஸ் ஏற்றும் ட்யூப் போன்றவற்றை ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு இவ்வளவு நீளமாக கதிரின் காமிரா காட்டினாலும் ராஜாவாவது கத்திரிகோல் போட்டிருக்கலாமே.

பெல்ஸ் பாட்டம் பேண்ட், டைட் ஷர்ட் அகல கால்லர் என்ற என்பதுகளின் பாணியை முன்னிறுத்திய காஷ்ட்யூம் டிசைனர் நட்ராஜூம், என்பது கால காட்சிகளுக்கு உணர்வு கொடுத்த ஆர்ட் டைரக்டர் ரெம்போனும் பாராட்டுக்குரியவர்கள். ஆங்காங்கே மட்டும் மிக மெல்லிசான இயலாமை தெரிகின்றது.

அழகான தன் காம்பியரிங்கில் அசர வைத்த ஜேம்ஸ் வசந்தன் தான் இசை என்பது இன்னுமொரு சர்ப்ரைஸ். “கண்கள் இரண்டால்“, “காதல் சிலுவையில் அறைந்தால் இன்னும் ரீங்காரமிடுகின்றன. முன்னது விசுவலில் காதல் வருடுகின்றது என்றால், பின்னது ஷங்கர் மஹாதேவனின் குரலில் இறுக்கம் தருகின்றது. படம் நெடுக ஏர்.ஆர்.ரஹ்மானையும் யுவனையும் கலந்த பாணியில் பின்ணணி இசை இழையோடுகின்றது. முதல் கொலைக்கு இன்னொரு ஊருக்கு சென்று ஆயுதங்கள் வாங்க சசிக்குமாரும், கஞ்சா கருப்பும் செல்லும் போது அமைத்திருக்கும் பின்ணணி இசை காட்சியை மிரள வைக்கின்றது.

சித்தன் சவுண்ட் சர்வீஸை சுற்றிய வேலை வெட்டி இல்லாத இளைஞர்களின் வாழ்க்கை முறையை இயல்பு மீறாமல் திரைக்கதைப் படுத்தியிருக்கிறார் சசிக்குமார். முன்பாதி கலகல; பின்பாதி வெலவெல என்ற அதே “பிதா மகன், “பருத்தி வீரன் பாணியில் திரைக்கதை பேட்டர்ன் இருந்தாலும் அப்படங்களில் பாலாவும் அமீரும் காட்டியிருந்த தனித்தன்மையை சசிக்குமாரும் செவ்வனே காட்டியிருக்கிறார் கொஞ்சம் நிதானமாக. நறுக்குத் தெரித்த வசனங்களோ, அனல் பறக்கும் காட்சிகளோ படத்தில் இல்லை என்றாலும் சந்தோஷம், பயங்கரம் இரண்டையும் யதார்த்தமாகக் காட்டியிருக்கிறார். ஐயனார் சிலைகளும் குதிரைகளும் சூழ்ந்த அந்த பாறை மேட்டில் கதாநாயகி பொலபொலவென தன் காதலன் முன்னால் அழுகின்ற காட்சிகளும் அதைத் தொடர்ந்த திருப்பங்களும், கஞ்சா கருப்புவிடம் ஆற்றங்கரையில் புலம்பும் சசிக்குமாரும் அதைத் தொடர்ந்த திருப்பங்களும் ஒட்டுமொத்த படத்தையும் வேறு தளத்திற்கு இட்டு செல்கின்றது.

மனதளவில் நாம் மழுங்கி விட்டோமா என்று தெரியவில்லை; ஹீரோயினை கொல்லாமல் படத்தை முடித்திடும் போது “என்னப்பா அப்படியே விட்டுட்டாய்ங்கஎன்று தோன்றுகின்றது. மற்றபடி விட்டேத்தியாக வேலை வெட்டி இல்லாமல் உணர்ச்சிப்பூர்வமாக என்பதுகளில் சுற்றித் திரிந்த இளைஞர்களின் கதை தான் என்றாலும் அது இப்போதும் இளைஞர்களுக்கு குறிப்பாக தென்மாவட்ட இளைஞர்களுக்கு பொருந்தும்.

சுப்ரமணியபுரம் – தமிழ் சினிமாவின் இன்னொரும் தராதரம்.

மாநகரப் பேருந்தும் சில பயணங்களும் ஜூன் 29, 2008

Posted by M Sheik Uduman Ali in Reviews.
3 comments

உயர உயரப்  பறக்கும்  எண்ணெய் விலையேறறத்தைப் பார்த்தால் இனி மாநகரப் பேருந்து  பயணமே மகத்தானது என்றவொரு முடிவுக்கு வந்துவர்கள் நிறைய பேர் என்று நினைக்கின்றேன்.  ஆனால், இப்பயணம் ஒன்றும் அவ்வளவு லேசுப்பட்டதல்ல.  உங்கள் பர்ஸுகளையோ பொருட்களையோ அடிபோட  காத்திருக்கும் திருட்டுக் கும்பல் ஒருபுறமிருக்க,  எப்படா வெட்டிச்சண்டை  இழுக்கலாம் என்றலட்சியத்துடன்காத்திருக்கும் வீரக்குலச்சிங்கள் ஒருபுறம்.
சில  பயணங்கள் ஹைலைட்டான காமெடி  ஷோவாகவோ, சில பயணங்கள் நம்மையே  காமெடியனாகவோ  ஆக்கிவிடுவதுண்டு.

சமீபத்தில் இப்படிதான், பிதுங்கிவழியும் கூட்டத்தோடுவந்தது நான் பயணம் செய்யவேண்டிய பேருந்து.   ஏறவா  வேண்டாமா  என்றகுழப்பதோடுவழியில் நின்றதில் என்னை குண்டுக்கட்டாக உள்ளே தூக்கிவிட்டிருந்தார்கள்.  அட, இதுவும் நல்லாயிருக்கிறதே  என்று வியந்தேன்.  உள்ளே  வந்த பிறகு தான் தெரிந்தது படிக்கட்டில்  தொங்கிக்  கொண்டிருக்கும்  ஒரு  தம்பி பஸ்ஸை  பேலன்ஸ் செய்ய அப்படிதொங்கவில்லை  என்று.   ஏனெனில், இந்த  ஸ்டாப்பில்  ஏறிய எனக்கே  உள்ள மூச்சுவிட இடம் இருக்கிற போது  அந்த தம்பி எப்போது  ஏறியதோ?

நீண்ட சிக்னல் காத்திருப்பில் பஸ் நிற்கும்போது  கையோடு அதீதமான இங்கிலீஷ் அறிவோ  இல்லை அதிகமான பீட்டரோ  விடத்தெரியும் என்றால்  ஹிண்டு கிராஸ்வேர்ட், இல்லை குமுதம்,  ஆனந்தவிகடன்  என்று  எதையாவது வாங்கிக் கொள்ளவும்.  உங்கள் பொறுமையை  சிரஞ்சீவியாக்கும் ஷார்ட்கர்ட் இது.   இன்னும் நிறைய சொல்லலாம்.  பாவம் இந்த டிரைவர் தான்.  நல்ல அழகாத்தான் ஓரங்கட்டி நின்றிருப்பார்.  பேருந்தின் முன்பக்கத்தை  சுற்றிச்  சூழ அவசரமா  ஒன்னுக்கு போறவன் மாதிரி டூவீலர் பயபுள்ளகய பண்ணுற அட்டூழியம்  இருக்கே.  ஒருத்தன்  90 டிகிரி நேரே  பஸ்ஸுக்கு முன்னாடி நின்னா,  இப்பத்தான் பைக்கு வாங்கிய இன்னொரு டூவீலர் டூபாக்கூர் ஒரு 60 டிகிரி சாய்மானத்துல நிப்பாட்டும்.  இந்த கேப்ப பில்லப் பண்ண இன்னொரு சாகஸப்புலி ஓடி வரும்.  இதெல்லாம்  ஏதோ  பத்து பதினைந்து நிமிடம் நடக்குதோன்னு நினைச்சா அது தப்பு.   எல்லாமே  ஒரு முப்பது இல்லை  அறுபது  செகண்டுகளுக்கு நடக்குற சர்வைவல் பிரச்சனை.

இதுல ஆட்டோக்காரர்கள் பண்ணுகிற அலம்பல் இருக்கிறதே.  அவ்வளவு சைஸ் வண்டிய குறுக்காலேயும்  நெடுக்காலயும் விட்டு பஸ்ஸை  சுற்றி ஒரு லேயரே  அமைந்து விடுவதுண்டு.  சிக்னல் போட்டதும் நம்ம பஸ்டிரைவர் வண்டிய நகர்த்துறத்துக்கு படுற பாடு இருக்குதே அப்பாடா.  அட அதற்காக இவங்க  ஏதோ பாவம்னு நினைச்சுடாதீங்க.  இடக்காலே  இருந்து வடக்காலே  40 டிகிரியிலேயே  இவங்க பஸ்ஸை  திருப்புறஸ்டைலில் டூவீலர்ல போற பொது ஜனம் ரொம்ப ஜாக்கிரதையா  இருக்கணும்.  சரி கதைக்கு வருவோம்,  அவ்வளவு நேரக் காத்திருப்பிற்கு பிறகு சரி சிக்னல் விழுந்து தொலைந்ததேனு நினைச்சா நம்ம பஸ்ஸ சுற்றி நிக்கிறஆட்டோவும்டூவீலரும் போறதுக்குள்ள சிக்னல் விழுந்துடுமோனு ஒரு பதட்டம் வரும் பாருங்க.  அப்பத்தான் ஒரு டூவீலர் பேக்கு லெஃப்ட்  எடுக்கும்.  அட போங்கப்பா,  கரெக்டா, கிராஸ் பண்ணும்போது ரெட் சிக்னல்.  இன்னொருமுறை  அதே  மாதிரி  ஆட்டோ,  அதே மாதிரி டூவீலர்.   எண்ணிக்கை  கொஞ்சம்  குறைவாக.

