வாரணம் ஆயிரம் நவம்பர் 23, 2008
Posted by M Sheik Uduman Ali in விமர்சனங்கள்.Tags: வாரணம் ஆயிரம், Vaaranam Aayiram
2 comments
“என் வீட்டைப் பார்; என்னை பிடிக்கும்“ என்ற தாமரையின் அருமையான பாடல் வரிகளே சொல்லிவிடுகிறது சூர்யாவின் குடும்பத்தைப் பற்றி.
தனது ஸ்டைலிஷான அணுகுமுறையில் மென்னையான தந்தை மகன் உறவை படம் பிடித்திருக்கிறார் கெளதம். ஒரு மரணத்தில் ஆரம்பித்து மெல்ல ஒரு குடும்பத்தின் வாழ்க்கைச் சுழலை பின்ணணியாகக் கொண்டு தன் வாழ்க்கை பாதையில் ஒரு தந்தையின் பங்களிப்பை பற்றிய ஒரு மகனின் மலரும் நினைவுகளே வாரணம் ஆயிரம்.
“சின்ன கமல்ஹாசனாகவே” ஜொலித்திருக்கிறார் சூர்யா. ஒரு உயர் நடுத்தர வர்க்கத்து தந்தையாக பக்குவமான மேனரிசத்துடன் பிரமாதம் சூர்யா. முதல் நாள் கல்லூரிக்கு செல்லும் சூர்யாவிடம் தந்தை சூர்யா “நீ இனிமேல் என் நிழலில் இல்லை; தாத்தாவிடமிருந்து தான் நாற்பதாயிரம் கடன் வாங்கினேன்“ என என்னென்னமோ பேசும் அந்த ஒரு நிமிடம் கண்ணீர் வரவழைக்கிறது. இது ஒருபுறமென்றால் ஸ்கூல் செல்லும் மாணவனாக ஆரம்பித்து கல்லூரி மாணவன், நடுத்தர வயது இளைஞன் என்று இன்னொரு சூர்யா மிரட்டியிருக்கிறார். சட்டென மனதில் தங்குவது ஆர்த்திக்காக இன்னொருவனை ரவுண்ட் கட்டும் ஸ்கூல் பையன் சூர்யா, சமீராவிடம் உருகி வழியும் சூர்யா. மில்லியன் ரசிகைகளை இதற்குள் சுனாமியாகத் தாக்கியிருப்பார்.
கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று சொல்வார்களே அது சூர்யாவிற்கும் சமீரா ரெட்டிக்கும் பொங்கி வழிந்திருக்கிறது. சமீபமாக இவ்வளவு அருமையான காதல் காட்சிகளை பார்த்த ஞாபகம் இல்லை. சூர்யாவை தன் அறையில் தங்கச் சொல்வதில் ஆரம்பித்து மெல்ல மெல்ல காதலில் விழுவது வரை மெச்சூரிட்டியான முகபாவனைகளுடன் சமீரா அவ்வளவு யதார்த்தம். படத்தில் சூர்யா “இளையராஜா…இளையராஜா“ என்று கொஞ்சினாலும் இக்காதல் காட்சிகளுக்கு ஹாரீஸின் பின்ணணியே உயிர் கொடுக்கிறது.
“கன்னத்தில் முத்தமிட்டால்“ படத்தில் வரும் அம்மாவைப் போல இதிலும் நடித்திருப்பதால் சிம்ரனிடம் கொஞ்சம் ஏமாற்றமே. பரிதவிப்பான காட்சிகளில் கூட சூர்யா டாமினேட் செய்து விடுகிறார்.
அமெரிக்கா, சமீராவின் அறை, அந்த கால கல்லூரி, காஷ்மீர், டெல்லி என அதனதன் கால பருவ நிலைகளுக்குத் தகுந்தவாறு காட்சிகளை படம் பிடித்து அசத்தியிருக்கிறார் ரத்னவேல். அதற்கு தளமைத்துக் கொடுத்த ராஜீவனுக்கு ஷொட்டு. முன்பாதியில் ஆண்டனியின் எடிட்டிங் அவ்வளவு பிரமாதம் என்றாலும் பின்பாதியில் கொஞ்சம் குழப்பம்.
மேல்நாட்டு ஆல்பங்களை சுட்டே ஹிட்டாகிறார் என்ற இமேஜை “அனல் மேலே பனித்துளி“, “நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை“ பாடல்கள் மூலம் மாற்றியிருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். பாடல்களும் சரி, அவற்றை எடுத்த விதமும் சரி (குறிப்பாக நெஞ்சுக்குள்) பிரமாதம். சமீராவுடனான காதல் காட்சிகளில் ஹாரிஸின் வாத்தியங்கள் மனதை லயிக்க வைக்கின்றன. ரொம்பவும் வீணடித்திருப்பது “அனல் மேலே“ பாடலை எடுத்த விதம். அதனால் தான் கெளதமுடன் கோபமா ஹாரிஸ்?
ஹார்ட்ஸ் ஆஃப் கெளதம். அடிதடி, வன்மம், கொடூரம் என்ற அணுகுமுறையிலிருந்து மாறி திரைக்கதையை பூக்களால் அலங்கரித்ததிற்கு. சடசடவென தந்தை மகன் உறவை சொன்ன விதம் அருமை என்றாலும் அதையெல்லாம் மிஞ்சி நிற்பது சூர்யா-சமீரா காதல் காட்சிகளே என்பதால் இது ஒரு அழகான காதல் படம் என்றே சொல்ல வைக்கிறது. எப்படி இவ்வளவு மென்மையாக கெளதம் என்ற ஆச்சர்யத்தை அமெரிக்கக் குண்டுவெடிப்பும் அடுத்தடுத்த முனைப்பில் தங்களின் தீராத ஆக் ஷன் தளமும் கலைத்து விடுகிறது.
ஸ்டைலாகவும் வேகமாகவும் காட்சிகள் நகர்ந்தாலும் இடைவேளைக்குப் பிறகு சூர்யா குடித்து விட்டு தடுமாறுவது போல திரைக்கதையும் தள்ளாடுகிறது. தன் வாழ்க்கையில் தந்தையின் பங்களிப்பை பற்றிய நினைவுகளாய் மலரும் மகன் சூர்யாவின் நினைவுகளில் மிகக் கொஞ்சமே தந்தை-மகன் உறவு வருகின்றது. மற்றெல்லாக் காட்சிகளிலும் “டாடீ உங்க கிட்ட சொல்ல மறந்திட்டேன், உங்களுக்கு தெரியாது டாடீ” என அவருடைய காதல் புராணங்களிலெல்லாம் புலம்புவது டூமச். வேலைக்குப் போகிறார், வீட்டைக் கட்டுகிறார், கேங்ஸ்டரிடமிருந்து குழந்தையை காப்பாற்றுகிறார், ஆர்மிக்கு போகிறார், சண்டை போடுகிறார்… கமான் கெளதம் ஏன்?
மயிலிறகால் வருட வேண்டிய கிளைமாக்ஸை கத்தியால் காயப்படுத்தியிருந்தாலும்
வாரணம் ஆயிரம் – முட்களுடன் கூடிய ரோஜாப் பூக்கள்.