jump to navigation

பில்லா – விமர்சனம் திசெம்பர் 25, 2007

Posted by M Sheik Uduman Ali in Reviews.
Tags: , , ,
4 comments

எல்லா தமிழ் சினிமா ஹீரோக்களுக்கும் ஒரு மோகம் (அல்லது லட்சியம்) உண்டு.  அது சூப்பர் ஸ்டார் மோகம்.  அதற்காக ரஜினியின் சினிமா ஸ்ட்ரடஜியையோ, அவரது பெர்சனல் ஸ்டைலையோ பின்பற்றுவது பழக்கம்.  இதிலிருந்து மாறுபட்டு அவரது பிளாக் பஸ்டர் சினிமாவான பில்லாவை கையிலெடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார் அஜீத்.  இதற்கு ஷாரூக்கின் டானும் அதன் பிரும்மாண்ட வெற்றியும் ஒரு காரணம்.

மைக்ரான் அளவிற்கு மூலக்கதையில் மாற்றம் செய்து உத்திகளையும் சுற்று சூழலையும் கொஞ்சம் நவீனப்படுத்தினால் அதுதான் அஜீத்தின் பில்லா.  ரஜினியின் பில்லாவுடன் ஒப்பிட்டு யாரும் விமர்சிக்கக் கூடாது என்ற படக்குழுவினரின் கவனம் பாராட்டுக்குரியது.

Billa

பரவலான ரசிகர்கள், நம்பகமான ஓபனிங் என எல்லாம் இருந்தும் எங்கேயோ மிஸ்ஸான அஜீத்தின் வலையில் விழுந்த சுறா இந்த பில்லா.  வெற்றி தோல்வி பற்றி யாரும் பேசிவிட முடியாத பங்களிப்பு.  மிகவும் ஸ்டைலிஷான பில்லா, குசும்புத்தனமான வேலு என எங்கேயும் ரஜினியை காப்பியடிக்காமல் செய்திருக்கிறார். “கேன் கேன்” என அவர் ஸ்டைலாக டீல் முடிப்பதும், சாகும் தருவாயில் காரில் பிரபுவுடன் தெனாவட்டாக பேசுவதிலும், அனாசயமாக காரை வழுக்கி ஓட்டுவதும் என ஜொலித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் ரசிகர்களுக்கு விருந்து வைக்கிறார். ஆனாலும், நடிப்பில் கொஞ்சம் துறுதுறுப்பையும், பேச்சில் கொஞ்சம் மாடுலேஷனையும் காட்டியிருந்தால் ரசிகர்களுக்கு வெறியேற்றியிருக்கலாம்.  தவறவிட்டுடீங்களே தல.

ரிடையர்டாகி வீட்டிலிருக்கும் வயதிலும் டூயட் பாடும் ஹீரோக்களுக்கு நடுவில் தன் வயதுக்கேற்ற பாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்திருக்கும் பிரபுவிற்கு இந்த படம் ஒரு மாறுபட்ட விசிட்டிங் கார்டு.  இன்னொரு அஜீத்தை பில்லாவாக தயார் செய்யும் போது இருவரும் அடிக்கும் நக்கல் ஒரு ஹைகூ.  இன்டர்போல் ஆபிஸராக ரஹ்மான். இவரின் பாத்திரப் படைப்பில் எந்தவொரு மாற்றமும் செய்யாததால் சுவாரஸ்யமில்லாமல் போய்விடுகிறது (அப்படியே இவரை பழைய பில்லாவில் தேங்காய் சீனிவாசன் செய்த கேரக்டரை செய்ய வைத்திருக்கலாம்).

படத்தில் ரகளையாக வருபவர் நயன்தாரா.  அம்மணியை ஹாலிவுட் ஏஞ்சலினா மாதிரி காட்டியிருக்கிறார்கள் (ஜொள்ளு வடித்து பேசவில்லை!).  அதற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் இந்த பல்லேலக்கா. அஜீத்தை போலீஸிடமிருந்து மீட்கும் அந்த காட்சி நயன்தாராவின் ஒரு சோற்று பதம். அடுத்தடுத்த வருடங்களுக்கான கால்ஷீட் இதற்குள் நிரம்பியிருக்குமே.