சரின்னு கிளம்பி அடுத்த ஸ்டாப்பிங்கில் நின்னால் இன்னும் ஒரு வண்டி ஜனம்  ஏறும்.  அன்னிக்கு அப்படித்தாங்க, இதே  மாதிரி கூட்டம்.  நடத்துனர் டிக்கெட் போட  வண்டிய ஓரங்கட்டிட்டார்.  அப்பத்தான் ஏறிய ஒரு அறுபத்தைந்து வயசு பெரிய குடிமகன்,  நீ  ஏன் நைனா, கவலைப்படுற டிக்கெட் எடுக்கலைனா  எடுக்காதவந்தான் கஷ்டப்படனும்.  நீ வண்டிய கிளப்பு அப்படினு தன்னோட புத்திசாலித்தனத்த காட்டுச்சு.  நடத்துனர் இதைக் கண்டுக்காமே  டிக்கெட் கேட்டு கூவினார்.  பெருசா  புலம்புச்சா,  இல்ல  உள்ள ஊத்துன சரக்கானு தெரியல,  பெருசு அதையே  மங்களமா  பாடுச்சு.  கம்முனு கிடனு நடத்துனர் சொல்லவும்,  ஏப்பா   எனக்கு  என்ன வயசாச்சு  “வா,  போ”னு சொல்றியேனு பெருசுக்கு ஒரே சோகம்.  போதாதுனு,  நானும் முன்னாடி ஒரு சென்ட்ரல் கவெர்மென்ட் சர்வன்ட்டுப்பா,  ரெஸ்பெக்ட் கொடுனு சொல்லிச்சு.  நிக்கிற நமக்கே  அது மேல காண்டு வந்ததுனா நடத்துனர்.  பாவம் அப்பவும்  என்ன டிப்பார்மென்ட்டுனு கேட்டார்.  “ஸ்வீப்பர்”  அப்படினு பெருசு சொல்லி தான் வேலைக்குச் சேர்ந்த நாள்,  நட்சத்திரம்,  அப்ப  இருந்த அரிசி விலை   எல்லாம் சொல்லி விஜயகாந்த்தையே  தாண்டிருச்சு. நடத்துனர்  என்னவாகிருப்பார்னு நீங்களே  யூகிச்சுகோங்க.

இது இப்படினா, இன்னொரு நாள், கூட்டம் குறைவாகவே  இருந்தாலும் ஒரு நடத்துனர் பெவிக்கால் போட்டு ஒட்டுன மாதிரியே உக்கார்ந்து டிரைவர்க்கு பக்கத்துலே  நிக்கிறவங்கல ஆரம்பிச்சு அவரு பக்கம் நிக்கிறவங்க வரைக்கும் டிக்கெட்டை  “பாஸிங்”  முறையில் கேட்டுச்சு.  போகப்போக கூட்டம் நெருசலாகி மூச்சிவிடவே   இடமில்லாத போது நம்மாளு சிம்மாசனத்த விட்டு இறங்கவே இல்லை.  ஒரு அக்கா  முன்னாடி நின்னு இரண்டு தடவை  கூவியும் நம்மாளு “ம்ம்ம்”.  கொடுத்துவிடுமா  நிக்கிறவங்ககிட்டனு சொன்னார்.  ஆனா,   எவ்வளவு நேரம் தான் நிக்கிற எல்லாரும்  கண்டெக்டர் வேலையோ  அல்லது கன்டெக்டருக்காவோ  வேலைப்பார்க்கிறது.  ஒருத்தரும் மசியல. அந்தம்மா சிம்பிளா  கேட்டுச்சு “வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சமாவது  எழுந்து வாயா”.  இதுக்கு மேலேயும் நம்மாளு.. ம்ம்ம்ம். அசரல,  ஒருவேளை  உண்மையிலேயே  பெவிகால் இருக்குமோ.

இந்த கேப்புல ஒரு சிறுசு, சார் மேலப்படுதல,  அப்பக்கூட நீங்க  என் ஷூ கால மிதிச்சீங்க, ஒரு எக்ஸ்யூஸ் கூட கேக்கலனு திமிருச்சு.  லேசா செருமி முறைந்து பார்த்து இங்க பாரு  என் பக்கத்துல நிக்குதே  ஒண்ணு அது ஏம்மேலத்தான் சாய்ஞ்ச்சுக் கிடந்து யாருக்கிட்டேயோ கடல போடுது.  அதுக்காக குத்துதே குடையுதேனா  சொகுசா காரு வாங்கி அதுல போடானு சொன்னேன்.  அப்பப்பார்ந்து டிரைவர் போட்ட பிரக்குலெ அந்த பேக்கு  ஏம்மேல சாய, அவ்வளவு தான் ஒரு இரண்டு தள்ளி ஓடிப்போச்சு.
இப்படி தான் தினம் தோறும்,   எந்திரமயமாகிப்போன வாழ்வில் சில மைக்ரோ  சுவாரஸ்யங்கள்.  இதெல்லாம் நீங்கள் பேமிலியாக காரில் போகும்  போது கிடைக்காது.  அதற்காக  ஒரு பிரம்மச்சாரி பயணம் மேற்கொண்டு பாருங்கள்.

பயணங்கள் சுவாரஸ்யமானவை

தசாவதாரம் ஜூன் 18, 2008

Posted by M Sheik Uduman Ali in Reviews.
Tags: ,
5 comments

பிரேசிலில் ஒரு வண்ணத்துப்பூச்சி சிறகடித்துப் பறந்தால் டெக்ஸாஸில் டொரண்டோ வர வாய்ப்பிருக்கிறதா? என்ன பிசிறு பிடித்திருக்கென்று நினைக்கின்றீர்களோ? இதற்கு பெயர் தான் கயாஷ் தியரி (பட்டர்பிளை விளைவு என்றும் அழைப்பர். நன்றி http://en.wikipedia.org/wiki/Chaos_theory) . மிகவும் சென்ஸிடிவான எந்தவொரு நிகழ்வுகளும் அதன் ஆரம்ப நிலைகளில் மிகச்சிறிய மாற்றத்தை சந்தித்தாலும் விளைவுகள் பெரிதாக இருக்கும். இந்த மாதிரி கயாஷ் நிகழ்வுகள் ஒன்றிற்கொன்று சம்பந்தமுடையதாக இருக்கும். ஆச்சா! இதை தான் ஆன்மிகத்தில் ஒவ்வொரு நிகழ்வுகளையும் இறைவன் ஏதோவொரு வகையில் தொடர்புள்ளவைகளாக ஆக்கி வைத்திருக்கின்றான் என்று கூறுகின்றோம். கமலின் தசாவதாரமும் இதை மையப்படுத்தி தான்.

இதையெல்லாம் தாண்டி பிடித்த விசயம் மணல் கொள்ளை விவகாரத்தை ரத்தமும் சதையுமாக கமல் சொன்ன அழகு. ஆற்றங்கரை உள்ள ஊர்களுக்கு சென்று பாருங்கள். ஆற்று மணலை சூறையாடியதன் கோரம் தெரியும்.

சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையே நடந்த 12ம் நூற்றாண்டு சண்டையில் ஆரம்பிக்கும் இந்த பட்டர்பிளை நிகழ்வு பயோ வெபன் (அதுதாங்க உயிரியல் ஆயுதம்), சுனாமி என பெரிய விளைவுகளுடன் முடிகிறது. இந்த இடைவெளியில் பத்து வித அரிதாரங்களில் ஒரு சேஷிங் நிகழ்வை மட்டும் கொண்டு மொத்த படமும் பரந்து விரிந்து நிற்கின்றது. பயேவெபனை கார்கோ விமானத்தில் ஏற்றி முடிக்கிற வரையில் ஹீரோ கமலுக்கும் வில்லன் கமலுக்கும் இடையே நடக்கும் சேஷிங் பரபரப்பு ஹாலிவுட் தரம்.

கமல் தன்னை உலக நாயகன் என்று நிரூபிக்க இனி அவசியமில்லை தான். பத்து விதமான கேரக்டர்களாக திரையில் கோலோச்சும் இவரது நடிப்பு பிரம்பிப்பின் உச்சக் கட்டம். “வெங்கேடஷ் ராவ், நீ தெலுங்கா?” என்று அக்மார்க் ஆந்திரவாசியாக வரும் பல்ராம் நாயுடு கேரக்டர் கலகலப்புடன் நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்கின்றது என்றால் வின்சென்ட் பூவராகன் கேரக்டர் சிலிர்க்க வைக்கின்றது. கறுத்த தேகத்தில் தடித்த வார்த்தைகளில் சாத்வீகத்துடன் இயற்கையை சுரண்டும் மூர்க்கர்களை எதிர்த்து போராடும் மண்ணின் மைந்தன் கேரக்டர். மனதை புரட்டுகிறார். இவையெல்லாம் தாண்டி அட்டகாசமான அமெரிக்க உச்சரிப்புடம் இங்கிலீஷ் பேசும் அமெரிக்க வில்லனாக வரும் கிறிஷ்டியன் ப்ளெட்சர், கலீபுல்லா கான், கிருஷ்ணவேணி பாட்டி இவர்களும் நம் மனதை கொள்ளையடிக்கும் அளவிற்கு உலக நாயகன் நடித்திருத்தும் இவர்களுக்கான அரிதாரங்களில் இருக்கும் செயற்கைத்தன்மையினால் சறுக்கியிருக்கிறார். எல்லோருக்கும் ஏதோ முகத்தில் “மாஸ்க் போட்ட மாதிரி இருக்கிறது.

பயோவெபனுடன் ஓடிக்கொண்டிருக்கும் கமலை நச்சுபிடுங்கும் ஆண்டாளாக அசின் அமர்களப்படுத்தியிருக்கிறார். 12ம் நூற்றாண்டு கோதையாகவும் மனதில் நிற்கிறார். அப்புறம் மல்லிகா ஷெராவத். இந்த கவர்ச்சி பிசாசு பண்ணும் வில்லத்தனம் பயமுறுத்துகிறது.

கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் கமல். எங்கேயும் கேரக்டர்களை கொண்டு எந்தவொரு குழப்பமும் இல்லாமல் ஒவ்வொரு கேரக்டர்களையும் அவர் உலவ விட்டிருக்கும் நேர்த்தி அப்பப்பா! பிரமிக்க வைக்கின்றார். எப்போடா இன்டர்வெல் வரும் எப்போடா கிளைமாக்ஸ் வரும் என்று நினைக்க முடியாத அளவிற்கு திரைக்கதையில் இவரின் உழைப்பு நிச்சயம் தேசிய விருதிற்காவது அழைத்துச் செல்ல வேண்டும். ஒரு பக்கம் ஆன்மிகம் சார்ந்த நடுநிலைமையான கருத்து; மற்றொரு புறம் தனது பகுத்தறிவு கேள்வி; மற்றொரு புறம் சுற்றுப்புற சூழலிருக்கும் உண்மையான அக்கறை; அமெரிக்காவை பற்றிய கசப்புணர்வு என வசனங்களில் சிலிர்ப்புகின்றார். “உங்க பெருமாளுக்கு என்ன விட கக்கூஸ் தான் ரொம்ப சுத்தமோ, “கடவுள் இல்லைனு நான் சொல்லல; இருந்தா நல்லாயிருக்குமேனு சொன்னேன், “என்னையா தெலுங்குகாரன் நான் தமிழ் பேசுறேன்; தஞ்சாவூர்காரன் நீ இங்கிலீஷ் பேசுறே – தமிழ உங்கள மாதிரி தெலுங்குகாரங்க வாழ வைப்பாங்கங்கிற நம்பிக்கை தான், “சாருக்கு அஞ்சு மொழி தெலுங்கிலேயே தெரியும் என்று நிறைய…நிறைய….

ஆனால் எல்லாவற்றையும் விட வின்சென்ட் பூவராகனின் நாகர்கோவில் பேச்சும், கபிலனாக வந்து மணல் கொள்ளையை பாடும் கபிலனின் வரிகளும் இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை. திருஷ்டி பொட்டுகளும் உண்டு. ஜப்பானி கமலும் வில்லன் கமலும் மோதும் போது சின்னப் பிள்ளைத்தனமாக “ஹிரோஷிமா ஞபாகமிருக்கிறதா?… உனக்கு பெர்ல் ஹார்பர் ஞபாகமிருக்கிறதா? என்கின்றனர். பல்ராம் நாயுடு “என்ஏஷியெல் என்றால் என்ன என்று ஒரு விஞ்ஞானியிடம் கேட்க அந்த மங்குனிக்கு உப்பு என்று கூட சொல்ல தெரியாமல் முழிக்கிறதாம்.

எல்லா சென்டர்களையும் கவர்வதிற்கு சில லாஜிக் பார்க்காத மசலாக்களும் உண்டு. எல்லா இடமும் தெரிந்த மாதிரி சென்னையை மிரட்டி எடுக்கும் அமெரிக்க வில்லன்; அப்படியே பொடி நடையாக நடந்து கிராஸிங்கில் ரயிலில் ஏறும் கமல் & அசின் என சிலக்காட்சிகள்.

காமிரா, பின்ணணி இசை, படத் தொகுப்பு இவை ஒரு சினிமாவின் ஜீவ நாடிகள். இந்தப் படத்தில் “It Happenedஎன்று சொல்வார்களே. அதே மாதிரி தான். 12ம் நூற்றாண்டு பிரம்பிப்பு முதல் சுனாமி வரை ரவி வர்மனின் காமிரா திரைக்கதை ப்ரசண்ட் செய்ததே தவிர புத்திசாலித்தனத்தை காட்ட முயலவில்லை. அதுவும் அந்த கும்மிருட்டு ஆற்றங்கரை. பிரும்மாண்டமாக இல்லை என்றாலும் தேவையான அளவிற்கு கதையோடு இழைந்த பின்ணணி இசையமைத்திருக்கிறார் தேவி ஸ்ரீபிரசாத். அடுத்து தணிகாசலத்தின் கத்திரி, காட்சிக்கு காட்சி வெட்டித் தைத்து நம்மை படத்தோடு ஒன்ற வைக்கின்றது. வைரமுத்து வாலியின் வரிகளுக்கு உற்சாகமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இசையமைத்திருக்கின்றார் ஹிமேஷ் ரேஷ்மயா. அதுவும் “கல்லை மட்டும் கண்டால்… அற்புதம்.

பயோ வெபனை விழுங்கும் வில்லன்; சரியாக வரும் சுனாமி; ஐம்பது வருடமாக மகனை தேடும் கிருஷ்ணவேனி பாட்டி மண்ணில் விழுந்து கிடக்கும் பூவராகனை மகன் என்று நினைத்து உடைந்து அழும் காட்சி என கிளைமாக்ஸ் மெய்சிலிர்க்க வைக்கின்றது.

“கமலுக்கு என்ன! ஹாலிவுட் தரமப்பா என்று சொல்ல நம்முடைய சினிமாக்களின் வணிக வரம்பு மட்டுமே தடுக்கிறது என்பதற்கு தசாவதாரத்தில் சில உதாரணங்கள் உண்டு. அவை எல்லாமே கோடிகளை நம்பியே இருக்கின்றன.

“பைரேட்ஸ் ஆப் தி கரிபியன் தரத்திற்கு கமலின் சில அவதாரங்களுக்கு மேக்கப் வசதி கிடைத்திருந்தால் சிலிர்ப்பாக இருந்திருக்கும்.

சர்வதேச தரத்திலான விசுவல் எபெக்ட்ஸ். ரங்கராஜனை பெருமாள் சிலையோடு கட்டி கடலில் மூழ்கடிக்கும் காட்சியை இன்னும் சில கோடிகள் கிராபிக்ஸில் முதலீடு செய்திருந்தால் அதன் பிரம்மாண்டம் கூடியிருக்கும்.

கலை. 12ம் நூற்றாண்டு செட்டோ இல்லை சுனாமியின் பின் விளைவு காட்சிகளோ இன்னும் சில கோடிப் பணம் போட்டு எடுத்திருந்தால் ஹாலிவுட்டிற்கு “வ்வே காட்டியிருக்கலாம்.

என்ன செய்ய, ஹாலிவுட்டில் பிறக்காதது கமலின் கயாஷ் விளைவாகக் கூட இருக்கலாம்.

சில மில்லியன் டாலர்களில் எங்களால் சர்வதேச தரத்திற்கு தரமுடியவில்லை என்றாலும் அரிதாரங்களை பிரித்துப் பார்த்தால்

தசாவதாரம் – கமலின் ஐம்பது வருட சினிமா அனுபவத்தின் அசத்தலான புரபைல்.

குருவி மே 9, 2008

Posted by M Sheik Uduman Ali in Reviews.
Tags: ,
1 comment so far

விஜய்: அண்ணா! தரணி அண்ணா. தூளா ஒரு படம் பண்ணிரலாம்னா. பத்து நிமிஷத்திற்கு ஒரு ஃபைட்டு, கால் மணி நேரத்திற்கு ஒரு ஸாங்க். அப்புறம், ஆந்திராவுல மகேஷ் பாபு பாத்தீங்களாண்ணா! அவர் பாணியிலேயே இருக்கட்டும்னா. சும்மா இந்த பயலுக டப்பிங் படமாவே எடுக்குறாண்டானு நாக்கு மேல நங்கூரம் போட்டு பேசுறானுங்க.
தரணி: விஜய், ரொம்ப கஷ்டப்பட வேண்டாம், கதையோட டர்னிங் பாயிண்ட ஆந்திராவுலேயே வச்சுக்கலாம். அப்பத்தான் சும்ம சூடு பறக்கும். அப்புறமா, நம்ம பசங்க அண்ணா, பில்லா பட டீமே மலேசியாவுல டேரா போட்டாங்கண்ணா. நம்மளும் ஒரு வாட்டி போகலாம்ணானு சொன்னானுங்க. முக்கியமான காட்சி ஒண்ண அங்க வச்சுக்கலாம்.

விஜய்: ஓகேணா. கிளப்பிரலாம். அண்ணா அப்படியே கொஞ்சம் திருப்பாச்சி, கில்லி முக்கியமா நான் த்ரிஷாவை பிடிச்சுக்கிட்டு ஓடுற மாதிரி சேஸிங் சீன் எல்லாம் நல்லா திங் பண்ணுங்கணா!

இப்படித்தான் ஆரம்பித்திருக்கும் குருவியின் “ஸ்கோப்பிங்அல்லது டிஸ்கஷன்.

ஒரு பக்கம் ரேஸ் நடக்க இன்னும் ஐந்து நிமிடங்கள். நம்ம தளபதியோ இன்னும் இன்ட்ரோவே கொடுக்கல. என்ன நடக்குமோ என்று பரபரப்பாக ஆரம்பக் காட்சிகள் இருக்கும் என்று தானே நினைத்தீர்கள். அது தான் இல்லை. ரொம்ப ரிலாக்ஸாக கார்ப்பரேஷன் செப்டிக் டேங்கோ அல்லது தண்ணி கிடங்கோ தெரியல அதோட மூடியை வீசி தண்ணீர் பீய்ச்ச நம்மாளு இன்ட்ரோ கொடுக்கிறார். அப்புறம் ரொம்ப ரிலாக்ஸா பேமிலி பேக்ரவுண்டை படத்தோட இணைந்த அல்லது பிணைந்த டயலாக்குகள் மூலமாக விளக்குகிறார். போதாதென்று, முதலில் வில்லன் & கோவின் அறிமுகங்களை சுமன் தன் பங்கிற்கு டயலாக்குகளிலேயே விளக்குகிறார். அப்புறம் அந்த கார் ரேஸிற்கு வருகிறார் நம்ம ஹீரோ. காயலான் கடைக்கு போடுற மாதிரி ஒரு கார வச்சுக்கிட்டு ஐயா ஜெயிக்குற கொடுமை இருக்குதே… போதும்டா என்றால் உடனே மாளவிகாவுடன் ஒரு பாட்டு. அதிகமாக அந்த பாட்டிற்கு உழைத்திருக்கிறார் விஜய். ஆனாலும் ரொம்ப அமெச்சூர்த்தனமாகவே இருக்கிறது.
சரி தொலைஞ்சோம்டா என்று நினைக்கும் போது அப்பா… கடன்… கொத்தடிமை… ஐம்பது லட்சம் ரூபாய் செக்…என சூடு பிடிக்கிறது கதை.

