jump to navigation

பீமா – விமர்சனம் ஜனவரி 17, 2008

Posted by M Sheik Uduman Ali in Reviews.
Tags:
add a comment

விக்ரம், பிரகாஷ்ராஜ், ரகுவரன் என பசியோடு நீந்திக் கொண்டிருக்கும் மூன்று நடிப்பு திமிங்கலங்களுக்கு இரை போட வந்திருக்கிறார் லிங்குசாமியின் பீமா.

beema.png

கடந்தாண்டு பிரம்மாண்ட படைப்புகளுக்காக எதிர்பார்க்கப்பட்ட படங்கள் சிவாஜி மற்றும் பில்லா. அந்த வரிசையில் மிச்ச சொச்சமாக வந்திருக்கிறார் பீமா. ஆச்சர்யமான விசயம் இந்த படங்களுக்கிடையேயான ஒரு ஒற்றுமை. நிறைய எதிர்பார்க்க வைத்து ஏமாற்றியது. பில்லாவையாவது பாராட்டலாம் முயற்சித்ததற்காக!

காலம் காலமாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் சொல்லப்படும் கேங்ஸ்டர் டைப் கதைகளில் குறை ஏதுமில்லையென எந்தவொரு புது முயற்சியும் இல்லாமல் கருணையோடு அப்படியே அடியொற்றி சொல்லியிருக்கிறார்கள். டீமை பார்த்து யாரும் தளபதி, புதுப்பேட்டை, காக்க காக்க, வட்டாரம் வரிசையில் யோசித்து குழப்பிக் கொள்ள வேண்டாம். கூட வந்த நண்பர் வேறு மார்டின் ஸ்கோர்செசின் இயக்கிய பிரபலமான குட்ஃபெல்லாஸ் திரைப்படத்தின் சாயலடிப்பதாக கூறினார். (என்னை மாதிரியே விழிக்கிறவர்கள் http://en.wikipedia.org/wiki/Goodfellas தளத்திற்கு விரைக)

சென்னையின் பிரதான இடங்களிலெல்லாம் ஹீரோவும் சரி வில்லனும் சரி சளைக்காமல் டூமீல் டமீல் என டஜன் டஜனாக கொலை செய்கிறார்கள். இவர்களை கேட்கத் தான் யாரும் இல்லை என்றால் த்ரிஷாவும் ஒரு காட்சியில் பிஸ்டலை எடுத்து சுடுகிறார்; கேட்க யாருமில்லை. நமக்கு தெரிந்து இவ்வளவு துணிச்சலாக என்பதுகளில் வந்த தெலுங்கு வில்லன்கள் தான் செய்வார்கள்.

என்ன கொடுமை என்றால் யாரும் யோசிக்க முடியாதபடி படம் நெடுகிலும் வரிசையாக புதுமையான காட்சிகள்(?!). த்ரிஷா மேல் விக்ரம் விழுந்ததும் பிறக்கிறது காதல்; த்ரிஷாவை ராக்கிங் செய்யும் ரோமியோக்களை காக்க காக்க ஸ்டைலில் வந்து அடிக்கும் விக்ரம்; மார்க்கெட் ஏரியாவை இடித்து ஷாப்பிங் மால் கட்ட வரும் ரகுவரன்; அதை தடுக்கும் ஹீரோ & கோ என எந்தவொரு காட்சியையும் நம்மால் முன்னறிந்து கொள்ள முடியாது.

ஆக இப்படியாக முற்றிலும் எதிர்பாராத திருப்பங்களோடும் நிறைய அபத்தங்களோடும் இடைவேளையும் வருகிறது. அதற்கு பின்னும் அதே பஜனையை தொடர்கிறார்கள்.

உடம்பை முறுக்கேற்றி பார்க்கவே பயங்கரமாக திமிறியிருக்கிறார் பீமா என்ற விக்ரம். இன்னும் பயங்கரமாக இருக்கிறது அவரது சண்டை.  குறிப்பாக  அந்த மார்க்கெட் சண்டையில் இவர் அடிப்பதும் பூடகமாக பிரகாஷ்ராஜ் பார்ப்பதும் செம அழகு. செம ஸ்டைல். சமீபமாக இவ்வளவு சிறப்பாக எந்தவொரு படத்திலும் சண்டைக் காட்சிகள் வந்ததில்லை. விக்ரம் அடித்தால் நிஜமாக இருக்கிறது. கனல் கண்ணன் பாராட்டுக்குரியவர்.

