குசேலன் – விமர்சனம் ஓகஸ்ட் 5, 2008
Posted by M Sheik Uduman Ali in விமர்சனங்கள்.Tags: குசேலன், kuselan
2 comments
யாரோ ஒரு அபிமானி ரஜினியின் முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை பட வரிசைகளில் குசேலனுக்கும் இடமுண்டு என்று சொன்ன ஞாபகம். இப்போ மட்டும் அந்த அபிமானி கையில் கிடைத்தால்…. நற..நற…
நல்ல கதையில்லாத படத்தில் இந்த அசோக்குமார் (இதுதான் குசேலனில் நிஜ சூப்பர்ஸ்டாராகவே வரும் ரஜினியின் பெயர், பேசாம ராஜகுமாருனே வைத்திருக்கலாமோ!) நடித்திருந்தாலும் யாரும் தியேட்டர் பக்கம் வரமாட்டாங்க என்று ரஜினி ஒரு டயலாக் விடுவார். அதில் ஒரு சின்ன திருத்தம்… கதையல்ல… திரைக்கதை. அதற்கு குசேலனே நல்ல ஆதாரம்.
நல்லவனாகவே இருந்தாலும் தொழில் சமார்த்தியம் இல்லாததால் வறுமையில் வாடுகிறார் பசுபதி. தொழில் தரம் இல்லாவிட்டாலும் வியாரபத் தந்திரத்தில் செழித்து இருக்கிறார் வடிவேல். ஊருக்கு சினிமா சூட்டிங்கிற்காக வருகிறார் ரஜினி. இவரது பால்ய சினேகிதர் பசுபதி. அரசல் புரசலாக பசுபதி தனது மனைவி மீனாவிடம் சொல்ல ஊருக்கே தெரிந்து பசுபதியிடம் ரஜினியின் அறிமுகம் கேட்டு விண்ணப்பிக்கின்றன. ரஜினியின் இவ்வளவு பெரிய உயரமும் அவரைச் சூழ்ந்த பாதுகாப்பும் பெரிய தடைக்கற்களாக இருக்க, பசுபதியை ஊரே கேலி செய்கிறது. இவரது முயற்சிகள் ஜெயித்து தன் நண்பன் ரஜினியை சந்தித்தாரா என்பது மீதிக்கதை.
இதைக் கேட்டதும் நம்மில் எழுந்த எந்த எதிர்பார்ப்புகளுக்கும் நாம் பொறுப்பல்ல என்ற வகையிலேயே ஒட்டு மொத்த திரைக்கதையும் நம்மை விரட்டி விரட்டி அடிக்கிறது. எந்த கேரக்டர்களிலும் மிளிரும் பசுபதியை “வெயில்“ படத்தில் எல்லாம் இழந்த நிலையில் ஒரு பரிதாபத்துடன் திரிவாரே, அதே மாதிரியே படம் முழுவதும் திரிய விட்டிருக்கிறார்கள். என்ன பாவம் செய்தாரோ….சாதாரண டயலாக்குகளை கூட அழுகிற குரலிலேயே சொல்கிறார். அதை விட இவர்களின் வறுமையான குடும்பத்தைக் காட்ட “மண்பானை உடைதல்“, “இஞ்சு இல்லை“ என ரொம்பவே நெஞ்சை பிழிய முயற்சிக்கிறார்கள். ம்ம்ம்..என்னத்தச் சொல்ல ரஜினி வருவார் என்பதற்காக கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்து உட்கார்ந்தால் பசுபதியின் வாரிசுகள் அப்பாவை மட்டம் தட்டுவதாகட்டும், “ஏம்பா, நீ இவ்வளவு கஷ்டத்திலும் எப்படிப்பா சந்தோஷமா இருக்கே“ என்ற டயலாக்குகளாகட்டும் மட்டமான அமெச்சூர்த்தனத்தின் உச்சக்கட்டம். அந்த மாதிரி எந்த இடத்திலும் பசுபதியின் குணநலன்கள் தெரியவில்லை.