அதுவரை அம்மூஞ்சியாக இருக்கும் விஜய் பரபரப்பாக பட்டையை கிளப்ப ஆரம்பிக்கிறார். குருவியாக மலேசியாவிற்கு பறக்கும் விஜய் சுமன் வீட்டில் டைமண்ட் திருடுவதும், அதைச் சுற்றிய த்ரிஷாவின் ரொமான்ஸ் காட்சிகளும் சூடான வெயிலுக்கு கிர்னி ஜூஸ் என்றால், சென்னையில் விஜயோடு த்ரிஷா அடிக்கும் லூட்டிகள் ஜில் ஜில் ஜிகிர்தண்டா.

ஆக்ரோஷமான பார்வை, அதிரடியான சண்டை, லேசான குறும்பு, சூப்பரான டான்ஸ் என விஜய் அக்மார்க் கரம் மசால் ஸ்டாராக கிளப்புகிறார். டயலாக்குகளையும் குறைத்திருக்கிறார்.

அட என்ன இது த்ரிஷா. கறுப்பாக, குவிந்த மூஞ்சியுமாக. அப்படியே ஷாக்காகிட்டேன். கொஞ்சம் காஸ்ட்யூம்ஸ், மேக்கப்பில் கவனம் செலுத்துங்க அம்மணி. ஆனால், கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் விஜய்யோடு இவர் அடிக்கும் லூட்டிகள் சூப்பர் பெப்பி.

முன்பாதியில் விஜய்க்கு நல்ல துணையாக கலகலப்பாக வரும் விவேக் பின்பாதியில் அப்பீட் ஆகிறார். சிவாஜியின் ரஜினி கெட்டப்பில் சுமனும், கொண்டா ரெட்டியாக ஆஷிஷிம் வருகிறார்கள். எல்லா சினிமா வில்லன்களும் செய்யும் அதே கெட்டதை செய்கின்றனர்.

“பல்லானது“, “தேன் தேன் என தரணியின் பாசறையில் வித்யாசாகர் ரகளை பண்ணியிருக்கிறார். இசையை கட்டுக்கோப்பாகவெல்லாம் பார்க்காமல் காட்டுத்தனமாக அடித்திருக்கிறார். அதுவும் “குருவி குருவி அடிச்சா பாட்டு. எகிறுதுன்னாவ்.

அட, பிரியாணி தான் என்று முடிவு பண்ணிய பிறகு தயிர் சாதம், ஊறுகாய் என்றெல்லாம் குழப்பிக்காமல் விறுவிறுவென படத்தை நகர்த்தியிருக்கிறார் தரணி.

முன்ன பின்ன தெரியாத ஊர்ல வில்லன் கும்பல் சரவுண்ட் பண்ணவும் எப்படி ஹீரோவுக்கு ட்ரெயின் வரும்னு தெரிஞ்சு டயலாக் விடுறார்; தண்ணிக்குள்ள இருந்து எப்படி தப்பிச்சு வருகிறார்; எப்படி ஒத்த ஆளா எல்லாத்தையும் சாய்க்கிறார் அப்படினு லாஜிக் பார்க்காமல் அப்படியே தெலுங்கு பக்கம் போய் நிறைய மசாலா சேர்த்து காரமாக சாப்பிட நீங்கள் ரெடியென்றால்

குருவி –  சூடான ஹைதராபாத் பிரியாணி

அறையின் எண் 305ல் கடவுள் ஏப்ரல் 28, 2008

Posted by M Sheik Uduman Ali in Reviews.
Tags: ,
4 comments

மதிப்பிற்குரிய இயக்குநர் சிம்புதேவன் அவர்களுக்கு முதலில் ஒரு விண்ணப்பம். மற்ற அரை வேக்காட்டுத்தனமான சினிமாக்கள் மாதிரியே சாஃப்ட்வேர் துறையைப் பற்றியும் அதில் குறுகிய காலத்தில் பெரும் பணம் ஈட்டும் இளைஞர்களை பற்றியுமான கிண்டல் தொனியை தாங்களுமா எடுத்துக் கொண்டீர்கள்.

200% வரை லாபம் வைத்து விற்கும் அல்லது ஏமாற்றும் மருந்து வியாபாரிகளோ, ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரைக்கான ஒரு படத்திற்கு சில பல கோடிகளை சம்பளமாக வாங்கும் கதாநாயகர்களோ, இன்னும் நிறைய நிறைய கொழுத்த முதலைகளை உங்கள் கலைக் கண்களுக்கு தெரியவில்லையா என்ன?

மற்றபடி சாஃப்ட்வேர் துறையின் நிஜமான சவால்களை பற்றி ஒரு தனி பிளாக்காக எழுதலாம்.  ஒரு குத்துப்பாட்டு வைப்பது மாதிரி  அவ்வளவு எளிதல்ல சாஃப்ட்வேர் டெவெலப்மென்ட்.  இன்னும் பல அரசாங்க நிறுவன அதிகாரிகளே இதற்கு நிகராக சம்பளம் வாங்குகிறார்கள் என்பது பாவம் சிம்புதேவனுக்கும் தெரியவில்லை.  சரி விசயத்திற்கு வருவோம்.

அறிமுகக் காட்சியிலேயே கதைக் களத்தையும் கதாபாத்திரங்களையும் மிகவும் நேர்த்தியாக நேரேட்டிவாகவும் நேரடியாகவும் சொல்லி அசத்தி விடுகிறார்கள். மெல்ல எந்த புள்ளியை நோக்கி கதை நகரப்போகிறது என்ற எதிர்பார்ப்புடன் இருக்க திடீரென கடவுள் சந்தானம் மற்றும் கருப்புக்கு காட்சியளிக்கிறார். வழக்கம் போல ரொம்ப மென்மையாக மடிப்பு கலையாத வெள்ளை குர்தாவில் கடவுளாக பிரகாஷ்ராஜ். ஏனப்பு, கடவுள் டீக்காக கோர்ட், சூட் போட்டெல்லாம் வரமாட்டாரா என்ன?! தங்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் கடவுள் தான் காரணம் என்று திட்டித் தீர்க்கும் சந்தானம் மற்றும் கருப்பு கூட்டணியிடம் பண உதவி செய்ய மாட்டேன், நான் கடவுள் என்று யாரிடமும் சொல்லக் கூடாது என்ற இரண்டு அக்ரிமெண்ட் போட்டு “மாரல் சப்போர்ட் செய்கிறார். இதை சுற்றிய சம்பவங்கள் தான் படம்.
கடவுளாக ரொம்ப ஸாஃப்ட்டாக பிரகாஷ்ராஜ் நடிப்பது ஏனோ அவ்வளவு ஒட்டவில்லை. அவரை ஒரு சாதாரண மனிதராகவேத் தான் கற்பனை செய்ய முடிகிறது.

மஞ்சள் தண்ணி தெளித்து விட்ட ஆட்டுக்குட்டிகள் மாதிரியே நிற்கிறார்கள் சந்தானமும் கஞ்சா கருப்பும். இதனால் இவர்களின் டிபிக்கல் ஹூயூமர் சென்ஸ் கூட எடுபடாமல் போகிறது. இதைத் தவிர ஒரு டஜன் பாத்திரங்கள் திரைக்கதையை நகர்த்த உதவுகின்றன.


கடவுளின் மைக்ரோ மற்று மேக்ரோ தத்துவத்தை சந்தானத்தையும் கருப்பையும் கொசுவை விட சின்னதாக்கி விசுவலாக சொன்ன விதத்திலும், நாத்திகவாதியான ராஜேஷுடன் கடவுளைப் பற்றிய சித்தாந்தத்தை விளக்கும் வசனங்களும் சிம்புதேவனை அடையாளம் காட்டுகின்றன. இரண்டு காமெடி ஆக்டெர்களை வைத்து படம் பண்ணிய தைரியத்திற்கு பாராட்டலாம். அப்பாடா! நல்லவேளையாக கடவுள் இந்து சாமியாகவோ, இல்லை இயேசு சாமியாகவோ இல்லாமல் பொதுவாக காட்டியதற்கு நன்றி. கடவுள் சர்ச்சையான பல விசயங்களை பேசாமல் எஸ்கேப் ஆகிவிடுகிறார்.

வித்யாசாகரின் எளிமையான இசைக்கோப்பில் பாடல்கள் லயிக்க வைக்கின்றன. அதிலும் கேட்டது தான் என்றாலும் “குறை ஒன்றும் இல்லை பாடல் மனதை உருக்குகிறது.

கடவுள் கான்ஸப்டை கையிலெடுத்தவர் திரைக்கதையில் இன்னும் ஆழமான காட்சிகளை புகுத்தி இவரின் டிரேட்மார்க் காமெடி மூலமாகவும், கொஞ்சூண்டு மெஸேஜ்களாலும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கலாம். சாமிகளின் திருவிளையாடல்களை விளக்கும் பழைய கால சினிமாக்களில் வரும் சுவாரஸ்யம் கூட இதில் மிஸ்ஸிங். அதிலும் வழக்கம் போல கடவுளுக்கே மொபைல் போன் போல அனைத்தையும் கன்ட்ரோல் செய்யும் ஒரு கேஜட்டை கொடுத்திருக்கிறார்கள். இதை திருடி விட்டு எஸ்கேப் ஆகும் சந்தானம், கருப்பு சம்பந்தமான காட்சிகளும் திருப்பங்களும் சஹாரா போல வறட்சியென்றால் பிரகாஷ்ராஜ் சம்பந்தமான காட்சிகள் ஆழமான புரிதல்கள் இல்லாமல் வழவழ அட்வைஸ் அரங்கமாக மாறிவிடுகிறது. இதனால் சில சிவப்பு சிந்தாந்தங்களும் யதார்த்தமான அட்வைஸ்களும் லேசாக கடந்து விடுகின்றன.

இருந்தாலும் இரண்டரை மணி நேரம் நம்மை சீட்டில் உட்கார்ந்து பார்க்க வைக்க முடிகிற அளவிற்கு வழக்கமான ஆக்சன் மற்றும் காதல் சினிமாக்களிலிருந்து விலகி கதை சொன்ன அழகிற்கு சிம்பு தேவனை பாராட்டலாம். குறையொன்றும் இல்லை…

அறை எண் 305ல் – கொஞ்சம் கொசுத் தொல்லை.

