jump to navigation

யாரடி நீ மோகினி – விமர்சனம் ஏப்ரல் 15, 2008

Posted by M Sheik Uduman Ali in Reviews.
Tags: ,
2 comments

அபத்தங்களின் அழகான(?) கூட்டாஞ்சோறு இந்த மோகினி(ப் பிசாசு).

நயன்தாரா விரும்பி ஏற்றுக் கொண்ட நிச்சயதார்த்தம். சந்தடியில் தனுஷ் புகுந்து நீ என்னை காதலிக்கிறது உன் கண்களில் தெரிகிறது என்கிறார். அது எப்படியோ தெரியவில்லை ஹீரோயினுக்கே தெரியாத காதலை டெலிபதி மூலம் கோடம்பாக்கம் ஹீரோக்கள் மட்டும் எப்படி தான் கண்டுபிடிக்கிறார்களோ?!

தனுஷின் காதலுக்காக பரிந்து பேச வரும் ரகுவரனை நயன்தாரா திட்டி அனுப்பும் காட்சிகளும் அதன் பின் வரும் திரைக்கதை திருப்பங்களும் அடக் கடவுளே!

எல்லாவற்றையும் இழந்து நிற்கும் தனுஷை தன் திருமணத்திற்காக திருநெல்வேலி கூட்டி செல்கிறான் நண்பன். அவன் திருமணம் செய்யப் போகும் பெண் நயன்தாரா என்ற அதிர்ச்சியான(!) ட்விஸ்ட். சொந்த அத்தை மகள்.

தனுஷின் நண்பனாக வரும் கார்த்திக்குமார் தான் பாவம். “அலைபாயுதே”விலிருந்தே இவர்  பெண்களாலும் திருமணங்களாலும் ஏமாற்றப்படும் அபலைப் பையனாக வந்து “உச் உச்” கொட்ட வைக்கிறார்.

ஆச்சாரமான அந்தக் குடும்பத்தினரின் மனதில் தனுஷ் இடம் பிடிக்கும் காட்சிகள் இருக்கிறதே, திரையுலகிற்கு ரொம்ப புதுசு கண்ணா புதுசு. சாம்பிளுக்கு இதோ!

  • ஊர் பெரியவரான தனுஷ் நண்பனின் தாத்தாவை ஒரு கோயில் திருவிழாவில் திடீரென புகும் வில்லன் “டேய் நீ மட்டும் இடத்த தரலை; உங்க வீட்டு பொம்பளங்கள….!! என்கிறான். இவர்களை துவம்சம் பண்ணுகிறார் தனுஷ். தாத்தா மனதில் இடம்.
  • திடீரென சாகக் கிடக்கும் பாட்டியை ஒற்றை ஆளாய் உட்கார்ந்து உயிரூட்டுகிறார் தனுஷ். பாட்டி & குடும்பத்தினரின் மனதில் இடம்.
  • பசிக்கிறது சாப்பாடு கிடைக்குமா என குடும்பத்தினரிடம் தனுஷ் கேட்க ஒரு ஸ்வீட் ஸ்டாலையே கொட்டி பசியாற வைக்கிறது குடும்பம். (அனாதை என்ற சென்டிமென்ட் வேறு)
  • தன்னை டாவு விட்டு காதலிக்கும் நயன்தாரா தங்கையை பொறுப்பான டயலாக்குகள் பேசி திருத்துகிறார் தனுஷ்

இப்படி நிறையங்கோ!

இதெல்லாம் விட ஏராளமான அபத்தங்களும் அருவருப்பு அம்சங்களும் உண்டு.

தனக்கு பாட சங்கோஷமாக இருக்கிறது என தன் வருங்கால மனைவியை வர்ணித்துப் பாட தனுஷை கோரும் நண்பன். அதை ரசிக்கும் ஒட்டு மொத்த குடும்பம்.

கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் தனுஷை தன் மார்போடு உரசிப் பார்க்கும் நயன்தாராவின் தங்கை. போதாதென்று ஒரு முதலிரவு கனவுப்பாட்டு வேறு.

ஹைய்யோ ஹைய்யோ! எழுத்து செல்வராகவனாம். ஆங்காங்கே தக்கனூண்டு தெரிகிறார் என்றாலும் நம்ப முடியவில்லை. விக்ரமனின் பாதிப்புகள் நிறைய நிறைய. ஆனால் அவராவது கண்ணியமாகக் காட்டுவார்.

தனுஷிற்கு ஒரே லக். நயன்தாராவை அருகில் இருந்து மோப்பம் பிடித்தது.  ஆனாலும் இவருக்கு அக்கா மாதிரி இருக்கிறார்.
சாப்ட்வேர் கம்பெனியை சுற்றிய அந்த கதை முடிச்சு ஏன் என்று தெரியவில்லை. அக்மார்க் சினிமாத்தனம் தான் தெரிகிறது.

ஒரே பயம் இனிமேல் வரிசையாக அபத்தமான பல்வேறு காதல்களை உருக உருக சொல்லும் சீஸன் கோடம்பாக்கத்திற்கு திரும்ப வந்து விடுமோ என்பது தான்.

யாரடி நீ மோகினி – இருட்டில் பிடித்த கொழுக்கட்டை