இது இப்படி என்றால், காமெடி என்ற பெயரில் வடிவேலு & கோ பண்ணுகின்ற அலப்பரைகள் ஐயோ ஓடிடலாம் என்று வரும் போது, இருப்பா சூப்பர் ஸ்டார் இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு உட்கார வைத்தது. ஆனாலும், பல்வேறு கஷ்டங்களுக்கு பிறகு ரஜினியை நேரில் சந்திக்கும் போது வடிவேலு பண்ணும் சேஷ்டைகள் மனதில் நிற்கிறது. சிரிக்கவும் வைத்தது.
கன்னிகாஸ்திரி ஆசிரியைகளாக வரும் கீதா, பாத்திமா பாபு தங்கள் பள்ளி வெள்ளி விழாவிற்கு ரஜினியை வர வைக்க பசுபதியை கோருவதும், முடியாத பட்சத்தில் படக்கு படக்குனு பேரன்ட்ஸ் மீட்டிங் போட்டு சீரியஸாக பசுபதியிடம் முடியுமா முடியாதா என மிரட்டுவதும் ஐயோ எந்திருச்சு ஓடிடலாமானு இருந்துச்சு.
கொஞ்சமாவது கலகலப்பு என்றால் சந்தானமும், சந்தானபாரதியும் கூடவே லிவிங்ஸ்டனும்.
நயன்தாரா… நடிகையாகவே வருகிறார். மசாலாவிற்காக. ஒரு மழைப்பாட்டும் தனியறையில் நயன்தாரா தன் உடைகளை சீரமைப்பதும் வடிவேலு அவரது அழகை ரசிப்பதும் வேதனையான திணிப்புகள்.
எது எப்படியோ, தனது நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் பாத்திரத்தில் ரஜினி..ம்ம்ம்…. பிரமாதமாக ஸ்கோர் பண்ணியிருக்கிறார். அதுவும் அந்த கிளைமாக்ஸ் வசனங்கள் அருமையான டெலிவரி.
பாடல்களில் மாமாவின் மானத்தைக் காத்த ஜி.வி.பிரகாஷ்குமார் பின்ணணி இசையில் திரைக்கதைக்கு போட்டியாக கோட்டைவிட்டிருக்கிறார். அந்த மறையூர் கடைத்தெருவும், பசுபதியின் வீடும் தோட்டாதரணியின் கைவண்ணத்தை காட்டினாலும் ரொம்பவே நேட்டிவிட்டியை தொலைத்து நிற்கின்றன.
“சொல்லம்மா” பாடலில் ஏரியில் துள்ளும் டால்பின்கள், மலையில் விழும் அருவி என ஆக்ர் நிறுவனத்தின் கிராபிக்ஸ் நல்ல தரம் என்றாலும், எல்லா பாடல்களிலும் தங்கள் திறமையைக் காட்டி கொஞ்சம் ஓவர் டோஸ் ஆக்கியிருக்க வேண்டாம்.
இப்படியான படத்திற்கு எடிட்டிங், கேமிரா பற்றி என்னத்த சொல்ல….போங்கப்பா. நச்சுனு ஆம்பூர் பிரியாணி போடுற ஆள்கிட்டே தயிர் சாதம் வைக்கச் சொன்னது தான் தப்பு. வாசு சாருக்கு இன்னும் மன்னன், சந்திரமுகி பிரமிப்பு போகவில்லை போல. போதாக்குறைக்கு ரஜினியை தியேட்டரில் ரத்த ஆறே ஓடும் அளவிற்கு எல்லாக் கேரக்டர்களையும் வைத்து புகழ்ந்து தள்ளுவது ரொம்பவே டூமச்ங்னோவ். இரண்டரை மணி நேரம் “காபி வித் அனு” பார்த்த அனுபவம். பண்ணப்போவது கொஞ்சூண்டு பால் பாயசம் என்றாலும் ரஜினி என்ற கரவை மாடு கிடைத்ததற்காக ரத்தம் வரும் வரை கரந்திருக்கிறார் வாசு.
ஹிந்தியில் தனது வயசுக்கேற்ற கேரக்டர்களில் வெரைட்டியாக நடித்துக் கொண்டிருக்கும் அமிதாப் வழியில் ரஜினி என்ற மிகச் சிறந்த நடிகனும் அடியெடுத்து வைத்தது ரொம்பவே சரியான முடிவுதான் என்றாலும்
குசேலனின் திரைக்கதை ரஜினியின் தவறான தேர்வு.