யாரடி நீ மோகினி – விமர்சனம் ஏப்ரல் 15, 2008

Posted by M Sheik Uduman Ali in Reviews.
Tags: ,
2 comments

அபத்தங்களின் அழகான(?) கூட்டாஞ்சோறு இந்த மோகினி(ப் பிசாசு).

நயன்தாரா விரும்பி ஏற்றுக் கொண்ட நிச்சயதார்த்தம். சந்தடியில் தனுஷ் புகுந்து நீ என்னை காதலிக்கிறது உன் கண்களில் தெரிகிறது என்கிறார். அது எப்படியோ தெரியவில்லை ஹீரோயினுக்கே தெரியாத காதலை டெலிபதி மூலம் கோடம்பாக்கம் ஹீரோக்கள் மட்டும் எப்படி தான் கண்டுபிடிக்கிறார்களோ?!

தனுஷின் காதலுக்காக பரிந்து பேச வரும் ரகுவரனை நயன்தாரா திட்டி அனுப்பும் காட்சிகளும் அதன் பின் வரும் திரைக்கதை திருப்பங்களும் அடக் கடவுளே!

எல்லாவற்றையும் இழந்து நிற்கும் தனுஷை தன் திருமணத்திற்காக திருநெல்வேலி கூட்டி செல்கிறான் நண்பன். அவன் திருமணம் செய்யப் போகும் பெண் நயன்தாரா என்ற அதிர்ச்சியான(!) ட்விஸ்ட். சொந்த அத்தை மகள்.

தனுஷின் நண்பனாக வரும் கார்த்திக்குமார் தான் பாவம். “அலைபாயுதே”விலிருந்தே இவர்  பெண்களாலும் திருமணங்களாலும் ஏமாற்றப்படும் அபலைப் பையனாக வந்து “உச் உச்” கொட்ட வைக்கிறார்.

ஆச்சாரமான அந்தக் குடும்பத்தினரின் மனதில் தனுஷ் இடம் பிடிக்கும் காட்சிகள் இருக்கிறதே, திரையுலகிற்கு ரொம்ப புதுசு கண்ணா புதுசு. சாம்பிளுக்கு இதோ!

  • ஊர் பெரியவரான தனுஷ் நண்பனின் தாத்தாவை ஒரு கோயில் திருவிழாவில் திடீரென புகும் வில்லன் “டேய் நீ மட்டும் இடத்த தரலை; உங்க வீட்டு பொம்பளங்கள….!! என்கிறான். இவர்களை துவம்சம் பண்ணுகிறார் தனுஷ். தாத்தா மனதில் இடம்.
  • திடீரென சாகக் கிடக்கும் பாட்டியை ஒற்றை ஆளாய் உட்கார்ந்து உயிரூட்டுகிறார் தனுஷ். பாட்டி & குடும்பத்தினரின் மனதில் இடம்.
  • பசிக்கிறது சாப்பாடு கிடைக்குமா என குடும்பத்தினரிடம் தனுஷ் கேட்க ஒரு ஸ்வீட் ஸ்டாலையே கொட்டி பசியாற வைக்கிறது குடும்பம். (அனாதை என்ற சென்டிமென்ட் வேறு)
  • தன்னை டாவு விட்டு காதலிக்கும் நயன்தாரா தங்கையை பொறுப்பான டயலாக்குகள் பேசி திருத்துகிறார் தனுஷ்

இப்படி நிறையங்கோ!

இதெல்லாம் விட ஏராளமான அபத்தங்களும் அருவருப்பு அம்சங்களும் உண்டு.

தனக்கு பாட சங்கோஷமாக இருக்கிறது என தன் வருங்கால மனைவியை வர்ணித்துப் பாட தனுஷை கோரும் நண்பன். அதை ரசிக்கும் ஒட்டு மொத்த குடும்பம்.

கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் தனுஷை தன் மார்போடு உரசிப் பார்க்கும் நயன்தாராவின் தங்கை. போதாதென்று ஒரு முதலிரவு கனவுப்பாட்டு வேறு.

ஹைய்யோ ஹைய்யோ! எழுத்து செல்வராகவனாம். ஆங்காங்கே தக்கனூண்டு தெரிகிறார் என்றாலும் நம்ப முடியவில்லை. விக்ரமனின் பாதிப்புகள் நிறைய நிறைய. ஆனால் அவராவது கண்ணியமாகக் காட்டுவார்.

தனுஷிற்கு ஒரே லக். நயன்தாராவை அருகில் இருந்து மோப்பம் பிடித்தது.  ஆனாலும் இவருக்கு அக்கா மாதிரி இருக்கிறார்.
சாப்ட்வேர் கம்பெனியை சுற்றிய அந்த கதை முடிச்சு ஏன் என்று தெரியவில்லை. அக்மார்க் சினிமாத்தனம் தான் தெரிகிறது.

ஒரே பயம் இனிமேல் வரிசையாக அபத்தமான பல்வேறு காதல்களை உருக உருக சொல்லும் சீஸன் கோடம்பாக்கத்திற்கு திரும்ப வந்து விடுமோ என்பது தான்.

யாரடி நீ மோகினி – இருட்டில் பிடித்த கொழுக்கட்டை

வெள்ளித்திரை – விமர்சனம் மார்ச் 9, 2008

Posted by M Sheik Uduman Ali in Reviews.
Tags: , ,
add a comment

அறிஞர் அண்ணாவின் “ரொட்டித் துண்டு கதையை எனது சிறுவயதில் தொலைக்காட்சி படைப்பாக பார்த்தது. அதே கரு கேரளத்திலிருந்து புறப்பட்டு தமிழுக்கு வெள்ளித் திரையாக வந்திருக்கிறதோ?

“சினிமாவை கொண்டாடுவோம் என்ற முழக்கத்துடன் நல்ல முயற்சிகளை தமிழுக்கு படைத்து வரும் பிரகாஷ்ராஜின் ஆரோக்கியமான ஆர்வம் படைப்பு முழுக்க தெரிகிறது.

சூதக, பாதக வழிகள் எதுவானாலும் சரி ஒரு ஹீரோவாக வேண்டும் என்பது பிரகாஷ்ராஜின் வெறி. பத்து வருட சிந்தனையில் உருவான ஒரு நல்ல கதையுடன் ஒரு சரியான வாய்ப்புக்காக காத்திருக்கும் பிருத்விராஜ். திடுமென கதாநாயகியாகி பணத்திற்காக அண்ண்ணால் சித்திரவதைக்குள்ளாகும் கோபிகா. பிருத்விராஜ் அசந்த சமயத்தில் அவரது கதையை திருடி பெரிய ஹீரோவாகிறார் பிரகாஷ்ராஜ். பணம், பொருள், செல்வாக்கிற்கு முன்னால் உண்மை மறைக்கப்படுக்கிறது. பிரகாஷ்ராஜை வைத்தே படமெடுத்து வெள்ளித் திரையில் ஜொலிக்க முயற்சிக்கிறார் பிருத்வி.

vellitherai.jpg

முற்றிலும் அக்மார்க் காரியவாதியாக வரும் பிரகாஷ்ராஜ் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முன்னேறுவதற்கான சிந்தாந்தங்கள் தலைகீழாக மாறிவரும் தற்கால மனிதர்களின் பிரதிபலிப்பாக வருகிறார்.

யதார்த்தத்தின் பின்வாசலில் நின்று நல்ல சினிமாவிற்காக காத்திருக்கும் உதவி இயக்குநராக பிருத்விராஜ். ஏமாற்றங்கள் தெரிந்தவுடன் வாழ்க்கையின் நெளிவு சுழிவுகள் புரிந்து சாதிக்க முயலும் உத்வேகம் நாணலாய் கூன வேண்டாம் ஆனால் மூங்கிலாய் நிமிர்ந்தும் நின்றால் முன்னேற முடியாது என்பதை திரைக்கதையோடு பிராயணித்து நம்மில் பதிந்தி விடுகிறார் பிருத்விராஜ். இயல்பிற்கு மீறிய நடிப்பினை காட்டாமல் அழகுற செய்திருக்கிறார்.

ரீலுக்கு ரீல் அழுமூஞ்சியாகவே வரும் கோபிகா பாவம். நல்ல இல்லறத்திற்காக ஏங்கியும், கணவனுக்காக பிரிந்திருக்கும் முடிவும் அழுத்தமாக சொல்லப்பட வாய்ப்பில்லையெனினும் மனதில் நிற்கிறார்.

ஒரு நடிகனின் மேனஜராக எம்.எஸ் பாஸ்கர் பண்ணும் அடாவடிகளும், சினிமாவின் பல்ஸ் தெரிந்த உதவி இயக்குநராக வரும் சார்லியும் அசத்தியிருக்கிறார்கள். லட்சுமி ராய் மற்றும் பிருத்வியின் தோழனாக வரும் “முஸ்தபாபாத்திரமும் மனதில் நிற்கிறது.

பாலித்தீவினை அந்த அகலமான வெள்ளித்திரையில் அற்புதமாக காட்டியிருக்கிறார்கள் பன்னீர் செல்வமும் கேவி குகனும். ஒரு படத்திற்கு இரண்டு கேமிராமேன்களா! என தோன்றும் போதே இரு வெவ்வேறு பின்புலங்களில் தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள். இந்த மாதிரி அழுமூஞ்சி வசனங்களுக்கெல்லாம் இப்போ ஆடியன்ஸ் ஒடிடுறாங்க என பிருத்வி ஓரிடத்தில் பேசுகிறார். இதை யாராவது படத்தொகுப்பு செய்திருக்கும் காசி விஸ்வநாதனுக்கு முதலிலேயெ போட்டுக்காட்டியிருக்கலாமோ. மற்ற இடங்களில் இயல்பான கதையோட்டத்திற்காக கத்திரியை சரியாக வெட்டியவர் பிருத்வி – கோபிகா சோகக் காட்சிகளை கொஞ்சம் கை வைத்திருக்கலாம். சின்னத்திரை சீரியல் மாதிரி ஆகிவிடுகிறது.