படத்தில் ரோமான்ஸ் காட்சிகள் என்ற பெயரில் கடுப்பேற்றுகிறார்கள் அந்த கிளைமாக்ஸிற்கு முந்தைய பாடலை தவிர. ஐந்து பாடல் காட்சிகளோடு த்ரிஷாவை அனுப்பியிருக்கலாம்.  பாவம்!

விக்ரமிற்கு இணையாக கிடைத்த சந்தர்ப்பத்திலெல்லாம் சிக்ஸர் அடித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். இவருக்கான ஸ்கோப்பிலெல்லாம் எந்தவொரு இடைஞ்சலுமில்லாமல் நிற்கும் தைரியம் விக்ரமிற்கு மட்டுமெ உண்டு. ரகுவரன் தான் ரொம்ப பாவம்.

படத்திலேயே விக்ரம், பிரகாஷ்ராஜிற்கு அடுத்தபடியாக அதிகமாக உழைத்திருப்பவர் சினிமாட்டோகிராபி பண்ணியிருக்கும் R.D.ராஜசேகர். சண்டைக் காட்சிகளாகட்டும் பாடல் காட்சிகளாகட்டும் மனிதர் அசத்தியிருக்கிறார். உறுதுணையாக எடிட்டர்  ஆண்டனி.

பாடல்கள்  ஏற்கெனவே ஹிட்டடித்து விட்டன; ஆனால் படமாக்கியதில் “முதல் மழை“, “ஒரு முகமோதவிர மற்றவைகள் சுமார். முப்பத்தெட்டு நாட்கள் உட்கார்ந்து கம்போஸ் செய்த ரீரிக்கார்டிங் மாதிரி தெரியவில்லை ஹாரீஸ்.

ரன், சண்டைகோழி மாதிரி அதிரடியான படங்களை செய்த லிங்குசாமியின் இரண்டு வருட உழைப்பில் வந்த படம் மாதிரி தெரியவில்லை. அதற்கான எந்தெவொரு ஆச்சர்யங்களும் இல்லை. அதிகபட்சம் ஆறுமாதத்தில் எடுத்து முடிக்கக் கூடிய படம். சிவாஜி, பில்லா மாதிரியே திரைக்கதையில் தான் கோட்டை விட்டிருக்கிறார்.

பிரகாஷ்ராஜிற்கும் விக்ரமிற்குமிடையேயான அந்த மின்காந்த அலைகளை எந்தவொரு வசனமும் சொல்லாமல் புரிந்து கொள்கிற மாதிரி வேறு எந்தவொரு காட்சிகளும் மனதை தொட முயற்சிப்பதில்லை.

பிரம்மாண்டம், ஸ்டார் வேல்யூவை நினைத்து நீண்ட கால ஷெட்யூலில் எடுக்கப்பட்ட இந்த மாதிரி சினிமாக்கள் ஸ்டோரிபோர்டில் திட்டமிடப்படாத திரைக்கதையோடு களத்திற்கு வருகின்றனவோ என தோன்றுகின்றது. மிரள வைக்கும் காட்சியமைப்புகளே இருந்தாலும் சமீபத்தில் வந்த காக்க காக்க, புதுப்பேட்டை படங்களில் இருந்த களச் சூழலை வைத்தே மிரட்டும் தொனியோ; தலைநகரம், வட்டாரம் படங்களில் இருந்த கிரைம் ட்ராமாவோ பீமாவில் இல்லை.

ஆனால் மிரள மிரள இழுபட்ட படம் கிளைமாக்ஸில் நம்மை மிரள வைத்து விடுகிறது. மொத்தம் ஐந்து நிமிடமே அந்த காட்சியென்றாலும் லிங்குசாமி அட போட வைக்கிறார். இந்த பரபரப்பும் விறுவிறுப்பும் தொடக்கம் முதல் இருந்திருந்தால் ஆடியன்ஸின் நெத்தி பொட்டில் அடித்திருக்கலாம்.

பீமா – புளித்து போன பழைய இட்லியை உதிர்த்து செய்த உப்புமா