Slumdog Millionaire பிப்ரவரி 3, 2009
Posted by M Sheik Uduman Ali in விமர்சனங்கள்.Tags: ஸ்லம்டாக் மில்லியனர், Slumdog Millionaire
comments closed
குரோர்பதி நிகழ்ச்சியில் பெரும்பான்மையான கேள்விகளுக்கு பதில் சொன்ன மும்பை சேரி இளைஞன் ஜமால் மாலிக் (தேவ் படேல்) போலீஸாரால் விசாரிக்கப்படுகின்றான். ஆச்சர்யமாக ஒவ்வொரு கேள்விகளுக்கும் தன் வாழ்க்கையிலிருந்தே பதில் கிடைத்த கதையை இன்ஸ்பெக்டர் இர்பானிடம் விவரிக்கின்றான். மும்பை சேரியின் அசலான பக்கங்கள் “ஓ சாரா“ என்ற வசீகரமான ஏ.ஆர்.ரஹ்மானின் இசையுடன் பரந்து விரிந்து அங்கு வாழும் முரண்பட்ட இரு சகோதரர்கள், வகுப்புவாத கலவரம், அதில் இவர்களிடம் வந்து சேரும் லத்திகா (ஃப்ரைடோ பின்டோ), குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைக்கும் கும்பல், மாஃபியா என மும்பையின் இருட்டு பக்கங்களை பளீரென சொல்கின்றது.
இந்திய சினிமாவிற்கு ஸ்லம்டாக் ரொம்பவும் பழைய கதை. இம்மாதிரியான தளத்தை பல்வேறு கோணங்களில் நாம் தொட்டிருந்தாலும் ஸ்லம்டாக் ரொம்பவும் அசலாக தொட்டிருக்கின்றது.
ஜமால் மாலிக்காக வரும் தேவ் படேல் ஆச்சர்யப்படுத்துகின்றார். இர்பான் கானிடம் இயலாமையும் கோபமுமாக தன் கதையை விவரிக்க ஆரம்பிக்கும் இடத்திலிருந்து ஃப்ரைடோவுடான காதல், இழப்பு, குரோர்பதி நிகழ்ச்சி என ஒவ்வொரு காட்சிகளிலும் நம்மை ஒன்றி போக வைக்கின்றார். அடுத்ததாக குரோர்பதி நிகழ்ச்சி நடத்தும் அனில் கபூர். கொஞ்சூண்டு காட்சிகளே என்றாலும் ஒரு பொழுதுபோக்கு வியாபாரியாக நடிப்பில் பிரம்பிக்க வைக்கின்றார்.
நொடியிழை தவறாமல் தங்கள் உழைப்பை அர்பணித்திருக்கின்றார்கள் போட்டோகிராபி பண்ணியிருக்கும் ஆண்டனி டோட் மற்றும் எடிட்டிங் பண்ணியிருக்கும் க்ரிஸ் டிக்கன்ஸ். ஆடிட்டோரியம் லைட் போட்டதும் முகம் கூசும் தேவ் மறுபக்கம் போலீஸ் விசாரணையில் அடிவாங்கி முகம் சிவப்பது, பின்னிரவில் ஒரு சிறுவனின் கண்ணை பறிக்கும் காட்சிகள் என சின்ன விசயங்களையும் அவ்வளவு இயல்பாக தொட்டிருக்கின்றார்கள்.
விகாஸ் ஸ்வர்பின் அசல் நாவலை வெற்றிகரமாக சினிமாப்படுத்தி ஸ்லம்டாக்கின் வெற்றிக்கு முதுகெலும்பாக நிற்கிறது சைமன் ப்யூஃபாயின் திரைக்கதை. எது பொருந்துமோ அதை அசலாகவும் ப்ரெஷ்ஷாகவும் தந்தது தான் கோல்டன் குளோபிலிருந்து ஆஸ்கார் வரை ஏர்.ஆர்.ரஹ்மானை அழைத்துச் சென்றிருக்கின்றது. ஏர்.ஆர்.ரஹ்மானின் பெஸ்ட் “ஜெய்கோ“வை விட நிறையவே வேறு இருந்தாலும் சரியான நேரத்தில் சரியான தளத்தில் சரியான கோணத்தில் தொட்டுப் பார்த்ததில் இந்த ஜீனியஸின் வெற்றிக்கு உதவிய சரியான உழைப்பு. வெஸ்டர்ன், ஹாலிவுட், லொட்டு லொசுக்கு என நிறையவே குழப்பிக்கொள்ளும் இந்திய இசையமைப்பாளர்களுக்கு ஸ்லம்டாக்கில் ஏர்.ஆர்.ரஹ்மானின் பின்ண்ணி இசை நிறைய பாடங்கள் கற்றுத்தரும்.
ஸ்லம்டாக்கின் ஆதி அந்தம் எல்லாமே இயக்குநர் டேனி பாய்ல் தான். சரியான களத்தை அச்சு அசலாக எடுத்து மாறுபட்ட கோணத்தில் படம் பிடித்து காட்டியிருக்கின்றார். ஒவ்வொரு நடிகர்களையும் அவ்வளவு இயல்பாக இயக்கிய விதம் தான் பிரம்மிக்க வைக்கின்றது. காட்சிகளோடு ஒன்ற வைத்து எதைப் பற்றியும் யோசிக்க விடாமல் ஒரு முழு மூச்சில் பார்வையாளர்களை ஆட்படுத்திவிடுகின்றது.
டேனி பாய்ல் தொட்ட இடத்தை நம் இயக்குநர்கள் தொட சில படிகளே இருந்தாலும் வியாபாரம், கம்ர்ஷியல் காம்பரமைஸ் போன்ற விசயங்களால் பின்னால் நிற்கின்றோம். முதன் முதலாக உலகம் தொட்ட இந்தியாவைப் பற்றிய சினிமா இந்தியாவின் கரைபடிந்த பக்கங்களை மட்டுமே காட்டியிருப்பதில் கொஞ்சம் வருத்தம் இருந்தாலும்
ஸ்லம்டாக் மில்லியனர் – இந்திய இயக்குநர்களுக்கு உலக சினிமாவை பற்றிய அளவுகோலை உறுதிபடுத்திய தரமான பொழுது போக்கு சினிமா.