டைட்டில் இசையிலும் சரி பாடல்களிலும் சரி பிரமாதப் படுத்தியிருக்கிறார் ஜிவி பிராஷ்குமார். கதையோட்டத்தில் பின்ணணி இசை எப்படி பிராயணப்பட்டது என்றே தெரியாத அளவிற்கு காட்சிகளுக்கு உதவி இருக்கிறார்.

சில நல்ல படங்களின் வசனகர்த்தாவாக அறியப்பட்ட இயக்குநர் விஜியின் கன்னி முயற்சிக்கு வாழ்த்துக்கள். இதிலும் வசனங்கள் மிளிர்கின்றன. “பிரபலமாகிட்டா என்ன வேண்டுமென்றாலும் பேசாலாமா; இதெயெல்லாம் மக்கள் கேட்கிறாங்களா; இல்ல சகிச்சிக்கிறாங்களாஉட்பட சினிமாவின் கறுப்பு பக்கங்களை போகிற போக்கில் புரட்டிப் போடுகிறார்.

தாறுமாறாக பேசும் பிரகாஷ்ராஜை தவிர எல்லா பாத்திரங்களும் அதன் இயல்பில் பயணித்தாலும் பிரகாஷ் ராஜ் உட்பட அனைவரிடமும் லேசான மந்த உணர்ச்சி தோன்றுகிறது.

தெரிந்த வழித்தடங்களிலேயே கதை பயணித்தாலும் ஒரு எதிர்பார்ப்பிற்காக ஆடியன்ஸ் உட்கார வைத்திட்ட காட்சி வரிசைகள் ஏமாற்றமில்லாமல் கிளைமாக்ஸை தருகின்றன. இருந்தாலும் தியேட்டரில் கொறிக்கும் போது மட்டுமே ஞாபகமிருக்கும் பாப்கார்ன் போல் மனதில் தங்காத காட்சிகளால்

வெள்ளித் திரை – வெளிச்சம் போதவில்லை.


 

அஞ்சாதே – விமர்சனம் பிப்ரவரி 24, 2008

Posted by M Sheik Uduman Ali in Reviews.
Tags: ,
2 comments

மாறுபட்ட அணுகுமுறை, தெளிவான திரைக்கதை மற்றும் கூரிய கண்ணோட்டம் என
அசத்தலான ஓபனிங்குடன் ஆரம்பிக்கிறது அஞ்சாதே.

இயக்குநர் மிஷ்கினுக்கு பாராட்டுகள்:

  • திரைக்கதையில் கதாபாத்திரங்களை எந்தளவு அணுக வேண்டுமென்ற வரையறைக்குள் நின்றதற்கு (மிகைப்படுத்தப்படாத ஹீரோ மற்றும் வில்லன்).
  • காம்ப்ரமைஷ் செய்து கொள்ளாத தெளிவான ஸ்கீரின்பிளே.
  • “வேட்டையாடு விளையாடு மாதிரி இசையாலோ, வன்முறை காட்சிகளாலோ வம்படியாக ஆடியன்ஸை பயமுறுத்தாமல் மிரட்டிய தொனி.
  • மகா மெகா டெக்னாலஜி ஐயிட்டங்கள் இல்லாமல் இருப்பதை பயன்படுத்தி பிரமிக்க வைத்த அழகு.
  • எஸ்பிபி சாயலில் அழகான இவரது குரல் (அச்சம் தவிர் பாடல்)

anjathe.jpg 

போலீஸ் வேலையே லட்சியம் என வாழ்பவன் ஒருவன், பொறுக்கித்தனமாக ஊர் சுற்றுபவன் ஒருவன் என இரு நண்பர்களின் வாழ்க்கைப் பாதையை காலமும், ஒரு பெண்கள் கடத்தும் கும்பலும் புரட்டிபோடுவது தான் கதை. 
 

ஹைடெஸிபலில் கத்துவது, கங்காரு குட்டி மாதிரி ஓடுவது தவிர “நரேன்கவனிக்கத்தக்க டைரக்டர்ஸ் சாய்ஸ் ஹீரோ. சப்-இன்ஸ்பெக்டர் ஆன முதல் நாள் அனுபவம், ஆஸ்பத்திரியில் ரவுடிகளை வரிசை கட்டி அடிப்பது, பொன்வண்ணன் குழுவில் ஒரு புது இன்ஸ்பெக்டருக்கே உரிய அடக்கத்துடனும், துணிச்சலுடனும் நடந்து கொள்வது என அவ்வளவு நேர்த்தி.

சரியான பாத்திரத் தேர்வில் விஜயலட்சுமி. அன்னியோன்யமான நடிப்பு. எம்.எஸ்.பாஸ்கருக்கு இந்த படம் ஒரு நல்ல துருப்புச்சீட்டு. பொறுப்பான அப்பாவாக குணச்சித்திர ரோலில் மிளிர்கிறார்.

குங்குமப் பொட்டு வைத்து வொயிட் அன்ட் வொயிட் கெட்டப்பில் கடத்தல் கும்பலின் காட்பாதராக பாண்டியராஜனா இது! “ரான்ஸம் பேசுகிற வாக்கில் அசால்ட்டாக பாட்டிலை எடுத்து ஒருவனின் மண்டையை பொளக்கிறார். ஆழமான ஒரு ஆளாக இவரை பிரதிபலித்த விதம் அருமை. இன்னும் மெனக்கெட்டால் வெரைட்டியான ரோல்கள் நிறைய வரலாம். கடத்தல் கும்பலின் மாஸ்டர் மைன்டாக வரும் பிரசன்னாவின் புறத்தே “காக்க காக்க பாண்டியா, “பொல்லாதவன் பாலாஜி இவர்களை மிமிக்ரி பண்ணியது மாதிரி இருப்பதால் அகத்தே தோன்றும் இவரின் நடிப்பு அபேலாகிவிடுகிறது.

நட்பு காட்டும் இடங்களிலும் வெறுப்பு, பொறாமை கொள்ளும் இடங்களிலும் உணர்வுகளை அழகாக பிரதிபலித்து நடித்திருக்கிறார் நரேனின் நண்பனாக வரும் புதுமுகம் அஜ்மல். இவர்கள் வீட்டு ஏரியாவில் வசிக்கும் “குருவியின் கேரக்டர் மனதில் நிற்கும் ஒன்று.

ஆரம்பக் காட்சியாக வானத்தை வட்டமிடும் காமிராவின் ஓரத்தில் “கீழே இறங்குடா என அணிசேரும் குண்டர்கள், பாரில் தண்டால் எடுக்கும் அஜ்மலை தலைக்குப்புற எடுக்கும் காமிரா என ஆடியன்ஸிற்கு பாத்திரங்களின் கோணங்களை கூட அருமையாக புரிய வைத்திருக்கிறார் சினிமாட்டோகிராபி பண்ணியிருக்கும் மகேஷ் முத்துச்சாமி. மெல்லிய மஞ்சள் வெளிச்சத்தில் அஜ்மல் வீட்டில் பதுங்கும் பாண்டியராஜன் & கோ, தற்செயலாக வரும் விஜயலட்சுமி இவர்களின் நடவடிக்கைகளை காலடிகளை மட்டுமே காட்டி எடுத்த விதம் மாறுபட்ட அணுகுமுறை.

தனக்கென தனிப்பானியில் இசைக்கோப்பு செய்து பாடல்களிலும் பின்ணணி இசையிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார் சுந்தர் சி பாபு. சித்திரம் பேசுதடிக்கு பிறகு இது இரண்டாவது படமா என்ன? இதற்குள் வாய்ப்புகள் குவிந்திருக்க வேண்டுமே?!. கபிலனின் நிறைவான வரிகளில் “கத்தாழை”, “கண்ணதாசன் காரைக்குடி” பாடல்களின் கோரியோகிராபியும் எடுத்த விதமும் பிரமாதம். சடகோபன் ரமேஷின் படத்தொக்குப்பில் ஸ்லோவான பிளேயில் எடுக்கப்பட்ட பின்பாதி பரீட்சார்த்த முயற்சிக்கு பாராட்டலாம். அந்த மொட்டை மண்டையை கடைசி வரை காட்டாமலேயே காட்சிகளை நகர்த்திவிடுகிறார்கள்.

ரோட்டில் வெட்டுப்பட்டு கிடக்கும் ஒருவன், அவனை காப்பாற்ற முயலும் நரேனின் பதபதைப்பு;  ஒரு போலீஸ் ஸ்டேஷனின் அன்றாட நடவடிக்கைகள், ஒரு புது சப்-இன்ஸ்பெக்டருக்கு கிடைக்கும்  சின்ன சின்ன அவமானங்கள்,  கோயில் கும்பாபிஷேகம் அன்று இருட்டில் விஜயலட்சுமியிடம் தவறாக நடந்து கொள்ளும் பிரசன்னா; ஒற்றை கைலியுடன் ரோட்டில் கூனிக்கிடக்கும் மகளை ஓடி அணைக்கும் அப்பா மற்றும் ஹீரோவின் பதட்டம்; கரும்புத் தோட்ட்த்தில் வில்லன் & கோ, ஹீரோ இவர்களுக்கிடையேயான போராட்டம் என படம் நெடுக காட்சிகளை ஆணித்தரமாக புரியவைக்கும் கூரிய அணுகுமுறையில் ஒரு மாறுபட்ட தரமான சினிமாவை தந்திருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். ஒரு விஷ்வல் மீடியத்தை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு இந்தப் படம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

தமிழின் தி பெஸ்ட் ஆக் ஷன் சினிமா என்று கூறலாம் என்றால்; வித்தியாசமான அணுகுமுறை என்ற பெயரில் முன்பாதியில் ஆக் ஷனிற்கு அருமையான சிவப்புக் கம்பளம் விரித்த இயக்குநர் பின்பாதியில் கோட்டை விட்டிருக்கிறார். காக்க காக்க சாயலை தக்கணூன்டு அள்ளித் தெளித்து பாண்டியராஜனை கொல்வது முதல் கணிக்கக் கூடிய திருப்பங்களில் நகர்கிறது பின்பாதி. நாம வந்த வேலை முடிந்தது கிளம்பலாம் என்று ஒரு காட்சியில் சொல்கிறார் பிரசன்னா.  அதைப் பற்றி குழப்பமே ஏற்படுகிறது.