கொஞ்ச நேரமே வந்தாலும் கலகலக்கிறார் சந்தானம். நமீதா வந்து போகிறார்.

கலை இயக்குநரின் உதவியுடன் நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் காட்சிக்கு காட்சி பிரும்மாண்டம் காட்ட முடிந்தாலும், கதை சூழலுக்கு தேவையான மிரட்டலும் அலட்டலும் இல்லாதது போன்ற உணர்வு  ஏற்படுகிறது. நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் ஸ்ரீகர்பிரசாத்தின் படத்தொக்குப்பிற்க்கு ஆங்காங்கே “வாளால் ஒரு இன்பார்மரை வெட்டும் அஜீத், சண்டைக்காட்சிகள்” என சில சாம்பிள்கள் இருந்தாலும் நீளமான முன்பாதி இடைவேளையை ஏக்கமாக  எதிர்பார்க்க வைக்கிறது.

அதிரடியான பா.விஜய்யின் வரிகளுக்கு அலட்டலாக இசையமைத்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. “மை நேம் இஸ் பில்லா”, “செய் ஏதாவது செய்” என அழகான என்கவுன்டர்கள் என்றால் மற்ற பாடல்களில் சுமாரான யுவன். பில்லா தீம் மீயூஸிக் உட்பட பின்ணணியிசையில் தனக்கான பணியை கச்சிதமாக செய்திருந்தாலும் இன்னும் நிறைய செய்திருக்கலாமோ!?

ராஜ் கண்ணாவின் வசனங்கள் எப்போதாவது சில இடங்களில் ஷார்ப்பாக இருந்தாலும், பல இடங்களில் துருப்பிடித்து கிடக்கிறது.  இந்த மாதிரி படங்களுக்கு ஊசிப்பட்டாசாக இருந்திருக்க வேண்டாமா?

“பட்டியல்” படத்திற்கு பிறகு விஷ்னுவர்தனிற்கான இயங்கு தளம், வியாபாரத் தளம் மட்டுமில்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் ஷங்கருக்கு இணையாக உயர்ந்திருந்திருந்தது.  அஜீத்தின் பில்லா மூலம் தனக்கான ஒரு இடத்தை அழுத்தமாக பதித்திருக்கிறார்.  பாத்திரத் தேர்வுகள், கதையோட்டம் என அற்புதமாக மிரட்டியிருக்கிறார்.  தமிழில் ஹாலிவுட் தர ஆக் ஷனிற்கு அழகான ஆரம்பம் செய்திருக்கிறார்.

இந்த படக்குழுவினரின் பெரிய பிளஸும் மைனஸும் ஹிந்தி ஷாருக்கின் “டான்”.  கதையோட்டம் என்னவோ பழைய பில்லாவாக இருந்தாலும் இவர்களுக்கான இன்ஸ்பிரேஷன் “டான்” என்பது படம் நெடுக தெரிகிறது.  இன்ஸ்பைர் ஆனவர்களால் ஷாருக்கின் மிரட்டலான நடிப்பையோ, கெட்டிக்காரத்தனமான ஷார்ப் வசனங்களையோ, ஹாலிவுட் ரேஞ்சில் அமைக்கப்பட்ட பிரும்மாண்ட இசையையோ, காட்சிகளுக்கேற்ற களத்தையோ,  அதிரடியான திரைக்கதை மாற்றங்களையோ, முக்கியமாக அந்த படத்திலிருந்த நவீன தொழில்நுட்பத்தையோ தொட்டிருந்ததால் தமிழின் “கிராஸ் ஓவர்” சினிமாவிற்கான முதலாவது அடியை இந்த பில்லா எடுத்து வைத்திருக்கும்.

ஆனாலும்,  தமிழ் வணிக சினிமாவின் உலகளாவிய தரத்திற்கு இந்த படம் ஒரு ஆரம்பம்.

ஆனால், கதை, தேவையான பரபரப்பு, எதிர்பார்ப்பு, இதெல்லாம் விட சரியான தொழில்நுட்பக்குழு இருந்தும் தர வேண்டிய குவாலிட்டி மிஸ்ஸானதால்

பில்லா – அஜீத்தின் டயட் எடிசன்(Edition) “டான்.