கடத்தல் கும்பலை ஏற்கெனவே நரேனுக்கு தெரிந்து விடுவது இருக்கின்ற சுவாரஸ்யத்தையும் இல்லாமல் ஆக்கிவிடுகிறது. போதாக்குறைக்கு பொன்வண்ணன் & கோ கண்டுபிடிக்கிறோம் என்ற பெயரில் கால் ட்ரேஸரிலேயே பாதி பின்பாதியை செலவிட்டு வீணடிக்கிறார்கள் என்றால் போலீஸை டைவர்ட் செய்துவிட்டு வில்லன் & கோ இன்னொருபுறம் தப்பிக்க இவர்கள் அதை கண்டுபிடிக்கும் காட்சிகளும் “அவங்க நார்த் மெட்ராஸ் பக்கம் போறாங்கனா; நாம இப்ப இங்கே என்ன பண்றோம் உட்பட பல வசனங்களும் படத்தின் ஹைலைட் காமெடிக் காட்சிகள்.  மிரட்டலான முன்பாதி; பரீட்சார்த்த பின்பாதி என வித்தியாசமான சினிமா என்றாலும் எக்ஸ்பெரிமென்டில் வெடித்த கெமிஸ்டரி குடுவையாகிவிடுகிறது.

இவை தவிர்த்து வித்தியாசம் வித்தியாசம் என பெருமிக் கொள்ளும் இயக்குநர்கள் மத்தியில் மிஷ்கின் தவிர்க்க முடியாத உண்மையாகவே மாறுப்பட்ட இயக்குநர். உழைப்புக்கும் மெனக்கெடுதலுக்கும் பாராட்டுக்கள்.

அஞ்சாதே முன்பாதியில்; சிரிக்காதே பின்பாதியில்

தாரே ஜமீன் பர் – விமர்சனம் பிப்ரவரி 10, 2008

Posted by M Sheik Uduman Ali in Reviews.
Tags: ,
4 comments

tare1.png 

கணிதக் குறியீடுகள், மொழிகளின் எழுத்து வடிவங்கள் இவை மனதில் தங்க மறுத்தால் உங்களுக்கு எப்படியிருக்கும்?  உங்கள் குழந்தைகளுக்கு!. எதிர்காலம் ஒன்றை மட்டுமே மனதில் இருத்தி குழந்தைகளின் அழகான சின்னஞ்சிறு உலகம் பாழாக்கப்படுவது எவ்வளவு கொடுமை.  இவற்றை அவ்வளவு அழகாக அக்கறையாக பேசியிருக்கிறார் அமீர்கான்.

எழுத்துக்கள் சித்திரக் குழப்பங்களாகவும், எதையும் கூர்நோக்கி பார்த்து சிந்திக்க முடியாத ஒரு சிறுவனின் நிலைதான் படம் நெடுக பரவிக்கிடக்கிறது. அவனது சேஷ்டைகள், வாழ்க்கை முறை போன்றவை சினிமா என்ற முறையில் விறுவிறுப்பாக நக்கலாக தோன்றினாலும்; இவனது எதிர்காலம் என்னாகுமோ என நம்மை பதற வைக்கிறது.

குழம்பிய குட்டையிலிருந்து அவ்வளவு கூர்நோக்கி குட்டி அயிரை மீன்களை பிடித்து தன் வீட்டுக் குடுவையில் விடுகிறான். எல்லாச் சிறுவர்களிடமிருந்தும் அதீதமாக விலகி தனக்கான அந்த பிரம்மாண்ட கற்பனை உலகில் பிரியமாக வாழ்கிறான்.  அவனது ஓவியங்கள்  அத்தனை அழுத்தமாகவும் அழகாகவும் இருக்கிறது.  அதனை ஹோம்வொர்க், எக்ஸாம் போன்ற நீராவிகள் கலைத்து தொல்லையளிக்கின்றன.  அவனை ஒரு மக்குப்பிள்ளையாகவே பெற்றோரும், உலகமும் பார்க்கிறது.  திருந்துவதற்காக போர்டிங் ஸ்கூலில் சேர்க்கின்றனர். தனிமையும் கண்டிப்பும் அவனது வாழ்க்கையை நரகமாக்குகிறது. சரியான நேரத்திற்கு தற்காலிக ஆசிரியராக வருகிறார் அமீர்கான்.  அவனக்கு ஆதரவாக இருந்து அவனது கற்பனை உலகத்தை தற்கால வாழ்க்கை முறைக்கு பொருந்த செய்கிறார்.

tare2.png

படம் நெடுக தனது நடிப்பு சர்வாதிகாரத்தால் நம்மை கட்டி போடுகிறான் சிறுவன் தர்ஷீல் ஷபாரி. நம்ம வீட்டு வாண்டுகள் மாதிரி உச்சி நுகர்ந்து கொஞ்சும் அளவிற்கு ஆசை. வகுப்பறை பாடங்களில் யாரோ ஒருவன் எழுதிய “ஜாக்டவ்ஏட்டு சுரைக்காய் கசந்து ஜன்னல் வழியே இயற்கையை படிக்கும் அவனது முனைப்பு எல்லாமே ஆர்டிபிஷியலாகி மரங்களை கூட எக்ஸ்கர்ஸன் என்ற பெயரில் பார்க்கப் போகும் நம் வருங்கால தலைமுறையை நினைவு கொள்ள வைக்கிறது. ஒவ்வொரு பிரேமிலும் தன் நடிப்பால் அசத்துகிறான்; சிரிக்க வைக்கிறான்; அழ வைக்கிறான். குழந்தை நட்சத்திரத்திற்கான சர்வதேச விருதுகள் கிடைக்க வாழ்த்துகள் தர்ஷீல்.  இவனது அழகான அக்கறையான அம்மா, கண்டிப்பும் பொறுப்பும் தவிர உத்தியோகமே உலகம் என்று வாழும் அப்பா, அன்பான அண்ணன் என நாம் பழகி போன ஒரு வீடு போன்ற அன்யோனத்தை ஏற்படுத்துகிறது.

குழந்தைகளின் நேசனாக வந்து அவர்களின் மேல் அன்பும் அக்கறையும் கொள்ளும் துறுதுறு ஆசிரியராக அமீர்கான். தர்ஷீலை முன்னிலைப்படுத்தி தான் எங்கு நின்றால் நன்றாக இருக்குமோ அங்கு நிற்கிறார்.

tare3.png

சேதுவின் சினிமாட்டோகிராபியும் சரி; ஷங்கர்-எசான்-லாயின் பின்ணணி இசை மற்றும் பாடல்களும் சரி திரைக்கதையோடு விரவி பயணிக்கின்றன.  அதிலும் ஷங்கரின் தாரே ஜமீன் பர் பாடல் உருக வைக்கிறது. ஸ்கூலுக்கு பங்கடித்துவிட்டு தன்னந்தனியாக மும்பையை சுற்றும் அவனது சந்தோஷ உலகமும்; போர்டிங் ஸ்கூலில் அவனது பிரிவு சோகத்தையும் நம் மனதில் பதித்து உருக வைக்கின்றனர்.  படத்தொக்குப்பு மட்டுமில்லாமல் திரைக்கதைக்கான பின்புலங்களையும் ஆராய்ந்து உண்மை கலந்து கொடுத்து தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார் அமோல் குப்தெ.

கிராபிக்ஸை கொண்டு எழுத்து ஊடகங்களில் மட்டுமே சிறப்பாக விளக்கக் கூடிய காட்சிகளை அதை விட சிறப்பாக விளக்கியிருக்கிறார்கள் டாடா கிராபிக்ஸ்.  குறிப்பாக 3 x 9 = 3 போடும் தர்ஷீலின் கற்பனா சினிமா.

அடிதடியாக கஜினியை தருவார் என எல்லோரும் எதிர்பார்த்திருக்க உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் அமீர்கான்.  சிறுவர்களுக்கான உலகத்தை சிறப்பாக காட்டுவதில் ஈரானிய படங்கள் தான் பிரசித்தம். அந்த வகையில் இந்தியாவிற்கான வெகுஜன சினிமா கணக்கை ஆரம்பித்து வைத்திருக்கிறார் அமீர்.  (“மல்லி போன்ற டாக்குமென்டரிகளை  நம்மில் எத்தனை பேர் பார்த்திருப்போம்.) எந்த கமர்ஷியல் ரெசிபியும் இல்லாமல்  ஆடியன்ஸை உணர்வோடு அணுக வைத்து அச்சிறுவனது உலகத்திற்க்கு நம்மை கூட்டிச் சென்று அவனது சுக துக்கங்களில் பங்கெடுக்க வைத்து அட! போங்களய்யா!  இதை விட சிறப்பாக ஒரு படத்தை உங்களாலும் சரி மற்றவர்களாலும் சரி தர முடியாது.

முன்பாதியில் நம்மை அழைத்து சென்று சிரிக்க வைத்து பின் பாதியில் உருக வைக்கிறான் அமீர்கான் என்ற ஸ்வீட் அரக்கன். எப்படா முடியும் என்ற சினிமாக்களையே பார்த்து அலுத்து போன நமக்கு படம் முடிந்து விடக்கூடாதே என்ற பதட்டம் பற்றிக் கொள்கிறது.  இவ்வளவுக்கும் நமக்கு ஹிந்தி தெரியாது நண்பர்களே!?!?!

டீயுஷன், பாட்டு வகுப்பு, கம்பயூட்டர் வகுப்பு, கராத்தே, ஹிந்தி வகுப்பு என்ற டைட்டான உங்கள் செல்வங்களின் ஒரு நாள் ஷெட்யூலை பங்கடித்து விட்டு ஒரு தடவை போய் வாருங்கள்.  உங்கள் செல்ல செல்போன்களையும் அணைத்து விடுங்கள்.

சில படங்கள் பார்க்கும் போது சந்தோஷமோ; கோபமோ; எரிச்சலோ; ஏன் சில நேரங்களில் கண்ணீரோ வருவதுண்டு.  ஆனால் விமர்சனம் எழுதும் போது அவ்வளவு டிஸ்டர்ப்டாக இருப்பதில்லை. ஆனால் எழுதும் போதும் கண்ணீரை வர வழைத்த உண்மையான சினிமா இது.  தாரே ஜமீன் பர் என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டேன்,

வானத்து விண்மீன்கள் பூமியில் என்றார்கள்; நிஜமாக tare4.png

பிரிவோம் சந்திப்போம் – விமர்சனம் ஜனவரி 29, 2008

Posted by M Sheik Uduman Ali in Reviews.
Tags: , , ,
1 comment so far

சுற்றிலும் கற்றாழை, அவரைச் செடிகள் சூழ்ந்த கிராமத்து தார்ச் சாலையில் மருதை மர நிழலில் மெதுவாக சைக்கிளில் பயணிப்பது போலொரு சுகானுபவம் பிரிவோம் சந்திப்போம்.

பாட்டி, தாத்தா, நாத்தனார், மாமியார் என சுக துக்கங்களை பங்கு போடும் கூட்டுக் குடும்ப சூழலை விரும்பும் மனைவி; தனிமையான இல்லறத்தை விரும்பும் கணவன். இவர்களுக்கிடையேயான தாம்பத்யச் சதுரங்கத்தை ஆர்பாட்டமில்லாமல் அழகாக சொல்லியிருக்கிறார்கள்.

சாமன்ய சம்சாரி, பொறுப்பான அதிகாரி என சேரனுக்கு ஏற்ற ஆனால் எல்லோர் மனதிலும் பதிந்த அரிதாரம். அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். வேலைக்கு போய் வந்ததும் அக்கடாவென உட்கார்ந்து டிவி பார்ப்பவரிடம் சினேகா பேசிக்கொண்டிருக்க அதை வேண்டா வெறுப்பாக கேட்டுக்கொண்டிருப்பார்; மனைவிக்கு என்னவோ ஏதோ என பதறி ஒன்றுமே சொல்லாமல் மானிட்டர் பண்ணும் நர்சிடம் சண்டை போடுவார். இப்படியாக மாறிவரும் குடும்ப சூழலில் உள்ள ஒரு யதார்த்தமான கணவனாக நடித்திருக்கிறார் இந்த கதை நாயகன்.

ஆற அமர உட்கார்ந்து எந்தவொரு குறுக்கீடுகளும் இல்லாமல் சினேகா நடிப்பதற்கேற்ற இல்லாள் பாத்திரம். என்னை விட்டால் ஆளில்லை என நடித்திருக்கிறார். குடும்பத்தினர் ஒவ்வொருவரின் குணாதிசயங்களை கண்டு சிலாகிக்கிறார்; தனிமை நோய் கொஞ்சம் கொஞ்சமாக அவரை ஆட்கொள்வதை பூக்கள் வெடிப்பதை போல மிருதுவாக காட்டுகிறார். இப்படியாக கூட்டுக்குடும்பத்திற்கு ஏங்கும் தற்கால பெண்களுக்கு முரணான பாத்திரத்தில் ஜொலிக்கிறார் சினேகா. சொந்தக் குரலா அம்மணி?

pirivom.png
இவர்களை தவிர இன்னும் இரண்டு டஜன் பாத்திரங்கள். சிறப்பு என்னவென்றால் எல்லோரும் நம் மனதில் பதிந்து விடுவதான். டைட்டில் போடும் போதே ஒரு பேமிலி ஹையரார்கியல் சார்ட் போட்டு அசத்துகிறார்கள். மெளலிக்கு கன கச்சிதமான பாத்திரம்; அதை விட சேரனின் பெரியப்பாவாக வருபவர், தேவதர்ஷினி, சினேகாவின் அப்பா, சேரனின் தங்கை என நீளமான யதார்த்தப் படைப்புகள். எல்லோரையும் கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் தன் நடிப்பால் ஓரங்கட்டி விடுகிறார் சேரனின் பாட்டி. எல்லாவிதமான பாட்டி கேரக்டர்களும் இவருக்கு பொருந்திவிடுகின்றது.

பின்பாதியில் வரும் ஜெயராம் கலகலப்பாக வந்து போகிறார். நகரில் ஒரு கிளினிக் வைத்து கை நிறைய காசு பார்க்க ஆசைப்படாமல் அந்த மலைக்காட்டில் எல்லோருடனும் ஆசாபாசமாக பழகி மருத்துவம் பார்க்கும் நல்ல மனிதராக காட்சிகளை நிரப்பியிருக்கிறார்.

காரைக்குடி செட்டியார்களின் கல்யாணத்தை கண்முன் காட்டும் அப்பாடல் காட்சி ஒன்றே போதும் ராஜீவனின் கலையம்சத்திற்கு. யதார்த்தத்தை எங்கேயும் தவற விடாத அளவிற்கு அவ்வளவு அழகாக படத்தொகுப்பு செய்திருக்கிறார் சரவணா.

முன்பாதியில் காரைக்குடியின் பிரும்மாண்ட வீடும் கல்யாணமும்; பின்பாதியில் தேயிலைச்செடிகளை போர்த்தி குளிர்காயும் அட்டகட்டி என வரப்பிரசாதமாக கிடைத்ததால் பெரிதாக மெனெக்கடாமல் தன் காமிராவால் கொள்ளையடிக்கிறார் M.S.பிரபு.

அதிரடிதான் இவரின் ஸ்பெஷல் என்றாலும் வலிக்காத வாத்தியங்களில் வாஞ்சையாக திரைக்கதையை தடவி விட்டிருக்கிறார் வித்யாசாகர். சில சந்திப்பிழைகள் இருந்தாலும் சபாஷ். மனதில் பதியாவிட்டாலும் திரைக்கதையை நகர்த்த உதவும் சீரான பாடல்கள்.

மென்மையாக சொல்ல வேண்டும்; உருக வைக்க வேண்டுமென எந்தவொரு தோரணமும் கட்டாமல் நேரடியாக கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் கரு. பழனியப்பன். குழந்தை மூச்சடைந்து இருப்பது; உங்க மனைவிக்கு மன நோய் என இவைதான் படத்தின் உச்சமான அதிரடிக்காட்சிகள். இப்போ என்னவாகுமோ, யார் எந்த குண்டை தூக்கி போடப்போகிறார்களோ என எந்தவொரு பதட்டமுமில்லாமல் பார்க்கலாம். பெரிதான நிகழ்வுகள் கூட அன்றாட வாழ்க்கையில் இழையோடி தரும் அதிர்வை கச்சிதமாக பிடித்து விசுவல் மீடியத்தை நோயுற்றதாக்கமால் நகர்த்திச் சென்றிருக்கிறார்.

சொல்ல வந்த கருத்தை கூட்டுக்குடும்பமா தனிக்குடும்பமா என சராசரி பட்டிமன்றமாக்காமல் பிழைக்க நெடுந்தொலைவு குடும்பத்தை விட்டு வந்து ஒண்டிக்குடுத்தனத்தில் டிவியாலும் சூழல்களாலும் எந்திரமயமாகி போன இல்லறத்தை அங்கிங்கு சுற்றாமல் நேர்கோட்டில் சொல்லியதற்கு சபாஷ் பழனியப்பன். அதை விட காரைக்குடி மக்களின் அசலான வாழ்க்கை முறைகளை வட்டார மொழி கலந்து சொன்ன விதம் அருமை.

நோய்க்கான மருந்தை மருத்துவர்களை அணுகாமலேயே வாங்கி சாப்பிடும் கலாச்சாரத்தை திருக்குறள் கலந்து ஜெயராம் சொல்லும் காட்சி உட்பட நோகடிக்காத வசனங்கள்.

கூட்டுக் குடும்பத்திலேயே இருந்ததினால் தனிமைக்கு சேரன் ஏங்கினாலும்; அவர்களை பற்றியே நினைக்காத அளவிற்கு சேரன் நடந்து கொள்ளுவது அவர் பாத்திரத்திற்கு முரணான ஒன்றாக தோன்றுகிறது.

கண்ணைக் கட்டி சாமி ரூமிற்கு கூட்டிச் சென்று குடும்பத்தினர் முன்னிலையில் முத்தமிடும் சேரன்; ஆபிஸில் அனைவரும் பிக்னிக் செல்ல சேரன் இப்படி கும்பல் வேண்டாமென்றுதானே இங்கு வந்தேன்; கடவுளுக்கு ஒரு ரூபாய் சேவிங்ஸ் போடும் சினேகாவின் டயலாக், பேங்கில் தான் மானேஜர், வீட்டில் கணவன் என மெளலியின் டயலாக்குகள் என ஆங்காங்கே இலக்கணப் பிழைகளும் உண்டு.

என்ன சொல்ல போகிறார்கள் என்று யோசிக்கும் அளவிற்கு நிதானமெடுத்து செல்லும் பின்பாதி சாம்பார் சாதத்தையே வெரைட்டி ரைஸாக வேகமாக சாப்பிடும் பாஸ்ட் புட் தமிழனை நிறையவே சோதித்து பார்க்கும். நெடுந்தூரத்திற்கு பரப்ப காட்சிகளில்லாமல் துணுக்குகளாக வந்து சேரும் காட்சிகளை எப்படி எடுத்துக் கொள்வது எனத் தெரியாத நம்மாட்கள் படம் எப்படா முடியும் என புலம்புகிறார்கள்.

யதார்த்தமான மெல்லிய உணர்வுகளை படபடவென பாப்கார்னாக சொல்லுவது ஒரு ஸ்டைல். அதையே குளத்தில் காற்றின் தன்மைக்கேற்ப பயணிக்கும் காகிதக் கப்பலாய் அதன் வளைவு நெளிவுகளில் பயணிக்கச் செய்வது ஒரு ஸ்டைல்.

வேகமான வாழ்க்கை முறையில் நிதானமாக அதை ரசிக்க நீங்கள் ரசிக்க தயார் என்றால் இலக்கண மற்றும் சந்திப்பிழைகள் இருந்தாலும்

பிரிவோம் சந்திப்போம் – அழகிய வெண்பா.